மப்பும் மந்தாரமுமாய் - மேகம் மூடிய அந்த இருண்ட மலைகளின் பின்னால் ஒளிக்கீற்றாகப் பிரகாசித்த இர. சிவலிங்கம் அவர்களின் மறைவு மலையக சமுதாயத்தின் ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும்.
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் அதிபராகத் தனது வாழ்வை ஆரம்பித்த சிவா மலையக மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர். 1960களில் மலையகத்தின் சமூக, கலை, இலக்கியத்துறைகளில் பீறிட்டெழுந்த எழுச்சியின் அடிநாதமாக இர. சிவலிங்கம் அமைந்திருந்தார் என்பது மலையகத்தின் சமூக வரலாறு காட்டும் சாட்சியமாகும். அறுபதுகளில் மலையகத்தின் படித்த புதிய தலைமுறையின் தன்னிகரற்ற தலைவனாக சிவா திகழ்ந்தார். சிவாவிற்கு அக்காலகட்டத்தில் இளைஞருலகில் கிடைத்திருந்த பரந்த அங்கீகாரத்தை இன்று நினைவு மீட்டிப் பார்க்கையில் அத்தகைய அங்கீகாரத்தை பின்னாளிலும் கூட வேறு எந்தக் கல்விமானும் பெற்றதில்லை என்றே கூற வேண்டும்.
சென்னையில் அவர் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே ஆங்கிலப் பேச்சுவன்மையில் தலைசிறந்தவராகத் திகழ்ந்திருக்கிறார். கூர்மையான விஷயஞானமும், தெளிவான வெளிப்பாடும், கவர்ச்சிகரமான மொழியும், கம்பீரமான ஆளுமையும் சிவாவின் வசீகரமான தலைமைப் பண்புக்குத் துணைசேர்ந்தன. மலையகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் அவர் முழக்கமிட்டார். மலையகம் பூராவும் கிளைவிட்டிருந்த மன்றங்களில் எல்லாம் சிவா பிரசன்னமாயிருந்தார். சிவா உரையாற்றாத மலையக விழாக்களே இல்லை எனுமளவிற்கு அவர் மலையக வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தார்.
சிவா தலைமைதாங்கிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் மலையக இளைஞர் முன்னணி மலையகத்தின் புதிய தலைமுறையினரிடையே சமூக விழிப்புணர்வுக்கு வித்திட்டது. நூற்றாண்டுகளாக எந்தவித அடிப்படை உரிமைகளுமற்ற நிலையில் கொடூரமான சுரண்டலுக்குட்பட்டிருந்த மலையக சமுதாயத்தின் மீட்சிக்கு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கமும் இளைஞர் முன்னணியும், குரல் கொடுத்து, மலையகத்தின் எதிர்காலம் குறித்தும், இனத்தனித்துவம் குறித்தும் மலையகத்தின் சமூக, அரசியல், கலாசாரத்தளத்தில் சிந்தித்த புதிய தலைமுறையினருக்கு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கமும், முன்னணியும் தனி ஆதர்ஸனமாக அமைந்தது.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மலையகப்பாடசாலைகளில் பயின்று வெளியேறி இளைஞர்கள் அனைவரதும் ஆகர்ஷிப்பின் நாயகனாக சிவா திகழ்ந்தார் என்பதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. மலையகம் குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்ட இளைஞர்களின் மனச்சாட்சியின் ஆழமானப்பதிவு இது.
சிவாவின் எழுச்சிகரமான பேச்சைக்கேட்டு மலையக நகர்களில் மலையக இளைஞர்கள் திரண்டனர். இந்த இளைஞர்களே இன்று மலையகத்தில் பரவலாக ஏற்பட்டிருக்கும் உத்வேகத்துக்கு ஊற்றாகத் திகழ்ந்தவராவார். அந்த இளைஞர்களின் சமூக உணர்வும் நிதானமும் அக்கறையும் மதிப்பதற்கு உரியனவாகும். வெவ்வேறுப்பட்ட அரசியல் கொள்கைகளை கொண்டிருந்தாலும் மலையக சமூக முன்னேற்றம் என்ற பரந்த இலக்கில் ஒன்றுபட்டு பணியாற்றிய உன்னதமான காலப்பகுதியாக இக்காலத்தை குறிக்கத்தோன்றுகிறது. அரசியல் உரிமைகள் எதுவுமற்ற நிலையில் எதிர்காலம் சூனியமாக மட்டுமே தோற்றம் காட்டிய நிலையில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் சமூக உணர்வுடனும் இந்த தலைமுறையினர் செயற்பட்டதன் பின்னணியில் சிவாவின் பேருருவே நிழலாடுகிறது.
இந்நூலை வெளியிட்ட எச்.எச். விக்கிரமசிங்கவை பற்றி கூறுகையில்,
“அறுபதுகளின் நடுப்பகுதியில் மலையகத்தில் உத்வேகத்துடனும் தீரத்துடனும் தமிழ் இலக்கிய உணர்வினையும், சமுதாயப்பற்றினையும் ஊட்டிவளர்த்த மலையக இளைஞர் முன்னணி உணர் உலைக்ககூடத்தில் இலட்சியவார்ப்படத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் இன்று இளமைக் குன்றாது இலட்சியம் மங்காது சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய இளைஞர்களின் சமூக உணர்விற்கும் இலக்கியவளர்ச்சிக்கும் வித்திட்டவன் என்ற நிலையில் இவர்களது நிலையின் உயர்வையும் பணிவின் பொலிவையும் கண்டு இறும்பூதெய்கின்றேன்”
என்று குறித்து செல்வது விக்கிரமசிங்கவிற்கு மட்டுமல்ல, அவரது தலைமுறையினர் அனைவருக்குமே பொருந்தக்கூடியதாகும். இந்த சமூக, இலக்கிய வளர்ச்சியின் நியாயமான பெருமை சிவாவைச் சேர்கிறது. சி.வி.யின் “நமது கதை” என்ற நூல் முடிக்கப்படாத நிலையில் தட்டச்சு பிரதியில் இருந்தது. சி.வி. எழுதிய பிறிதொரு கட்டுரையின் முன்பகுதியை இந்நூலில் இறுதியாக சேர்த்து அதை அவரது எழுத்திலேயே பூரணப்படுத்தி 1987இல் சென்னையில் அந்நூலை வெளியிட முனைந்த போது அதற்கு முன்னுரை எழுதுமாறு சிவாவையே கேட்டு இருந்தேன்.
சி.வி.யின் “நாடற்றவர் கதை” என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னுரைக் குறிப்புகள் சிவாவின் விமர்சன ஆளுமையைப் பறைசாற்றும் அவரது மிகச் சிறந்த எழுத்துகளில் ஒன்றாகும். மலையகம் குறித்த அவரது. ஆழ்ந்த கிரகிப்பிற்கும் நுணுகிய பார்வைக் கோணத்துக்கும் தெளிந்த எழுத்தாற்றலுக்கும் இம்முன்னுரை நல்லதொரு சாட்சியமாகும். சி.வி.யைப்பற்றிய துல்லியமான - நேர்மையான கணிப்பு அது. மலையக விமர்சன இலக்கியத்தில் சி.வி.பற்றிய சிவாவின் விமர்சனம் மூலஸ்தானம் கோரி நிற்கின்றது. பிரஜாவுரிமை, வாக்குரிமை, தொழில் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டிருந்த மலையகத்தமிழர்களின் மத்தியில் போராட்ட உணர்வை விதைத்தவர் சிவா. வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னரும் எவ்வித எதிர்வினையுமின்றி சும்மாவிருந்த அரசியல் தலைமை குறித்து சிவா பல இடங்களில் சினங்கொண்டிருக்கிறார்.
அக்கிரமங்களுக்கு எதிரான சிவாவின் கனல் உமிழும் எழுத்து சாட்சிகள் இவை. அழகிய அர்த்தபுஷ்டியான ஆணித்தரமான மேடைப் பேச்சில் சிவாவுக்கு நிகர் எவரும் இல்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் அவரது சொல் ஆற்றல் அபாரமானது.
ஒரு முறை பெல்ஜியம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெல்ஜியம் கொங்கோவில் நடத்திய காலனித்துவ சுரண்டலைப் பற்றி அவரது உணர்ச்சிபூர்வமான கருத்தாடல் அம்மாணவர்களை வியப்புறச் செய்தது. “தமக்கே சரியாக தெரியாத சரித்திர உண்மைகள் அவை என்று அக்குழுவில் ஒருவர் பின்னாள் என்னிடம் கூறினார். நடன அரங்கேற்றமா, நூல் வெளியீடா, ஆசிரியர் பிரிவுபசாரக் கூட்டமா, மலையகப் பட்டதாரி மாணவர்கள் கூட்டமா, பாராட்டுக்கூட்டமா, எங்கேயும் அச்சூழலுக்கு பொருத்தமாக உரையாட அரிய திறமை சிவாவிடம் இருந்தது. அவருடைய பேச்சின் எடுப்பான தொடக்கமும், தெளிவாக கருத்து வளர்த்துச் செல்லும் பாங்கும் அவருடைய உரையின் முழுமைக்கு அணிசேர்ப்பன. அவரது பேச்சு ஒவ்வொன்றும் அழகிய ஓவியமாக இனிய இசையாக தன்னளவில் பூரணத்துவம் கொண்டதாகும். அவரது நுண்ணிய வாசிப்பும் பரந்த விஷயக் கிரகிப்பதும் எதனையும் தெளிவாக கோவைப்படுத்தித் தொகுக்கும் லாவகமும், ஆங்கிலமும், செந்தமிழும் அவருக்குக் கைகட்டி சேவகம் செய்யும் பாங்கும் அவரை மலையகத்தின் தனித்துவமான சொல்லாற்றல் கொண்ட அறிஞராக நிலைநிறுத்தியுள்ளது.
எங்கே போராட்டமோ அங்கே அவரது இதயம் தோய்ந்திருந்தது.
தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த அனுபவம் லட்சக்கணக்காக தாயகம் திரும்பிய மக்களின் துயரத்திலே சிவாவின் இதயம் தோய்ந்து பட்டைத்தீட்டியது. இறுதிவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். தமிழகத்தில் தலித்துகளின் எழுச்சியில் சிவா தன்னை அடையாளம் கண்டார். “நலிந்தோர் நலமையகம்” என்ற அமைப்பிற்கூடாக ஆதிவாசிகளின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். நீலகிரியின் தலித் போராலிகள் தங்களின் நெஞ்சுக்கு நெருக்கமான தோழனை இழந்து போயிருக்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய சிவா மிக உற்சாகத்தோடு செயல்பட்டார். இன்றைய நெருக்கடியான நிலையில் பரந்த அனுபவத்தின் பின்னணியில், சிவா நமக்கு பணியாற்ற வருவது புதிய தெம்பையூட்டுகிறது. என்று எச்.எச். விக்ரமசிங்க எழுதி இருப்பது மலையகத்தின் ஆழ்ந்த அங்கீகாரத்தை கோடிட்டு காட்டுகின்றது.
இறுதி மூச்சு வரை மலையகம் குறித்தே சிந்தித்து வாழ்ந்த பெருமகன் சிவாவின் மறைவு இன்றைய சூழ்நிலையில் பாரிய துயரம் தருவதாகும். மலைத்தாயின் மரகத மேனியில் உரிமை மாலை சூடமுனைந்த புதல்வனின் மறைவு மலையகத்தின் உதய வானில் காரிருளை ஏற்படுத்திவிட்டது. அந்தப் புரட்சி பெருமகனின் இலட்சியத்தை நிறைவேற்றுவதே மலையக சமூதாயத்தின் இன்றைய, நாளைய மிகப்பெரும் பணியாகும்.
மு. நித்தியானந்தன் லண்டன்
முன்னாள் விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...