Headlines News :
முகப்பு » » " இரட்டைத் தேசியமும் பண்பாட்டு புரட்சியும்" கே. ஏ. நவரட்ணம்

" இரட்டைத் தேசியமும் பண்பாட்டு புரட்சியும்" கே. ஏ. நவரட்ணம்

கூடி விவாதிப்பதன் மூலம் சரியைக் கண்டைவோம் ! 
புதிய தளத்தில் பயணிப்போம் ! 
கலாநிதி ந.இராவீந்தரனின் இரட்டைத் தேசியமும் பண்பாட்டு புரட்சியும் நூல் விமர்சன அரங்கு சென்ற ஞாயிறு (03.08.2014) பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் மாலை 4.30 யளவில் ஆரம்பமாகியது.

அண்மையில் மறைந்த இலங்கையின் மூத்த எழுத்தாளரான திரு சாரல் நாடான் அவர்களுக்கும், மூத்த இடதுசாரியான திரு தங்கவடிவேல் அவர்களுக்குமான அஞ்சலியுடன் அரங்கம் ஆரம்பமாகியது. திரு லெனின் மதிவானம் தலைமை வகித்தார். அவர் திரு இரவீந்திரனின் இரட்டைத் தேசியத்தின் கரு உருவாக்கம் பற்றியும் , 1982 இல் அவர் "செம்பதாகை" பத்திரிகையில் எழுதிய "ப சுயநிர்ணயம் " பற்றிய கட்டுரை பற்றியும், அதில் பாரதியின் தாக்கமும் , மார்க்சிய வாசிப்பும் ,மக்களுடனான இணைந்த செயற்பாடுகளும் இந்த நூலை உருவாக்கம் செய்ய முடிந்திருப்பது பற்றிப் பேசினார். இணைய தளங்களில் ஆரோக்கியமான கருத்தாடல்களும் , சில விஷமிகளில் குறுக்கீடுகளும் ,இந்த நூலின் வரவுக்கு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது என்றார். பின் மலையகத்துடனும்,அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களும்,,வாழ்வியல் சிக்கல்களுடனும் இரட்டைத் தேசியம் எப்படி நோக்கப்படுகிறது என்பதை திரு . மல்லிகைப்பூ திலகர் மிக அலசலாக விபரித்தார். அவரது குறிப்பில் ,"யுத்தத்தின் காரணமாக தமிழ் நாட்டிற்கு , புலம் பெயர்ந்து சென்ற இலட்சத்திற்கு மேற்பட்ட அகதிகளில் முப்பதினாயிரம் மலையக அகதிகளும் உள்ளடங்கப்பட்டுள்ளனர்..அவர்கள் 1983 இல் நடந்த கலவரத்தின் போது மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிப் பகுதில் குடிபுகுந்தோர் ஆவர். இன்றும் அவர்கள் ,எந்தக் குடியுரிமையும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமைக்காக எந்த ஒரு தமிழ் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை. நாங்கள் பிரிந்து செல்ல தனி உரிமை கேட்கவில்லை. எம் தேசத்தில் எமக்கும் உரிமை வேண்டும் என்றே கேட்கின்றோம் " . மேலும் மிக காத்திரமாக முஸ்லீம் மக்களின் நலன் தொடர்பாகவும் பேசினார். 
அடுத்துப் பேசிய திரு த.இராஜரட்ணம் அவர்கள் , ஆய்வு முறையில் ,புத்தக கட்டமைப்புக்குள் இரட்டைத்தேசியம் எப்படி கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதையும், சுயநிர்ணயம் பற்றிய ,இரவீந்திரனின் கருத்தின் ஆழத்தையும் , மொழி நடையின் கடினம் பற்றியும் பேசினார். 

அடுத்துப் பேசிய திரு வை.வன்னியசிங்கம் அவர்கள் , முற்று முழுதாக மார்க்சியப் பார்வையில் அந்த நூலையும் ,எம் மக்களின் பாதை ,மார்க்சியம் சார்ந்து எப்படிப் பயணிக்க வேண்டும் என்று " தேசியம் பற்றிய மாக்சியக் கோட்பாடு " என்ற ஹோரிஷ் பி டேவிஸ் அவர்களது நூலில் இருந்தும் பல குறிப்புகளை ஒப்பிட்டு நோக்கினார்.பின்னர் கலந்துரையாடலும்,கருத்துப் பரிமாறல்களும் இடம் பெற்றது .இறுதியில் திரு இரவீந்திரன் அவர்கள் ,இதனை ஏற்புரையாக ,தனது மிக நேசிப்புக்குரிய திரு .முருகையன் பாணியில் இக்கருத்துக்களை ஏற்பதாகவும் ,இதனை உள்வாங்கி, ஆழமான வாசிபிநூடும்,நடைமுறை சார்ந்தும் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மார்க்ஸ் பார்த்த பார்வையின் நீட்சியாக லெனினும், பின் மாவோவும் என நீண்டு கொண்டு போகிறது. சமூகத்தின் தேவைக்கும் வாழ் முறைக்கும் ஏற்றது போல மார்க்சியத்தை எப்படிப் பிரயோகிக்க வேண்டும் என்பதே மார்க்சியத்தின் நீட்சி என்றார். நீண்ட நாட்களின் பின்னர் மிக நேர்த்தியான ஒரு அரங்கில் பங்கேற்ற உணர்வும் , மார்க்சியத்தின் தேவையும் உணரப்பட்டது.

திரு சித்தார்த்தன், திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு, திரு அந்தோனி ஜீவா, திரு நீர்வை பொன்னையன் , டாக்டர் முத்தையா கதிரவேற்பிள்ளை , திரு கே எஸ் சிவகுமாரன், திரு சண்முகலிங்கம் , திரு அருளானந்தம்,,திரு சிவகுருநாதன், கே. பொன்னுதுரை என பலரும் கலந்துகொண்டனர்.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates