Headlines News :
முகப்பு » » மலையகம் பெருமையோடு நினைவு கூரும் மலைத்தம்பி என்ற மாபெரும் கவிஞன்!

மலையகம் பெருமையோடு நினைவு கூரும் மலைத்தம்பி என்ற மாபெரும் கவிஞன்!


அன்னாரின் நினைவு தினத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை
சுதந்திர இலங்கையில் அறுபது முதல் எழுபத்தைந்து வரை ஒரு பதினைந்து ஆண்டு காலத்தை இளைஞர் எழுச்சிக் காலம் எனலாம். இதை சமூக மாறுதலுக்கான சர்வதேச காலம் என்றும் உலகம் முழுவதும் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களிலிருந்து ஆவேசக் குரல்கள் எழுப்பிக் கொண்டிருந்த காலம் என்றும் சொல்லலாம்.

இனங்களுக்கிடையிலான தேசிய முரண்பாடுகள், இட்சியாளர்களுக்கெதிரான அரசியல் முரண்பாடுகள் என இலங்கையையும் இளைஞர் எழுச்சிப் போராட்டங்கள் விட்டு வைக்கவில்லை.

சிங்கள இளைஞர்கள் மத்தியில் எழுபதுகளில் கரு கட்டிய மக்கள் விடுதலை முன்னணி என்னும் இயக்கம் பெரும்பாலும் கிராமப்புற இளைஞர், யுவதிகளால் கிளர்ந்தெழுந்து உருவாக்கப்பட்ட இயக்கமாகும்.

இந்த இயக்கத்தோடு, தேசிய ரீதியில் அரசுகள் மாறி மாறி மோதிக் கொண்டிருந்த வேளையில், இன ரீதியிலான விடுதலைக்காக ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வட கிழக்கு இளைஞர்கள் எழுபத்தைந்துகளில் ஆயுதம் ஏந்தும் இயக்கத்தை உருவாக்கி, பின்னர் பல இயக்கங்களாக அவை உருமாறி போராட்டக் காலத்தில் குதித்த வரலாறுகள் யாவும் எமது நினைவில் நிற்பவை.

இந்த இரண்டு ஆத்திரப் பரம்பரைக்கும் ஆவேசப் பரம்பரைக்கும் முனனரே மலையகத்தில் அறுபதுகளில் ஓர் ஆவேசப் பரம்பரை கிளர்ந்தெழுந்தது! இன்னும் தெளிவாக கூறினால் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கொந்தளித்து எழும்பிய முதல் எழுச்சி மலையகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில்தான் உருவெடுத்தது.

இம் மூன்று இளைஞர் எழுச்சிகளில் மலையகத் தமிழ் இளைஞர் எழுச்சி முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றியது. அவர்கள் முன்னைய இரண்டு இயக்கங்களைப் போன்று ஆயுதப் போராளியாக இல்லாமல், எழுத்துப் போராளியாக பேனாக்களைச் சுமந்து நிற்கிறார்கள். அவர்கள் அரசுக்கெதிராகவோ, சொந்த சமூகத்தின் தலைமைக்கெதிராகவோ நிற்கவில்லை. மக்களை எழுச்சிபெற செய்வதிலும், கல்வி சிந்தனை துறையிடிவ் வளர்ச்சிடையச் செய்வதிலும், அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுக்கொடுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

நாற்பதுகளிலிருந்து ஐம்பது வரை தமிழகத்தில் தி. மு. க. வினர் கலாசார புரட்சியில் ஈடுபட்டது போலவே மலையத்தில் இவர்கள் கலை, இலக்கியத் துறைகளில் ஈடுபட்டார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், சொந்தமாக உருவெடுத்த சிற்றேடுகள் என்று எழுதிக் குவித்தார்கள். அவர்கள் மத்தியில் கவிஞர்கள், கதாசிரியர்கள், கலைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள் என மலையகமெங்கும் சமூகவாதிகள் உருவெடுத்தனர்.

இந்த முதல் கட்ட எழுச்சியில் உருவெடுத்த ஓர் ஆவேசம் கொண்ட இளைஞன்தான் ‘மலைத்தம்பி’ என்ற கவிஞன். இந்தக் கவிஞன் இராயப்பன் ஐசேக் என்ற இயற் பெயர் கொண்டவராவார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உழுகங்கை என்ற ஊர் பெயரை அழகுற உச்சரித்து, பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த பத்திரிகையாளன்தான் மலைத்தம்பி!

தமிழ் இலக்கியங்களைத் தெளிவுறக் கற்றறிந்த இலக்கியவாதியாகவும், சிறந்த பத்திரிகையாளனாகவும் மொழி வளம் நிறைந்த மரபுக் கவிஞனாகவும், இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு சமூகவாதியாகவும் இரா. ஐசெக் வளர்ந்து வந்தார்.

தனது இலக்கியத்துக்கு அப்பால் சிறந்த கலைஞனாக தலைநகரில் பிரபல்யமாக அன்று பேசப்பட்டார். மலைத்தம்பி ஓர் இனிமையான பாடகன். சிறந்த நாடக நடிகன் என்ற சிறப்புக்கெல்லாம் பாத்திரமாகி நின்றார்.

ஆரம்ப காலத்தில் வீரகேசரி பத்திரிகை காரியாலயத்தில் ஒப்பு நோக்காளர் பதவியில் தொழில் புரிந்தார். வீரகேசரி நிறுவனத்தில் நடந்த ஒரு ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மு. சிவலிங்கம் தயாரித்தளித்த ‘கங்காணி காளிமுத்து’ என்ற நகைச்சவை நாடகத்தில் மலைத்தம்பி கங்காணியாகவும் இன்றும் வீரகேசரியில் பணிபுரிந்து வரும் துவரம்பிட்டி சண்முகம் குடிகார கணவனாகவும் மனைவி அழகம்மாவாக சிவலிங்கமும் நடித்து ‘அப்லாஸ்’ வாங்கிய ஓர் இனிமையான காலத்தை நினைக்கும் போது, மனதைவிட்டு விலக முடியாத மனிதனாக இன்றைய நாளிலும் மலைத்தம்பி நினைவில் வாழ்கின்றார்....! மலைத்தம்பியின் பத்திரிகை, ஊடகப் பணி 61 இலிருந்து அவர் மறைந்த காலம் வரை தொடர்ந்தது. வீரகேசரியில் பத்திரிகை ஜாம்பவானாக இருந்த கே. வி. எஸ். வாஸ் தினபதி எஸ். டி. சிவநாயகம் போன்றோருடன் இணைந்து தொழில் செய்தார். பின்னர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்களில் ஒருவராகவும் பணி புரிந்தார்.

அதன் பின்னர் தேசிய முரசொலி ராஜாளி போன்ற பத்திரிகைகளிலும் தொழில் புரிந்தார்.

ஆரம்ப காலத்தில் கவிஞர் மலைத் தம்பியின் கவிதைகள் யாவும் மலையகத்தின் இயற்கை அழகைப் பற்றி பாடியதாகும். கவிஞர் மலைத்தம்பி கவிதைகளோடு நிறைய சமுதாய எழுச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 75 க்குப் பிறகு, மலையக அரசியலும் ஆரம்ப காலத்து கங்காணித்துவ முறையைப் போலவே தொடர்ந்து வருவதைக் கண்டு, ஆத்திரம் அடைந்தார்.

அதன் பின்னர் அவரது கவிதைகள் யாவும் மலையகத் தொழிற்சங்கவாதிகளைப் பற்றியும், கட்சி அரசியல்வாதிகளைப் பற்றியும் விமர்சனம் செய்யும் சமூக எழுச்சிக் கவிதைகளாகவே அமைந்தன. அனைத்து தேசிய நாளேடு, வார ஏடுகளில் மலைத்தம்பியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

மலைத்தம்பி வாழ்ந்த காலத்தில் அவரது நண்பர்களாக இலக்கிய உலகில் கூடி செயற்பட்டவர்கள் மிகச் சிறப்பு மிக்கவர்கள்¡கவிருந்தனர். கண்டியில் சிறைச்சாலை அதிகாரியாகவிருந்த மக்கள் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் மலைத்தம்பியின் நெருங்கிய நண்பராவார். தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவிருந்த பேராசிரியர் கைலாசபதி, அதன் பின்னர் பிரதம ஆசிரியர் சிவகுருநாதன் ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

கவிஞர்கள் சில்லையூர் செல்வராஜன் இ. முருகையன், இலங்கை வானொலி பணிப்பாளர் பரராஜசிங்கம் ஆகியோரும் மலைத்தம்பியின் நண்பர்களாவர்.

கவிஞர் மலைத்தம்பி 1995ம் ஆண்டளவில் கொட்டகலையில் தனது கவிதைத் தொகுப்பு வெளியீடு சம்பந்தமாக உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது இலக்கிய நண்பர்களான கலைஞர் பிரான்ஸிஸ், சாரல் நாடன், சு. முரளிதரன், அந்தனி ஜீவா, மு. சிவலிங்கம் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார்.

இவரது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு வேலைகளில் மேற்குறிப்பிட்ட நண்பர்க்ள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மலைத்தம்பி மேலும் சில கவிதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பில் வசிக்கும் தனது அண்ணார் குடும்பத்தைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த போது, ஒரு வாகன விபத்தில் அகால மரணமடைந்த இச் சம்பவம், வெண்ணெய் திரண்டு வர தாழி உடைந்து கதையாகியது.

அமரர் கவிஞர் மலைத்தம்பியின், புகழ் உடம்பை கலாபவனத்தில் வைத்து கெளரவம் செய்வதற்காக இலக்கிய நண்பர்களான பிரான்சிஸ் சு. முரளிதரன், சாரல்நாடன், அந்தனி ஜீவா, மு. சிவலங்கம் ஆகியோர் அன்றைய கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடியைச் சந்தித்தனர். இவர்களோடு மலையக இளைஞர் முன்னணியின் தலைவரும் கல்விமானுமாகிய இளைஞர் தளபதி என்று போற்றப்படும் இர. சிவலிங்கம் சென்றிருந்தார்.

கலாபவனத்தில் மலைத்தம்பி அவர்களை வைத்த கெளரவம் செய்யும் அளவுக்கு அவரது தகைமைகள் என்னவென்று அமைச்சர் வினவிய போது சிவலிங்கம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பதில் கூறினார். “எங்கள் சமூகம் மிகப் பெருமையோடு கெளரவிக்கும் மகா கவிஞரே இந்த மலைத்தம்பி என்பவர். இவர் எங்களது இலக்கிய சொத்து” என்ற கூறியதும் அமைச்சர் கலாபவனத்து அஞ்சலிக்காக அனுமதி வழங்கினார். அமரர், கல்விமான் இர. சிவலிங்கம் அவர்களின் ஆத்மார்த்த உணர்வுகள் நிறைந்த முதலாவேது “ஓகிட்” மலர் வளையம் கலா பவன மண்டபத்தில் கவிஞருக்கு அஞ்சலியாகியது. இத்தகைய சிறப்புகளும், பெருமைக்கும், கெளரவத்துக்கும் உரிய கவிஞர் அமரர் மலைத்தம்பியின் கவிதைத் தொகுப்புக்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மலையக கவிதை இலக்கியத்தின் பெறுமதி மலைத்தம்பியின் கவிதைத் தொகுப்போடு மேலும் மகத்துவம் பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates