அறிமுகம்
தமிழ் இலக்கியப் பரப்பில் மலையகத் தமிழ் இலக்கியம் ஒப்பீட்டளவில் இன்று சார்பளவிலான வளர்ச்சியை கண்டுள்ளது. மலையக தமிழ் இலக்கியம் எனும்போது கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் முதலான எழுத்துருவிலான வரிசைகளோடு வாய்மொழிப்பாடல்கள், கூத்து, கலாசாரவிழாக்கள், வழிபாட்டு முறைகள் முதலான எழுத்துருவற்ற இலக்கிய வடிவங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட, “...மலையகத்தை தம் வாழிடமாகக் ஏற்றுக் கொண்ட மலையகத் தமிழ் தொழிலாளர்கள் தமது பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்பம், வழக்காறுகள், நம்பிக்கைகள், மொழி, பழக்கவழக்கங்கள், கலைகள், கூத்துக்கள், கடவுள்கள், வழிபாட்டு முறைகள் என்பனவற்றையும் சுமந்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக காமன் கூத்து, அர்ச்சுணன்தபசு, பொன்னர் சங்கர், லவகுசா, ஏழுகன்னிமார் கதை, நல்லத்தங்காள் கதை, குறவஞ்சி, மாரியம்மன் தாலாட்டு, நொண்டி மேளம், பொய்க்கால் ஆட்டம், காவடியாட்டம், தோகையாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், தாலாட்டு, ஒப்பாரி, தெம்மாங்கு, கெங்கையம்மன் கூத்து, காத்தவராயன் கதை, கோடங்கி, உருமி, அளிக்கி போன்ற எண்ணற்ற கலைச் செல்வங்களையும் கொண்டு வந்தனர். இந்த நீண்ட நெடிய மரபு தொடர்ச்சியின் வரலாற்று வழித்தடத்தின் ஒரு உண்ணதமானக் கூறுகளுள் “காமன் கூத்து” மலையகத் தமிழர்களின் மணி மகுடமாக நிற்கின்றது என்றால் மிகையாகாது.”1
“கிராமியக் கலைகள் கிராமிய மக்களின் உணர்ச்சிகளையும், செயல்களையும் வெளிப்படுத்தும் சாதனமாகும். ...இட வேறுபாடு, வெட்பத்தட்பம், பழக்க வழக்கங்கள், சூழல் மாறுபாடுகள், கூத்துக்களின் தோற்றங்களிலும் இசையமைப்புகளிலும் ஓசை நயங்களிலும் எண்ணற்ற வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.”2 அதற்கினங்க மலையக கூத்துக்களுக்குப் பல தனித்துவங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மலையகத் தமிழர்களின் பாரம்பரியங்களில் பெரும்பாலானவை அழிவு நிலையினை எய்துதல் கண்கூடு. இவற்றைப் பேணி பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
மலையக இலக்கியங்களைப் பற்றி பல மட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் மலையக நாட்டாரியல் பற்றிய ஆய்வுகள் போதிய திருப்தியைத் தருவதாக இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. மலையக கூத்துக்கள் பற்றி சிறப்பாக காமன் கூத்து பற்றிய ஆய்வாரள்கள் என்ற வரிசையில் மாத்தளை வடிவேலன், சோதிமலர் ரவீந்திரன், சந்தனம் சச்சிதாநந்தன், பொன்.பிரபாகரன் (வெளியிடப்படாத ஆய்வுகள்), லெனின் மதிவாணன், பேரா.கா.சிவதம்பி, சு.முரளிதரன் போன்றோரைக் குறிப்பிடலாம். இதனுள் விரிவான ஆய்வறிக்கைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் அறிமுகக் குறிப்புகளும் இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது. இவற்றோடு லயம், கலையருவி, சாகித்திய விழா மலர்கள் போன்ற சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகளும் BBC தமிலோசை, பத்திரிகைகள் போன்றனவற்றில் வெளியான குறிப்புகளும் இணைத்துக் கொள்ளத்தக்கதே.
இக்கட்டுரையைப் பெருத்தமட்டில் பெகவந்தலாவை லெட்சுமி தோட்டம் மத்தியப் பிரிவில் காமன் கூத்து தோன்றிய வரலாறு, அதன் தற்போதைய நிலை முதலானவைப்பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது. இதனை ஒரு வரலாற்று ஆவணமாகவும் கொள்ளலாம் என நினைக்கின்றேன். இக்கட்டுரைக்கான தகவல்களில் பெரும்பாலானவை நேரடி கள ஆய்வுமுறையில் அத்தோட்டத்தில் வசிக்கும் அண்ணாவிமார்களிடமும் (மாஸ்டர்) முதியவர்களிடமும் கேட்டுப் பெற்ற விடயங்களாகும். இதைத்தவிர தப்பிசை பற்றிய குறிப்புகளும் பாடல் பற்றிய சில குறிப்புகளும் இங்கு இடம் பெறுகின்றன.
காமன் கூத்து பற்றி இதுவரை இடம் பெற்ற ஆய்வு முயற்சிகள் காமன் கூத்து வெளிப்படுத்தும் தொழில்நுட்பம், அரசியல், பெருளாதார சமூக தாக்கங்கள், மொழியியல், தேச உருவாக்கத்தில் அதன் பங்கு, சமூக உளவியல், “திறந்த கற்றல்” எண்ணக்கருவில் அதன் பங்கு, மரபுரீதியான அதன் வளர்ச்சி போன்ற பல கூறுகளை ஆராய வழி செய்கின்றது. இவை ஒவ்வொன்றும் மிகவும் ஆழமாகவும் அகலமாகவும் தனித்தனியே ஆய்வு செய்யப்பட வேண்டியது காலத்தின், எம் தேசத்தின் இன்றிமமையாத் தேவையாகும்.
காமன் கூத்து - கதைச்சுருக்கம்
திருக்கைலாய மலையில் ஈசன் செய்த யாகத்தால் உலகமே துன்பத்தில் ஆழ்ந்துக் கிடந்தது. அப்போது தேவர்கள் இந்திரசபைக்குச் சென்று முறையிட, ஈசனின் தவத்தை கலைக்க துணிந்தவர்கள் எவரும் இல்லை, மன்மதன் ஒருவனுக்கே தனது மலர்கணைகளைத் தொடுத்து ஈசனின் தவத்தை கலைக்க முடியுமென இந்திரன் தீர்மானித்தார். ஈசனின் மகள் இரதிதேவியை திருமணம் முடித்த தினமன்று (மதன் - இரதி திருமணத்தை தேவர் சபையினரே நிகழ்தி வைத்தனர்) இந்திரன் மன்மதனுக்கு ஒரு ஓலையனுப்பினார். சேதியறிந்த மன்மதன் தான் ஈசனின் தவத்தை கலைக்கப் போவதாக இரதி தேவியிடம் கூற, இரதி தேவி ஈசனின் ஆற்றல்களையும் சக்தியையும் எடுத்துக் கூறி அதனை தடுக்கவே மன்மதனுக்கும் இரதிதேவிக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட மீறியும் மதன் விடைபெற்று கைலாய மலைக்கு செல்கின்றார். சென்று தான் தன் மலர்க்கணைகளை ஈசனின் மீது ஏவ, ஈசன் தனது நெற்றிக்கண்ணை திறந்தார். நெற்றிக்கண் திறந்தப் போது தெறித்த தீப்பொறிகளில் மன்மதன் எறிந்து சாம்பலாகின்றார். தோழியர் மூலம் மன்மதன் எறிந்த சேதியறிந்த இரதி புலம்பலுடன் ஈசனிடம் சென்று தாலி பாக்கியம் வேண்டியழ ஈசன் ஒரு நிபந்தனையுடன் மூன்றாம் நாள் மதனை உயிர்ப்பிக்கின்றார். இரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் புலப்படுவார் என்பதே அந்த நிபந்தனையாகும். இதுவே காமன் கூத்தின் வரலாறாகும்.3
காமன் கூத்து கதைச்சுருக்கம் ஒவ்வொரு தோட்டங்களிலும் வௌ;வேறு விதமாக கூறப்படினும் மேற்குறித்த கருத்துப்பற்றி சந்தனம் சத்தியநாதன் போன்றோரின் கருத்துக்களும் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் போல் “எறிந்த கட்சியினர்”, “எறியாத கட்சியினர்” என்று இரு வேறு குழுக்கள் தோட்டங்களில் இயங்குவதும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய கதையம்சத்தைக் கொண்ட காமன் கூத்தானது “...ஒரு புராணக் கதையின் கருவைக் கொண்டே நடிக்கப்படுகின்றது. ...காமன் அன்பின் உருவமாகவும் புஜபலமிக்கவனாகவும் காட்டப்படுகின்றான். ...அவ்வாறு அன்புக் கொள்வதை - மலர்க்கனை எய்துதலை - ...வடிவற்ற அந்த அன்பை விளக்கவே காமனாட்டம் இடம் பெறுகின்றது.”4 மக்கள் மத்தியில் “...காமன் கூத்தானது பக்திக்காகவும், நேர்த்திகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், பிள்ளைபேறு கருதியும், மணவாழ்வின் சிறப்பிற்காகவும் ஆடப்பட்டு வருகின்றது.”5
ஒரு காலத்தில் “...சுகாதார வசதி எட்டாதிருந்த மலையக மக்களின்; வாழ்வில் வைசூரி, அம்மை போன்ற நோய்கள் விளையாடின. அத்தகைய சோகச்சூழ்நிலையில் அவர்களுக்குப் பற்றுக்கோடாக்கப்பட்டது, தெய்வ வழிபாடொன்றே. அதனால் தெய்வங்களை நேர்ந்து கூத்துக்களை ஆட முற்பட்டனர்.”6 தவிரவும் “மலையகப் பெண்கள் ...தமக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமெனவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் மகப்பேறு கருதியும் இக்கூத்திற் பங்கு கொள்வதுண்டு”7
இவ்வாறு ஆண்களும் பெண்களும் ஒருமைப்பட்டு ஓருயிர் ஈருடலாக இணைந்து இன்பவாழ்க்கையை நடத்தும்படி அருள் செய்வதற்கான கடவுளாகக் காமன் கருதப்படுகின்றான். “காமனுக்கு வேள், வசந்தன், மன்மதன், மதன், அனங்கன், உருவிலன், அறுகதன், இரதிமன், ரூபஸ்திரன், மாரன், மால்மைந்தன், முகிரன், பூமான்மைந்தன், சிந்துவண்ணன், மோகன், காற்றோரன், காமந்தகன், கிளிமாவன், சோலைப்படைவீட்டான், மீனக்கொடியான், குயிற்சின்னன், ஆழிமுரசன், வாமன் எனப்பல பெயர்கள் உண்டு ...காமனை கிரேக்கர் “இரான்” என்றும் ரோமானியர் “கூப்பிட்” என்றும் அழைப்பர்.”8
காம வழிபாடானது தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் இலங்கையின் மலையகத்திலும் (500 தோட்டங்களுக்கு மேல்) பெருவழக்கமாக காணப்படுகின்றது. காமக்கடவுள் வழிபாட்டிற்கு பண்டைக்காலம் தொட்டே பல சான்றாதாரங்கள் இருக்கின்றன. “கம்பராமாயணம், சிலப்பதிகாரம் (காமவேள் கோட்டம் - ஆட்சி சிறப்பும் காமக்கடவுள் விழாவும்), மணிமேகலை (காமன் வெறுப்புக்கள்), நாச்சியார் திருமொழி (மன்மதன் வழிபாடும் காமப்பண்டிகையும்), கந்தப்புராணம் (காமன் தகனப்படலம்), கலித்தொகை (காமன் கோயில் வழிப்பாடு), வாமன புராணம் (காமன் வழிபாடு), மகாபாரதம், கந்தப்புராணம் முதலான இலக்கியங்களில் இவற்றுக்கான இலக்கிய சாட்சியங்களைக் காணலாம். ...புத்தரின் பௌத்தப் போதனை கதைகளில் இடம்பெறும் காமவெறுப்புக் கதைகளுக்கு 2500ஆண்டுகால வரலாறு இருக்கின்றது. இருக்கு வேதத்தில் காமனை போற்றியும், பௌத்த, சமண கதைகளில் காமத்தை வெறுத்தும் பற்பல செய்திகள் விரவிக்கிடக்கன்றன”9
இதனடிப்படையில் பார்க்கும் போது இக்காமன் கூத்தின் வரலாற்றின் ஆரம்பத்தினை திட்ட வட்டமாக வரையறுக்க முடியாதுள்ளது. மலையகத்தில் காமன் கூத்தின் வரலாற்றை நோக்கும் போதும், 19ம் நுற்றாண்டின் முற்பகுயில் நிரந்தரக் கூலிகளாக இம்மக்கள் கொண்டுவரப்பட்ட வரலாற்றோடு இதனை ஒட்டிப்பார்ப்பதா? அல்லது அதற்கு முன்மே இங்கு வருகைத்தந்த இந்திய வம்சாவழியினரின் வரலாற்றோடு ஒட்டிப்பார்ப்பதா? என்பதுவும், 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை பரிப்புச்சட்டத்தின் பின் மலையகத் தமிழர்களை தாய்நாட்டிற்கு திருப்பியனுப்பிய நிகழ்வுகள் இவற்றில் ஏதும் தாக்கத்தை உண்டு பன்னினவா? அதே பிரித்தானியரால் பர்மா, பிஜித்தீவுகள் போன்ற நாடுகளுக்கு இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்ட இடங்களில் இவற்றை ஆராய்ந்து தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியத் தேவையுள்ளதா? போன்ற பல கேள்விகள் எம்முன் எழுகின்றன. “...கண்டி இராச்சிய காலப்பகுதியிலும் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ் மக்கள் கணிசமான தொகையினராக மலையகத்தில் வாழ்ந்தமையை ஆதாரங்கள் பல நிரூபிக்கின்ற”10 என்ற கூற்றும் இக்கேள்விகளைப் பலப்படுத்துகின்றன.
லெட்சுமி தோட்டம் மத்தியபிரிவு
“தோட்ட உருவாக்கமும் காமன் கூத்தின் தோற்றமும்”
“1917ம் ஆண்டு கிழாத் தோட்டத்திலிருந்த பெரியங்கங்காணி சின்னசாமி என்பவரே 30 குடும்பங்களை இத்தோட்டத்தில் குடியேற்றினார். இங்கு குடியேற்றப்பட்டவர்கள் தென்னிந்தியாவின் திருச்சி மாவட்டம் கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த (கவுண்டர்கள்) மக்களே இங்கு கொண்டுவரப்பட்டனர். 1948ன் பின் 17குடும்பங்கள் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டன.”11 தற்போது இத்தோட்டத்தில் 300குடும்பங்கள் இருக்கின்றன. சுமார் 30 வருடங்களுக்கு முன் லெட்சுமிதோட்டம் மேற்பிரிவு என்ற புதிய பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது லெட்சுமிதோட்ட நிர்வாகத்தின் கீழ் ஐந்து பிரிவுகள் காணப்படுகின்றன.
மேற்கண்ட முறையில் தோட்ட உருவாக்கத்தினுள் காமன்கூத்து உருவான வரலாற்றை இனி நோக்குவோம்.
“அலுப்புவத்தை (மன்றாசி) தோட்டத்திலிருந்து வீரையா என்பவரால் பிடிமண் எடுத்துவரப்பட்டு 1939ம் ஆண்டு மாசிமாதம் இங்கு காமன் நடப்பட்டது.”12 என்றும், “சுண்டுலாகந்தை தோட்டத்திலிருந்து பிடிமண் எடுத்துவரப்பட்டு இங்கு காமன் நடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.”13 குப்பை குழியாக இருந்த ஒரு இடம் தூய்மை செய்யப்பட்டு “காமன் பொட்டல்” ஆக பெரியங்கங்காணி சின்னசாமி அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் வீரையா தனது பெயரையும் மம்முதராசா என மாற்றிக் கொண்டார்.
முதன் முதலில் மன்மதனாக எஸ்.வீரப்பனும் இரதியாக ராமசாமியும் காப்பு கட்டினர். இவர்கள் இருவரும் 15வருடங்களாக தொடர்ந்து காப்பு கட்டினர் (மாத்துக்கட்டு வேசங்கள் வருடாவருடம் சாதிவாரியாக வழங்கப்படும்). அப்போதிருந்த காமன்கூத்தின் அண்ணாவியே (மாஸ்டர்) மம்முதராசாவே தொடர்ந்து 30வருடங்கள் கூத்து நடத்தினார். முதன்முதலில் தப்புவாத்திய கலைஞராக ஆண்டி என்பவர் இருந்தார். இதற்குப்பின்னர் குறுகிய கால இடைவெளிகளில் அநேகர் மதன், இரதியாக காப்புக்கட்டிய வரலாறு உண்டு. குறைந்தது மதன், இரதிக்கு காப்புக்கட்டியவர்கள் மூன்றுவருடங்களாவது தொடர்ந்து காப்புக்கட்டுதல் இன்றும் வழக்கமாக இருக்கின்றது. மம்முதராசாவைத் தொடர்ந்து கிட்ணசாமி என்பவர் அண்ணாவியாக இருந்துள்ளார். அதன்பின் திரு எம்.சுப்பையா என்பவரே இன்றுவரையும் (20 வருடங்களுக்கு மேல்) அண்ணாவியாக இருந்து கூத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். தப்பிசை கலைஞர்கள் வரிசையில் மூப்பன் (இந்தியா சென்றுவிட்டார்) திரு. கிட்ணண், திரு சாமிவேல் ஆகியோரே பொறுப்பாக இருந்து வருகின்றனர். பாடகர்களாக பெரியசாமி, சிவனு, சின்னத்தம்பி, சின்னராசு, அருள், முருகேசு, சிவபெருமான் என்ற வரிசைகிரமத்தில் பலர் இருந்து வருகின்றனர்.14
இங்கு கூத்து ஆடப்படும் இடமானது ஒரு நீள் சதுர அமைப்பில் (40×20அடியாக) காணப்படினும் கூத்து ஆடப்படும் தினத்தன்று ஒரு வட்டக்களரி மாதிரியமைப்பிற்கு இவ்விடம் தாயார் செய்யப்படும். ஈசன் அமருமிடம், இந்திரன் அமருமிடம், ஒப்பனை அறை, மதன்-இரதி மணப்பந்தல், தூதன் போன்ற வேசங்கள் ஆடிவரத்தொடங்குமிடம், காப்புக்கட்டுமிடம், வில்படைக்குமிடம் போன்றனவெல்லாம் சுமார் 50வருடங்களுக்கு மேல் அந்தந்த இடங்களிலேயே இடம் பெறுவது ஒரு சிறப்பம்சமாகும். 90 வருட வரலாற்றைக் கொண்ட இத்தோட்டத்தில் காமன்கூத்து இன்றும் மரபுகளை பேணிகாக்கின்றது.
இத்தோட்டத்தில் காமன் கூத்து இடம்பெறும் முறை
வருடாவருடம் மாசிமாதம் மூன்றாம் பிறையன்று காமன் கூத்து தொடங்கப்படும். இவ்விழாவினை இங்குள்ள மக்கள் ஒரு தெய்வீக வழிபாடாகவும் தமது அடிப்படை கடமையாகவும் கருதியே கொண்டாடுவர்.
காப்புக்கட்டுதல்
மாசிமாதம் மூன்றாம் பிறையன்று ஒரு ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு நீரெடுத்து பாலித்து பூசை செய்து மதன், இரதி வேசம் கட்டுபவர்களுக்கான காப்புக்கட்டல் நிகழ்வு இடம்பெறும். அண்ணாவியாரின் தலைமையில் பூசாரி, பண்டாரம், பாடகர்கள், தப்பிசைஞர்கள், உதவியாளர்கள், முதியோர், சிறுவர்கள் என எல்லோரினதும் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெறும். இவ்வாறு காப்புக்கட்டுபவர்கள் காமன்கூத்து முடியும் வரை மச்சம் உண்ணுதல் தவிர்க்கப்படும். இதனை தோட்டமக்கள் அனைவரும் கடைப்பிடிப்பர்.
காமன் நடல்
காமன் பொட்டலில் திண்ணையானது சானம் போட்டு மொழுகப்பட்டிருக்கும்;. காப்பபுக்கட்டல் முடிந்தவுடன் எல்லோருமாக சேர்ந்து தயாரித்த கம்பத்தை அத்திண்ணை மீது ஊன்றுவர். அதற்கு தகுந்தப்படி பூசை இடம்பெறுவதோடு பார்வையாளர்களுக்கு பொங்கல், அவிகடலை, பயறு என்பன பரிமாற்றப்பட்டு மிகவும் மகிழ்ச்சிகரமாக நிகழ்வு நிறைவு பெறும். கம்பம் ஊன்றிய மறுதினத்திலிருந்து தொடர்ந்து வரும் எட்டு நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் காமன் வீதி ஊர்வலமும் பிறத்தோட்டங்களுக்கு செல்லும் நிகழ்வும் இடம்பெறும். ஊர்வலம் செல்லாத தினங்களில் காமன் பொட்டலிலேயே மதன்-இரதியாட்டம் இடம்பெறும். இதற்குக்காரணம் காப்புக்கட்டிய இருவருக்கும் “மருள்” வரச்செய்தலேயாகும். இவ்வெட்டு தினங்களிலும் குடும்பவாரியாக நேர்த்திகளை நிறைவேற்றுவதற்கான பூசைகள் இடம்பெறும்.
ஒன்பதாம் நாள் - தகனதினம்
விரதமிருத்தல்
மதன் இரதியுட்பட வேசம் கட்டும் அனைவரும் விரதமிருப்பர். எல்லோரும் மிகத்தூய்மையாக அவ்விரதத்தினை அனுஷ்டிப்பர். வேசம் கட்டுபவர்கள், பாடகர்கள், தப்பிசைஞர்கள், அண்ணாவி முதலானோருக்கு பொதுவான ஓரிடத்தில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும். அன்றைய தினம் தோட்டத்தில் பெரும்பாலானோர் விரதமிருப்பதுவும் வழக்கமாக காணப்படுகின்றது. அத்தோடு மதன் இரதி தவிர்ந்த ஏனைய வேசம் கட்டுபவர்களுக்கான காப்புக்கட்டல் நிகழ்ச்சியும் இடம்பெறும். மாலைப் பொழுதில் மதன்-இரதி வீதி ஊர்வலமும் இடம்பெறும். கட்டாயம் மாத்துக்கட்டுக்காரர்களே இதில் பங்கு கொள்வர்.
மதன் - இரதி திருமணம்
காமன்கூத்து நிகழும் களத்தின் ஒரு முனையில் (கம்பம் நடப்பட்ட இடத்திற்கு அருகில்) மணப்பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். ஈசன், ஈஸ்வரி, கிருஸ்ணன், இராமன், இலக்குமனன், சீதை, அனுமன், சரஸ்வதி, விநாயகர், சுப்ரமணியன், நாரதர், இந்திரன் முதலான பலர் மணப்பந்தலில் வீட்டிருப்பர். சோதிடர், உதவியாளர், ஆசாரி, முதலான பாத்திரங்களின் பங்கும் பார்ப்போருக்கு சுவாரிசியமாக இருக்கும். சோதிடம் பார்க்கப்பட்டு நாள் குறிக்கப்படும். பின்னர் தாலி செய்யப்படும். உரிய கிரியைகளின் பின் தாலிக்கட்டல் இடம்பெறும். பின்பு பூசையுடன் இரதி-மதன் திருமண ஊர்வலம் இடம்பெறும். இதன்போது பொது மக்கள் அனைவரும் திருமண தம்பதியினரை வாழ்த்துவதும் மொய்ப்பணம் சேர்க்கும் நிகழ்வுகளும் இடம்பெறும்.
மாவிளக்குப்பூசை
திருமண நிகழ்வின் பின் தோட்டத்திலுள்ள பெண்கள் தம் நேர்த்திகளை நிறைவேற்றுவதற்காக மாவிளக்குப் பூசையினை நிகழ்த்துவர். மாவிளக்கு, பூக்கள், வெற்றிலை, பாக்கு, விளக்கொளி, பத்திவாசனை என்பன இணைந்து திருமணதம்பதியினருக்கு விருந்து உபசாரம் தயார் செய்துள்ளது போன்ற ஒரு மனநிலைக்கு பார்ப்பவர்களை இட்டுச்செல்லும். இப்பூசை இடம் பெற்று முடிந்தவுடன் கூத்தினைப் பார்க்க வந்த அனைவரும் - வட்டக்களரி முறையில் - சுற்றி வரிசையாக அமர மதன்-இரதியாட்டம் தொடங்கி சிறிது நேரம் இடம்பெறும். இவ்வாட்டமானது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு மனநிலையை தோற்றுவிக்கும்.
வில்படைத்தல்
புதுமணத்தம்பதியினருக்கு கல்யாண பரிசு வழங்குவதற்காக உரிய முறையில் இரண்டு வில்லுகள் தயாரிக்கப்பட்டிருக்கும். அவ்வில்லினை எடுத்துக்கொண்டு மதன், இரதி முதலானோருடன் ஒரு சிறிய குழுவினர் ஆற்றங்கரைக்குச் செல்வர். அங்கு சென்று பூசை நிகழ்த்தி வில்லைப்படைத்து (பூசைகள் நிகழ்த்திய பின் மதனுக்கும் இரதிக்கும் வழங்கல்) அங்கிருந்து காமன் பொட்டலுக்கு ஆடி வருவர். அன்னளவாக இந்நிகழ்வுகளுக்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும். எனவே அந்த இடைவெளியில் குரவன்-குரத்தியர் இருவர் வந்து காமன் பொட்டலில் குறிசொல்லி ஆடி மகிழ்வித்துக் கொண்டிருப்பர். பின்னர் மதனும் இரதியும் களத்தில் வில்லுடன் காட்சியளிப்பர்.
ஓலைத்தூதன் வரல்
ஈசனது தவத்தைக் கலைக்க வருமாறு இந்திர சபையிலிருந்து தூதன் ஒருவன் ஓலையொன்றுடன் களத்துக்கு வருவான். பச்சைநிற உடையணிந்திருக்கும் இவன் வாயில் ஓலையுடனும் கையில் பந்தத்துடனும் காட்சியளிப்பான்.
பின்னர் மதன் இரதிக்கு இடையில் தர்க்கம் ஏற்படும். இரதியின் தடையை மீறி மதன் தான் வருவதாக ஒப்புக்கொண்டு அதனை மற்றொரு தூதனிடம் சேதி கூற, அதனை இந்திரசபைக்கு ஓலை மூலம் கொண்டு செல்ல இன்னுமொரு தூதன் காட்சியளிப்பான்.
வீரபுத்திரன் வரல்
ஈசனின் கட்டளைக்கேற்ப தக்கனின் யாகத்தை அழிப்பதற்காக வீரபுத்திரன் அனுப்பப்படுகின்றான். வீரபுத்திரன் வரும் வழியில் காளிதேவியிடம் தான் வரம் பெறும் காட்சியும் (காளியின் வருகை மூலம்) இடம்பெறும். காமன் பொட்டலின் ஒரு முனையில் யாகசாலையுடன் தக்கன் காட்சியளிப்பான். வீரபுத்திரனால் தக்கன் தலைக்கொய்யப்பட்டு அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அக்காட்சி இங்கு காண்பிக்கப்படுவதில்லை.
மோகினி வரல்
தக்கனின் யாகத்தை அழிப்பதற்காக சுப்ரமணியனை (முருகனை) ஈசன் படைத்து அனுப்புவதாகவும் சுப்ரமணியன் போகும் வழியில் கன்னியரைக் கண்டு மயங்கி தக்கனின் யாகசாலைக்குச் செல்லமறப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை விளக்கவே மோகினி வரும் காட்சி இடம்பெறுகின்றது.
தேர்வேந்தன் வரல்
மன்மதன் தான் ஈசனின் தவத்தைக் கலைக்கும் நிமித்தம் இந்திரசபைக்கு பயணிக்க முற்படுகின்றான். அவ்வேளையில் தனது தென்றலான தேரை தயார் செய்யுமாறு தேர்வேந்தன் (மதனின் தேரோட்டி) அழைக்கப்படுகின்றான். உடனே தென்றலான தேருடன் தேர்வேந்தன் களத்தில் தோன்ற, இரதிக்கும் தேர்வேந்தனுக்குமிடையிலான உரையாடல் ஒன்றும் இடம்பெறுவதாக காட்டப்படும். இறுதியில் தேரேறி மதன் இந்திரசபைக்கு பயணிப்பார். அங்கு மதனுக்கும் இந்திரனுக்குமிடையிலான உரையாடலும் இடம்பெறும். இவ்வேளையோடு ஒட்டியே மதன் ஈசனிடம் செல்லும் காட்சியும் காண்பிக்கப்படும். அதன்பின் இரதிதேவி மட்டுமே பொட்டலில் காட்சியளிப்பாள்.
யமன், காலன், தூதன் ஆகியோர் வரல்
எறிக்கப்பட்ட மதனின் உயிரைக்காவிச் செல்ல இவர்கள் மூவரும் வருகின்;றனர். மூவரும் கருமையான உடைகளோடு கொடூரமான முறையில் காட்சியளிப்பர். யமன் கையில் “பாசகயிறு”டன் கருமையான ஒரு எருதின் மீது வருவதாக காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். கருமையான உடையோடும் கையில் பந்தத்துடனும் நீண்ட நாக்குடனும் தூதன் ஒருவனும் யமனுடன் வருவான்.
மதன் எறிக்கப்படல்
மலர்க்கணையினை எய்தியவுடன் ஈசனின் நெற்றிக்கண் திறப்பட மதன் உடனே எறியுண்டான். இக்காட்சி ஒரு வான வெடியினை வெடிக்கச் செய்து ஊன்றப்பட்ட கம்பம் - மிளாறுகள் அடுக்கப்பட்டு- எறிக்கப்படுவதன் மூலம் விளக்கப்படும். இவ்வேளையில் இரதிதேவி காமன் பொட்டலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பாள். இதற்கிடையே எறிதூதன் எனும் ஒரு வேசமும் பொட்டலுக்குள் புகும். இவ்வேசம் மதன் எறியுண்ட செய்தியினை இரதிக்கு அறிவிப்பதாக அமையும்.
இரதி ஒப்பாரி
மதன் எறியுண்ட காட்சி கம்பம் எறிக்கப்படுவதன் மூலம் இடம்பெறும் இடத்தில் இரதிதேவி வெள்ளை வேட்டி போர்த்தப்பட்டு தனது தாலியை தேங்காய் ஒன்றில் வைத்து தட்டில் ஏந்திய வன்னம் நிலைக்குலைந்த விதத்தில் ஒப்பாரி பாடி அழும் காட்சி இடமபெறும். இதற்கான ஒப்பாரி பாடல்களும் சாவுத்தப்பும் இசைக்கப்பட்டு “அய்யையோ” என்ற குரல் ஒலித்தவன்னம் பொழுது விடிந்ததோடு, இரதியுடன் சிறு குழுவினர் முழுதோட்டமும் ஒப்பாரிப்பாடல்கள் பாடிய வன்னம் ஊர்வலம் வருவர். தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு மதன் வெளியில் நடமாடாது இருப்பதுவும் மரபாக இருந்து வருகின்றது.
உயிர் எழுப்புதல்
தகனப்படலம் முடிவடைந்து மூன்றாம் நாள் உயிர் எழுப்பும் காட்சி இடம்பெறும். ஈசனிடம் தன் கணவனை உயிர்ப்பித்து தருமாறு தாலிப்பிச்சை கேட்டு இரதிதேவி மன்றாடுவாள். இறுதியில் ஈசன் இறங்கி வருவார். அப்போது தூய்மையான ஆடைகள் அணிவிக்கப்பட்டு மதன் வெள்ளை வேட்டியால் போர்த்தி படுக்க வைக்கப்பட்டிருப்பான். இந்திரன், நாரதர் முதலானோர் அவ்விடத்தில் காட்சியளிப்பர். ஈசன் தன் கையிலுள்ள கமண்டலத்திலிருந்து மூன்று முறை நீரை தெளித்து தன் பிரம்பால் மூன்று தட்டுதட்ட மதன் மருளுடன் உயிர்ப்பிக்கப்படுவார். அத்துடன் பூசைகள் இடம்பெற்று கூத்து நிறைவு பெறும்.
காமன் கூத்தில் இடம்பெறும் வேசங்கள்
1.மதன்
2.இரதி
3.ஈசன்
4.ஈஸ்வரி
5.நந்திதேவன் (மதனின் காவலன்)
6.தாதி (இரதியின் தோழி)
7.விநாயகர்
8.சுப்ரமணியர்
9.தக்கன் (உமையின் தகப்பன்)
10.வீரபுத்திரன் (108 பந்தங்களுடனும் ஆயுதங்களுடனும் வருவான்)
11.ஓலைத்தூதன் (இந்திர சபையிலிருந்து மதனுக்கு ஓலை கொண்டு வருபவன்)
12.காளி
13.இந்திரன்
14.தூதன் (மதனிடமிருந்து இந்திரனுக்கு ஓலை கொண்டு செல்பவன்)
15.தேர்வேந்தன் (மதனின் தேரோட்டி)
16.நாரதர்
17.குரவன்
18.குரத்தி
19.ஆசாரி
20.சோதிடர்
21.கிருஷ்ணர்
22.இராமன்
23.இலக்குமனன்
24.சீதை
25.மோகினி
26.குண்டோதரன் (எறிக்கப்பட்ட மதனின் சாம்பலை ஒன்றுசேர்ப்பவன்)
27.சரஸ்வதி
28.வள்ளி
29.தெய்வானை
30.யமன்
31.காலன்
32.எறிதூதன்
தப்பிசையும் பாடலும்
காமன் கூத்தில் இசையினை தப்பிசை, பாடல் என இருவடிவங்களில் காணலாம். காமன் கூத்தைப் பொறுத்தமட்டில் தப்பு பிரதானமாகவும் கஞ்சிராகட்டை, அளிக்கி போன்ற இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட 18வகையான தப்பிசைகள் காணப்படுகின்றன. காமன் ஊன்றுதல் தொடக்கம் எறிக்கப்பட்டு குடிவிடுதல் வரை வௌ;வேறான ஓசையில் இவை காணப்படும். ஒவ்வொரு வேசங்களுக்கும் ஏற்ற அடி, ஒவ்வொரு லாவணிக்கும் ஏற்ற அடி என தப்பிசையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. நடையடி, பூசையடி, லாவணியடி, பல்லவியடி, சாவுதப்பு, கும்மியடி, கலியான அடி போன்றன அவற்றுள் சிலவாகும். ஆட்டுத்தோளை காயவைத்து பின்பு ஊரவைத்து இரும்பு வளையம் ஒன்றில் கட்டியே தப்பு பெறப்படுகின்றது. உரிய முறையில் ஒரு தப்பினை பயன்படுத்தினால் 5 - 7 வருடங்கள் குறையாமல் பாவிக்கலாம்.15
காமன் கூத்தில் பாடல்களைப் பொறுத்தமட்டில் ஒப்பாரி, லாவணி, தர்க்கப்பாட்டு, பல்லவி, ஆதியந்தம், நெருக்கப்பாட்டு போன்ற பல வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு பொருத்தமான முறையில் பின்னனி குரல்களும் (தானானே...னானானே என) வழங்கப்படும்.16 “...காமன்கூத்தில் லாவணிமுறையில் பாடல்கள் பாடப்படுகின்றன. இவை ஆசிரியப்பாவாலும் கலிப்பாவாலும் ஆன பாடல்களாக அமைகின்றன”.17 இப்பாடல்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு அவை இராக வேறுபாட்டுக்கு ஏற்ப உரிய முறையில் வகைப்படுத்தப்படும் வரை இப்பாடல் வகைகளை அடையாளப்படுத்தி கூறுவது கடினமாகவே இருக்கும்.
முடிவுரை
பல வருடகால வரலாற்றைக் கொண்ட காமன்கூத்து இன்றும் இம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கின்றது. அதற்கு காரணம் இக்கூத்தினுள் நவீன தொழில்நுட்பங்களோ ஏனைய கலையம்சங்களோ ஊடுறுவ முடியாதிருப்பதுவும், மலையக பெருந்தோட்டத்துறை சமூக கட்டமைப்புமேயாகும். இருந்தும் அண்மைக்கால போக்குகள் சில கவலையளிக்கின்றன. அதாவது காமன்கூத்தினை உரிய முறையில் நடாத்தி முடிப்பதில் பல குழறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே என்றுகூட கூறலாம்.
நகரமயம், உலகமயம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களாலும் அபிவிருத்தித் திட்டங்களாலும் பெரும்பாலும் சமூக பண்பாட்டு வேர்களில் ஆட்டத்தை ஏற்படுத்தி வருதல் எமது சமூகத்தில் கிடைத்த படிப்பினைகளாகும். இவற்றுக்கு புறம்பாக சமூக சீரழிவுகள், சினிமா, தொலைக்காட்சி மோகம், இளைஞர்களின் ஆர்;வமின்மை போன்ற பல காரணிகளும் காமன்கூத்து போன்ற கலையம்சங்கள் அருகி வருவதற்கு ஏதுவாக அமைகின்றன. மேலும் காமன்கூத்தை எத்தனை நாட்கள் கொண்டாடுதல் என்பதிலும் இம்மக்களின் வாழ்க்கைச் சுமைகளும் பொருளாதார பின்னடைவுகளும் செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
காமன்கூத்தை பயிற்றுவிப்பதற்கென்று ஏதேனும் நிறுவனங்கள் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. இருப்பினும் தலைமுறை தலைமுறையாக இக்கூத்துக்கள் (சிறியளவிலான மாற்றங்களுடன்) கையாளப்பட்டு வரும் விதம் மிக வியப்பிற்குரியதே. உண்மையில் மலையக சமூகத்தில் ஒவ்வொரு பிரசையும் இவைபோன்ற கலையம்சங்களை உள்வாங்கி இருக்கின்றனர் என்றால் “பங்கு பற்றலின் ஊடாகக்கற்றல்” என்ற எண்ணக்கரு சிறப்பாக இடம் பெறுவதனை அறியமுடியும். கூத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான தொடர்பே இதற்கு அடிப்படையாகும். காமன்கூத்து போன்ற மலையக கூத்துக்கள் மற்றும் கலையம்சங்களில் இத்தகைய பங்குபற்றலினூடாகக் கற்றலின் தன்மைகளையும் அதன் சாதகபாதக விளைவுகளையும் மரபுரீதியான கூத்து வளர்ச்சியில் அதன் பங்களிப்பினையும் விரிவாக ஆராய வேண்டியது அவசியமான ஒன்றாகும். திறந்த கற்றல் முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டான இம்முறை ஒரு தனி ஆய்வுத் துறையாக மாறும் வாய்ப்புகளும் உண்டு.
எதிர்கால மலையக சமூக உருவாக்கத்திற்கும் காமன்கூத்து முதலான கூத்துக்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்பது திண்ணம். இருப்பினும் அதற்கு கூத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது விரிவான ஆய்வுகளுக்கும் ஆழமான கருத்தாடல்களுக்கும் வாதபிரதிவாதங்களுக்கும் இடம் கொடுப்பதாக அமையவேண்டும்.
இறுதியாக, கைவிடப்படும் நிலையினை எய்திக் கொண்டிருக்கும் காமன்கூத்து (பிற கலையம்சங்களும் கூட) புணரமைப்பு செய்யப்பட்டு பேணி பாதுகாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். அதற்கான சில விதந்துரைப்புக்களை கூறுதல் பொருந்தும். காமன்கூத்தினை முழுமையாக தொகுத்து அவற்றுக்கு எழுத்துரு கொடுக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். வட்டார பாகுபாட்டிற்கேற்ற கல்வி என்ற அடிப்படைகளில் மலையகத்திற்கான கல்விக்கூடங்களில் இதனை ஒரு கற்கை நெறியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடநெறிகளினூடே வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.
இன்று மலையக பாடசாலைகள் பலவற்றிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் பலகலைக்கழகங்களிலும் கூத்து நிகழ்வுகள் இடம் பெறுவதானது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் அவை வெறுமனே போட்டி நிகழ்ச்சியாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் பயன்படுத்தும் நிலையினை மாற்றி ஒரு உயிரோட்டமுள்ள உளவியல் உணர்வு நிலையாகவும், எம்தேசத்தின் அடித்தளத்திற்கான ஆணிவேர் என்ற மனநிலையினையும் தோற்றுவித்து, இத்தகைய கூத்துக்களில் புதைந்திருக்கும் பாரம்பரியமான கல்வி முறையினை அடையாளம் காண்டு அதுவே எமது பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படை என்ற உணர்வினை ஊட்டி வளர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.
அடிக்குறிப்புக்கள்
01.பொன்.பிரபாகரன் - காமன்கூத்தின் அரசியற் பொருன்மியம் (வெளியிடப்படாத ஆய்வுகள்)
02.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
03.தகவல் : எம். சுப்பையா லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
04.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
05.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
06.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
07.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
08.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
09.பொன்.பிரபாகரன் - காமன்கூத்தின் அரசியற் பொருன்மியம் (வெளியிடப்படாத ஆய்வுகள்)
10.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும் (பேரா.அருணாசலம் அவர்களின் அணிந்துரை)
11.தகவல் : ஆர். அருணாசலம் லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
12.தகவல் : எம். காயாம்பு லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
13.தகவல் : ஆர். அருணாசலம் லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
14.தகவல் : ஆர். அருணாசலம் லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
15.தகவல் : எஸ். கிட்ணன் (தப்பு வாத்திய கலைஞர்) லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
16.தகவல் : சிவனு (கூத்துப்பாடகர்), லெட்சுமி தோட்டம் ம.பி, பொகவந்தலாவை
17.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
ஊசாத்துணைகள்
நூல்கள்
01.சோதிமலர் ரவீந்திரன் - காமன் கூத்தும் மலையக பாரம்பரியமும்
02.சு. முரளிதரன் - வரவும் வாழ்வும் - மலையக நாட்டாரியல் சிந்தனைகள்
03.பொன்.பிரபாகரன் - காமன்கூத்தின் அரசியற் பொருன்மியம் (வெளியிடப்படாத ஆய்வுகள்)
04.பேரா. அருணாசலம் - மலையக தமிழ் இலக்கிய வரலாறு
05.சு.முரளிதரன் - மலையக இலக்கிய தளங்கள்
06.சந்தனம் சத்தியநாதன் - காமன்கூத்து ஓர் கள ஆய்வு
07.இரா.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு - மலையக பரிசுக்கட்டுரைகள்
08.மலையக தமிழாராய்ச்சி மாநாடு 1996-1997
சஞ்சிகைகள்
01.குமுதம் 14.01.2002
02. லயம் - ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி
(2001, 2002, 2003, 2004, 2005, 2006)
(இவ் ஆய்வு கட்டுரையானது ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 'மலையக தமிழ் இலக்கியம் ஆய்வரங்கும் கலைநிகழ்வும்' எனும் இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கைநூலில் வெளியிடப்பட்டுள்ளது.)
+ comments + 1 comments
மிகவும் அருமையான விடயம் இவ்வாறான காமன்கூத்து எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் நம் ஆசை இதை ஊக்குவிக்கும் வகையில் எங்காவது புதியதாக காமன்கூத்து இடம்பெரும் பட்சத்தில் பொருளுதவி
வழங்க முன்வருகின்றோம் தொடர்புகளுக்கு whatsapp no 00966 536713738 நன்றி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...