Headlines News :
முகப்பு » , » ‘அறுவடைக் கனவுகள் ‘நாவல் மீதான எனது வாசிப்பு மனநிலை - அசுரா

‘அறுவடைக் கனவுகள் ‘நாவல் மீதான எனது வாசிப்பு மனநிலை - அசுரா

நேர்காணல் :மா.பாலசிங்கம் (மா.பா.சி)


16-02-2014 அன்று ‘வாசிப்பு மனநிலை விவாதம்-10′ இல் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

வாசிப்பிற்கான ஆர்வம் என்பது பன்மைத்துவம் கொண்ட ஒரு அனுபவமாகவே இருக்கும். அதாவது ஒரு படைப்பின் மீதான ஆர்வம் என்பது வாசகனின் மனநிலை சார்ந்தே இயங்குகின்றது. வாசிப்பு மனநிலை என்பது ஒரு படைப்பின் அழகியலை மையமாகக் கொண்டு இயங்கலாம். கருத்தியல் இலட்சியவாதத் தீர்வுகாணும் மனநிலையில் இருந்து இயங்கலாம். யதார்த்த விருப்பு நிலையில் இருந்து இயங்கலாம். புனைவுத் தளங்களுக்கு வசப்படும் மன நிலையிலிருந்து இயங்கலாம். பிறிதொரு சமூக பண்பாட்டு கலாசார விழுமியங்களை அறியும் ஆவலுடனும் இயங்கலாம். இவ்வாறாக வாசிப்பு மனநிலை என்பது பன்முகத் தன்மைகளில் இயங்கக்கூடிய வெளிகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

ஒரு தேர்ந்த படைப்பாளி என்பவன் தனது படைப்பிற்காக பல்வேறு உத்திகளை (Technic) கையாள்வது போலவே வாசகப் பயிற்சிக்கும் பல்வேறு உத்திகளை கையாள வேண்டும் என்பது எனது அனுபவமாக இருக்கின்றது. அல் அஸூமத்  அவர்களின் ‘அறுவடைக் கனவுகள்’ எனும் நாவலை வாசிக்கும் போது எமக்கு அந்நியமான ஒரு சமூகத்தையும், அதன் பண்பாட்டுப் பொருளாதார அம்சங்களை அறியும் ஆவலின் ஊடாகவுமே இந்த நாவலை நாம் முழுமையாக உள்வாங்கமுடியும். அதுமட்டுமல்லாது இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியை புரிந்து கொள்வதற்கும் வாசிப்பிற்குரிய சில உத்திகள் அவசியமானது என்றே நான் கருதுகின்றேன். தேயிலைத் தோட்டத்து தொழிலாளர்கள் பேசுகின்ற தொழில் சார்ந்த  மொழிகள் அதிகமாக ஆங்கில சொற்களை மலையகத் தமிழ் மொழியில் உச்சரித்து அதுவே தமிழ் மொழியாகவும் பழகிப்போன இயல்பைக் காணலாம். இந்த நாவலின் வாசிப்பு உத்தி குறித்து இந் நாவலுக்கு அணிந்துரை எழுதிய தெளிவத்தை ஜோசப் அவரகள் இவ்வாறு கூறுகின்றார். “வாசித்துக்கொண்டே போகவும், பிறகு நிறுத்திவிட்டு அல் அஸீமத் என்ன சொல்ல முனைகின்றார் என்று யோசிக்கவும், மெய்மறந்து சிரிக்கவும் என்று தொடர்வது இந்த வாசிப்பு” இவ்வாறு மலையக எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கே இந்த நாவலுக்கான வாசிப்புத் ‘தரிப்பு உத்திகள்’ தேவைப்படும்போது. அச் சமூகத்தைப்பற்றி அறியும் ஆவலுடன் வாசிக்கும் ஒரு வாசகனுக்கு சில மேலதிக வாசிப்பு உத்திகள் தேவைப்படுது இயல்பானதே. அதில் பிரதானமானதாக நான் கருதுவது எவ்விதமான முன் அனுமானக் கருத்தியல் ‘அபிலாசைகளுடன்’ ஒரு பிரதிக்குள் நுழையாது, பிரதிக்குள் நுழைந்த பிற்பாடு எவ்வாறு எமது எண்ணங்களை, இரசனைகளை மாற்றிக்கொள்வது என்பதுவும் ஒரு அவசியமான வாசிப்பு உத்தியாகவே நான் கருதுகின்றேன்.

