Headlines News :
முகப்பு » » நூல் அறிமுகம்: ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வு! - எம்.கே.முருகானந்தன்

நூல் அறிமுகம்: ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வு! - எம்.கே.முருகானந்தன்


கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன. இதற்கு அந்தச் சமூகத்திலிருக்கும் கற்றறிந்தவர்களும், தலைவர்களும் கூட பலதருணங்களில் துணையாக நிற்பது கவலைக்குரியது. 

மலையக மக்களின் கல்வியானது இதற்கு வெளிப்படையான சான்றாகக் கொள்ளத்தக்கது. �தேசிய கல்வி முறைமையின் அமைப்புகளோடு ஒப்பிடும்போது மலையகக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.� என நூலாசிரியரும், �தொழிலாளிகளின் கல்வி காலனித்துவவாதிகளின் தேவைகளுக்கு அடிபணிந்திருந்தது. சுதந்திரத்திற்கு பின்னரான சமூக அபிவிருத்தி கொள்கைகளும் கூட அவர்களைக் கவனத்தில் கொள்ளவில்லை� என பேராசிரியர் சுவர்ண ஜயவீர கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் மலையக மக்களின் கல்வி பற்றிய ஆய்வு நூலொன்றை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி புரியும் திரு.தை.தனராஜ் அவர்கள் எழுதியுள்ளார். நூலின் பெயர் 'ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வ' என்பதாகும்
ஆங்கிலத்திலும் தமிழிலும் பயிற்சி பெற்ற ஆசிரியரான காரணத்தினால் அவரது ஆய்வுக்கான தேடல் விரிந்த பரப்பில் சஞ்சரிப்பதைக் காணக் கிடைக்கிறது. இது ஒரு ஆய்வு நூலான போதும், தெளிவும் செழுமையும் கூடிய அவரது நடையும், ஆழமான கருத்துக்களையும் இலகுவான வாசிப்பிற்கு உகந்ததாக்கும் ஆக்க முறைமையும் வாசகனைப் பயமுறுத்தாமல் உள் நுழையத் தூண்டுகிறது எனலாம்.

கல்வி என்றால் என்ன?, கல்வியின் சமூகவியல், தொழிற்பாடுசார் நோக்கும் முரண்பாடுசார் நோக்கும், தாராண்மைவாத நோக்கில் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி- ஒரு முன்மாதிரிகை, சகலருக்குமான கல்விக்கான முன்னெடுப்புகள், ஜொம்ரியன் மாநாடு ஆகிய தலைப்புகளில் நூலுக்கான அடித்தளம் இடப்படுகிறது. அதாவது கல்வி பற்றியும் முக்கியமாக ஒடுக்கப்பட்டோர் கல்வி பற்றியுமான அடிப்படைத் தகவல்களைத் தருவதன் மூலம் மிகவும் ஒடுக்கப்பட்டு பின்தள்ளபட்ட மலையகச் சமூகத்தின் கல்வி பற்றி ஆழமாக சிந்திக்கத் தேவையான பின்னணித் தகவல்களை தருகிறது.

நூலின் முக்கிய பகுதியானது மலையக மக்களின் வரலாற்றுப் பின்னணி, மலையகத்தில் உரிமைப் போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் தோற்றமும், மலையக் கல்வி, மலையகக் கல்வியின் எதிர்காலம், முடிவுரை ஆகிய அத்தியாயங்கள் ஊடாக மலையகக் கல்வியின் பன்முக பார்வையை முன்வைக்கிறது. ஆரம்ப கட்டங்களில் தொழிலாளர்களே தமது தோட்ட லயன்களில் �திண்ணைப் பள்ளிக்கூட� சாயலில் பாடசாலைகளை அமைத்தனர். பின் மிஷனரிகள், இந்து சமய நிறுவனங்களும் சில பாடசாலைகளை ஆரம்பித்தன. இவை போன்ற ஆரம்பகாலத் தகவல்களும் கிடைக்கின்றன. 

ஆயினும் மலையகக் கல்வி மாற்றாந் தாய் மனப்பான்மையோடுதான் அன்று முதல் இன்றுவரை அணுகப்பட்டதை ஆசிரியர் ஆணித்தரமாகச் சுட்டிக் கட்டுகிறார். இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் கன்னங்காரா தோட்டப் பிள்ளைகளின் கல்வி இந்திய முகவர்களின் பொறுப்பு என்று தட்டிக் கழித்தார். 1960ல் தனியார் மற்றும் மிஷனரி பாடசாலைகள் யாவும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட போதும் தோட்டப் பாடசாலைகள் மட்டும் உள்வாங்கப்படவில்லை. அவற்றை அரசில் ஒன்றிணைக்க சுமார் பத்தாண்டுகள் தேவைப்பட்டதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 1962ல் ஜெயசூரிய ஆணைக் குழு மலையகக் குழந்தைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமையான தாய்மொழிக் கல்வியை மறுத்து சிங்கள மொழியில் கல்வி ஊட்டப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்தது. இவ்வாறான அதிர்ச்சி தரும் தகவல்கள் மூலம் மலையக மாணவர்கள் காலங்காலமாகக் கல்வியில் புறக்கணிக்கப்பட்டதை கவலையோடு அறிய முடிகிறது.

இன்றும் கூட அங்கு ஆசிரியர், அதிபர், முதன்மை ஆசிரியர், கல்லி அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாரிய தட்டுப்பாடுகளையும், மூலவளத் தட்டுப்பாடுகளையும் இந் நூல் தரவுகளோடு முன்வைக்கிறது. போதாமைகளைச் சுட்டிக் காட்டுவதுடன் நின்று விடாது அம்மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட வேண்டிய அவசிய செயற்பாடுகளையும் எடுத்துக் கூறுவதே இந்நூலின் சிறப்பாகும்.

மலையகக் கல்வியின் எதிர்காலம் பற்றிப் பேசும்போது மலையகக் கல்விக்கான தரிசன நோக்கு, மலையகக் கல்விக்கான பெருந்திட்டம், மலையகக் கல்விச் செயலகம், மலையக்கல்வி மாநாடு ஆகிய தலைப்புகளில் பேசப்படுகிறது. இறுதியில் �குறைதீர் பாரபட்சம் (Positive Discrimination) என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அது என்ன குறைதீர் பாரபட்சம்?. பாரபட்சம் என்றால் என்ன என்பதை தமிழ் பேசும் மக்கள் தமது நாளாந்த வாழ்வின் ஒவ்வாரு நிகழ்விலும் உணரக் கூடியதாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியதில்லை. 

ஆனால் குறைதீர் என்பது முன்பு அரசியல் சமூக காரணங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை நிவரத்தி செய்வதற்கான விஷேட ஏற்பாடு எனக் கொள்ளலாம். ஒரு சமூகம் நீண்ட காலங்களாக பிற்பட்டிருந்தால், அதனை ஏனைய சமூகங்களின் நிலைக்கு உயர்த்த வேண்டுமெனில் அதற்கென விசேட ஏற்பாடுகள் தேவை. நாட்டிற்கான பொதுவான சட்டதிட்டங்களும் போதாது. அதற்கு மேலாக அவர்களுக்குச் சார்பான, அவர்களை முன்நிலைப்படுத்தும் செயற்பாடுகள் தேவை என்பதேயாகும். 

இத்தகைய ஆலோசனைகள் அரச நிர்வாகத்தின் கவனத்தில் விழுமா அல்லது வழமைபோல செவிடன் காதில் ஊதிய சங்குதானா?

106 பக்கங்களைக் கொண்டது இந்த ஆய்வு நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடு. �மூன்று வருட காலத்தில் பன்னிரண்டு காத்திரமான நூல்களை வெளியிட்டதில் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை பெருமை கொள்கிறது� என தனது காத்திரமான பதிப்புரையில் நீர்வை பொன்னையன் கூறுகிறார். 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் எனப் போராடிய தோழர் கார்த்திகேசனின் 30தாவது நினைவுப் பேருரையாக நிகழ்த்தப்பட்டதின் விரிவாக்கமே இந் நூல். இத்தகைய ஆய்வு நூல்களின் வெளியீடு வரவேற்கத்தக்கது. படைப்பிலக்கியம் விமர்சனம் ஆகியவற்றுடன் திருப்திப்பட்டு நின்றுவிடாது இத்தகைய கனதியான நூல்களின் வெளியீட்டில் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. 

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும், கல்வித் துறையிலும் ஈடுபாடுள்ள ஒவ்வொருவரும் சொந்தமாக வைத்திருக்க வேண்டிய முக்கிய நூல் இதுவெனலாம்.

நூல் :- ஒடுக்கப்பட்டோர் கல்வி: மலையகக் கல்வி பற்றிய ஆய்வு
நூலாசிரியர்:- தை.தனராஜ்
வெளியீடு :- இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
11, இராஜசிங்க வீதி
கொழும்பு 06.
விலை :- ரூபா 200.00

எம்.கே.முருகானந்தன்.
kathirmuruga@gmail.com
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates