கண்டி மாவட்டத்தின் மெததும்பர பிரதேச சபைக்கும் பிரதேச காரியாலயத்திற்கும் பன்வில பிரதேச காரியாலயத்திற்கும் பாத்ததும்பர பிரதேச சபை க்கும் உட்பட்ட இறங்கலை போபிட்டிய தோட்ட மக்கள் போதிய வைத்திய சேவையின்றி பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்தத் தோட்டம் அரச பெருந்தோட்ட யாக்கத்தினால் (SPC) நிருவகிக்கப்பட்டு வருகின்றது. கோமர கீழ்ப் பரிவு, கோமர மேற்பிரிவு போபிட்டிய, நீவ்துனுஸ்கல, துனுஸ்கல ஆகிய பிரிவுகளைக் கொண்ட இந்தத் தோட்டத்தில் சுமார் 241 தொழிலாளர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தோட்டம் கோமர ஜனபதய (732), கலபொடவத்த (742) ஆகிய இரு கிராம சேகவர் பிரிவுகளை கொண்டது. சிறுவர் முதல் பெரியோர் வரை சுமார் 1000 பேர் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைப்பதாகவும் கூறுகின்றனர். எனவே பெருங்கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தோட்டத்தில் இயங்கி வந்த வைத்தியசாலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. ஆனால், வேறொரு தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் வாரத்தில் இரண்டு தினங்களுக்கு மேற்படி தோட்ட வைத்தியசாலைக்கு வந்து நோயாளர்களுக்கு மருந்து கொடுக்கிறார். ஏனைய தினங்களில் தோட்ட வைத்தியசாலை இயங்குவதில்லை. எனவே அவசர வைத்திய தேவைகளுக்காக 25 கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள மடுல்கலை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. அம்புலன்ஸ் வசதியும் இல்லை. இருந்தும் அம்புலன்ஸ் வண்டியும் பழுதடைந்த நிலையில் தோட்ட முகாமையாளரின் பங்களாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
திடீர் விபத்துக்குள்ளாகும் நோயாளர்களை முச்சக்கர வண்டியில்தான் நகர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளது. இதற்கு சுமார் ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. வேலை நேரத்தில் திடீர் சுகவீனமுற்றால் தோட்ட நிர்வாகம் 750 ரூபா வழங்குகிறது. அத்துடன் முச்சக்கர வண்டியில் நோயாளர்களைக் கொண்டு செல்வதால் அவர்கள் மேலும் சுகவீனமடைகின்றனர். வீதி சீரற்றுக் காணப்படுவதால் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லும் போது பெருங்கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
இங்கு இயங்கி வந்த மகப்பேற்று நிலையமும் மூடப்பட்டு விட்டது. கட்டடங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. உபகரணங்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. கர்ப்பிணித் தாய்மார் சிகிச்சை பெறுவதற்கோ அல்லது மகப்பேற்றுக்கோ மடுல்கலை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும். கர்ப்பிணித் தாய்மாரை கொண்டு செல்வதற்கும் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. முச்சக்கரவண்டி அல்லது பஸ்ஸில்தான் செல்ல வேண்டும். பாதையும் சீரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.
கர்ப்பிணித் தாய்மாரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தைப் பேறு கிடைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாததினால் இடைவழியில் சிலர் இறந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் தனியார் மருந்தகங்களில் அதிக காசை கொடுத்து மருந்து வாங்க வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். தோட்ட மகப்பேற்று நிலையத்தில் பல வசதிகள் காணப்பட்ட போதிலும் அவை கைவிடப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.
இங்குள்ள மருந்தகத்திற்கு கிழமைக்கு 02 முறை வைத்தியர் வருவார். இங்கு இல்லாத மருந்துகளை வெளியிடங்களில் காசு கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. தங்களுக்கு கிடைக்கும் குறைந்தளவு வருமானத்தில் வைத்திய செலவுக்காக பெருந்தொகைப் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருப்பதாக மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் மலசல கூடங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பற்றைகளையே மலசல கூடங்களாகப் பாவித்து வருகின்றனர். இதனால் பல நோய்கள் பரவுகின்றன. சிறுவர்களுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இங்கு போதியளவு நீர் வசதிகள் இருந்த போதிலும் அவை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. தேவையான நீரை நீரூற்றுக்களில் குழாய்கள் போட்டு நீரை சேமித்துக் கொள்கின்றனர். இதனால் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று மேற்படி தோட்ட மக்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள லயன் வீடுகளின் கூரைத் தகடுகள் மிகவும் பழைமையானவை. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட தகடுகள் இதுவரை மாற்றப்படாமல் உள்ளன. தற்போது இவை உக்கிய நிலையில் காணப்படுகின்றன. மழை காலங்களில் வீட்டில் இருக்க முடியாத நிலையே உள்ளது. அத்துடன் வீடு பற் றாக்குறையும் காணப்படுகின்றது. ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் உள்ளன. இத் தோட்ட மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தமது பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினர் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டு மென்பதே இம்மக்களின் கோரிக்கையா கும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...