உதாரணத்திற்கு அண்மையில் தனது ‘தங்கரேகை’ எனும் சிறுகதைக்கு ஷோபாசக்தி பயன்படுத்திய உத்தியை அக்கதையின் முடிவில் அவதானித்திருப்பீர்கள். சொற்களை சிக்காக்கி இறுக்கப்பட்ட சில முடிச்சுகளாக அமைந்திருக்கும் இறுதிப்பந்தி. இந்த சிக்குகளை குலைத்து முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு வாசகர்களால் முடியும். குலைத்து அவிழ்க்க முடியாது போனாலும். சிக்குகளை அறுத்தும் அவிழ்க்க முடியும். புலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் போன்ற  அடையாளத்துடனோ, அல்லது ஷோபாசக்த்தியின் அரசியல் மீதான விமர்சனங்களுடனோ கதைக்குள் நுழைந்தால் முடிச்சை அவிழ்க்கமுடியாது. ‘தங்கரேகையின்’ கதை மாந்தர்களான வேலும் மயிலும், பமு, புனிதவதி, கல்கி, அத்துடன் சிந்தாமணி பேக்கரி என அனைத்தையும் நேர் கோட்டில் இழுத்து வைத்து நிதானிக்கும்போது வாசகனின் போக்கில் முடிச்சு அவிழும். முடியாது போனால் அறுத்தும் கதையை முடியலாம். இதைத்தான வாசகனுக்குரிய உத்தியாக நான் கருதுவது. ஷோபாசக்திக்கு உகந்த வகையில்தான் நாம் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்றில்லை. எமக்கு வளமான போக்கில் சிக்கலை குலைக்க முடியும். இதைத்தான் வாசக உத்தி என நான் கூறுவது.

ஆரம்பத்தில் அல் அஸூமத் அவர்கள் ஒரு கவிஞனாகவே அறியப்பட்டிருக்கின்றார். அவர் பல சிங்கள கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தவராகவும் நான் அறிந்து கொண்டேன். மேலும் அவர் குறித்த மேலதிகமான அறிமுகத்தை தனது அணிந்துரையில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்.

இந்த நாவல் மீதான எனது வாசிப்பு ஆர்வம் என்பது அழகியல், உருவகம், புனைவு போன்ற கலைத்துவப் படைப்பாற்றல் பண்புகளால் ஆனது அல்ல. மலையக சமூகத்தின் வாழ்வியலை, அவர்களின் பண்பாட்டு கலாசார அம்சங்களை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலினால் மேலெழுந்த ஒன்றாகும்.

“1984ஆம் ஆண்டில் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்த ‘அறுவடைக் கனவுகள்’ செப்பனிடப்பட்டு இப்போது நூலாகி உங்கள் கரங்களில் மிளிர்கிறது. இது கதை அல்ல. ஒரு வரலாற்றுச் சம்பவம். மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் 20ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியின் முன்னும் பின்னும் நடந்த வரலாற்றின் ஒரு துளியாகும். இதைப் படித்து முடித்தவுடன் ‘நல்ல கதை’ என்று சொல்வீர்களோ, ‘பரவாயில்லை’ என்று சொல்வீர்களோ அஃதல்ல இங்கே முக்கியம்.இதை வரலாறுதான் என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டீர்களானால் அதுவே இந்நூலின் வெற்றியாகும்.” என்பதாக இந் நூலாசிரியர் வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார்.

இந்த நாவலின் பிரதானமான உள்ளடக்கம் என்பது தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் சுப்பர்வைசர் எனும் மேற்பார்வையாளரின் தோட்டத்து வாழ்க்கை முறையை மையமாகவும், தேயிலைத் தோட்டத்து வேலை முறைகள், தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள், மேலதிகாரிகள் போன்ற தொழில் நிர்வாக முறைகளை ஆழமான புரிதலுக்கு உட்படுத்தும் வகையிலும் சித்தரிக்கப்பட்ட ஒரு நாவலாகும்.

-கதைச் சுருக்கம்-

மாத்தளையிலுள்ள ‘சுதுகங்க’ எனும் எஸ்டேட்டில் வசிக்கும் கேரளத்து நாயர் வம்சத்துக் குடும்பத்தின் மூத்த புதல்வனான வேலாயுதம் என்பவரே இந்நாவலின் கதைசொல்லியும் பிரதான பாத்திரமும் ஆகும். றப்பர் தோட்டத்துக் கூலியாக வந்தவர் இவரது தகப்பனார். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் அக்கறைகொண்டவர்களாக இருப்பதன் காரணமாக வேலாயுதம் அவர்களும் கல்விபெறும் வாய்ப்பை அடைகின்றார். இவர் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் எழுத்தாளராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார். இருப்பினும் நிரந்தரமான வேலையற்றவராகவும் தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியராகவும் சிறுதுகாலம் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.

