இந்நாட்டின் பொருளாதார எழுச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்குபவர்கள் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள். இந்தத் தொழிலாளர் சமூகம் அன்றும் இன்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயமாகவே காணப்படுகின்றது. 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காணி சீர்திருத்த சட்டத்தின் மூலம் அன்று தோட்டங்களில் காணப்பட்ட பெரியகங்காணி முறை இல்லாதொழிக்கப்பட்டது.
இவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகள் மூன்றாம் வகுப்பு வரை கல்வி கற்க வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் மக்களை முன்னேற்றம் பெற விடாது தடுத்து வந்தனர். இந்நிலையில்தான் 1972ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காணி சீர்திருத்த சட்டம் இம்மக்களை புரட்டிப் போட்டது. அன்று வாழ்க்கையில் பட்ட அடியே எமது மக்கள் கல்வி பெற வேண்டும் என்ற உண ர்வை ஏற்படுத்தியது. அந்த உணர்வின் அடையாளமாக இன்று மலையகக் கல்வி சமூகம் பல்கலைக்கழகத்தில் கால்பதித்து வருகின்றது.
இன்று இந்நாட்டின் பழங்குடிகள் சமூகத்திற்கு கிடைக்கும் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்,சலுகைகள் கூட மலையக சமூகத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லாது உள்ளது. சமூகத்தின் தேவைகள் நாளுக்கு நாள் பின்னோக்கியே செல்கின்றன. சமூகத்தின் அரசியல் பலம் பாராளுமன்றத்தின் பலவீனத்தை தொட்டு விட்டது.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி கள் பாராளுமன்றத்தில் இருந்தனர். இவர்களின் இருவர் அமைச்சரவை அந்தஸ்தை கொண்ட அமைச்சர்களாக இருந்தனர். ஆறுமுகன் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அமரர் பெ.சந்திர சேகரன் சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராகவும் பதவி வகித்தனர். என்றுமே இல்லாத வகையில் எமது சமூகத்தின் சார்பில் ஏழு பிரதி அமைச்சர்கள் இருந்தனர். தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கமும் தபால் தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சராக எம்.எஸ். செல்லச்சாமியும் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதி அமைச்சராக எஸ். ஜெகதீஸ்வரனும் பிரதிக் கல்வி அமைச்சராக எம்.சச்சிதானந்தமும் பிரதி சுகாதார அமைச்சராக வடிவேல் சுரேஷும் நீதி சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சராக வி. புத்திரசிகாமணியும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக பெ. இராதாகிருஷ்ணனும் பதவி வகித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இராமலிங்கம் சந்திரசேகரனும் இவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். ஆக மனோ கணேசனுடன் மொத்தமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இத்தகவலானது எமது சமூகத்தின் அரசியலின் களப்பதிவாகும். இவ் வரலாற்றுச்சான்றை 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொலைத்து விட்டோம். இன்று அரசியல் ரீதியாக ஆய்வை மேற்கொள்கையில் எமது அரசியல் இருப்பு கேள்விக்குறிக்குள் நிற்கின்றது.
மலையக மக்கள் மத்திய மாகாணத்தில் மட்டுமே வாழவில்லை. ஊவா, சப்ரகமுவ மேல்மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் வாழ்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அனைத்து பிரிவினரினதும் பார்வை எந் நேரமும் நுவரெலியா மாவட்டத்தின் மீதே விழுகின்றது. எவரது பார்வை நுவரெலியா மாவட்டத்தின் மீது விழுந்தாலும் இன் னும் நுவரெலியா மாவட்டமானது பின் தங்கிய மாவட்டமாகவே உள்ளது. நுவரெலியா மாவட்டமானது ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் ஐந்து பிரதேச சபைகளையும் ஒரு மாநகர சபையையும் இரண்டு நகர சபைகளையும் கொண்டது.
நான்கு தேர்தல் தொகுதிகளையும் 491 கிராம சேவை அதிகாரிகள் பிரிவுகளையும் 1199 கிராமங்களையும் பெருந்தோட்டங்களையும் கொண்ட பெரும் மாவட்டமாகும். இம் மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 7,06588 ஆகும். இதில் இந்தியத் தமிழர்கள் 3,75795 பேர் பதிவாகி உள்ளனர். சிங்களவர்கள் 2,79784 பேர் பதிவாகியுள்ளனர். இம்மாவட்டத்தில் அம்பேகமுவ பிரதேச செயலகப் பிரிவிலேயே இந்திய தமிழர்களின் எண்ணிக்கை 144159 ஆகவும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் 150772 ஆகவும் பதிவாகியுள்ளது. இவ்விரு பிரதேச செயலகப்பிரிவிலும் முறையே சகோதர சிங்கள இனத்தின் பதிவு 44,045 ஆகவும் 41,912 ஆகவும் பதிவாகிக் காணப்படுகின்றது.
இம்மாவட்டத்தின் சனத்தொகைக்கேற்ற வகையில் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் கிராம சேவை உத்தியோகத்தர் பிரி வுகள் ஏற்படுத்தவில்லை. இதற்கு தமிழ் மக்களின் அதிகரிப்பே காரணமாகும். அம்பாந்தோட்டை மாவட்டம் 596617 மக்க ளைக் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவும் 10 பிரதேச சபைகளும் 576 கிராம சேவை அதிகார பிரிவுகளும் காணப்படுகின்றன.
250 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவு என்பது நடைமுறையில் உள்ளது. நாட்டில் 42 ஆயிரம் மக்களைக் கொண்ட பகுதியில் பிரதேச செயலரும் பிரதேச சபைகளும் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 8900 மக்களைக் கொண்ட அம்பாறை மாவட்ட லகுகல பிரதேசத்தில் பிரதேச செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. லகுகல பிரதேச செயலகப் பிரிவில் 8253 சிங்கள மக்களும் 645 இலங்கைத் தமிழர்களும் ஏனைய சமூகத்தினராக இருவரும் பதிவாகி உள்ளனர். இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தின் கோமான் கடவலை பிரதேச செயலகம் 7339 பேரையும் மொறவெவ 7946 பேரையும் கொண்ட பிரதேச செயலக பிரிவுகளாகும். கோமான் கடவலை பிரதேச செயலகப் பிரிவில் 7302 சிங்களவர்களும் மொறவெவ பிரதேச செயலகப்பிரிவில் 5718 சிங்களவர்களும் பதிவாகியுள்ளமை கவனத்திற்குரியதாகும். இதேபோன்று புத்தளம் மாவட்டத்தில் நவகத்தேகம பிரதேச செயலகம் 14,412 பேரை கொண்டுள்ளது. இச்செயலகப்பிரிவில் 14,217 சிங்களவர்கள் வாழ்கின்றனர்.
இவ்வாறு எமது சமூகத்தின் அரசியல் மரி யாதை குறைவை எட்டுவதால் இன ரீதியாக பின்தள்ளப்படுகின்றோம். அனைத்து மாவட்ட பெருந்தோட்டங்களிலும் முகவர் தபால் நிலையங்கள் 2008 ஆம் ஆண்டில் 65 இருந்துள்ளன. இவை 2011 வரை இதே எண்ணிக்கையில் இருந்துள்ளன. 2012 இல் இவ்வெண்ணிக்கை வேறு நான்காக மாற் றம் பெற்றுள்ளது. கிராம புறங்களில் 156 முகவர் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.
எமது சமூகத்தின் அரசியல் பலவீனத்தால் பெற்ற ஒவ்வொன்றையும் இழந்து வருகின்றோம். எமது சமூகம் ஒதுக்கப்பட்ட சமூ கம் அல்ல. இந்நாட்டில் வாழும் அனைத்து இனத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்ற சமூகம். எமக்கென ஒரு கலாசார, கட்டமைப்பு உள்ளது. இந்நாட்டில் பல்வேறு சமூக நாகரிகம் இருந்தாலும் மலையக சமூகத்திற்கென கலை கலாசாரம் நாகரிகம் பாரம்பரியம் உள்ளன. எமது பண்பாடுகள் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. பாரம்பரியமிக்கவை. பாரம்பரிய கலாசார கட்டமைப்பை இழக்காது பாதுகாத்து வருகின்றோம்.
எமது சமூகத்தின் தேவைகளை அரசு வழங்க முன்வர வேண்டும். சமூகத்தின் தேவைகளை உணர்ந்து கொள்ள விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இவ்வாணைக்குழுவின் முன் மலையகத்தின் சமூக ஆர்வலர்கள் சாட்சியம் அளிக்க முடியும். மக்களின் தேவைகளை அரசும் தெரிந்து கொள்ள இயலும். அரசின் ஆணைக்குழு சிபாரிசின் மூலமே எமது சமூகத்தின் குழப்ப நிலை வாழ்விலிருந்து விடுதலை பெற இயலும். எமது மக்கள் விழிப்பற்றவர்கள் என எவரும் கூற முடியாது. சமூக விழிப்பு உள்ளமையின் காரணமாகவே கடந்த மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் இச்சபைக்கு 14 பேரை தெரிவு செய்து அனுப்பி வைத்தனர். இருந்தும் அரசியல்வாதிகளின் செயல்களினால் மத்திய மாகாண சபையின் தமிழ் கல்வி அமைச்சை இழந்து விட்டோம். இதற்கு மக்கள் காரணமில்லை. அரசியல் போட்டியின் விளைவேயாகும். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அரசிடமிருந்து பெற்ற ஒவ்வொன்றையும் இழந்து வருகின்றோம். எமது மக்கள் அரச அதிகார அலுவல்களுக்குள் நுழைய வேண் டும். அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள பொதுசனத் தொடர்பு பல காலமாக அறுந்தே உள்ளது. இந்த முட்டுக்கட்டையை தகர்க்க வேண்டும். அதற்கு விசாரணை ஆணைக்குழுவின் தேவை அவசியமாகும்.
அரசாங்கம் இவ்விசாரணைக்குழுவை அமைக்க மக்கள் முழுமையாக செயல்பட வேண்டும். எமது தேவைகளை நாமே நேரடி யாக அரசுக்கு தெரிவிக்க நல்லதொரு சந்தர் ப்பமாக இவ்விசாரணைக்குழுவை பயன் படுத்திக் கொள்ளலாம். இன்று மலையக மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிலாளர்கள் வீட் டுரிமை, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, சம்பளம், அரச நிர்வாக அமைப்பு என பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரு கின்றனர். தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களின் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. பின்னர் மறக்கப்படுகின்றன. பூரணமான விசாரணை ஆணைக்குழுவின் மூலமே முழு உலகமும் தெரிந்து கொள்ளும் வகை யில் எமது மக்களின் தேவைகளை வெளி க்கொண்டு வரலாம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...