கடந்த காலங்களில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு போரினால் மறக்கப்பட்ட ஒரு இனம் மலையகத் தமிழ் இனம் என்றால் மிகையல்ல. இவர்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் மட்டும் பாதிக்கப்படவில்லை. மேலதிகமாக பொருளாதார சுரண்டலாலும் பாதிக்கப்பட்டவர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறாதவர்கள். இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத லயங்களில் வாழ்பவர்கள். லயங்கள் தனியாருக்கு சென்றவுடன் ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் வேலை கிடைக்காதவர்கள். இதனால் தனியாருக்கு குறிப்பாக சிங்கள முதலாளிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் நாட் கூலிக்கு வேலை செய்பவர்கள். இதைத்தான் ஒரு மாணவி கூறினார், “நாம் இன்று பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இன்று என்ன வேலை? எங்கே கிடைக்கும்? என்ன வருமானம்? என்ன சாப்பாடு? என வாழ்பவர்கள். நாளை என்பது நிச்சயமற்றதாகவே எப்பொழுதும் எங்களுக்கு இருக்கின்றது” என்றார். இதனால்தான் இவர்களை இருபது வருடங்களுக்கு முன்பே வெளியீட்ட ஒரு நூலிற்கு “21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்” எனத் தலைப்பிட்டனர்.
மலையகம் நான் வளர்ந்த தேசம். குறிப்பாக சிறு வயதில் அட்டன் நகரில் என் கால் பதியாத இடங்கள் இல்லை எனலாம். இன்று இந்த நகரத்தில் வாழ்க்கைத் தரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாதபோதும் பெரிய கட்டிங்கள் பல கட்டப்பட்டுள்ளன. மலையக இளைஞர்கள் முன்பைவிட அதிகளவில் பல்கலைக்கழங்களுக்கும் கலாசாலைகளுக்கும் செல்கின்றனர். இங்கிருந்து மலையக ஆசிரியர்கள் படையாக வருடந்தோறும் வெளிவருகின்றனர். முன்பு அதிகளவு யாழ் ஆசிரியர்களைக் கொண்டிருந்த பிரதேசம். இவர்களில் சிலர் அக்கறையுடன் கற்பித்தபோதும் பலர் கடமைக்காக கற்பித்தனர் என்றே சொல்லவேண்டும். இன்று ஒரிரு யாழ் ஆசிரியர்களையும் அதிகளவு மலையக ஆசிரியர்களையும் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சியானதுமாகும். மேலும் மலையக இளைஞர்கள் பலர் சட்டத்தரணிகளாகவும் செயற்படுகின்றனர். இவ்வாறான மகிழ்வான விடயங்களை நடைபெறுகின்ற அதேவேளை கவலையையும் கோவத்தையும் ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.Kanthaloya 046
தமிழ் பரம்பலை தோட்டப் பிரதேசங்களில் குறைக்கின்ற வகையில் பாரிய சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. நல்ல உதாரணம் தலாவாக்கொலை. தலாவாக்கொலை புதியதொரு முகத்தைப் பெற்றுள்ளது. இன்று அது மலையக மக்கள் வாழ்கின்ற தேயிலை தோட்டங்கள் கொண்ட இடம் மட்டுமல்ல. இதைவிட புதிதாக நீர் தேக்கம் மற்றும் அணைக் கட்டுக்கள் என்பவற்றைக் கொண்டு விளங்குகின்றது. இந்த வேலைத் திட்டங்களால் வீடுகள் இழந்தவர்களுக்கு ஐப்பான் அரசாங்கத்தால் புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளமை நேர்மறையான ஒரு விடயம். இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களும் ஒரு காரணம். இதைவிட இவ்வாறு வீடுகள் கட்டிக் கொடுக்கின்றளவிற்கு நீர்த் தேக்கத்தால் வருமானம் வருகின்றமையும் கவனிக்கத்தக்கது. மேலும் டெவன் நீர் விழ்ச்சியைப் பார்ப்பதற்கென சிறு உல்லாச விடுதிகள் கட்டப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தலவாக்கொலை எதிர்காலத்தில் உல்லாச பயணிகள் அதிகளவில் வருகின்ற முக்கியமான பிரதேசமாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியால் ஏற்படப்போகின்ற பாலியல் தொழில், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் கலாசார மாற்றங்கள் போன்ற எதிர்மறை விளைவுகளை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்றால் அது கேள்விக்குறியே. மாறாக அரசியல்வாதிகளின் துணையுடன் அல்லது அவர்களால் பினாமி பெயர்களில் தேவைக்கு அதிகமான பல சாராயக் கடைகள் தோட்ட ஆண் தொழிலாளர்களை இலக்கு வைத்து நடைபெறுகின்றன. தொழிலாளர்கள் பெறுகின்ற சம்ளத்தில் பெரும்பகுதி இதற்கு செல்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். இது பல்வேறு பிரச்சனைகளை மலையக குடும்பங்களில் உருவாக்கின்றது.
ஆசிரியர் சக்தியும் மாணவர்களும் மலைப் பாதையினுடாக... |
தலவாக்கொலையில் நடைபெற்ற இந்த அபிவிருத்தியுடன் சிங்கள மக்களை (மீளக்) குடியேற்றியதும் நடைபெற்றுள்ளது. பௌத்த கோயில்கள் மட்டுமல்ல சிங்கள மாணவர்கள் அதிகம் இல்லாதபோதும் வசதிகளுடன் கூடிய பல கட்டிங்களை கொண்ட சிங்கள பாடசாலையும் அதற்கு அதிகளவிலான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிய முடிந்தது. இதேபோல யட்டியாந்தோட்டையிலிருந்து கந்தலோய செல்வதற்கு இருபது கிலோ மீட்டர்கள் பேரூந்தில் பயணம் செய்யவேண்டும். இந்த வீதியில் சிங்கள கிராமங்கள் மட்டுமே இருக்கின்றன. இவர்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு பாடசாலை என்ற வீத்த்தில் சகல வசதிகளுடனும் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பிரதான வீதியிலிருந்து சிறு வீதிகளுடாக சென்று மலை உச்சிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இருக்கின்ற தோட்டங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளுக்கு மிகக் குறைந்தளவு வசதிகளே உள்ளன எனக் கூறப்படுகின்றன. சில தோட்டப் பாடசாலைகளுக்கு இன்னும் கட்டிடங்கள் கூட இல்லை.
இந்த வீதியின் பதினைந்தாவது கிலோ மீட்டர் கல்குறியிலிருந்து மலைகளினூடு செல்லும் பொழுது வருகின்ற தோட்டம் பூனுகல. இங்குதான் கந்தலோயா அதிபர் கருணாகரன் வாழ்கின்றார். இவர் இங்கிருந்து காலை நடையாக கீழே வந்து மேலும் ஐந்து கிலோ மீட்டர்கள் பேரூந்தில் பயணம் செய்து மீண்டும் கால் நடையாக குறுகிய காட்டுப்பாதைகளினுடாக அரை மணித்தியாலங்களுக்கு மேலாக தான் கற்பிக்கின்ற பாடசாலைக்கு நடக்கவேண்டும். இவருடன் சில ஆசிரியர்களும் இப்பாதையால் நடந்து செல்வார்கள். குறிப்பாக மழைக் காலங்களில் இந்த பாதையால் நடப்பது மிகவும் கஸ்டமானது. நிறைய அட்டைகள் கால்களில் ஏறி கடித்துவிடும். ஆகவே இந்த பாதையால் நடப்பதற்கு முதல் கால்களுக்கு சவுக்காரம் போட்டு விட்டே நடக்க ஆரம்பிப்போம் என்றார். இதை பெரியவர்கள் சமாளிக்கலாம். குழந்தைகள் எவ்வாறு சமாளிப்பார்கள். ஆனாலும் சமாளித்து வாழ்க்கையை எதிர்கொள்கின்றார்கள். கந்தோலாய தோட்டத்திற்கு நாவலப்பிட்டியிலிருந்து ஒரு பேரூந்து மாலையில் வரும். அது காலையில் தோட்டத்திலிருந்து நகரத்திற்கு செல்லும். இது மட்டுமே இந்த தோட்டத்திற்கு நடைபெறுகின்ற போக்குவரத்து சேவை. மேலும் இந்தப் பிரதேசத்திற்கு இப்பொழுதான் மின்சாரம் கொண்டுவரப்படுகின்றது. ஆனால் பாடசாலைக்கும் தோட்டத்திற்கும் வராது வீதியுடன் நிறுத்தப்படுகின்றது. ஆகவே மின்சாரம் இல்லாமே இதுவரை வாழ்ந்தனர். கல்வி கற்றனர். இனியும் சில காலத்திற்கு அப்படித்தான். அரசியல்வாதிகளின் கண் பார்வை இவர்களின் மீது படும்பட்டும்.
1980ம் ஆண்டே தேயில் தோட்டங்களில் இருந்த மலையகத் தமிழ் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றது. இவ்வாறு பொறுப்பேற்றபோதும் கந்தலோயா தமிழ் வித்தியாலயம் நீண்ட காலமாக தேயிலைத் தொழிற்சாலையிலையே இயங்கியது. அப்பொழுது இங்கு தரம் ஐந்து மட்டுமே கற்பிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு கல்வியற் கல்லூரியல் கல்வி கற்ற கவிஞர் முனியான்டி கருணாகரன் இந்தப் பாடாசாலைக்கு ஆசிரியராக நியமனம் பெற்று வந்தார். இவரும் அதிபரும் மட்டுமே இந்த மாணவர்களுக்கான இரு ஆசிரியர்களாக இயங்கினர். ஏற்கனவே இருந்த அதிபர் மாற்றம் பெற்று செல்ல 2006ம் ஆண்டு இந்தப் பாடசாலையின் அதிபராக கருணாகரன் பொறுப்பேற்றார். 2013ம் ஆண்டு நிரந்த அதிபர் நியமனம் கிடைக்கப்பெற்றார். இவ்வாறான பின் தங்கிய பாடசாலைகளுக்கு அதிபராக ஆசிரியர்களாக நியமனம் பெற்று வருகின்றவர்கள் நீண்ட காலம் இருக்க விரும்புவதில்லை. ஏனெனில் அந்தளவு கஸ்டங்களை எதிர்கொள்ள வேண்டும். ஆகவே தமது அரசியல் பொருளாதார செல்வாக்குகளைப் பயன்படுத்தி மாற்றங்கள் பெற்று சென்றுவிடுவார்கள். சில அதிபர்களும் ஆசிரியர்களுமே இந்த மாணவர்களின் மீது அக்கறை கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றனர்.
விளையாட்டுப் போட்டியின் போது அமைக்கப்பட்ட இல்லம் |
2004ம் ஆண்டுதான் முதன் முதலாக இந்தப் பாடசாலைக்கு என ஒரு கட்டிடம் கட்டித்தரப்பட்டது. இப்பொழுது எட்டாம் தரம் மட்டும் கல்வி கற்பதற்காக உயர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 170 மாணவர்களைக் கொண்ட பத்தாம் வகுப்பு வரை இருக்கின்ற இந்தப் பாடசாலைக்கு ஆகக் குறைந்தது 14 ஆசிரியர்கள் தேவை. ஆனால் அரசாங்கத்தால் இதுவரை ஆறு ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அதிகளவான மாணவர்களுக்கு நேரம் கடந்தும் சில ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். இவ்வாறு கற்பிப்பதற்காக மேலதிகப் பணம் அறவீடுவதில்லை. அவ்வாறு அறவீடுவதற்கு இந்த மாணவர்களிடம் வசதியும் இல்லை. ஆசிரியர்களின் பொறுப்புணர்வும் பங்களிப்பும் மாணவர்களின் ஊக்கமும் மிகவும் பாராட்டுக்கும் மதிப்புக்குமுரியவை.
2006ம் ஆண்டு வரை இந்தப் பாடசாலையிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிட்சையில் யாரும் சித்தியடையவோ ஆகக் குறைந்தது அதிக புள்ளிகள் பெறவோ இல்லை. 2008ம் ஆண்டு ஒரே ஒரு மாணவர் முதன் முதலாக இந்தப் பரிட்சையில் சிந்தியடைந்தார். 2009ம் ஆண்டு ஐந்து மாணவர்கள் அதிக புள்ளிகள் எடுத்தபோதும் சிந்தியடையவில்லை. இருப்பினும் 2011 ம் ஆண்டு இரு மாணவர்கள் சித்தியடைந்தனர். இவ்வாறான வறுமையிலும் கஸ்டங்களுக்கும் மத்தியிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிட்சையில் சில மாணவர்களாவது சித்தியடைந்து தேர்வு செய்யப்படுகின்றனர். பலர் அதிக புள்ளிகள் எடுத்தபோதும் தேர்வு செய்யப்படாமைக்கு காரணம் நகர மாணவர்களுடன் போட்டி போட முடியாமையாகும். பல் வேறு வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள நகர மாணவர்கள் அதிகளவு புள்ளிகள் எடுக்க வெட்டிப்புள்ளி அதிகமாகின்றது. ஆகவே பின்தங்கிய தோட்டப் பாடசாலை மாணவர்கள் புள்ளிகள் எடுத்தாலும் சித்தியடைய முடியாதவர்களாக இருக்கின்றனர்.
இந்த மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல நாடகம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியில் சிறந்து விளங்குகின்றனர். 2009ம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் இவர்களது நாடகம் மூன்றாவது இடத்தைப் பெற்றமை முக்கியமான கவனத்திற்குரியது. இதைவிட பரத நாட்டியம் மற்றும் கதைகூறல் நிகழ்விற்காக அகில இலங்கை தமிழ் தினப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். மேலும் விளையாட்டுத் துறையில் அகில இலங்கை ரீதியில் 2008ம் ஆண்டும் மாகாண மட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களும் பரிதி வட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அதிகமான தோட்டப் பாடசாலைகளில் எட்டாம் தரம் வரை மட்டுமே இருப்பதால் பல மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்வது தடைபடுகின்றது. ஏனெனில் இவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். நகரத்திற்க்கு ஒவ்வொரு நாளும் போய்வரும் சிரமம் மற்றும் நகரத்தில் தங்கி கற்பதற்கு வசதி இல்லாமை போன்றவற்றால் இடையில் தமது படிப்பை நிறுத்துகின்றனர். தகுதியிருந்தும் வசதியின்மையால் கல்வியைத் தொடராது கொழும்பிலுள்ள ஹோட்டல்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வேலை தேடிச் செல்கின்றனர். அல்லது அனுப்பப்படுகின்றனர். வாய்ப்புகளும் ஆதரவும் இல்லாமையினால் இவர்களது வளர்ச்சி இடைநடுவில் விடப்படுகின்றனது. இவ்வாறான சூழலில் சிலரது பங்களிப்புகள் இவர்களுக்கு கிடைப்பது நம்பிக்கையளிப்பதாகும்.
http://epaper.thinakkural.lk/thinakkural/
20.04.2014
நன்றி தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...