இரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்று பின்னணியைக்கொண்ட மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் அதாவது தேசிய அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்துகின்றனர். தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்களுக்கிடையில் தனது வாழ்வை தொலைத்து வாழும் இம் மக்களின் வாழ்வாதார மற்றும் ஏனைய துறை ரீதியான அபிவிருத்தியானது இந்நாட்டின் ஏனைய மக்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கிய நிலையிலையே உள்ளது. நம் மக்கள் நாளாந்தம் எத்தனையோ சவால்களை எதிர்கொள்கின்றனர் அவற்றுள் நிரந்தரக் குடியிருப்பு, காணி, ஊழிய சேமலாப நிதியை உரிய நேரத்தில் பெற முடியாமை, சுகாதாரம், (எத்தனைத் தோட்டங்களில் அம்பியுலன்ஸ் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
போக்குவரத்து, வீதிகள் புனரமைக்கப்படாமை, நிர்வாக அலுவலகங்களில் மொழிப் பிரச்சினைகள், மலையகத்திற்கென நீண்ட காலத் திட்டங்கள் வகுக்காமை. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், மலையக பட்டதாரிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினைகள், தொழில் பயிற்சி நிலையங்களின் பற்றாக்குறைகள், தொழில்நுட்ப கல்வி சார் நடவடிக்கைகள் இன்மை.
போதியளவான ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் காணப்படாமை, தோட்டப்புறங்கள் பிரதேச அலகிற்குள் உள்ளடக்கப்படாமை, குறைந்தளவிலான எழுத்தறிவு வீதம், போதியளவான அரச தொழில் வாய்ப்புகள் இன்மை, அடிப்படை ஆவணங்களைப்பெறுவதில் பிரச்சினைகள், அதிகரித்து வரும் போதைப் பொருள் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் பூரணத்துவமின்மை, தேசிய நீரோட்டத்தில் மலையக மக்கள் இணைக்கப்படாமை இவ்வாறு பல பட்டியல்களையே இடமுடியும். எனினும் இன்று மலையகத்தில் கல்வியின் பயன்பாடு பற்றிய கருத்து தெளிவு முன்பிருந்த நிலையை விட சற்று அதிகமாகவே உணர்ந்துள்ளமை சற்று ஆறுதலான விடயம். கல்வியைத் தேடும் மாணவர்களின் தொகை அதிகரித்திருக்கின்றது.
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகையும் அதி கரித்திருக்கின்றது. இதனால் என்னவோ திறந்த பல்கலைக்கழகம், தனியார் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மலையகம் நோக்கி சேவையாற்ற முன்வந்துள்ளது. மலையகம் என்ற சொல்லினால் அடையாளப்படும் இவர்கள் இன்று ஒரு தேசியமாக எழுச்சி கண்டுள்ளனர். பிரதேச ரீதியாகவும் (மாகாண எல்லைகள்), இன ரீதியாகவும் (இந்திய வம்சாவளியினர்), தனக்கென அடையாளப் பதித்த கலாசாரங்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் அம் மக்களை மையமாகக் கொண்டு மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுகின்ற போதே அம் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, ரீதியான முன்னேற்றகரமான மாற்றத்திற்கு, வித்திடும் என மலையக புத்திஜீவிகளால் கோரிக்கைகள் விடப்படுகின்றன. அண்மையில் ‘மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம் மாயை இல்லை. காலத்தின் அவசியம், மலையக மக்களின் 21ம் நூற்றாண்டின் எழுச்சி திட்டமாகும். சில அரசியல் வாதிகளே தடை” என பேராசிரியர் சந்திரசேகரன் கருத்து தெரிவித்திருக்கின்றார் எல்லா மட்டங்களிலும் இது போன்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
மலையகத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயங்கள்
* மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுகின்ற போதே அம் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் கல்வி, ரீதியான முன்னேற்றகரமான மாற்றத்திற்கு வித்திடும். தற்போதைய நிலையில் மாற்றம் காணும்.
* ஏனைய சமூகத்தின் கல்வி நிலையுடன் நிகர் தன்மையினை வளர்த்துக் கொள்ள இத்தகைய உயர் கல்வி நிலையங்கள் மலையகத்திற்கு என அவசியம்.
* இலங்கையில் பிரதேச ரீதியான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (கிழக்கு, தென் கிழக்கு, றுகுணு, சப்ரகமுவ, வயம்ப, ரஜரட்ட ஆயின் ஏன் மலையகத்தில் சாத்தியப்படாது.
* மலையக மக்கள் தமது இன ரீதியான அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைவதுடன் அவற்றை வரலாற்று சான்றாகவும் பதியப்பட வாய்ப்பாகும்.
* மலையகத்தை மையப்படுத்திய பல்கலைக்கழகம் அமைவதனால் ஆய்வுகளுக்கான களம் மலையகமாகும். மலையகம் தொடர்பான பல்வேறு தொனிப் பொருளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பளிக்கும்.
* இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளி வாரியாக தனது உயர் கல்வியினைத் தொடர்வதில் மாணவர்களே அதிகமாயிருக்கின்றனர். பரீட்சை நேரங்களில் அவர்கள் படும் அவஸ்தைகள் அதிகமானது என்பது உண்மையே. சிக்கல்கள் இல்லாது ஒழிக்கப்படும்.
* இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஒரு சிலவற்றைத் தவிர பல பல்கலைக்கழகங்களுக்கு தூரம், பயம் காரணமாக பல்கலைக்கழக தகுதிபெற்ற மாணவர்களைக் கூட அனுப்புவதில்லை. (இதிலும் பெண் பிள்ளைகளின் நிலை மிக கவலைக்குரியது.
* மலையக மக்களின் பொருளாதாரம் அவர்களின் வாழ்வாதார தேவைகளுக்கு போதுமானதாக அமையவில்லை. இந் நிலையில் பிள்ளைகள் தூர இடங்களுக்குச் சென்று கல்வி கற்பிக்க போதிய வசதியில்லை என்ற சிந்தனை மலையக பல்கலைக்கழகம் அமையப்பெறுவதன் ஊடாக மாற்றியமைக்கப்படும்.
* வெறுமனே உழைப்பில் மட்டுமின்றி அம் மக்களின் அறிவாற்றல் நிலை, கல்வி நிலை, ஆய்வு நிலை, பிரயோக நிலை என்பனவற்றை அதிகளவில் மேம்படடுத்திக் கொள்ள முடியும்.
* பல்கலைக்கழகம் அமைவதனால் அதிகளவிலான வேலை வாய்ப்புகள் வந்தடையும் தற்போதைய மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினை தீர்க்கப்பட வாய்ப்பிருக்கின்றது.
* தற்போதைய நிலையினில் 300 மலையக மாணவர்களே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க தெரிவாகின்றார்கள். இன ரீதியில் 3500க்கு மேற்பட்ட மாணவர்களே தெரியப்பட்டால் வேண்டும். இத்தொகை மலையகத்தினை மையப்படுத்திய பல்கலைக்கழகம் அமைவதனால் அதிரிக்கப்பட வாய்ப்புள்ளது.
* தற்போது மலையகத்தில் கலைத்துறையினை விட தொழில் முறை சார் கல்வியினை உருவாக்க முடியும்.
* மலையக மக்கள் மனதில் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு சென்று ஆசிரியராக வந்தால் போதும் என்ற சிந்தனை ஊடுருவி இருக்கின்றதோ அதனைப் போல பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டால் பல்கலைக்கழகம் கல்வி பற்றிய உள்ளுணர்வினை ஏற்படுத்த முடியும். ஆனால் மலையகத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்று வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அல்லது இன்னும் தெளிவுறுத்தப்படாத பல்வேறு சிக்கல்கள் மறைந்திருக்கின்றது.
மலையகத்திற்கென தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படுமானால் மலையக மாணவர்களை மட்டுமா உள்வாங்குவது, எத்தகைய புள்ளி அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள். உள்வாங்கக் கூடிய போதுமான அளவு மாணவர்கள் எம் மத்தியில் உள்ளார்களா? எதிர் காலத்தில் அத்தகைய மாணவர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் என்ன? இத்தகைய வேலைத்திட்டங்கள் இன்றைய பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப் படுகின்றதா? பல்கலைக்கழகம் அவசியம் என கோரிக்கை விடுப்பவர்கள் தேவையானதிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த முன் வருவார்களா? நடைமுறைப்படுத்தப்படினும் அதன் தொடர் தேர்ச்சி கவனத்தில் கொள்ளப்படுமா? இது போன்ற பல்வேறு வினாக்கள் எழுந்த வண்ணமே உள்ளது.
வெறுமனே பேராசிரியர்களாலும், சிரேஷ்ட விரிவுரையாளர்களினாலும் ஏன் கல்வியுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மட்டும் ஒன்று சேரும் பட்சத்தில் இவ்வேலைத்திட்டம் சாத்தியமானதா? அல்லது இவ்வேலைத்திட்ட பின்னணி பலமான அரசியல் தலைமைகளை நாட வேண்டுமா? அவ்வாறாயின் மலையக கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒருமித்து செயற்படுமா? அனால் ஒருமித்த செயற்பாட்டினாலேயே அத்திட்டம் சாத்தியம் என்பது மட்டும் உண்மையே.
மலையகத்தில் உயர்தரம் என்றதுமே கலைத்துறையினையே அதிகளவு தெரிவு செய்கின்றனர். ஒரு சில இடங்களிலேயே விஞ்ஞான, கணித வர்த்தக துறைகளைத் தெரிவு செய்கின்றனர். (இதற்கு வள, முயற்சி ரீதியான கேள்வியே காரணமாயிருக்கலாம்) இதை மலையத்திற்கென தனி பல்கலைக்கழகம் நோக்கியதாக கற்கை துறையினைத் தெரிவதில் மாற்றுவதை ஏற்படுத்தல், உயர் தர பெறுபேறுகளை உயர்வடையச் செய்தல் அத்தியாவசியமாகின்றது.
அண்மையில் “2011 மலையக பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல்” என்ற ரீதியில் இ.தொ.கா. வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி யிருக்கின்றது. அதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த திங்களன்று கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சில் கெளரவ அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றிருந்தது. இந்நேர்முகப் பரீட்சையில் சுமார் 245க்கு மேற்பட்ட மலையகப் பட்டதாரிகள் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்கள். கடந்த 10 வருட காலமாக மலையகத்தில் பட்டதாரிகளுக்கான எத்தகையதோர் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்காத நிலையினில் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கதும் கட்டாயம் பாராட்டக்கூடியதாகும்.
பெரும்பாலான மலையகப் பெற்றோர்களின் ஒரே கனவு ‘மகன் படித்து முடித்தும் அரசாங்க தொழில் கிடைக்கும்’ என்பதே கல்வி கற்று 2003, 2008, 2004- 2009, 2005-2010 ஆண்டுகளில் பட்டம் பெற்ற மலையக மாணவர்களுக்கு தகுதியான தொழில் கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு எதேச்சையாக ஒரு சிலருக்குக் கிடைக்கும் தொழில் கூட தகைமைக்கேற்ப இருப்பதில்லை. அது மட்டுமன்றி சிறந்த, கற்றல் செயற்பாடுடைய மாணவர்கள் பட்டப்படிப்பு என்பதற்குள் உள்வாங்கப்பட்டு தொழில் வாய்ப்பின்றி முடக்கப்படுகின்றார்கள். தனது அடுத்த உயர் கல்வியைத் தொடர தொழிலின்றி முடக்கப்படுகின்றனர். இதனடிப்படையில் மலையகத்தின் சேவையிலிருந்து மூளைசாலிகள் வெளியேற்றப்படுகின்றனர். பட்டம் பெற்ற பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின்றி வெளி மாகாணங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வெளியேற்றப்படுகின்றனர். இது சமுதாயத்தின் மேம்பாட்டினை பாதிப்படையச் செய்யுமா? என்பதனை சிந்திக்க வேண்டும் என்பதுடன் “தம் சமூகத்திற்கு வேலை செய்வார்கள் என கல்விக்கு தோள் கொடுத்தவர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைவது” மட்டும் தான் உண்மை.
பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டால் பல்கலைக்கழகம் கல்வி பற்றிய உள்ளுணர்வினை மக்கள் மனதில் ஏற்படுத்த முடியும். மிக முக்கிய கல்வியாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல்கலைக்கழகக் கல்வி கற்று தன்னுடைய 5வருட வாழ்வினை பூர்த்தியானது என்பதுடன் “இவ்வளவு படித்தும் வேலையில்லை அதிகமாய் படிக்காதே வேலையில்லை” என்ற வார்த்தைகள் மட்டுமே மிச்சம் என்ற நிலை உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து பல்கலைக்கழகம் அவசியம் என குரல் கொடுப்பவர்கள் இது வரையில் வேலையில்லா பட்டதாரிகளின் தொழில் அவசியம் தொடர்பாக குரல் எழுப்பாதது கவலைக்குரியதே.
முதல் பட்டம் ஏதேனும் வகையில் தனது பட்டப்பின் படிப்பிற்கு பதிவு செய்துக்கொண்ட மாணவர்கள் வறுமையின் காரணமாக தனது கல்வியிலிருந்து இடைவிலகுகின்றார்கள். இதுவே தொழில் இன்றி இருக்கும் பட்டதாரி மாணவர்களின் நிலை தனது கல்விக்காக அடுத்த கட்ட நகர்வினை எவ்வாறு முன்னெடுப்பார்கள் என்ற சிந்தனை எழுகின்றது. தற்போது வருடத்திற்கு வெளிவருகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. மலையக பட்டதாரிகள் இந் நிலையில் மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் உருவாக்கப்படின் மலையகப் பட்டதாரிகளின் உள்வாங்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வெளியேற்றமும் அதிகரிக்கும். ஆனால் வேலைவாய்ப்பு பூர்த்தி செய்யப்படுமா? என்ற ஐயம் தொடர்கின்றது.
ஆனால் மலையகத்திற்கு என தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என கருத்துக்களை வெளியிடும் கல்வியாளர்கள் தமக்கு சார்பு கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்பது ஏற்க முடியாததாகும். அதனை விட இச் சமூதாயத்தின் சகல துறை மேம்பாட்டிற்கும் ஒரு தனிப் பல்கலைக்கழகம் அடித்தளமாய் அமையும் என்பதில் ஐயமில்லை.ஆனால் அத் திட்ட வெற்றி மலையக தரப்பினர் அனைவரின் முயற்சிகளில் தங்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.
கணபதி ஹெலன்குமார்,
தலவாக்கலை.
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...