Headlines News :
முகப்பு » » கூத்தியல் - மலையக தேசிய அரங்கு தொடர்பான கருத்தாடல். - ப.விஜயகாந்தன்

கூத்தியல் - மலையக தேசிய அரங்கு தொடர்பான கருத்தாடல். - ப.விஜயகாந்தன்மலையக தேசிய அரங்கு தொடர்பான நீண்டகால அனுபவங்களின் விளைவாக 'கூத்தியல்' எனும் படைப்பு கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலை துறையின் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களினால் 04-08-2013 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் கலை பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராஐா தலமையில் "பாரம்பரிய அரங்க பொருட்களின் கண்காட்சியும் பாரம்பரிய ஆற்றுகையும்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற மாநாட்டின் இறுதி நாளன்று மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில்  உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

படைப்பாக்கத்தின் பிரதம ஆசிரியர் திரு.சு.பிரேம்குமார் நூல் பற்றிய அறிமுகக் குறிப்பில் 'இன்றைய உலகமயமாதல் சூழலில் தேசிய இனங்களையும் அதன் பண்பாட்டு கோலங்களையும் வேரோடு அழித்து விடும் நிகழ்ச்சி நிரல் கனகச்சிதமாக நிறைவேறிய வண்ணம் உள்ளதை நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்கி கொண்டிருக்கும் சூழலில் கூத்தியல் தொடர்பான பண்பாட்டு வேர்களை நோக்கி பண்பாட்டு தளத்தின்; தாங்கு திறன் கொண்ட பொறிமுறைகளை இனங்காணுதல் என்பதும் தகவமைக்கப்படுகின்றதென்பதும் நம்பிக்கைக்குரியதே இதன் கருதுகோளாக்க பின்னணியானது. பல்தேசிய கம்பனிகளின் கோரத்தாண்டவத்தை மிக நுணுக்கமாக கருவருக்கும் நிகழ்ச்சி போக்கிற்கான தன்மையினை விளங்கி சுய தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய பண்பாட்டு வேலைத்திட்டத்தின் அவசியம் உணரப்பட்டுள்ளது. மக்களின் பாரம்பரிய அடையாள கூறுகளில் கூத்தியல் தொடர்பிலான பல முனைப்பான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் சூழலில் அதன் பார்வைகள் ஆழப்படுத்தி அகலப்படுத்தும் தன்மை இன்று திறந்து விடப்பட்டுள்ளது. தமிழியற் பரப்பில் கூத்தியல் என்பது புத்துருவாக்கம் செம்மையாக்கம் மீளுருவாக்கம் என்று வளரும் சூழலில் மலையகத்தின் தேசிய இருப்பிலும் பண்பாட்டு கட்டுமானத்திலும் அதன் பங்குபாத்திரம் மக்கள் செயல் நிலையில் நீண்ட வரலாற்றை கொண்டது. கூத்தியல் பற்றிய பார்வை மற்றும் கருத்தாடலின் ஆரம்ப பயணமே இது' என குறிப்பிட்டார்.

கலாநிதி நா.ரவீந்திரன் தமது கருத்துரையில் 'உலகளாவிய வர்க்கப்பார்வையும் அதன் வளர்ச்சி போக்கில் கீழைத்தேய ஆசிய சமூக படையாக்கத்தின் பின்னணிப்பார்வையினை வரலாற்று ரீதியான தரவுகளுடன் பகிர்ந்துக்கொண்டதுடன் 80களின் பின்னர் மலையக தேசிய அரங்கு தொடர்பான பார்வை செலுத்தப்பட்டப்போதும் விரிவாக்கப்படவில்லை. இருப்பினும் கூத்தியல் எனும் இந்நூல் கூத்து மீளுருவாக்கச் சிந்தனையை உள்வாங்கி மலையக தேசிய அரங்கக் கூறுகளைப் பற்றிய புரிதலை முன்வைத்திருப்பதென்பது சிறப்பம்சமாகும்' என குறிப்பிட்டார்.

தொடர்ந்து திரு இதிரிஸ் அவர்கள் தமது கருத்துரையில் 'கூத்து மீளுருவாக்கச் சிந்தனையை மலையக சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு கூத்தியல் நூலானது இலக்கிய வெளியில் பிரவேசித்திருப்பது சிறப்பம்சமாகும். எதிர்காலத்தில் மலையக தேசிய அரங்கு தொடர்பான கருத்து நிலையை முன்நோக்கி நகர்த்தலின் அவசியம் இந்நூலின் மூலம் உணரத்தப்பட்டுள்ளது' என குறிப்பிடடார்.

நூலின் முதற்பிரதியை கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசியர் மா.செல்வராசா கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அண்ணாவியார் சு.சிவநாயகம், கலாசார உத்தியோகத்தர் திரு மலர்ச்செல்வன், விரிவுரையாளர்களான செல்வி கலைமகள், திரு சுரேஷ், டாக்டர் அஞ்சலா, கௌரிபாலன், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோர் நூல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates