Headlines News :
முகப்பு » » தோட்டத்து இடதுசாரிகள் 1 – ப.விஜயகாந்தன்

தோட்டத்து இடதுசாரிகள் 1 – ப.விஜயகாந்தன்

ரஷ்ய புரட்சியின் பின் கமியூனிச சித்தாந்தத்தை நோக்கி உலக நாடுகள் ஈர்க்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. அந்த வரிசையில் இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையின் மலையக பெருந்தோட்டத்தில் வாழ்ந்த சாதாரண தொழிலாளர்கள் எவ்வாறு அல்லது யார்யார் அதன்பால் ஈர்க்கப்பட்டனர் என்பது பற்றிய தேடலே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். தோட்டப்பகுதி இடதுசாரிகளை இனங்கண்டு அவர்களை நேரில் கண்டு அநுபவங்களை பகிர்ந்துக்கொள்ள நாம் முயற்சிப்போம்.
1.ராமன் லெட்சுமன்

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய பள்ளித்தோழர் ஒருவரின் வீட்டுக்கு தற்செயலாக சென்றிருந்தேன். என்னை அமரச்செய்து விட்டு நண்பர் வெளியில் சென்று விட்டார். எளிமையான உபசாரம் கிடைத்தது. “தேத்தண்ணி ஆறிரும் குடிங்க தம்பி” என்று சொல்லிக்கொண்டே ஒரு முதிர்ந்த குரல் எனக்கு எதிரே இருந்த நாட்காலியில் அமர்ந்தது. தொலைகாட்சியில் ரஜினிகாந்தின் ஒரு இடைக்கால படம். கண் இமைக்காமல் நான் பார்த்த விதத்தை அவதானித்த அந்த நபர் அதாவது என் நண்பனின் தந்தையார் “ரஜினி படத்தில் ரொம்ப விருப்பம் போல” என்ற கேள்வியோடு சம்பாசனையை தொடங்கினார். அன்று இவரை பற்றி எங்காவது பதிவு செய்வேண்டும் என நினைத்தேன். மனம் வலிமை தந்தது நமது மலையகம் வாய்ப்பை தந்தது இப்போது எழுதுகின்றேன்.

இலங்கை செஙகொடி சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராமன் லெட்சுமன் கடந்த 14.04.2014 அன்று தனது 76ஆம் பிறந்த தினத்தில் வைத்தியசாலையில் இருந்து மீண்டு பாதி சிந்தை இழந்த நிலையில் தனது வழமையான படுக்கையில் இருந்தார். தனது நினைவுகளை மீட்டு தறபோது உங்களோடு பேசுகின்றார்.

வணக்கம் ஐயா உங்கள் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்
நான் 1938.04.14 அன்று பொகவந்தலவை சமுத்திரவள்ளி (தற்போது சென்.விஜயன்ஸ் என்ற ஆங்கில பெயரால் மட்டுமே அழைக்கப்படுகின்றது. மலையக தோட்டங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பெயர்கள் பற்றி மற்றொரு தனியான கட்டரையில் அவதானிப்போம்) தோட்டத்தில் பிறந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையானது. இருந்தப்போதிலும் எனது பெற்றோர் என்னை படிக்க வைத்தனர். சமுத்திரவள்ளி தோட்ட பாடசாலையிலும் நாவலபிட்டி கதிரேசன் பாடசாலையிலும் பலாங்கொடை ஸ்ரீ புத்த ஜெயந்தி பாடசாலையிலும் கல்வி கற்றேன். பெரிய படிப்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிவை பெற்றுக்கொண்டேன். 1962ஆம் ஆண்டு சமுத்திரவள்ளி தோட்டத்தில் தொழிலாளியாக இணைந்தேன். நாங்கள் வசித்த சமுத்திரவள்ளி தோட்டம் என்ற ஒரு இடம் இருப்பது கூட வெளியில் தெரியாது அவ்வளவு பின்தங்கிய பிரதேசம். திருமணத்தின் பின் தற்போது வசிக்கும் தெரேசியா தோட்டத்திற்கு 1984ஆம் ஆண்டு என் பிள்ளைகளின் படிப்பு கருதி குடும்பத்தோடு வந்து குடியேறினேன்.

நீங்கள் செங்கொடி சங்கத்தில் இணைந்தது பற்றி கூறுங்கள்.
அந்தகாலத்தில் தோட்டங்களில் நிர்வாக கெடுபிடிகள் அதிகம். ரொம்ப கஷ்டமான காலம். என்னிடம் ஒரு 'பீத்தகால்சட்டை' (கிழிந்த காற்சட்டை) தான் இருக்கும் அதை போட்டுக்கொண்டுதான் திரிவேன். நானும் என்னைப்போன்ற ஓரளவு படித்த இளைஞர்களும் வேறு வழியின்றி தோட்டத்தில் தொழிலாளர்களாக இணைய வாய்ப்பு கேட்டோம். நிர்வாகம் படித்தவர்களுக்கு வேலை வழங்க மறுத்தது. அப்போதிருந்த மலையகத்தின் பழம்பெரும் தொழிற்சங்கமும் எங்களுக்கு உதவ மறுத்தது. மாறாக தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து நிர்வாகத்திற்கு ஒத்தாசை வழங்கிக்கொண்டிருந்தனர். இதற்கு மாற்று வழி தேடினோம். ஒரு நாள் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து நான் உட்பட பன்னிரெண்டு இளைஞர்கள் அட்டனில் குணவர்த்தன கட்டிடத்தில் இயங்கிய செங்கொடிச்சங்க காரியாலயத்திற்கு சென்றோம். தோழர்களான சோமு, அமிர்தம் ஆகியோரை சந்தித்தோம். எங்கள் நிலையை கூறினோம். வரவேற்பும் கட்சியில் அங்கத்துவமும் கிடைத்தது. அதற்கு பின்பு தான் தோட்டத்தில் வேலைவாய்ப்பும் மரியாதையும் தலைமைத்துவமும் கிடைத்தது. நான் தோட்டத்தில் தொழிற்சங்க தலைவரானேன். அன்று முதல் இன்று வரை என்னை அறிந்தவர்கள் 'தலைவர்' என்று தான் அழைக்கின்றார்கள். வேலை வழங்க முடியாது என மறுத்த டியுட்டர் ஜயவர்த்தனா என்ற மேலதிகாரி பின்நாளில் என்னிடம் பிடி விட நேர்ந்தது.

1965 என நினைக்கின்றேன் தோட்ட தொழிலார்களுக்கான பதனேழு ஐம்பது (ரூ17.50) போராட்டம் அட்டன் செங்கொடி சங்க காரியாலயத்திற்கு முன் அமைந்திருந்த கொங்ரீட் மேடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தலைவர் அசீஸ் அவர்களின் வருகைக்காக (இணைந்த போராட்டம் என்றபடியால்) எல்லோரும் காத்திருந்தோம். அநேகர் குழுமியிருந்த இடத்திற்கு அசீஸ் இன்னும் வரவில்லை. நாங்கள் போராட்டத்திற்கு வந்தவர்களை அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை. உடனே நான் மேடைக்கு ஏறி பேசினேன். எங்கள் தலைவர் சண்முகதாசனின் 'ஒருநாளுக்கு ஒரு ரூபாய்' என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். அநேக வரவேற்பு கிடைத்தது. அது தான் நான் மேடை ஏறி பேசிய முதல் அநுபவம். அந்த போராட்டம் பத்து சதத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டதை நான் இன்றும் கண்டிக்கின்றேன். இந்த முதல் சந்தர்ப்பம் எனக்கு பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது. சண்முகதாசன், சரத்முத்தெட்டிகம, அமரசிறிதொடங்கொட, கஜதீர, ஓ.ஏ.ராமையா, டி.யூ.குணசேகர, ஜெயராம் (தற்போது இஸ்லாத்தை தழுவி ஜமால்டீன் என பெயர் மாற்றிக்கொண்டார்), என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பலரோடு தொடர்பு ஏற்பட்டது. நாட்டின் பல பாகங்களுக்கும் செல்வோம். எனக்கு சிங்களம் பேச தெரியாது கட்சி சார்பாக பல மேடைகளில் தழிழில் உரையாற்றினேன். கட்சி தோழர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை கற்பதற்கான நூல்களை வழங்கினார்கள். வாசிப்போம். பல கலந்துரையாடல்களை நடத்துவோம். அந்நாளில் பிரபல்யமாயிருந்த 'தீப்பொறி' பத்திரிகையை விரும்பி படிப்பேன். தோட்டப்பகுதிகளில் நடக்கும் முக்கிய விடயங்கள் பற்றி பத்திரிக்கைக்கு எழுதுவேன்.

நீங்கள் பங்கெடுத்துக் கொண்ட தொழிலாளர் போரட்டங்கள் பற்றி?
சமுத்திரவள்ளி தோட்டத்தில் தொழில்வாய்ப்பை பெறுவதற்காக மேற்கொண்டது தான் என் முதல் போராட்ட அநுபவம். பதினேழு ஐம்பது போராட்டம் எனக்கு புதிய உத்வேகத்தை தந்தது. மாத்தளையில் நடந்த பிரஜாவுரிமை போராட்டம் நினைவிருக்கிறது. சண்முகதாசன் தலைமையில் கட்சி தோழர்கள் பலரும் கலந்து கொண்டோம். பல்கலைக்கழக மாணவர்கள் பெரியளவில் ஒத்துழைத்தனர். அந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டோம். போராட்டம் செய்தல், போராட்டத்தின் இறுதியில் எங்கள் கட்சியின் பெரிய கொடி ஒன்றினை நிலை நாட்டுதல் இதுதான் எங்கள் வழமை. என்னுடன் தொழிலாள தோழர்கள் பலர் ஒத்துழைத்து செயற்பட்டனர். வானக்காடு - கலியப்பெருமாள், சமுத்திரவள்ளி - மூக்கன், நடேசன், ஆறுமுகம், சீனாக்கொலை - தங்கராஜ், பொகவானை - பெருமாள், லொக்கில் - லாசர். மற்றவர்களை மறந்து விட்டேன். பாதிபேர் இறந்துவிட்டார்கள். செல்லையாவும் ஆரோக்கியசாமியும் டன்பாரை தோட்டத்தில் இருந்தார்கள். அங்கே மதுரைவீரன் என்ற மேலதிகாரி மிகவும் கடுமையானவன். மதுரைவீரன் பற்றி ஒருநாள் அட்டன் கட்சி காரியாலயத்தில் பேசிக்கொண்டிருந்தோம். யதார்த்தமாக ஒரு தோழர் 'நீ போய் அவன் மார்கை, மார்க்கால வாங்கு. மிச்சத்த பாத்துக்குவோம்' என சொல்ல, செல்லையாவும் ஆரோக்கியமும் மதுரைவீரனின் ஒரு கையையும் காலையும் வெட்டி அவனின் கொடுமைக்கு முடிவு கண்டார்கள். இன்னமும் டன்பாரை தோட்டத்தில் 'மதுரைவீரன் மொடக்கு' எனும் நினைவிடம் அமைந்துள்ளது. என்னதான் இருந்தாலும் கீனாக்கொலை போராட்டத்தில் எனக்கு பங்குபற்ற முடியாமல் போனமைக்காக மனம் வருந்துகின்றேன்.

1983இல் நடந்த கலவரத்தின் போது தோட்டப்பகுதிகளில் வறுமை பெருகியது. ஒரு கொத்து அரிசியை கூட எடுத்து போக முடியாத நிலை காணப்பட்டது. எங்களது தோட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்து அவர்களின் பசியை போக்க வேண்டும் என்று நினைத்தேன். பொகவந்தலாவை நகரத்தில் P.Tலொறியை வாடகைக்கு அமர்த்தி கோதுமை மாவை சேகரித்துக்கொண்டு பொலிசாரினதும் தோட்ட நிர்வாகத்தினதும் எதிர்ப்பையும் மீறி மக்களின் துயர் துடைக்க முயற்சி செய்து அவர்களின் ஒரு வேளை உணவுக்கு உதவிசெய்தேன்.

உங்களது சீன பயணம் பற்றி?
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பல தேவைகளுக்காக பல சந்தர்ப்பங்களில் தோழர்கள் கம்யூனிட் கொள்கைகளுக்கு ஆதரவான நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நதுங்கே, தர்மதாச போன்றவர்களுடன் இணைந்து நானும் சீன நாட்டிற்கு சென்றேன். கமியூனிச கொள்கைகளை கற்றல், பிரமுகர்களை சந்தித்தல், கட்சி கூட்டங்களில் கலந்துக்கொள்ளுதல், அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் என்பனவே எங்கள் பயணத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. இரண்டு மாதம் அங்கே தங்கினோம். எங்களுக்கு லீச்சன் குவா என்ற சீனப் பெண் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்தார். சூட்டே, லின்பியோ, சுவேன்லாய உட்பட பலரை சந்தித்தோம். சீன நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயமும் சீனப்பெருஞ்சுவரும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

இன்றைய சந்ததியினருக்கு சொல்ல விரும்புவது?
பயமாக இருக்கின்றது. காட்டிக்கொடுப்புக்கள் அதிகரித்து விட்டன. பந்தம் பிடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள். நான் அண்மைய காலத்தில் உறவினர்களை தவிர யாருடனும் தொடர்பு கொள்வது கூட இல்லை. காரணம் நம்பிக்கையானவர்களை சந்திப்பது அரிதாகிவிட்டது. இன்று எமது சமூகம் நிறைய மாறிவிட்டது. இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதும் சிந்திப்பதும் மிகவும் குறைவாக உள்ளது. நான் என் பிள்ளைகளை கூட என்வழியில் பழக்கப்படுத்த தவறிவிட்டேன். அவர்களுக்கு கல்வியறிவினை ஊட்டவதற்கு மட்டுமே முயற்சித்தேன். இப்பொழுது என் தவறை உணர்கின்றேன்.


என்னைப் போல பலர் இருக்கிறார்கள். (ஒரு சிலரின் விபரங்களை தந்தார்) உயிருடன் உள்ளவர்களை தேடுங்கள் கதைக்கலாம். என் உடல் நலம் சரியாகிவிட்டால் ஏதாவது பண்ணுவேன். சாதிக்கலாம். காலம் இன்னும் இருக்கின்றது.
Share this post :

+ comments + 1 comments

Anonymous
9:53 AM

Super father we miss you my dear father

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates