Headlines News :
முகப்பு » » மலையக அரசியலில் பயணித்த பல அரசியல் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் எதுவும் எம்மிடமில்லை மு.நித்தியானந்தன்

மலையக அரசியலில் பயணித்த பல அரசியல் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் எதுவும் எம்மிடமில்லை மு.நித்தியானந்தன்


“மலையகத்தின் சமூக அரசியல் கல்விசார் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் மிக அருந்தலாகவே காணப்படுகின்றன. அரசியலில் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் சுயசரிதை முக்கியம் வாய்ந்த ஆவணப் பதிவாகும். மலையக அரசியலில் பயணித்த பல அரசியல் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் எதுவும் சரியாக இல்லை. பதுளையின் முதலாவது பாராளுமன்ற அங்கத்தவரான எஸ்.எம்.சுப்பையா கனடாவில் காலமானபோது அவரைப்பற்றிய சிறிய குறிப்பினை எழுதுவதற்கு கூட அவரைப்பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கே.குமாரவேலு சீ.ஆர்.மோத்தா ஆர்.ராஜலிங்கம் தேசிய ராமானுஜம் ஐ.எக்ஸ் பெரேரா ஸி.வி. வேலுப்பிள்ளை இர.சிவலிங்கம் போன்ற ஆளுமைகளைப் பற்றிய சீரிய நூல்கள் இதுவரை எதுவும் வெறிவந்தது கிடையாது. காலவெளியில் இத்தகைய அரசியல் ஆளுமைகள் மறக்கப்பட்டவர்களாக உதிர்ந்து போகும் அவலம் நிதர்சனமான உண்மையாகும். இந்தப்பின்னணியில் மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களைப்பற்றிய அருமையான பதிவினை மலையக அரசியல் சமூக ஆய்வாளர் எச்.எச்.விக்கிரமசிங்க அவர்கள் செய்திருப்பது பாராட்டிற்குரிய பணியாகும். அமரர் சந்திரசேகரன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி உரைகளையும் மலையக அறிவு ஜீவிகளின் கட்டுரைகளையும் தொகுத்து தனது சொந்த முயற்சியில் வெளியிட்டு அவரின் அரிய பணிகளை மலையகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் பரவலாக்கும் பணியை திரு எச்.எச்.விக்கிரமசிங்க ஆழ்ந்த அர்ப்பணிப்போடு செய்து வருவது மலையகம் பெருமை கொள்ள வேண்டிய ஒரு சமூகப்பணியாகும். இர.சிவலிங்கத்தின் ஆளுமையில் உருவான விக்கிரமசிங்க அவர்கள் அரசியலில் மட்டுமன்றி வீரகேசரியில் இணைந்து கொண்டது முதுல் அவர் எஸ்.எம். கார்மேகத்துடன் இணைந்து மலையக எழுத்தாளர் மன்ற வளர்ச்சிக்காக தொடர்ந்து பணிபுரிந்தவர் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களை நாம் இன்றும் நினைவு கொள்வதற்கும் மலையகததின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற ஆவணப்பதிவு துணையாகவுள்ளது.
டென்மார்க்கின் ஒல்போ நகரில் அண்மையில் கரவைதாசன் தமலைமையில் இனி வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த மலையகத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவின் போது உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அமெரிக்க சமூக மாணிடவியல் ஆய்வாளர் டேனியல் பாஸ், தமிழ் பேராசிரியர் புதல்வியும் அரசியல் வரலாற்று ஆய்வாளருமான கலாநிதி வள்ளி கணபதிப்பிள்ளை,சென்னை வரலாற்றின் தலைசிறந்த ஆய்வாளராக திகழும் எஸ்.முத்தையா, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் டபிள்யூ. டீ. ஜயசிங்க, பேரானைப் பல்லைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எச்.வேன்டேன்ட்ரிசன் பேராசிரியர் பி.சகாதேவன் தொழிற்சங்க தலைவர் எஸ்.நடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள மலையகம் சார்ந்த ஆங்கில ஆய்வுநூல்களின் வரிசையில் புதிய நல்வரவாக யோகேஸ்வரி விஜயபாலன் அவர்களின் ஆய்வு நூலான மலையகத்தமிழர்களுக்கு எதிரான முடிவற்ற பாரபட்சங்கள் என்ற ஆங்கில நூல் சிறப்பிடம் வகிக்கிறது. (ENDLESS INEQUALITY The Rights of the Plantation Tamils in Sri Lanka) கொழும்பு பல்கலைககழகத்தில் அவர் சட்டத்துறையில் பயின்ற காலத்திலிருந்து அவரை நான் நன்கு அறிவேன் லண்டனில் சோயாஸில் தனது முது கலைமானிய பட்டத்திற்கு அவர் மேற்கொண்ட ஆய்வு சட்டபூர்வமாக மலையக மக்கள் காலம் தோறும் எத்தகைய இன பாகுபாட்டிற்கு ஆளாகி வந்துள்ளனர் என்பதை நுனுக்கமாக பதிவு செய்துள்ளது என்று மு.நித்தியானந்தன் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்தார்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னால் நிர்வாக செயலாளரும் நோர்வே தொழில் மற்றும் சமூக அமைச்சில் சிரேஷ்ட சட்ட ஆலோசகர்களாக பணிபுரியும் தங்கராஜ் பிரேமராஜ் பேசுகையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் தலவாக்கலையில் பிறந்தவர். அவரது தந்தை பெரியசாமி ஐயா தலவாக்கலை நகரில் செல்வாக்கு மிக்க வர்த்தகர். அவரின் மறைவுக்கு பின் சந்திரசேகரன் தந்தையாரின் வர்த்தகத்தை நிர்வகித்து வந்தார். அட்டன் ஐலன்ட கல்லூரியில் எஸ். திருச்செந்தூரனின் மாணவனாக விளங்கிய அவருக்கு இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் போன்றோரின் தொடர்பும் வேறு பலரின் தொடர்பும் ஏற்பட்டது. காணி சீர்த்திருத்தச் சட்டங்களின் கீழ் பெருந்தோட்டங்களை கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிப்பது சிறிமாசாஸ்திர ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்துவது மற்றும் வறுமை, பஞ்சம் போன்ற சூழ்நிலையில் மலையக மக்கள் வாழ்ந்த 1977 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் தொண்டமான் ஐயா நுவரெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட முன்வந்த சமயம் காமினி திஸாநாயக்காவின் அடாவடி தனத்திற்கு பயந்து பெருந்தோட்ட நகர் புற வர்த்தகதர்கள் தொண்டமான் அவர்களுக்கு ஆதரவளிக்க தயங்கிய போது 1977 ஆம் ஆண்டு மாவட்டத் தலைவர் நடேசனின் வேண்டுகோளை ஏற்று தொண்டமான் ஐயாவை மேலதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக தலவாகலை நகரில் அழைத்துச் சென்று தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் சந்திரசேகரன் அவருடைய வெற்றிக்கு கடுமையாக உழைத்தார். ஐயா தொண்டமானுக்கு பெரும் ஆச்சரியம் யார் இந்த துணிந்த இளைஞன் என விசாரிக்க பஞ்சலிங்கம் ஸ்டோர்ஸ் பெரியசாமி ஐயாவின் மகன் என்பதை தொண்டமான் அறிந்துக் கொண்டார். அன்று முதல் சந்திரசேகரிடம் ஆலோசிக்காமல் தொண்டமான் ஐயா எதையும் செய்யவில்லை. 1986 ஆம் ஆண்டு நடந்த பிரார்த்தனை இயக்கம் வெற்றி பெற சந்திரசேகரனின் பங்களிப்பு முக்கியமானது என புகழாரம் சூட்டியவர் தொண்டமான். பயங்கரவாதச் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மலையக இளைஞர்களை விடுதலை செய்யவேண்டும் என்று 1986 ஆம் ஆண்டு சத்தியாகிரகம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியபோது சந்திரசேகரனை மலையகத்தின் எதிர்கால ஒரு தலைவனின் ஒருவராக கருதினார் சந்திரசேகரனின் வளர்ச்சியை பொறுக்காத சில இடைத்தரகரால் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பமாயிற்று. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நுவரெலியா மாவட்ட பொதுதேர்தலில் போட்டியிட சந்திரசேகரன் விண்ணப்பிப்பார் என்று தொண்டமான் எதிர்பார்க்க தொண்டமான் ஐயா தன்னை கூப்பிடுவார் என்று சந்திரசேகரன் எதிர்பார்க்க பிரச்சினை வளர்ந்தது. அந்த ஆண்டில் சந்திரசேகரன் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் களம் இறங்குகிறார். மீண்டும் 1994 ஆம் ஆண்டு தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். சுந்திரசேகரன் இ.தொ.க.வில் இருந்து பிரிந்து செல்லவேண்டி வந்தது. இன்று 25 ஆண்டுகளுக்கு பின் திரும்பி பார்க்கையில் அது காலத்தின் கட்டாயம் என்று புரிகிறது. இன்று இருவரின் தலைமைத்துவமும் வெற்றிடமாகவுள்ளது. சந்திரசேகரன் இயற்கையாகவே உருவாகிய தலைவர் அவருக்கு எந்த பின்புலமும் இருந்ததில்லை. அவர் ஒரு மக்கள் தலைவர்.


பலருக்கு தெரியாத விடயம் தான் தொண்டமான் ஐயாவிற்கும் அண்ணன் சந்திரசேகரனுக்கும் இருந்த பரஸ்பர அன்பும் சந்திர சேகரன் பிரிந்த சென்ற பின்னும் இருவரும் தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்பு கொள்வார்கள். இ.தொ.கா.வில்; இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மலையக அரசியலில் தடம் பதித்ததாக வரலாறு இல்லை தமது இடது சாரி பாரம்பரியங்களை கைவிட்டு 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஊடாக பி.பிதேவராஜ் மீண்டும் சரணாகதியடைகிறார். ஆனால் சந்திரசேகரன் அவர்கள் அதில் விதி விளக்கானவர் தனியாக மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியையும் மலையக தொழிலாளர் முன்னணி என்ற தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்து முன்னோடியாக திகழ்ந்தவர். தனியாக போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர். அமைச்சராக இருந்தபோதும் எல்லோராலும் இலகுவில் அணுககூடியவராக இருந்தார். இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மக்கள் சேவை செய்திருக்க வேண்டியவர் இளம் வயதில் மறைந்தது நமது துரதிஷ்டமே மலையக அரசியலில் அவரின் இடம் வெறுமையாகவுள்ளது.

தெளிவத்தை ஜோசப் சிறுபதைகள் என்ற நூலை வெளியிட்டுப் பேசிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் விரிவுரையாளர் க.ஆதவன் மலையக மக்களின் சின்னஞ்சிறு உணர்வுகளையும் யதார்த்தமாக சித்தரிப்பதில் தெளிவத்தை ஜோசப் வெற்றி பெற்றுள்ளார். சிறுகதை என்ற வரம்பிற்குள் நின்று அவர் எழுதியுள்ள ஊன்றுகோல் பீலி மேலே போகிறது எக்ஸிமா ஆகிய கதைகள் அவரது இலக்கிய வெற்றிக்கு சாட்சி கூறுகின்றன. மலையக மக்களின் வாழ்வை நேராக பார்த்து அனுபவித்தவன் என்ற வகையில் இந்த கதைகள் மலையக மக்களின் வாழ்வின் பலகூறுகளை சிறந்த இலக்கியப்பதிவுகளாக்கியுள்ளன என்பதை என்னால் உணரமுடிகிறது என்று குறிப்பிட்டார். மற்றும் இ.கண்ணதாசன் கி.கிருஷ்ண மூர்த்தி க.யோகராஜா எம்.சி.லோகநாதன் அ.குமாரதுரை ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

தகவல்- எச். எச். விக்கிரமசிங்க
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates