Headlines News :
முகப்பு » » புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட சேவையாளர்கள் - அருள்கார்க்கி

புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட சேவையாளர்கள் - அருள்கார்க்கி


பெருந்தோட்டத்துறை வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து அதன் வளர்ச்சிக்கு எம்மவர்கள் உரமான சரித்திரம் எழுதப்படாத ஒரு காவியம். உலகில் எந்த ஒரு நாட்டிலும் நாட்டின் தேசிய வருமானத்தின் உழைப்பாளிகள் இவ்வாறு சுரண்டப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு வாழும் வரலாறு பெரும்பாலும் இல்லை.

புகழ்பெற்ற அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள் இருந்தும் இன்றளவும் கூட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே.

தனியார் கம்பனிகள் எம்மை கொண்டு பல கூட்டுக்கம்பனிகளாகவும், நிதி நிறுவனங்களாகவும் ஊதிப்பெருத்திவிட்டன. காலம் காலமாக மாறி வந்த அரசாங்கங்கள் எம்மை வாக்காளர்களாக மட்டுமே கணித்திருக்கின்றன. அனைத்து அரசாங்கங்களிலும் எம்மவர்கள்(?) அமைச்சர்களாக இருந்தமை எமக்கு கிடைத்த பெரிய வெற்றி. மாதாமாதம் ரூ.150 சந்தாப்பணம் மட்டும் தவறாமல் தொழிற்சங்கங்களுக்கு சென்றுவிடுகிறது. இந்த சந்தா தொகையின் செலவு விபரம் கூட அதனை செலுத்தியவருக்கு அறியமுடியாத நிலைமையிலேயே இன்று காணப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளிக்கு உள்ள பிரச்சினைகள் ஒன்றும் இக்கட்டுரையில் புதிதாக எடுத்துக்கூறத்தேவையில்லை. யாவரும் அறிந்த அடிப்படை தேவைகள் கூட நிறைவுசெய்யப்படாமல் ஏமாற்றப்படும் எமது நிலைமையை பேசி பயனில்லை. இது இவ்வாறிருக்க பெருந்தோட்டங்களில் வேலையாற்றும் பெருந்தோட்ட சேவையாளர்கள் என்று அழகாக, அழைக்கப்படும் ஒரு தரப்பினரும் உண்டு. இவ்வாறு அழுத்தமான விளக்கம் ஒன்று கொடுக்க வேண்டிய தேவை என்னவென்றால், அவ்வாறு ஒரு தரப்பு இருப்பது பலருக்கு தெரியாது.
தோட்டத்தொழிலாளர்களை போலவே பெருந்தோட்ட சேவையில் தமது வாழ்வையும் குடும்பத்தையும் அர்ப்பணித்த பெருந்தோட்ட சேவையாளர்களின் நிலை பற்றி பெரிதாக பேசுவதற்கு எவருமில்லை. ஒப்பீட்டளவில் பெரும்பான்மை இனத்தவரை விடக் குறைந்தளவு எண்ணிக்கையிலான தொகையினரே பெருந்தோட்ட சேவையில் உள்ளனர். அவர்கள் அத்தொழிலுக்கு வரவே பகீரதப் பிரயத்தனப்படவேண்டிய சூழல் காணப்படுகின்றது. அவ்வாறு அத்தொழிலுக்கு வந்து தமது இறுதிகாலம் வரை தோட்டங்களில் சேவையாற்றும் அவர்களுக்கு ஓய்வு பெற்றவுடன் கொடுக்கப்படும் மரியாதையை எழுத்தில் வார்க்க முடியாது.

தோட்டப்புறங்களில் "ஸ்டாப்" என அறியப்படும் இவர்கள், ஓய்வு பெற்றவுடன் தமக்கு வழங்கப்படும் விடுதியிலிருந்து குறிப்பிட்ட காலவறையரைக்குள் வெளியேற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதி என்பன வழங்கப்படும்., இறுதிநேரத்தில் எங்கு செல்வது என்று தெரியாது தடுமாறும் இவர்கள் வீடுகளை கையளிக்க மறுப்பதும் ஒரு புறம் நடக்கும்.

இவர்கள் தொடர்பில் பேசுவதற்கு பெயரளவிலான தொழிற்சங்கம் இருப்பினும் இவர்களது சந்தாப்பணத்தால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் தொழிற்சங்க ரீதியான இவர்களது எந்த ஒரு வேண்டுகோளும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. இவர்களில் சிலர் அரசியல் வாதிகளின் அடிவருடிகளாக செயற்பட்டு சுயநலத்திற்காக தமக்கு மட்டும் ஏதாவது ஒரு சலுகையை பிச்சையாக பெறுபவரும் உண்டு. அதேபோல் இவர்களுக்கான வேலை நேரமும் கூட அதிகளவாகவே காணப்படுகின்றது. முறைமைப்படுத்தப்பட்ட ஒரு நேர அட்டவணை இல்லை. அதிலும் தோட்டப்புறங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக தொழில்புரிபவர்களின் நிலை இதற்கு சாலப்பொருந்தும்.

இலங்கையை பொறுத்தவரை பல கம்பனிச்சட்டங்கள் உள்ளன. அவை எவற்றுக்கும் மலையக தோட்டச் சேவையாளர்களுக்கு. பொருந்துவனவாக இல்லை போலும். அண்மையில் தனியார் தொழில் துறையினருக்கு வழங்கப்படுவதாக அறி விக்கப்பட்ட ரூபா .2500 சம்பள உயர்வு இவர்களுக்கெல்லாம். பகற்கனவு. அதற்காக குரல்கொடுக்க இவர்களும் தயாரில்லை. இவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் யாரும் இல்லை என்ற நிலையே காணப் படுகின்றது.

எனவே, இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெருந்தோட்ட சேவை யாளர்களின் நலன்சார் விடயங்களையும் ஆராய்ந்து அவர்களுக்கு உதவுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டம் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates