Headlines News :
முகப்பு » » மலையகத்தின் சிந்தனை வளர்ச்சியே அரசியல் மறுமலர்ச்சி - பா.யூட்

மலையகத்தின் சிந்தனை வளர்ச்சியே அரசியல் மறுமலர்ச்சி - பா.யூட்


பல்வேறு ஆட்சி மாற்றங்கள் இலங்கையில் ஏற்பட்டது ஆனாலும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வில் அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரியளவான மாற்றங்கள் ஏற்படவில்லை.

இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் தமிழக கிராமங்களிலிருந்து இலங்கையின் மலைநாட்டு பெருந்தோட்டப் பகுதிகளில் வேலை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவர்களே மலையக பெருந்தோட்டத் தமிழர்கள். இலங்கையில் சுபிட்சமான வாழ்வு தருவதாக ஏமாற்றிக் கொண்டு வந்த பிரித்தானியர்கள் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தினர். தமிழகத்தில் குறிப்பிட்ட உயர் சமூகத்தின் ஆளுக்கைகுட்பட்டிருந்த தமிழ் மக்களை அடிமைகளாக அந்த எஜமானர்களே இலங்கைக்கு கொண்டு வந்தார்கள். மக்களைக் கொண்டு வந்த ஏஜமானர்கள் தங்களுக்கு இம்மக்களை ஆளும் அதிகாரத்தினையும் பிரித்தானியரிமிருந்து பெற்றுக்கொண்டனர். கண்காணியாகவும் முகாமையாளர்களாகவும் பெரிய பதவிகளில் அதிகாரம் புரிந்தவர்கள் பெரிய பங்காளாக்களில் வசித்துக்கொண்டு சாதாரண தொழிலாள மக்களை ஆடு மாடுகள் போல் சிறிய லயன்களுக்குள் அடத்துவைத்து அவர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவுக்கு அத்தொழிலாளர்களின் இரத்தங்களை ஊறிஞ்சிக் குடித்தனர். வேலைக்கு ஏற்ற ஊதியங்கள் வழங்கப்படுவதில்லை உரிய ஓய்வு கொடுப்பதில்லை அளவுக்கு அதிகமான வேலை நேரம் என பல்வேறுவிதமான ஒடுக்குமுறைகளுடன் அம்மக்களை வழிநடத்தினர்.

கல்வி வசதிகள் அற்று சுகாதார வசதிகள் அற்று போக்குவரத்து வீட்டு வசதிகளின்றி அதாவது ஒட்டுமொத்தத்தில் மனித வாழ்வுக்குரிய அடிப்படை வசதிகளற்ற சமூகமாக மலையக தமிழ் மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை வாழ்ந்துவருகின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது மலையக மக்களின் வாழ்வில் நேரடியாக பல்வேறுவிதமான பாதிப்பினை ஏற்படுத்தியது. சுதந்திரமடைந்த கையுடன் பிரஐh உரிமைச் சட்டத்தை கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கி அரசியல் அனாதை ஆக்கியது. இதனால் 1947 இல் தெரிவாகிய மலையகத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியானது. அதாவது 1952 இல் நடந்த பொதுத் தேர்தலில் மலையக மக்கள் வாக்களிக்கவும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவும் முடியாது போயினர். இதனால் அம்மக்களின் பொருளாதாரம் சமூக விடயங்களும் பாதிப்படைந்தன. தமக்கான பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்கு இதுவரையில் இருந்த அரசியல் குரல் நசுக்கப்பட்டது. மலையகத் தமிழ் மக்கள் சிங்கள அரசியல் பூதங்களின் நடுவில் விடப்பட்டவர்களாயினர்.

இதனால் தமது எதிர்கால இருப்பு சந்ததி கலாசாரம் மதம் பண்பாடு என்பனவற்றின் பாவனை குறித்து அச்சம் கொண்டனர். ஏற்கனவே தமிழ் மக்கள் தோட்டங்களில் பாடுபட்டும் தமது வாழ்வில் விருத்தி இல்லாது அன்றாடம் அல்லப்பட்டு வந்த நிலையில் இந்த பிரஐh உரிமைச் சட்டம் மேலும் அவர்களை பாதித்தது. உலக அரங்கில் பல்வேறு நாடுகளும் ஏனைய காலனித்துவ நாடுகளின் அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை அடைந்துவரும் வேளையில் இலங்கை வாழ் மலையக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் அடிமையாக்கப்பட்டனர். இது உலக வரலாற்றில் பாரிய மனித உரிமை மீறலாக காணப்பட்டாலும் இது தொடர்பில் எந்தவொரு நாடும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏன் தாய் நாடான இந்தியா கூட தனது பிராந்திய நலனில் மட்டும் அக்கறையுடன் செயற்பட்டிருந்தது. 1972 ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவமற்றவர்களாகவே வாழ்ந்திருந்தனர். ஸ்ரீமா அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட காணி சீர்திருத்தத்திற்கு அமைய பெருந்தோட்டங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. அரசுடமையாக்கினால் மலையக பெருந்தோட்ட வாழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று மக்கள் எண்ணினர் ஆனாலும் அது நடக்கவில்லை அவர்களின் வாழ்வு அப்படியே தான் இருந்தது.

பல்வேறு ஆட்சி மாற்றங்கள் இலங்கையில் ஏற்பட்டது ஆனாலும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வில் அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாவோ குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரியளவான மாற்றங்கள் ஏற்படவில்லை. அம்மக்கள் மத்தியில் பிரச்சனைகள் நிரம்பி வழிந்தன. அரசியல் சக்தி மக்களுக்குத் தேவைப்பட்டது. அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மலையக தமிழ் மக்களின் தீர்க்கதர்சன தலைவனானர். அவரின் முயற்சியால் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலைகள் வைத்தியசாலைகள் வீதிகள் என சில பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அவரின் இழப்பினைத் தொடர்ந்து அவரின் செயற்பாடுகளையும் அமரரின் பெயரை வைத்தும் பலர் அரசியல் செய்யும் நிலை இன்று காணப்படுகின்றது.

தமக்கான தீர்வை தாமே அடைய வேண்டும் என்ற பாணியில் லயன்களில் இருந்து அரசியல் செய்யவந்தவர்கள் தமது முன்னைய வாழ்வை மறந்து தமக்கு வாக்களித்தவர்களை மறந்து தம் கால் போன போக்கில் தமது சுகபோக வாழ்க்கையை வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். விதம்விதமான வாகனங்கள் பாதுகாப்பிற்கு பொலிசார்  உதவியாளர்கள்  ஊடகங்களின் பக்கபலம் என மலையக மக்களை ஏமாற்றி தமது பிழைப்பினை நடத்தும் அரசியல்வாதிகள் தான் இன்று மலையகத்தில் காணப்படுகின்றனர். மலையக மக்களை வாழ வைக்க வேண்டும் அவர்களின் கல்வியை முன்னெற்றவேண்டும், அவர்களின் சுகாதாரங்களை முன்னெற்ற வேண்டும் என்று ஊடாகங்களில் முழக்கமிடுபவர்கள் அதனை நடமுறையில் செயற்படுத்துவதில்லை.

மலையகத்தில் அரசியல் செய்பவர்களுக்கு மலையத்திலே அரசியல் அலுவலகம் இல்லை. மலையக மக்களின் குறைகளை கேட்டறிவதற்கும் மக்கள் குறைகளை சொல்லுவதற்கும் சந்தர்ப்பம் அளிக்காத இவர்களா மலையகத் தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகின்றனர். மலையகம் வாழ்வு பெறவேண்டும் என்று அரசியல் செய்பவர்கள் முதலில் மலையக தமிழ் மக்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல்வாதி ஆகிவிடடால் தாம் பிரித்தானியாவின் அரச குடும்பமாக மாறிட்டதாக எண்ணக்கூடாது. தாம் முன்னர் வாழ்ந்ததையும் மறக்கக்கூடாது. மக்கள் இல்லை என்றால் அரசியல்வாதிகளின் அரசியல் இல்லை என்பதை மலையக அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். கஞ்சா விற்றுப்பிழைப்பு நடத்துகின்றான் ஊடாகத்தை வைத்து அதிகாரம் செலுத்துகின்றான் தந்தையின் செல்வாக்கில் அரசியல் நடத்துகின்றான், மக்களை ஏமாற்றுகின்றான் அரசாங்கத்துடன் நின்று கொண்டு தான் நன்மைகளை அனுபவித்து வருகின்றான் என ஒருவர் மற்றவர் மீது சோறுபூசுவதை விடுத்து தாம் மக்களுக்கு என் வாக்குறுதிகளைக் கொடுத்தோம் நாம் அதைச் செய்துள்ளோமா என்று சிந்திக்க வேண்டும்.

அரசியலை வைத்து தமது குடும்பங்களை முன்னெற்றத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த மக்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதில்லை. தேர்தல் முடிந்து ஐந்தாண்டுகள் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு அடுத்த தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் களத்தில் வந்து நின்று மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவர். இந்த நிலை மாறவேண்டும். மலையக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். தமது மக்களுக்கு இவ்விளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமக்கு வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதி அதனை செய்யத்தவறியிருந்தால் குறித்த அரசியல்வாதிக்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது. வாக்கின் பெறுமதி என்ன என்தை மக்கள் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும். வெறுமனே சாரயத்திற்கும் வேட்டி சால்வைக்கும் உணவு பெட்டலத்திற்கும் கவர்ச்சியான பேச்சுக்கும் தமது வாக்குகளை அளிக்காது மலையக மக்கள் மீது உண்மையான சிந்தனை கொண்ட அரசில்வாதிக்கு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற அரசில்வாதிக்கு மக்கள் தமது ஆதரவை வழங்குவதன் மூலமே மலையகத்தை மாற்ற முடியும். மலையகத்தை ஏமாற்றும் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க முடியும்.

எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு சேவை செய்யத் தயார் இல்லை என்றால் வடகிழக்கில் மக்கள் வாக்களிப்பதை நிராகரிப்பது போல் மலையகத் தமிழ் மக்களும் தாம் வாக்களிப்பதை நிராகரிக்க வேண்டும். இது ஜனநாக கடமை இதற்கு அச்சப்படத் தேவையில்லை. இப்படி மக்கள் நடந்து கொள்ளத் தொடங்கிவிட்டால் போதும் மலையக அரசியல்வாதிகள் தாங்களாகவே திருந்திவிடுவார்கள். இன்னமும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது என்ற எண்ணம் மலையகத்தை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் போது தான் அவர்கள் மக்கள் தொடர்பில் சிந்திப்பார்கள். தமது காட்டிக்கொடுப்புக்களை கைவிட்டு மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கத் தொடங்குவார்கள். ஆகவே மலையத்தின் மறுமலர்ச்சி மலையக மக்களின் சிந்தை மாற்றத்தில் தான் உள்ளது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates