Headlines News :
முகப்பு » » இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு -லெனின் மதிவானம்

இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு -லெனின் மதிவானம்

புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka  என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
 
 நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை  கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் - இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் - அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி  கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து தமிழ் மொழிகள் பற்றி உரையாற்றிய எஸ். ஜோதிலிங்கம்(திரு சிவகுருநாதன் சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்தார். இன முரண்பாட்டை தீர்ப்பதில் இடதுசாரி இயக்கங்கள் வகித்த பங்கு குறித்துக் குறிப்பிட்டார். தமிழ் இளைஞர் இயக்கங்கள் எவ்வாறு இடதுசாரிப் போக்கிலிருந்து அந்நியப்பட்டதாக மாறியிருந்தது என்பன குறித்து உரையாற்றிய அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் நவ சமசமாஜக்கட்சி ஒன்றே நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்படுகிற ஒரே கட்சி  எனவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மட்டுமே ஒரே ஒரு இடதுசாரித் தலைவர் எனவும் குறிப்பிட்டார். இக் கூற்று விமர்சனத்திற்குரியதாக சபையை அதிர்ச்சிக் கொள்ளச் செய்தது. திரு ஜோதிலிங்கத்துடன்   தொலைபேசியில் கதைத்தபோது இனமுரண்பாடுகள் குறித்தும் இன்று வரையில் பேரினவாத செயற்பாடுகள் எல்லையை தாண்டி எவ்வாறு முன் நிறுத்தப்;பட்டு வருகின்றது என்பன குறித்த உங்களின் பார்வை முக்கியமானது என்றும் குறிபிட்டேன்.  மேலும்; நவ சமசமாஜக் கட்சி பற்றியும் தோழர் விக்கிரமபாகு  பற்றியதுமான  உங்களது பார்வை அகவயமானது எனக்கு குறிப்பிட்டபோது அவ்விமர்சனத்துடன்  உடன்படுவதாகவே   குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய விக்கிரமபாகு  கருணாரத்ண தமதுரையில்  இலங்கை சமூகத்தில் இருந்த ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் இடதுசாரி இயக்கங்கள் தோன்றுவதற்கு ஏதுவான காரணியாக அமைந்திருந்தன. இடதுசாரி இயக்கத்தின் தாக்கத்தினால், செல்வாக்கினால் தான் இந்நாட்டில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன என்பதையும் குறிப்பிட்டார். இந்நாட்டில் குமிழ்விட்டு மேற்கிளம்பிய இனவாதமானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதாக அமைந்திருந்தது. எனவே இதற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.  இவ்வகையில் தமிழர்களினதும் இந்நாட்டில் வாழ்கின்ற அடக்கியொடுக்கப்பட்ட மக்களினதும் உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்ற ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போர் குணம் கொண்டுள்ள யாவருடனும் நாங்கள் ஐக்கியப்பட்டு போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
 
தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின்  கருத்துக்களை  தொடர்ந்து அவதானித்து வருகின்றவன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைத் தொடர்பில் முக்கியமான விடயம் ஒன்றினை இவ்விடத்தில் குறித்துக்காட்டுவது அவசியமானதொன்றாகின்றது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தீவிர குரல் கொடுத்து வருகின்ற அவர் - அதனை சிங்கள மக்களில் இருந்து அந்நியப்பட்ட கருத்தாகவே கூறி வருகின்றார். பெரும்பாலான சிங்கள மக்கள் இனவாத்திற்குள் (தமிழர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்) மூழ்கி வருகின்ற இன்றைய சூழலில் தமிழர்களின் நியாயமான உரிமைகள் குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது சிங்கள புத்திஜீவிகளின் கடமையாகும். இந்த வரலாற்றுப் பணி எந்தளவு நிறைவேறுகிறது என்பது முக்கியமான கேள்விதான். தோழர் விக்கிரமபாகுவும் இது விடயத்தில் போதிய அக்கறையெடுத்திருப்பதாக தெரியவில்லை.
 
இந்நூல் நவ சமசமாஜ கட்சி குறித்தும் அதன் தலைவர்கள் குறித்துமான தகவல்களை வெளிக் கொணர்வதாக அமைந்திருக்கின்றது. இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் பொதுவான போக்கு மார்க்சிய அரசியலாக இருந்து வந்துள்ளது என்ற போதினும் இயக்க தன்மையில் இருவிதமான போக்குகள் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். ஒன்று ட்ரெக்ஸிச தத்துவத்தை பின்பற்றிய போக்கு மற்றொன்று, மார்க்சிய லெனினிசத்தின் பின்னணியில் அதன் வளர்ச்சிப் போக்கினை பின்பற்றியதாக பிரகடனப்படுத்திக் கொண்ட கம்ய+னிஸ்ட் இயக்கம். இந்நிலையில் இந்நூலாசிரியர் நவ சமசமாஜக்கட்சியை மட்டும் இடதுசாரி இயக்கமாக கருதியதாலோ என்னவோ இந்நூலுக்கும் ~இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு| என தலைப்பிட்டிருக்கின்றார். நூல் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நோக்கினால் இலங்கையில் நவ சமசமாஜக் கட்சி வரலாறு என தலைப்பிட்டிருப்பின் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என சொல்லத் தோன்றுகின்றது. இந்நூலில் இழையோடுகின்ற தகவல்கள் நூலாசிரியரின் அகச் சார்பான பார்வைகளுக்கு அப்பால் இடதுசாரித் தலைவர்கள் குறித்த பல செய்திகளை வெளிக்கொணர்கின்றது. அவ்வகையில் இந்நூல் கவனிப்பிற்குரியதொன்றாகும்.
 
இவ்விடத்தில் முக்கியமானதொரு செய்தியைக் கூற வேண்டியுள்ளது. இடதுசாரி இயக்கம் குறித்த ஆய்வுகளை ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது அது மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஒன்று இடதுசாரிக்கு எதிரானவர்கள் இவ்வியக்கங்கள் குறித்த பல அவதூறுகளை பரப்பி வருவதைக் காணலாம். இடதுசாரி இயக்க வரலாற்றில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளை மிகைப்படுத்தியும் இவ்வியக்க வரலாற்றை சிறுமைப்படுத்த முனைந்துள்ளனர்.  இன்றைய உலக மயமாதல் சூழலில் பழைய இடதுசாரிகளைக் கொண்டும் அல்லது சிலர் இடதுசாரிகள் போன்று பாசாங்கு செய்தும் அவ்வரலாற்றைப் பிழையாகக் காட்டுவதிலும் அவ்வியக்கம் காலாவதியாகிவிட்டது எனக் காட்டுவதிலும் முனைந்துள்ளனர். இவர்களின் பின்னணியில் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் உள்ளன. இரண்டாவதாக இடதுசாரி இயக்க வரலாற்றை தமது அணி சார்ந்து அல்லது தான் சார்ந்து எழுத முனைகின்றபோக்கு. தங்களை தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், புரட்சியின் புனிதர்களாகவும் காட்ட முனைகின்ற போக்கு இடதுசாரி இயக்கத்தின் செயற்பாடுகளை பின்னடையச் செய்துள்ளன. சாதனைகள் மிகுந்த கடந்த காலத்தை புகழ்ந்து எதிர்காலம் குறித்த குழப்பமான சிந்தனைகளை வெளியிடுவதாகவும் இவ்வாய்வுகள் ஆய்வுகள் காணப்படுகின்றன. மூத்த சில இடதுசாரி தோழர்களில் கூட இந்த பலவீனம் காணப்படுகின்றது. மூன்றாவதாக இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி குறித்து விமர்சனம் சுய விமர்சனத்தின் அடிப்படையில் நோக்கி எதிர்காலவியலை உருவாக்க முனைதல். இலங்கையில் இடதுசாரி இயக்கம் தற்காலிக பின்னடைவை அடைந்துள்ள சூழலில் அதனை மீண்டும் புணரமைப்பதற்கான தருணத்தை நோக்கிய ஆய்வுகளாக அவை காணப்படுகின்றமை பலமான அம்சமாகும்.
 
பரந்துபட்ட அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என்பவர் குறித்த உருவாக்கம், குறிக்கோள், வளர்ச்சி, பலம், பலவீனம், வெற்றி, தோல்வி என்பன குறித்த காத்திரமான ஆய்வுகள் வெளிவரNவுண்டியது காலத்தின் தேவையாகும். யாவற்றிற்கும் மேலாக, நமது சூழலில் ஐரோப்பிய மார்க்சிய சிந்தனைகளை அப்படியே நகலெடுப்பதற்கு பதிலாக நமது பண்பாட்டு சூழலுக்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை பிரயோகிப்பதற்கான ஆய்வுகள் அவசியமானவையாகின்றன. இவ்வாய்வுகள்; எண்ணிக்கையில் குறைவுற்றிருந்தாலும் அவை நமது சிந்தனைகளில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.
 
இத்தகைய ஆய்வுகளே இன்றைய தேவையாகவுள்ளது.

வெளியீடு:- Oswin Workers' School
   143, Kew Road, Colombo - 02. 
தொலைபேசி - 0112430621
Share this post :

+ comments + 1 comments

Good text

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates