19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத் துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் இந்த விடயத்திற்கு மேலாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிலையில் கம்பனிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்து. எவ்வாறாயினும் 2014ஆம் ஆண்டில் 17 கம்பனிகளின் (புஸ்ஸல்லாவ, மத்துரட்ட மற்றும் அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனிகள் தவிர்ந்த ஏனைய கம்பனிகள்) ஆண்டறிக்கைகளின் நிதி கூற்றுகளை நோக்கும் போது 2014 இல் 09 மாதங்களில் மாத்திரம் 92 கோடியே 82 இலட்சம் ரூபாயை தேறிய இலாபமாக பெற்றுள்ளன. (03 கம்பனிகளின் ஆண்டறிக்கைகள் திறந்த அணுகுதலுக்கு இன்மையினால் அவற்றின் நிதி நிலைமைகளை அறிய முடியாதுள்ளது). தேயிலை, இறப்பரில் 285 கோடி நட்டத்தை பெற்றிருக்கும் போது கம்பனிகள் இந்த அளவு தேறிய இலாபத்தை எவ்வாறு பெற முடியும் என்ற கேள்வி எழுவதுடன் இது அடிப்படையற்ற வாதம் என்பதும் தெளிவாகிறது. எனவே தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை மறுக்கும் வகையில் போலியான கருத்துக்களை முன்வைப்பதை கம்பனிகளின் பிரதிநிதிகள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இடம் பெற்று வரும் பேச்சுவாத்தை தொடர்பாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழு சார்பாக பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை மறுக்கும் தமது அடிப்படையற்ற வாதங்களை ஊடகங்களூடாக பாரிய அளவில் பரப்பி வருகின்றன. எனினும் கம்பனி பிரதிநிதிகள் பகிரங்கமாக முன்வைக்கும் வாதங்களுக்கு பகிரங்கமாக மறுப்பையோ எதிர்வாதங்களையோ கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முன்வைப்பதாக இல்லை. வெறுமனே சம்பள உயர்வை பெற்றுத் தருவோம் என்று கூறிவிட்டு வழமை போல இம்முறையும் பேச்சுவார்த்தைகள் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மூடுமந்திராமாக இருந்து வருவதில் இருந்து மக்கள் மத்தியில் சம்பள உயர்வு தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. பேச்சுவார்த்தைகளில் தற்போது சம்பள உயர்வு தொடர்பாக பேசுவதை விடுத்து தொழிலாளர்களின் சில சமூக நல விடயங்கள் தொடர்பாக பேசப்படுவதாக அறியமுடிகிறது. இது தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு விடயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகின்றது.
2014ஆம் ஆண்டில் ஒரு கிலோ தேயிலை மற்றும் இறப்பருக்கு முறையே ரூபா 50, 70 நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான நட்டம் ஏற்பட்டிருப்பின் கம்பனிகள் எவ்வாறு இலாபத்தில் இயங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இங்கு குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் யாதெனில் 2014ஆம் ஆண்டில் நட்டத்தை (தேறிய நட்டம்) அடைந்த அகலவத்தை, கொடகல, மஸ்கெலிய ஆகிய கம்பனிகள் முறையே ரூபா 183,858,000, 318,769,000, 122,515,000வை மொத்த இலாபமாக பெற்றுள்ளன. மொத்த வருமானத்தில் இருந்து மொத்த உற்பத்திச் செலவை கழித்து பெறப்படும் மொத்த இலாபத்தை (Gross profit), நடத்தில் இயங்கும் கம்பனிகளே பெற்றிருப்பதில் இருந்து தேயிலை இறப்பரில் கிலோவொன்றுக்கு இவ்வாறான நட்டம் எற்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
தேயிலை, இறப்பரின் விலை வீழ்ச்சி என்பது தொழிலாளர்களின் சம்பளத்தோடு எவ்வகையிலும் தொடர்பான விடயமல்ல. தொழிலாளர்களுக்கான சம்பளம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, இறப்பர் ஏலத்தில் விற்பதற்கும் பல காலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்நிலை காரணமாக தேயிலை, இறப்பரின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் அதிகரிப்பு எற்படாது. தொழிலாளர்களும் அதற்கேற்ப அதிகரிப்பை கோரவும் முடியாது. இந்நிலையில் தேயிலை, இறப்பரின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்படும் போது அதனை அடிப்படையாக கொண்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது என கம்பனிகள் வாதிடுவது அவர்களின் சம்பள கொள்கைக்கும் கூட முரணனானதாகும்.
17 கம்பனிகளும் கடைசி 21 மாதங்களில் (2013, 2014 காலப்பகுதியில்) மொத்த தேறிய இலாபமாக 327 கோடியே 19 இலட்சத்தை பெற்றுள்ளன. இந்த இலாபம் 2013ஆம் ஆண்டு சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சம்பள உயர்விற்கு பின்னர் ஏற்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது. 2007இல் இருந்து 2014 வரையான 08 வருட காலப்பகுதியில் மாத்திரம் 17 கம்பனிகள் 2206 கோடியே 23 இலட்சத்தை தேறிய இலாபமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பனிகள் பெறும் இலாப நட்டத்தில் பங்கு என்ற அடிப்படையைக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுமாயின் கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றன. தேயிலை, இறப்பர் மரங்களின் பராமரிப்பு, உரிய காலத்தில் மீள்நடுகை, புதிய நடுகை முறையாக இடம்பெறாத நிலையிலும், தேயிலை மற்றும் இறப்பர் மரங்களில் அறுடை நாட்களுக்கிடையில் இருக்க வேண்டிய இடைவெளிகள் பேணாது விஞ்ஞான அடிப்படையற்ற நடைமுறை பின்பற்றும் நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. தேயிலை அறுவடை இடைவெளியாக 07 நாட்கள் இருக்க வேண்டும் என்ற போதும் பல தோட்டங்களில் 05 நாள் இடைவெளியில் அறுவடை செய்யப்படுகிறது. அதாவது வருடத்தில் 52 முறை மாத்திரம் அறுடை செய்யப்பட வேண்டிய இடத்தில் 73 முறை அறுவடை செய்யப்படுகிறன. இதனால் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்த செயல் முகாமைத்து நடைமுறை பற்றிய பிரச்சினையே அன்றி தொழிலாளர்களின் உற்பத்தி திறன் பற்றிய பிரச்சினை அல்ல என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். எனினும் இப்பின்னணியிலும் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளமையே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
1995ஆம் ஆண்டு 20 பெருந்தோட்டக் கம்பனிகளில் 280,783 மொத்த தொழிலாளர்களைக் கொண்டு 135.2 மில்லியன் கிலோ தேயிலையும் 37.6 மில்லியன் கிலோ இறப்பரும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு (2013, 2014 தரவுகள் இனனும்; வெளியிடப்படவில்லை) தொழிலாளர்களின் எண்ணிக்கை 180,168 அதாவது (100,615 தொழிலாளர்கள் குறைந்துள்ளனர்) தொழிலாளர் எண்ணிக்கை 35.83மூ வீழ்ச்சியடைந்த போதும் 118.8 மில்லியன் கிலோ தேயிலையையும் 28.8 மில்லியன் கிலோ இறப்பரும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது 1995 ஆம் ஆண்டை விட 2012ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பர் உற்பத்தியில் முறையே 12.13மூ, 23.7மூ வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கை 35.83மூ இருக்கும் நிலையில் உற்பத்தி வீழ்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் தேயிலை, இறப்பர் உற்பத்தியானது 1995ஆம் ஆண்டை விட 2012ஆண்டில் முறையே 23.7மூ, 12.43மூ இல் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
உற்பத்திச் செலவில் 67%-70% வீதம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மாத்திரம் செலவு செய்யப்படுகிறது என்று சொல்லாப்படுகிறது. இதனை கம்பனிகள் ஆதரத்துடன் முன்வைக்க வேண்டும். நிரந்தர தொழிலாளர்கள், சமயாமய தொழிலாளர்கள் என்ற வேறுபாட்டுடன் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாத நிலையில் அவ்வாதத்தின் உண்மைத் தன்மையை பரீட்சித்து பார்ப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. தொழிலாளர்கள் ஒழுங்காக தொழிழுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொழிலாளர்கள் மீது கம்பனிகள் முன்வைத்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய வீதம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு செலவாகுவதாக கம்பனிகள் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கென்னிய, இந்தியாவின் அசாம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையே 2.6, 2.1 அமெரிக்க டொலரை நாட் சம்பளமாக பெற இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 4.6 அமெரிக்க டொலரை நாட் சம்பளமாக பெறுகின்றனர் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஜப்பான் சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் தேயிலை உற்பத்தியில் முன்னிற்கும் நாடுகளாக இருக்கும் போது ஏன் கென்னிய, அசாம் தொழிலாளர்களை மட்டும் இலங்கை தொழிலாளர்களோடு ஒப்பிட வேண்டும். இந்த ஒப்பீட்டின் உபாயத்திற்கு அப்பால் தகவல்கள் திரிபும் காணப்படுகிறன. உண்மையில் கென்னிய தொழிலாளர்கள் 2014ஆம் ஆண்டிலேயே வருகை ஊக்குவிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தவிர நாளொன்றுக்கு 317.42 கென்னிய சிலிங்கை சம்பளமாக பெறுகின்றனர். அதாவது 3.38 அமெரிக்க டொலர். அசாம் தொழிலாளர்களுக்கு ஏனைய கொடுப்பனவுகள் இன்றி 169 இந்திய ரூபாய்களை குறைந்தபட்ச நாட்சம்பளம் உறுதி செய்ய தற்போது மாநில அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இவற்றோடு இங்கு கவனிக்க வேண்டி விடயம் யாதெனில் கென்னிய, இந்திய தேயிலை கிலோ ஒன்று உலக சந்தையில் 3.39 மற்றும் 3.09 அமெரிக்க டொலருக்கு விற்கப்படும் நிலையில் இலங்கையின் தேயிலை 4.33 அமெரிக்க டொலருக்கு விற்கப்படுகின்றது.
கென்னியா, அசாம் ஆகிய இடங்களில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பள பேச்சு இடம்பெற்றாலும் முதலாம் மற்றும் இரண்டாம் வருடங்களுக்கு என ஒரு குறித்த வீதத்தில் சம்பளம் அதிகரிப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அத்தோடு வருகை ஊக்குவிப்பு என்பது நாட்களை மற்றும் கிழமையை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகின்றன. எனினும் இங்கு அவ்வாறான நடைமுறைகள் இல்லை. அத்தோடு இந்தியா மற்றும் கென்னியவின் வாழ்கைச் செலவு இலங்கையை விட குறைவாக காணப்படுகின்றது. அந்நாடுகளில் அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையை விட கணிசமாக குறைவாக உள்ளன. இலங்கையில் அமெரிக்க டொலர் ரூபா 132ஆக இருக்கும் நிலையில் இந்தியாவில் 62 இந்திய ரூபாவாகவும் கென்னியாவில் 93 கென்னிய சிலிங் ஆகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கென்னிய தொழிலார்கள் 48 கிலோ தேயிலை ஒருநாளில் பறிப்பது உண்மை என்ற போதும் அங்கு தேயிலை பறிக்க விசேட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு குடும்ப உறவுகள் தேயிலை பறிப்பதற்கு தொழிலாளிக்கு உதவி செய்யும் நடைமுறையும் காணப்படுகிறது.
தொழிலாளர்களின் சமூக நலத் தேவைகளுக்கு கம்பனிகள் குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்குவதாக கூறுவதுடன் சம்பள உயர்வு கோரிக்கை வரும் காலத்தில் அதனை சுட்டிக்காட்டி வருகின்றன. கூட்டு சமூக பொறுப்பு (CSR) அடிப்படையில் கம்பனிகள் சமூக நல தேவைகளை செய்து வருகின்றன. எனினும் இது எவ்வகையிலும் போதுமானதல்ல. பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் காணியை குத்தகைக்கு பெறும் போது தொழிலாளர் குடியிருப்புகள், தோட்டக் காணிகள் என்ற வேறுபாடு இன்றி பொறுப்பேற்றுள்ளனர். எனவே அரசு நேரடியாக தலையிட்டு சமூக நல சேவைகளை செய்ய முடியாத நிலையை இது தோற்றுவித்துள்ளது. எனவே கம்பனிகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி குடியிருப்பு பிரதேசங்களை வரையறுத்து அவைகள் அரசின் கட்டுபாட்டிற்கு கீழ் வரும் வகையில் குத்தகையில் மாற்றங்களை செய்யுமாயின் அது கம்பனிகளினால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூக நல பொறுப்புகளை அரசுக்கு வழங்க முடியும். இது கம்பனிகளுக்கு மாத்திரமல்லாது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மலையக மக்களுக்கும் தேவையான ஒன்றாகும்.
பல்வேறு வாதங்களை முன்வைத்து பெருந்தோட்ட பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதாகவும் அதனை மீட்பதற்கு தொழிலாளர்கள் உழைப்பை அதிகளவு வழங்க வேண்டும் என்ற கருத்து கம்பனிகாரர்களினால் முன்வைக்கப்படுகிறது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்றும் கூறுகின்றனர். எனினும் கம்பனிகளின் நிர்வாக செலவுகள், முகாமைத்துவ கட்டனங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படுகின்றன. பெருந்தோட்டங்களை விஞ்ஞான ரீதியாக முன்னேற்றுவதற்கான எவ்வித வேலைத்திட்டங்களையும் கம்பனிகள் கொண்டிருக்கவில்லை. பெருந்தோட்டத் துறையை முன்னேற்றுவதற்கான நீண்டகால நடவடிக்கைகள் எதுவுமே கம்பனிகளிடம் இல்லை. தொழிலாளர்களை உழைப்பை அதிகளவில் பெறுதல், ஊதியத்தை குறைத்தல் என்ற பழைய பொருளாதார சூத்திரத்தை அடிப்படையாக கொண்டே பெருந்தோட்ட துறையை கம்பனிகள் தொடர்ந்து நடத்திச் செல்ல முயற்சிக்கின்றன. பெருந்தோட்டத் துறையின் முகாமைத்து பிரச்சினைகள் அனைத்திற்கும் பொய்யான காரணங்களை காட்டி தொழிலாளர்களை காரணம் காட்டி அவர்களின் சம்பள உரிமையை மறுக்கும் முயற்சி காணப்படுகிறது. இந்நிலையில் உண்மையில் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களுமே நெருக்கடிக்கு உட்பட்டுள்ளன. பெருந்தோட்டத் துறையும் நெருக்கடியில் இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிற்துறையை பாதுகாக்க தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு இம்முறை வழங்கப்பட வேண்டும். நாட் சம்பளமாக ரூபா 1000 வழங்க கூடிய நிலையிலேயே கம்பனிகள் இருக்கின்றன. எனவே தொழிலாளர்கள், குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களில் உள்ள தொழிலாளர்கள் தமது தலைவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். நியாயமான சம்பள கோரிக்கையைப் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்ய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சம்பள உயர்வுக்காக போராட அனைத்து தொழிலாளர்களும் தயாராக இருக்க வேண்டும். என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...