Headlines News :
முகப்பு » » மலையகம், மகளிர், மதுபானம், மானக்கேடு...

மலையகம், மகளிர், மதுபானம், மானக்கேடு...


கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. கல்வியும் அபிவிருத்தியும் ஒரு தராசைப் போல சமஅளவில் இருக்கும் போதுதான் அச்சமூகம் முழுமையான அபிவிருத்தி நோக்கிய பாதையில் பயணிக்கும். ஆனால் மலையகத்தைப் பொறுத்த வரையில் இவை எதுவும் முழுமையடையாத நிலையில்தான் காணப்படுகிறது. எதிர்காலம் குறித்த சிந்தனைகள் எதுவுமற்ற ஒரு சமூகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டச் சமூகத்தின் வாழ்க்கையில் மேம்பட வேண்டுமானால் எதிர்கால சமுதாயம் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு பெற்றோர் தம்மை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை அவர்களின் இருப்பு குறித்த கேள்விக்கு மலையக அரசியல் தலைமைகளும் புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கல்வியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவை ஒரு குறித்த வட்டத்திற்குள்ளேயே முடங்கியிருக்கிறது. படித்து பட்டம் பெற்றவர்கள் சமூகத்தில் பெரியவர்களாகி வசதி வாய்ப்புக்கள் வந்ததும் கடந்த காலங்களை மட்டுமல்ல தமது பெற்றோரைக் கூட மறந்து விடுகின்றனர். தமது கல்விக்காக பெற்றோர் பட்ட துயரங்களை மறந்தவர்களாக அற்பசொற்ப சுகபோகங்களுக்காக விலை போனவர்களும் கூட எமது சமூகத்தில்தான் இருக்கிறார்கள்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர் கல்வியைத் தொடர்வதென்பது இயலாத விடயமாகவே இருக்கிறது. பெற்றோர் மத்தியில் போதிய அறிவின்மை, குடும்ப வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, மது பாவனை ஆகிய விடயங்கள் பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கையில் மேம்பாடடைய விடாமல் தடுப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளன.

ஆரம்பக் கல்விக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் க. பொ. த. சாதாரண தரத்துடன் அந்த எண்ணிக்கை குறைந்து விடுகிறது. அவ்வாறே சுய முயற்சியில் படிக்க முயலும் மாணவர்களுக்கு அந்தச் சூழல் இடங்கொடுப்பதில்லை. சிறு வயதிலேயே காதல் வயப்படுதல் தோட்டப் பகுதிகளில் சாதாரண விடயமாகும். சிறுவயது திருமணம், பால் நிலை மற்றும், பாலியல் தொடர்பான போதிய விழிப்புணர்வின்மையும் கல்வியைத் தொடர முடியாமைக்கு இன்னொரு காரணமாகும்.

குடும்ப வறுமை காரணமாக சிறு வயதிலேயே கல்வியை இடைநிறுத்தி விட்டு வேலைக்காக அனுப்பியதால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் அண்மையில் மஸ்கெலியா பகுதியில் மர்மமான முறையில் மரணமான இரு சிறுமிகளின் பரிதாப நிலை ஏனைய பெற்றோருக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. பெற்றோர் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால் தம் பிள்ளைகளுக்கு சிறந்த வழியை காட்டி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஒரு சிலர் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையையே சீரழித்து விட்டயுவதிகள் பலர்.

கல்வியை பாதியில் இடைநிறுத்தி விட்டு தலைநகர்ப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த யுவதிகள், ஹோட்டல்களில் எடுபிடிகளாக, நடைபாதை வியாபாரங்களில், கட்டட நிர்மாணப் பணிகளுக்கான உதவியாளர்களாக, சுத்திகரிப்பு தொழிலாளர்களாக, கூலிகளாக நாட்டாமைகளாக, காவல்காரர்களாக பலவித தொழில்களிலும் மலையகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள். க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த பலரும் கூட இதில் அடங்குவதுதான் மிகவும் வேதனை தரும் விடயமாகும். நகர்ப்புறத்தில் தமது பிள்ளைகள் வேலை செய்வதையே பெரிய விடயமாக நினைக்கிறார்கள்.

தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு வரும் பிள்ளை தலை மயிருக்கு வர்ணம் பூசிக் கொண்டும், காதில் அணிகலன்களை மாட்டிக் கொண்டும் கையில் ஒரு கையடக்க தொலைபேசியுடன் திரிவதைப் பார்த்து தோட்டத்தில் வேலையில்லாமல் திரியும் ஏனைய இளைஞர்களுக்கும் அந்த ஆசைகள் வந்து விடுகின்றன. பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களும் நகர்ப்புறங்களை நாடிச் செல்கின்றனர்.

சில பெற்றோர் தம் பிள்ளை பத்தாவது வரை படித்தால் போதும், அதுதான் உயர்கல்வி என பெருமையடைவதுடன் நின்று விடுகின்றனர். பத்தாவது வகுப்பு வரை படித்த தனது மகனை உச்சத்தில் வைத்து போற்றுவதும் அவன் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என நம்புவதும், பெற்றோரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் பல இளைஞர்கள் சமூகத்தில் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். பிற்காலத்தில் ஒரு குடிகாரனாக குடும்பத்திற்கு உதவாதவனாக மாறிவிடுகிறான்.

பெண் பிள்ளைகளின் கல்வியில் தாக்கம் ஏற்படுவதற்கு சுற்றுச் சூழல்களும் காரணமாகும். இன்றைய நவீன உலகில் ஆணும் பெண்ணும் பழகுவதை எவரும் காதல் என கூறிவிட முடியாது. தோட்டப் பகுதிகளில் ஆண் - பெண்ணுடன் கதைத்து விட்டாலோ சேர்ந்து வந்து விட்டாலோ அவர்களைப் பற்றி அவதூறாக பேசப்படுகின்றது. நன்கு படிக்கும் அந்த மாணவியின் கல்விற்கு, அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. சில காலம் வீட்டில் மடங்கியிருக்கும் அவள் நகர்ப்புறத்திற்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அவளின் எதிர்காலமே வீணாகிவிடுகிறது.

மலையக சமூகத்திலிருந்து பிரிக்க முடியாததொரு அம்சம்தான் மதுபானம். மதுபானத்திற்கு அடிமையான பெற்றோரால் தம் பிள்ளைகளை படிக்க வைப்பது சிரமமான காரியமாகி விடுகிறது. அண்மையில் நடந்த உண்மைச் சம்பவமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். குடிகாரத் தந்தையின் நண்பனாக வாடகைக்கு தங்கியிருந்த ஒருவனால் மாணவி மூன்று மாதக் கர்ப்பிணியானாள். விடயம் பெற்றோருக்குத் தெரியவரவே அவனைப் பற்றி ஆராய்ந்து பார்த்ததில் அவன் ஏற்கனவே திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை என்பது தெரியவந்தது. இறுதியில் தந்தை பெயர் தெரியாமலே பிள்ளை வளர்கிறான். அவனைப் பெற்றெடுத்த தாய் கொழும்பில் வேலை செய்து வருவது மட்டுமே வெளியாருக்குத் தெரிந்த விடயமாகும்.

இச்சம்பவத்திற்கு பிரதான காரண கர்த்தாவாக இருந்தவர் அந்த மாணவியின் தந்தைதான்.

மலையக சமுதாயத்தில் கல்வி வீழ்ச்சிக்கு காதல் மட்டுமல்ல காரணம். இளவயது திருமணமும் பிரதான காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு வீட்டில் நான்கைந்து பிள்ளைகள் என்றால் குடும்ப பொருளாதார சூழ்நிலையில் அனைவரையும் படிக்க வைக்க முடியாமல் போய்விடுகிறது. பாடசாலைக்குச் செல்லும் காலப் பகுதியில் அவர்களுக்கு அறிவூட்டல்கள், வழிகாட்டல்கள் இல்லாமல் தொடர்ந்து அவர்கள் கற்பதற்கான வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. அதே நேரத்தில் படித்த தி!=ரி&யி!ஸிரி(யி முன்மாதிரியாகக் கொண்டு பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கல்வியறிவற்ற பெற்றோர் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

மலையக எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை இப்போதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இதற்கு மலையக பெற்றோரும் பாடசாலைக் கல்வியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கல்வி என்றும் அழியாச் செல்வமாகும். எதிர்காலம் என்றால் என்னவென்று தெரியாத பெற்றோர் தம் பிள்ளைகளை தேயிலைத் தோட்டமே தமது வாழ்க்கைக்கு இறைவன் கொடுத்த கொடையாகக் கருதும் நிலை மாற வேண்டும். அன்றாடம் தம் வயிறு நிரம்பினால் போதும் என நினைக்கும் பெற்றோர் தனக்கு அடுத்து தனது பிள்ளை அதே தோட்டத்தில் தொழிலாளியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பிள்ளைகளைப் படிக்க வைப்பதை பெரிய சுமையாக நினைப்பதும் குடும்ப பொருளாதாரம் ஈடுகொடுக்காது என நினைப்பதும் இன்றும் அவர்களிடம் இருக்கும் மூடத்தனத்தையே காட்டுகிறது.

இவ்வாறான நிலைமைகள் மாற மலையக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதனை மலையக புத்திஜீவிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள் மலையக சமூகம் கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றியமைக்க உறுதிபூண வேண்டும். படித்த சமூகம் எதிர்கால மலையக சமுதாயத்தை ஒரு விழிப்புணர்வுள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீரைக் கண்ட இடத்தில் கழுவி விடுபவர்களாகவே இருப்பவர்கள் என்ற நிலை மாற்றி ஆண் - பெண் சமநிலை தொடர்பான பாலியல் கல்வியையும் இரு பாலாருக்கும் வழங்க வேண்டும்.

மலையக மக்களின் கல்வி நிலை வீழ்ச்சியடையாது இருப்பதற்கு பெற்றோர், மாணவர், ஆசிரியர் மட்டுமன்றி முழு மலையக சமுதாயமுமே விழிப்புணர்வு பெற வேண்டும். இதனூடாகவே எதிர்காலத்தில் கல்விகற்ற ஒரு சமுதாயத்தினை உருவாக்க முடியும்.

துரை உமா
அரசறிவியல்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்

நன்றி -  தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates