Headlines News :
முகப்பு » » சாரல் நாடனுக்கு நமது மலையகத்தின் அஞ்சலி

சாரல் நாடனுக்கு நமது மலையகத்தின் அஞ்சலி

மலையக இலக்கியத்தில் குறிப்பாக ஆய்வு இலக்கியத்தில் முக்கிய பங்காற்றியுள்ள எழுத்தாளர் சாரல் நாடன் 31.07.2014 கண்டி வைத்தியசாலையில் காலமானார். 1944-05-09 ம் திகதி ஹட்டன் சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் பிறந்த  எஸ். நல்லையா எனும் இயற்பெயர் கொண்ட சாரல் நாடன் ஆரம்ப கல்வியை சாமிமலை தமிழ் வித்தியாலயத்திலும் உயர்கல்விவரை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றார். அமரர் இர.சிவலிங்கம்  அவர்களின் மாணவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் சாரல் நாடன் தகுதியிருந்தும் குடும்ப பொருளாதார நிலைமைகள் காரணமாக பல்கலைக்கழகம் செல்லாது உயர்தரத்துடன் பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு தேயிலைத்தோட்ட தொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றினார். பூண்டுலோயா டன்சினன் தேயிலைத் தொழிற்சாலை தலைமை அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றிய இவர்; இறுதியாக கொட்டகலை டிரேட்டன் தோட்டத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பபை இழந்தாலும் தனது எழுத்தின் மூலம் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் செய்யும் பணியினை ஆற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 1960 களில் ஏற்பட்ட மலையகம் எனும் உணர்வுக்கு இலக்கித்தினூடாக உருவம் கொடுத்தவர்களில் இவரது பணி மகத்தானது. ஆரம்ப காலங்களில் புனைகதை இலக்கியத்திலும் கவிதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டிய இவர் பின்னாளில் மலையகம் குறித்த ஆய்வு இலக்கிய பணிகளில் அதிகம் அக்கறை காட்டினார். அந்த வகையில் மலையக இலக்கிய முன்னோடிகளான சி.வி.வேலுப்பிள்ளை (சி.வி. சில சிந்தனைகள், தமிழ்ச்சுடர்மணிகள் சி.வி. வேலுப்பிள்ளை)  கோ. நடேசய்யர் (தேசபக்தன் கோ. நடேசய்யர, பத்திரிகையாளர் நடேசய்யர்;), மற்றும் இர.சிவலிங்கம் (இளைஞர் தளபதி இர.சிவலிங்கம்) ஆகிய மூன்று ஆளுமைகள் பற்றி ஆய்வு செய்து நூல்களை எழுதியுள்ளார். அதேபோல மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையகம் வளர்த்த தமிழ், இன்னொரு நூற்றாண்டுக்காய், மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் எனும் ஆய்வு நூல்களையும், மலைக்கொழுந்தி எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
தனது எழுத்துப்பணிகளுக்கு அப்பால் 'சாரல் வெளியீட்டகம'  எனும் பதிப்பகத்தை நிறுவி  மலையக நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். இரண்டு முறை தேசிய சாகித்திய விருதுபெற்றுள்ள இவர் மாகாண சாகித்திய விருதினையும் பெற்றுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கொட்டமகலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates