ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும்.
அந்த வகையில் மலையக மூத்த பெண் படைப்பாளிகளான திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர், 'தூரத்துப் பச்சை' என்ற படைப்பைத் தந்த திருமதி. கோகிலம் சுப்பையா, திருமதி. சிவபாக்கியம் குமாரவேல் போன்ற தமிழ் பிரம்மாக்களின் வரிசையில் மலையக முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவுசெய்து இன்று அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் 'இலக்கியத் தாரகை' கலாபூஷணம் நயீமா சித்தீக் முக்கியமானவராவார்.
மலையக இலக்கியத்தை நோக்கும்போது 60களின் பின் 'மறுமலர்ச்சிக் காலம்' என்றே குறிப்பிடலாம். அதற்கு அடித்தளமாக விளங்கியது 'கலாபூஷணம்' க.ப.சிவம் இணையாசிரியராக இருந்து வெளியிட்ட 'மலைமுரசு' என்பதே ஆய்வாளர்களின் கூற்று. மலைமுரசில் தனது ஆரம்ப எழுத்துருவை வெளிக்கொணர்ந்த பலர் இன்று மலையக மாணிக்கங்களாக மிளிர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாகக் கூறுவதானால் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளாத தேசபக்தன் கோ. நடேசய்யர், 'மலையகத் தமிழர் வரலாறு' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை மலையக இலக்கிய உலகிற்குக் கொண்டுவந்த சாதனையாளர் சாரல்நாடன், அமைதியே உருவான ஆசிரியை திருமதி. லலிதா நடராஜா ஆகியோரின் வரிசையில் மலைமுரசில் முகிழ்த்தவர்களில் ஒருவரே இன்றைய (மல்லிகை) அட்டைப்படத்தை அலங்கரிக்கும் 'இலக்கியத் தாரகை' 'கலாபூஷணம்' திருமதி. நயீமா சித்தீக் அவர்கள்.
பதுளை மாவட்ட அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், தற்போது கம்பளையை வதிவிடமாகவும் கொண்ட இவர், பசறை மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து, கலைமாணி(பி.ஏ.) பட்டத்தையும், கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டவர்.
சிறுகதைப் படைப்பாளியாக இலக்கிய உலகில் முதன்முதலாகத் தடம் பதித்த நயீமா சிறந்த சிறுகதைகள் பலவற்றை வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, பிந்திய 90களில் தோன்றிய தினக்குரல், நவமணி மற்றும் தமிழக தீபம் இதழ்களில் எழுதியுள்ளார். தனது எழுத்துலகப் பணியோடு வானொலி ஆக்கப் பிரதிகள், வானொலி நாடகம், உரைச்சித்திரம் என்பவற்றையும் படைத்துக் காற்றில் கலக்கச் செய்த பெருமைக்குரியவர்.
தனது இளமைக் காலத்தில் சிறுகதை, வானொலிப் பணிகளோடு நயீமா சித்தீக் சமூகப் பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு மலையக சமூக மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவரது எழுத்துக்களில் காணப்பட்ட வேகம், சமூக மாற்றத்திற்கான எண்ணக்கரு, மலையகப் பெண்களின் வாழ்க்கை அவலங்களைத் தனது மேடைப் பேச்சுக்களிலும் படைப்புகளிலும் மிக வீறாப்புடன் வெளிக்கொணர்ந்ததைக் காணமுடியும்.
இவரின் அருமை, பெருமை, ஆற்றல்களை அறிந்து இவரை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவுத் தலைவியாக, மறைந்த தோழர் ஏ. அஸீஸ் நியமித்தார். இப்பணியின் மூலம் நயீமா மலையகத் தோட்டப் பெண்களின் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்தினார்.
மலையகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு அப்புத்தளையில் 'அசோக வித்தியாலயம்' எனும் பெயரில் கல்விக்கூடம் ஒன்றினை ஆரம்பித்து மலையகக் கல்வி அபிவிருத்திக்குப் பங்காற்றியுள்ளார்.
படைப்பிலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நயீமா சித்தீக் பத்திரிகைத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறவேண்டும். இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் அப்புத்தளைச் செய்தியாளராகவும் பணிபுரிந்து அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற சமூக அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மலையகத்தில் பெண் பத்திரிகை நிருபராக முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு, அக்காலத்தில் வெளிவந்த 'தீப்பொறி' இதழின் பெண்கள் பகுதியைப் பொறுப்பேற்று அதனூடாகப் பெண்களின் விடிவிற்காகப் பல கேள்விகளைப் படைத்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தவருமாவார்.
மேலும் அவர், கண்டி திருமதி. சிவபாக்கியம் குமாரவேலு அவர்களோடு இணைந்து 'மங்கை' என்ற பெண்களுக்கான இதழையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
படைப்பிலக்கியம், தொழிற்சங்கம், கல்வி என்று பல தளங்களில் தனது உழைப்பை வெளிக்கொணர்ந்த இவரின் பத்திரிகைத் துறை சார்ந்த பங்களிப்பு தனியாக நாம் கவனிக்கத்தக்க விடயமாகும்.
'நாம் இவ்வாறு தமிழில் பாண்டித்தியம் பெற வழிசமைத்த பசறை மத்திய கல்லூரியில் எமக்குத் தமிழைப் போதித்த நல்லாசான் அமரர் ஐ. சாரங்கபாணி ஐயாவையே சாரும். எனது ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் நெறிப்படுத்தி மலையகப் பெண் படைப்பிலக்கியவாதியாக மிளிரச்செய்த பெருமையும் அவரையே சாரும்' என மனந்திறந்து கூறுகிறார் திருமதி. நயீமா சித்தீக்.
'எனது அறிவு வியாபிக்கும்போது, 'நான் வாழ்ந்த பெருந்தோட்ட மக்களின் அவலங்கள் பலவற்றைப் போக்க நாம் என்ன செய்ய முடியும்?' என்று என்னுள் எழுந்த வினாவிற்கு விடையாகவே படைப்பிலக்கியங்களைப் பதிவு செய்யத் தொடங்கினேன்' என்று கூறிப் பெருமைப்படும் இவர், அந்த மக்களின் ஏக்கங்கள், ஏளனப்பட்ட விடயங்கள், சிறிய எட்டடி அறையில் வாழும் வாழ்க்கை, கூட்டுக்குடும்ப பாரம்பரியம், மிக வறுமையான சூழலிலும் நெறி பிறழாத வாழ்க்கை முறை, 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மலையில் பாடுபட்டு வீடு திரும்பியபின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன், அவர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கம், தொழிற்சங்கவாதிகளின் கபட நாடகம் என்பவற்றைக் கண்டதாலும் கேட்டதாலும் இவற்றுக்கெதிராக மேடைகளில் பேசவும் எழுதவும் முடிந்தது என்கிறார்.
இவரின் படைப்பிலக்கியப் பணியினைப் பாராட்டிப் பல்வேறு சமூக, பொது நிறுவனங்கள் விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு:
1986 ஆம் ஆண்டு மலையக கலை இலக்கியப் பேரவை இவரது இலக்கியப் பணிகளுக்காக விருது வழங்கிக் கௌரவித்தது.
1989 ஆம் ஆண்டு மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் விருதுடன் சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் தமிழ் சாகித்திய விழாவில் 'இலக்கியத் தாரகை' எனும் பட்டமும் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு அவர் பிறந்த மாவட்டமான ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகா நாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடாத்திய 'சுதந்திரன் சிறுகதைகள்' நூல் அறிமுக விழாவின்போது யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைத் துறையில் இவரின் பங்களிப்பு விசாலமானதாகக் காணப்படுகின்றது. சமூகத்தின் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் தத்ரூபமாகச் சித்திரிப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது.
தனது படைப்புகளில் வாழ்க்கையின் உணர்வுகளை மிக அவதானமாகப் பல்வேறு கோணங்களில் நோக்கியுள்ளார். அத்தளத்திலேயே அவர் படைத்த படைப்புக்களான 'வாழ்க்கைப் படகு' (நாவல்) வீரகேசரி வெளியீடு, 'வாழ்க்கைச் சுவடுகள்' சிறுகதைத் தொகுதி கல்ஹின்ன தமிழ்மன்ற வெளியீடு (1987), 'வாழ்க்கை வண்ணங்கள்' (கண்டி சிந்தனை வட்ட வெளியீடு 2004), 'வாழ்க்கை வளைவுகள்' (சிறுகதைத் தொகுதி) மணிமேகலைப் பிரசுர வெளியீடு 2005, அந்தனி ஜீவா தொகுத்த 25 பெண் பிரம்மாக்களின் 'அம்மா' என்ற சிறுகதைத் தொகுப்பு 2005(தமிழக கலைஞன் பதிப்பகம்) என்பன படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் மலையகப் படைப்பாளிகளின் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் பல வெளிவந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
- நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரை
(நன்றி: மல்லிகை, ஜூலை 2006-அட்டைப்படக் கட்டுரை)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...