Headlines News :
முகப்பு » » நித்தி என்னும் பேராசான்! - நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் )

நித்தி என்னும் பேராசான்! - நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் )


1982/1983 ஈழத்துப் பத்திரிகைகளில் பரபரப்பான தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்த திரு.மு.நித்தியானந்தன் என் தந்தை அகஸ்தியரைக்; காண்பதற்காக பாரீசில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். அரசியல் இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பொருளியல் விரிவுரையாளராக மட்டுமே அவரைத் தெரிந்திருந்த எனக்கு ஆழ்ந்த இலக்கியப் புலமையும், மார்க்சிய ஞானமும் கொண்ட ஒருவராக அவரைப்பற்றி என் தந்தை அகஸ்தியர் அவர்கள் எனக்கு நிறையவே கூறியிருந்தார்.

1991 ம் ஆண்டு பேர்லினில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் என் தந்தை அகஸ்தியரின் இலக்கியப் பணிகளை ஆராயும் முகமாக இடம்பெற்ற ‘அகஸ்தியர் ஆய்வரங்கில்’ திரு. மு. நித்தியானந்தன் ஆற்றிய தலைமையுரையில் ஈழத்து விமர்சன உலகம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களை என் தந்தையார் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து பெரிதும் சிலாகித்து பேசியிருக்கிறார். பின்னர் பாரீசில் என் தந்தையுடனான பேட்டி ஒன்றினையும் மறைந்த திரு.க.கலைச்செல்வனின் பெரு முயற்சியில் ஒரு ஆவணமாக வீடியோ பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார். இவையெல்லாம் பாரீசில் நான் வாழ்ந்த காலத்து நினைவு மீட்டல்களின் துளிகளாகும்.

லண்டன் வந்த போதுதான் திரு. மு. நித்தியானந்தனோடு நெருங்கிப் பழகவும், இலக்கிய ரீதியாக கருத்துப் பரிமாற்றங்கள் செய்யக் கூடியதாகவும் வாய்ப்புகள் கிடைத்தன.

தீபம் தொலைக்காட்சியில் இலக்கிய நேரம் பகுதியில் வாராவாரம் அவர் நிகழ்த்தி வரும் நூல் விமர்சனம் ஐரோப்பிய புலம்பெயர் இலக்கிய உலகில் தனித்துவமான ஒரு அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை தேடித்துருவி ஆராய்ந்து அவற்றை நிதானமாக மதிப்பீடு செய்யும் மு.நித்தியானந்தனின் விமர்சனப்பாங்கு அவருக்குப் பல்லாயிரக்கணக்கான இலக்கிய அபிமானிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. சினிமாக் குப்பைகளை எந்த விவஸ்தையுமின்றி தயாரித்து வழங்கும் அபத்தமான ஊடக சூழலில், இந்த விமர்சனப் பகுதி மட்டுமே சிந்தனைக்கு விருந்து தரும் ஒரே ஒரு கருத்தாழம் கொண்ட நிகழ்வு என்று கூறினால் அது தவறாகாது.

அரசியல், சமூகவியல, சமகால வரலாறு, கவிதை, நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரமுகர்கள், கர்நாடக இசை, சாதியம், மார்க்சியம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்து மு. நித்தியானந்தன் தேர்ந்து விமர்சிக்கும் நூல்கள் தமிழ் சுவைஞர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாகும். எந்த நூலாயினும் அந்த நூலினை எளிமையாக அறிமுகப்படுத்திஇ அந்த நூலின் சாரத்தை கிரகித்து அலுப்புத் தட்டாமல் சுவை பயக்க விபரிக்கும் ஆற்றல் மு. நித்தியானந்தன் ஒருவருக்கே கைவந்த கலையாகும்.

ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரின் அனுபவத்தோடும் ஒரு பத்திரிகையாளனின் ஜனரஞ்சகப் பண்போடும் அவர் மேற்கொள்ளும் விமர்சனங்கள் பதிவு செய்து பேணி வைக்கத் தக்கவையாகும்.

இடையில் சிறிது காலம் தடைப்பட்டிருந்த இலக்கிய நேரப் பகுதி மீண்டும் தொடங்கியபோது ‘எனக்கு மட்;டும் உதிக்கும் சூரியன்’ என்ற எனது கவிதைத் தொகுப்பின் விமர்சனத்தோடு ஆரம்பமாகியது எனக்கு மிகுந்த பெருமையையும்இ மகிழ்வையும் தருகிறது.

இலக்கிய நேரம் பகுதியில் மு. நித்தியானந்தனின் விமர்சனங்கள் ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை அதைத் தொடர்ந்து கேட்டு ரசித்து வருகிறேன். இது போன்ற ஒரு இலக்கிய நிகழ்வு தீபம் தொலைக்காட்சிக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்த்தைத் தேடிக் கொடுக்கிறது என்றே கூறவேண்டும். இந்த நூல் விமர்சனத்தின்போது நேயர்கள் பல நாடுகளிலிருந்தும் தெரிவிக்கும் கருத்துக்கள் இந்தக்கூற்றினை உறுதி செய்வதாகும். 

இந்த விமர்சன நேயர்கள் மட்டுமல்லாது லண்டன் மேடைகளில்; இலக்கியக் கூட்டங்களிலும், தமிழ்த் தின விழாக்களிலும், நடன அரங்கேற்றங்களிலும் மு. நித்தியானந்தன் பங்குகொண்டு ஆற்றிய உரைகளை நான் கேட்டிருக்கிறேன். ஒரு மேடைப் பேச்சு எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அவருடைய பேச்சுக்கள் முன் உதாரணமாக அமையவல்லன. வழங்கப்பட்ட நேரத்துக்குள் மிக நேர்த்தியாக பேச்சினை ஒழுங்கு செய்யும் லாவகமும் இன்னும் தொடர்ந்து பேசமாட்டாரா என்று நினைக்கும் நேரத்தில் அதனை முடித்து விடுகின்ற பாங்கும் அவருடைய மேடைப் பேச்சுக்கு தனி மெருகைச் சேர்க்கின்றன. 

‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்காக முன்னுரை கேட்ட பொழுது மலர்ந்த முகத்தோடு அவர் வழங்கிய அணிந்துரை எனக்கு கவிதையில் மேலும் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் துணிவையும் என்னுள் ஏற்படுத்தியது. வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களுக்கு சிறந்த துணையாக அவர் உதவும் பாங்கும் என்றும் நினைவு கூரத் தக்கதாகும். எந்தப் பொருள் குறித்து வினாவினாலும் விரல் நுனியில் கொள்ளையான தகவல்களைக் கொண்டிருக்கும் மு.நித்தியானந்தன் அவர்கள் நமக்கெல்லாம் மிகச் சிறந்த துணையாகவே திகழ்கின்றார்.

மு.நித்தியானந்தன்பெண்கள் சமத்துவமாக நடத்துவதிலும் அவர்களின் ஆற்றல்களை பாராட்டுவதிலும் அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதிலும் மு.நித்தியானந்தன் விசுவாசமாகச் செயற்படுபவர் ஆவார். வீட்டு அலுவல்களைக் கவனிப்பதில் மீனாளுக்கு துணையாகப் பெரிதும் உதவுவதை நான் பார்த்திருக்கிறேன். பொது அரங்குகளிலும்இ மேடைகளிலும், அரசியலிலும்இ ஊடகங்களிலும் பெண்கள் முன்னின்று உழைக்க வேண்டுமென்பதில் அவர் தீவிர கருத்துக் கொண்டவராகவே இருக்கிறார். ஆணாதிக்கக் கருத்துக்கள் கொண்ட சமூகத்தில் ஆண்களும் தங்களை அடிக்கடி மீள்பார்வை செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார். மு. நித்தியானந்தன் பெண்களை மதிக்கும் இந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. 

சிறந்த எழுத்தாற்றல் மிக்க மு. நித்தியானந்தன் அவர்கள் தனது விமர்சனங்களை எல்லாம் நூலாக்கவேண்டும் என்பது அவரைச் சூழ்ந்துள்ள அனைவரினதும் ஆதங்கம் ஆகும். எங்கள் குடும்ப நண்பராகவும்இ அவரது இனிய துணையான மீனாளும் எம்மேர்டு இனிய தம்பதியினரின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் ஆவர். என் அம்மா நவமணிகூட அந்த இருவர் மீதும் அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டவராவார்.

எனது அன்புத்தந்தை அகஸ்தியரின் அச்சில் வராத எழுத்துக்களை நூலாக்கும் முயற்சியில் மு. நித்தியானந்தன் வழங்கிய ஆலோசனைகள் எனக்குப் பெருந்துணையாக அமைந்தன. ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற எனது தந்தை எழுதிய லெனினின் வரலாற்றுக் கதைத் தொகுப்பினை நூலாக்குவதில் அவர் காட்டிய அக்கறைக்கு நான் நன்றி கூறி நிற்கின்றேன்.

வெலிகடைச் சிறைச்சாலை
கதிகலங்கி
காலத்தை விரட்டி
கடல் வளைத்த வாழ்க்கையில்
அகவை அறுபதல்ல
நித்திய ஆனந்தா …நீ
மீனாளுடன்
நீடு வாழ்ந்து…
ஒப்பற்ற ஆளுமையில்
புகழ் பெற வேண்டுமென்று
நெஞ்சார வாழ்த்துகின்றேன்…!

navajothybaylon@hotmail.co.uk
நன்றி : பதிவுகள் 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates