அரச வர்த்தமானியில் மூவாயிரம் ஆசிரிய உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான அறிவித்தலையும் விண்ணப்பப்படிவத்தையும் கடந்த 8ஆம் திகதி கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஆவணி ஐந்தாம் திகதிக்கு முன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிரிய உதவியாளர்களாக சேவையாற்ற விரும்பும் இளைஞர், யுவதிகளை பலரும் பல திசைகளில் அழைத்துச்செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பதுளை மாவட்ட வேட்பாளர்களின் அலுவலகங்களில் அவர்களின் விண்ணப்ப பிரதிகள், அடையாள அட்டைப்பிரதிகள், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை வழங்கக் கோரிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஆசிரிய நியமனம் என்ற பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதுளை மாவட்டத்தில் உள்ள 156 பாடசாலைகளுக்கு மொத்தமாக 866 ஆசிரிய உதவியாளர்கள் போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாக தெரிவு செய்யப்படவுள் ளனர். ஆங்கிலம், இரண்டாம்மொழி, கணி தம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு சுமார் நானூறு வரையிலான வெற்றிடங் கள் காணப்படுவதாக தகவல்கள் தெரி விக்கின்றன. மேற்படி முக்கிய பாடங்களுக்கு தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமே தோட்டப்புற விண்ணப்பதாரிகள் முழுமையான பயனை அடைய முடியும். க.பொ.தசாதாரண தரத்தில் மேற்படி பாடங்களில் திறமை சித்தி உள்ளவர்கள் இப்பாடங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டிய நிலையும் அவசியமும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் உரிய பாடங்களுக்கான பயிற்சிகளையும் உயர் தகைமைகளையும் திறந்த பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், பிராந்திய பயிற்சி நிலையங்கள் என்பவற்றில் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் பல உள்ளன.
கடந்த காலங்களில் பதுளை மாவட்டத் தில் பல பிரபல தமிழ் பாடசாலைகள் நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்தரத்தில் சித்தி பெறச் செய்துள்ளன. லுணுகலை இராம கிருஷ்ணா கல்லூரி, பத்கொட விபுலானந்த கல்லூரி, பதுளை மகளிர் கல்லூரி, அப்புத்தளை மத்திய கல்லூரி ,நிவ்பேர்க் நவோதயா பாடசாலை, மடுல்சீமை மகா வித்தியாலயம், பண்டாரவளை மத்திய கல்லூரி என்பன தமது பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர், யுவதிகளை உருவாக்கி உள்ளன. எனவே, சுமார் ஆறாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் பதுளை மாவட்டத்திலிருந்து அனுப்பப்படக்கூடும். அதிலிருந்து 866 பேர் தெரிவு என்பது எவ்வளவு போட்டி நிறைந்ததாகக் காணப்படும் என்பதை விண்ணப்பதாரிகள் உணர வேண்டும்.
இம்முறை பரீட்சை புள்ளிகள், நேர்முக பரீட்சை என்பன முறையாக சீரமைக்கப்பட்டு விசேட கவனத்துடன் கணினிமயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பரீட்சை முடிவுகளை கூட இணையதளம் ஊடாகத் தெரிந்து கொள்ளவும் பரீட்சை திணைக்களம், கல்வி அமைச்சு, மாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கிடையில் வலையமைப்பு மூலம் பொருத்தமான தெரிவுகள் நடைபெறவும் கூடும். அதனால் எந்த மாகாண சபையோ எந்தப் பாராளுமன்ற உறுப்பினரோ இத்தெரிவுகளில் தலையீடு செய்ய முடியாது. எவருடைய சிபார்சையும் பரீட்சைத்திணைக்களம் ஏற்றுக்கொள்ளாது என்பதை முழு மலையக விண்ணப்பதாரிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். தமது திறமை, தகைமை ஒன்றே உறுதியாக அமைய வேண்டியது அவசியமாகும்.
கடந்த ஆசிரிய நியமனத்தின் போது பெரிதாகக் காணப்பட்ட குறைபாடுகளை இம்முறை விண்ணப்பிக்கும் போதே குறைத் துக் கொள்வது மூலம் கிடைக்கவுள்ள நியமனத்தை விரைவுபடுத்த முடியும்.
01) கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த முறை உயர்தரம் படித்து முழுமையான சித்தி பெறாத பல விண்ணப்பதாரி கள் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பதாரியின் முழுமையான கல்வித்தகமையை பார்க்காமல் எவரும் அவரின் தகைமைகளை உறுதிப்படுத்தி இருப்பது நல்லது. பரீட்சை மண்டபம் அனுமதி அட்டை வினாப்பத்திரத்தொகை அதனை திருத்துவது என்ற பல்வேறு வேலைகள் பரீட்சை வகுதிக்கு இரட்டிப்பு சுமை ஏற்படாமல் இருக்க வேண்டும்.
02) பல்கலைக்கழக கல்வியியற்கல்லூரிகளுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்கள் அவற்றை விடுத்து சுமார் ஆறாயிரம் பேர் முதற்படிவாக கொண்ட மேற்படி பதவிக்கு விண்ணப்பிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். சிலர் பொழுது போக்காக இப்பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுதுவார்களானால் அது எமது இளைஞர் யுவதிகளின் நியமனங்களை பாதிப்படைய செய்வதுடன் எவருக்கும் இவ் நியமனம் கிடைக்காமல் காலதாமதமாகும்.
03) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெறாத பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது நியமனம் கிடைக்காமல் போவதுடன் நேர்முக பரீட்சையாளர்களின் அதிருப்திக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
04) உயர்தரம் வரை கல்வி கற்றுள்ள இளைஞர் யுவதிகள் வர்த்தமானி அறிவித்தலை பலமுறை வாசித்து தெளிவு பெற வேண்டும். சந்தர்ப்பவாத நபர்களின் பிழையான தூண்டுதல்களுக்கு இரையாககூடாது. இல்லாத தகைமைகளை பிழையான பாடத்தெரிவுகளை செய்யாமல் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
05) வேறு நிறுவனங்களில் தொழில்புரிவோர் அதனை விட்டு விலகி இந்நியமனத்திற்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் போட்டி அதிகரிப்பை குறைக்க முடியும்.
06) விண்ணப்ப படிவத்தை அனுப்பியவுடன் அப்பரீட்சை விடயமாக உளச்சார்பு பொது அறிவு விடயங்களையும் அறிந்து கொள்வதிலும் பாட சம்பந்தமான வகுப்புகளுக்கும் செல்வது அவசியமாகும். கடந்த முறை பலர் நாற்பதிற்கும் குறைவான புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தனர். இதற்கு அவர்கள் பரீட்சைக்கு உரிய முறையில் தயாராகவில்லை என்பதையும் பலர் தவறான விடைகளையே வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
07) தாம் ஏதாவது ஒரு பாடத்திற்கு தகுதியானவர் என நேர்முகத் தேர்வாளர்கள் தீர்மானித்து கூறும் போது அதே நியமனத்தை ஏற்றுக்கொள்வதுடன் அதனை எச்சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தி உரையாற்றும் நிலையை தவிர்க்க வேண்டும். அரச அதிகாரிகளின் அனுபவம் அறிவுத்திறன் உயர்கல்வித்தகைமை நேர்முக தேர்வாளியை விட பன்மடங்கு உயர்வானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
8. நியமனம் ஒன்றை பெற்றுக்கொண்டவரின் திறமை நேர்முகத் தேர்வு குழுவின் முகாமைத்துவ அதிகாரியின் திருப்தியை வெளிப்படுத்துகின்றது. அதன்பின் சேற்றை வாரி வீசுவது எமது சமூகத்திற்கு தலை குனிவாகும். எனவே, திறமை உள்ளவர்களே தெரிவானார்கள். எவரின் சிபார்சும் நடைபெறவில்லை என்பதை அனைத்து தரப்பினரும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
09) நியமனம் ஒன்றின் போது இன, சமய பேதமோ கட்சி சங்க பேதமோ கருத்தில் எடுக்கப்பட முடியாது. கடந்த முறை நீதிமன்றம் கடுமையாக எதிர்ப்புக்களை தோட்டப்பகுதி நியமனங்களில் கண்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரிகளை அரசியல் வேலைகளுக்கு இழுக்கும் சக்திகளிடமிருந்து விலகி நிற்கச்சொல்வதும் கல்விச் சேவையாளர்களின் கடமையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...