தேசிய அரசாங்கம் என்பது ஒரு நாட்டில் சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சிகள் அல்லது மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டு அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும். இந்த தேசிய அரசாங்கத்தில் பிரதான எதிர்கட்சியை உள்ளடக்குவது மிக மிக முக்கியமாகும்.
ஒரு நாட்டில் அவசரகால நிலைமைகளின் போதும் யுத்தம் மற்றும் ஆளும் கட்சியினால் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க முடியாத சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகின்றது. சில வேளைகளில் எதிர்க் கட்சிகள் அதிக பலம் பெற்றிருக்கும் சந்தர்ப்பங்களிலும் தேசிய அரசாங்கம் அமையப் பெறக் கூடியதாக இருக்கும்.
இலங்கையில் கடுமையான உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவில்லை. அப்போது ஆளும் கட்சி அதிக பலம் பெற்றதாகவும் தீர்மானங்களை பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தமையே அதற்கு முதல் காரணம். இரண்டாவதாக பிரதான எதிர்க் கட்சி பலவீனமடைந்திருந்ததும் மற்றொரு காரணமாகும்.
ஆனால், தற்போதைய நிலையில் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் அனைத்து பிரதான கட்சிகளும் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும் சகல கட்சிகளும் இணைத்துக்கொள்ளும்பட்டிருக்கின்றனவா?
இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே தேசிய அரசாங்கத்தில் பிரதான பங்காளிகளாக உள்ளன. ஏனைய கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மக்கள் விடுதலை முன்னணி தேசிய சுதந்திர முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேசிய அரசில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
எல்லாக் கட்சிகளும் தேசிய அரசில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பமில்லாத கட்சிகள் அதில் இணைந்து கொள்ள வேண்டியதில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்த பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகள் அதில் இடம்பெறவில்லை. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தோழமை கட்சிகளான ஸ்ரீல.மு.கா, அ.இ.ம.க, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் தேசிய அரசில் அங்கம் வகிப்பதுடன் அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளன.
எனவே ஐ.ம.சு.கூ.விலுள்ள தோழமைக் கட்சிகளையும் ஏன் இணைத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பே.
தற்போது அரசின் அமைச்சர்களின் எண்ணிக்கையும் 77ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க புதிய தேசிய அரசாங்கத்தில் மலையகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான இ.தொ.கா இணைத்துக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சு பதவிகளும் வழங்கப்படக்கூடுமென்று பேசப்பட்டது. ஆனால் எதுவுமே இடம்பெறவில்லை.
ஐ.தே.கவுடன் இணைந்துள்ள தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பி.திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவர் வீ. இராகிருஷ்ணன் மற்றும் இ.தே.தோ.தொ. சங்கத்தின் முக்கியஸ்தர் கே.வேலாயுதம் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மலையகத்துக்கு ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் இரண்டு இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலதிகமாக அமைச்சு பதவியொன்று மலையகத்துக்கு அவசியமில்லை என்ற காரணத்தால் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.
தவிர, அரசியல் காரணங்களும் இருக்கலாமென்றும் சொல்லப்படுகின்றது. எவ்வாறெனினும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும்போது சகல
கட்சிகளும் பங்குபெறும் வகையில், அமைப்பதே சரியானதாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...