பாடசாலை காலங்களில் மாணவர்களின் திறமைக்கு களமமைத்து கொடுப்பது பாடசாலை மேடைகள் தான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் பல மாணவர்களின் திறமைக்கு வித்திட்டு அவர்களை சமூகத்தின் மத்தியில் அடையாளம் காட்ட உதவிய மேடையை புனருத்தாரணம் செய்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்து ஏனைய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர்கள். மேற்படி கல்லூரியின் 2011–2015 ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்களின் சிந்தனையில் தோன்றிய இத்திட்டத்திற்கு பழைய மாணவர்கள் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேடை சுமார் 50 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்ததாகும். ஹட்டன் பிராந்தியத்தில் அக்காலத்தில் ஒழுக்கத்திலும், கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஜோன். பொஸ்கோ ஆங்கில கல்லூரியின் குறித்த தோமஸ் மண்டபத்தின் மேடையானது இக்கல்லூரியில் கற்ற மாணவர்களை தவிர பல புகழ் பெற்ற அறிஞர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்களின் பிரசன்னத்தை தரிசித்திருக்கின்றது. மேலும் கடந்த வருடம் கல்லூரி தனது அமுத விழா ஆண்டில் (80 வருடங்கள்) காலடி எடுத்து வைத்திருந்தது. அந்த வகையில் இந்த மேடையை புனருத்தாரணம் செய்வது என்ற முடிவுக்கு பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முடிவு செய்தனர். தமது தொடர்பில் உள்ள பழைய மாணவர்களின் உதவியை நாடினர். இவர்களின் இந்த முயற்சிக்கு இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் அல்லாதோறும் உதவி புரிய வந்தமை இவர்களது சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறலாம். பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கல்லூரி நிர்வாகமும் பல வழிகளில் சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கியதோடு ஒரு தொகை பணத்தையும் கல்லூரி அதிபர் எஸ்.என். குரூஸ் கல்லூரி சார்பாக பெற்றுக்கொடுத்தார். பழைய மாணவர்களின் மூலம் பண உதவிகளோடு மேடையை அமைப்பதற்கான கட்டட மற்றும் மின் உபகரண பொருட்களும் தாராளமாக கிடைத்தன. அந்த வகையில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் மேடை சிறப்பாக புனருத்தாரணம் செய்யப்பட்டது. மேடையை கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேடை புனருத்தாரணத்திற்கு உதவிய பழைய மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்களான ஹட்டன் டிக்கோயா நகர சபைத்தலைவர் டாக்டர் அ.நந்தகுமார், நகர சபை எதிர்கட்சித்தலைவர் எம்.பாமிஸ் ஹாஜியார் ,தொழிலதிபர்கள் ஹெரிசன் சில்வா, எஸ்.பத்மராஜ், பி.கார்த்திகேசு மற்றும் டாக்டர் அருள்குமரன் உள்ளிட்ட அனைவரும் பாடசாலை மேடையை சீர்திருத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளை பாராட்டியதோடு கல்லூரியின் தமது பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
எக்காலத்திலும் ஒரு கல்லூரியோடு இணைந்திருக்கும் பழைய மாணவர்கள் கல்லூரியின் நீண்ட கால அபிவிருத்திக்கு எண்ணக்கருவாக செயலாற்ற வேண்டும் என்பது முக்கிய விடயம். அந்த வகையில் மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது தமது திறைமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த கல்லூரியின் மேடையை அடுத்த சந்ததியினருக்கு புனரமைத்துக் கொடுத்துள்ளது. இதை சிறப்பாக பயன்படுத்தும் பொறுப்பு கல்லூரி சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் உள்ளது என்பது முக்கிய விடயம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...