சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முடிவடைந்தது. இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட முடிவுகள் செப்டெம்பர் மாதமளவில் நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர் களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையானது ஓரு அரசியல் நகர்வாக முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம் நிறைவு பெற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் பொழுது கம்பனிக்காரர்களும் தோட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறுவதே இல்லை எனலாம்.
இன்றைய நிலையில் தேயிலையின் சர்வதேச சந்தைவிலை வீழ்ச்சியும் இவர்களது சம்பள உயர்வில் ஒரு பாரிய பின்னடைவை செலுத்துகின்றது என்பதை மறுக்கமுடியாது.
தோட்ட நிர்வாகம் தனது நாளாந்த கொழுந்தெடுக்கும் அளவை, அதாவது 12 கிலோ எடுத்தால்தான் ஒரு நாள் சம்பளம் என்ற நிலையில் இருந்து சில தோட்டங்களில் 16 கிலோவாக அதிகரித்தமை கவலைக்குரியது. இது போன்ற விடயங்களில் தொழிற்சங்கங்களின் பங்கு என்ன? சந்தா மட்டும் தானா? என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக தோட்டங்களில் தொழிலாளர்களுக்காக தமது தொழில் உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் பலமிழந்து காணப்படுவதும், தோட்ட நிர்வாகத்துக்கு துணை போவதும் கண்டிக்கத்தக்கது. இம்முறை வழமைக்கு மாறாக இ.தொ.கா. முந்திக் கொண்டு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத்தரப் போவதாக உறுதியாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருந்தபோதிலும், இதுவரை 500 ரூபாவைக் கூட அடிப்படைச் சம்பளமாக பெற முடியாத தொழிற்சங்கங்கள் ஒரேயடியாக 1000 ரூபாவைப் பெற்று கொடுக்குமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.
ஜூன் மாதம் தொழிற்சங்கங்களின் சந்தாவுக்கு அடித்தளமிடும் மாதம். அங்கத்துவ உறுப்பினர்களை அதிகரித்துக் கொண்டு முன்செல்ல வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவர். இதன் ஒரு காய் நகர்த்தல்தான் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கை என்பது தோட்டத் தொழிலாளர்களின் சந்தேகமாகவுள்ளது.
நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்தி வரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். தேசிய வருமானத்தின் பங்காளிகளான தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாது.
உலகிலேயே குறைந்த ஊதியத்திற்கு கூடுதலான வேலை செய்யும் ஒரு பிரிவினர் என்றால் இது தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே. இம்முறை இரண்டு முன்மொழிவுகள் சம்பளத் தொகையாக வெளிவந்துள்ளன. இ.தொ.கா 1000 ரூபாவெனவும் ஜே.வி.பி. யினரின் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் 800 ரூபாவெனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தனியார் துறையினருக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் இந்த அதிகரிப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏதும் நன்மை கிட்டுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர வேண்டுமானால், தேயிலை ஏற்றுமதி வரி குறைக்கப்பட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த வரிக் குறைப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேயிலைத் தொழிற்றுறையைப் பொறுத்தவரை இருநூறு வருடங்களுக்கு மேலாக இலங்கையின் தேசிய வருமானத்திற்கும் 'இலங்கை என்றாலே தேயிலை' என்ற நாமத்தை நிலைக்கச் செய்த தோட்டத் தொழிலாளர்கள் இனியும் இதை செய்வார்களா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தில் இத்துறையில் வேலை செய்வதும், செய்யாமல் விடுவதும் அவர்களது வாழ்வாரத்திலேயே தங்கியுள்ளது. காரணம் தற்போது தோட்டங்களில் வேலை செய்வதை இளந் தலைமுறையினர் விரும்பவில்லை.
பெருந்தோட்டத்துறையின் தேயிலைப் பயிர்ச்செய்கையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் பழைய முறைகளை தவிர் த்து, புதிய முறைகளை கையாள வேண்டும். வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, தொழில் பாதுகாப்பு, தொழிலுக்கான கௌரவம், அந்தஸ்து என்பன சரியாககிடைக்க வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றம் வரவேண்டும். உரிய அந்தஸ்து, நிறைவான சம்பளம், புதிய தொழில்நுட்ப வசதிகள் போன்றவை மாற் றம் பெற வேண்டும். இல்லையேல், மறுபடியும் தேயிலைத் தொழில் துறைக்கு வெளிநாடுகளிலிருந்து வேலையாட்களை வரவழைக்க நேரிடும். இன்னும் 15 ஆண்டுகளில் தேயிலைத் தொழிற்றுறையில் பாரிய மாற்றங்கள் வரலாம். எனவே, தொழி லாளர்களையும் தொழில் துறையையும் பாதுகாக்க வேண்டுமானால் அரசியல் காய் நகர்த்தல்களை விட்டுவிட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். எனவே தொழிற்சங்க நடவடிக்கை என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்ற நிலையை புரிந்து கொண்டு உரிய நேரத்தில் சரியான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாய மாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...