இருந்தபோதும் நிரந்தரமான வேலை இல்லாத காரணத்தால் வேலாயுதத்திற்கும் அவரது தந்தையாருக்கும் இடையில் முரண்பாடு முற்றுகின்றது. வேலாயுதத்தின் கல்வியில் அக்கறையாக இருந்த றப்பர் தோட்டத்து கணக்குப்பிள்ளை ‘பாட்டா’ என்பவரின் மகனான செல்வமணியின் செல்வாக்கை பயன்படுத்தி வேலை பெறுவதற்காக அவரது ஊருக்கு வருகின்றார்.

செல்வமணியின் உதவியூடாக பல்வேறு சிபாரிசுகளுடன் மலையக தோட்டத்து ஆசிரிய வேலைக்கான நேர்முகப் பரீட்சைக்கு சென்றபோது பிரஜாஉரிமை இல்லாத காரணத்தைக் கூறி அவ்வேலைக்கு தகுதியற்றவராக கணிக்கப்படுகின்றார். செல்வமணி என்பவர் தோட்டத்துக் கண்டாக்டர். கண்டாக்டர் என்னும் பதவியே ஆரம்பத்தில் பல்வேறு அதிகாரங்களையும் கொண்ட ஒரு பதவியாக இருந்திருக்கின்றது. தோட்டத்தின் வெள்ளைக்கார முகாமையாளருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் கண்டாக்டர் எனப்படுபவர்.

இந்தக் கண்டாக்டர் செல்வமணியின் நண்பராக இருப்பவர் பாறைக்காட்டு தோட்டத்திற்கு முகாமையாளராக இருக்கும் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வைட்’ எனும் வெள்ளைக்காரத் துரை. செல்வமணி அவர்களே வைட் எனும் வெள்ளைக்காரருக்கும் தேயிலைத் தோட்டத்து வேலைகளை பயிற்றுவித்தவர். எனவே வேலை தெரியாதவர்களாக இருப்பினும் செல்வமணியினால் உத்தியோகத்திற்கான சிபாரிசில் வரும் அனைவரையும் வைட் துரை வேலையில் நியமிப்பதுவும் வழமையாக இருந்து வந்தது.

நாவலின் பிரதான பாத்திரமான வேலாயுதம் ஆறுமாதமாக வேலைக்காக செல்வமணியின் வீட்டில் தங்கியிருந்த போது ஒரு நாள் வைட் துரையிடமிருந்து செல்வமணிக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவரது நிர்வாகத்திலுள்ள பாறைக்காட்டு தோட்டத்து சிங்கமலை டிவிசனுக்கு ஒரு சுப்பர்வைசர் தேவைப்படுவதாக அவ்வுரையாடலில் தெரிவிக்கப்படுகின்றது. தன்னிடம் ஒரு படித்த ஆங்கிலம் பேசக்கூடிய நேர்மையான ஒருவர் இருப்பதாகவும், அவரை அந்த வேலைக்கு தான் அனுப்புவதாகவும் வேலாயுதத்தை மனதில் வைத்து வெள்ளைக்காரத்துரையிடம் செல்வமணி அவர்கள் கூறினார். சிறுவயதில் பாடசாலைக்கு போவதற்கு முன்பாக தனது தகப்பன் வேலைசெய்த றப்பர் தோட்டத்தில் பால்வெட்டிய அனுபவம் மட்டுமே இருந்தது. அதனால் வேலாயுதம் முதலில் தயங்கினார். தனக்கு தேயிலைத் தோட்டத்து வேலை எதுவும் தெரியாதே நான் எப்படி மேற்பார்வையாளனாக பணியாற்றுவதென்று. “அதெல்லெம் பயப்படத்தேவையில்லை நான் அனுப்பிய சோமையா என்பவரே அங்கு கணக்குப்பிள்ளையாக இருக்கின்றார். அவர் வேலை பழக்குவார். அவருக்கும் வைட் துரைக்கும் கடிதம் தருகின்றேன் நீ பயப்படாமல் போ” என அனுப்பிவைக்கின்றார். ஊரிலிருந்து  புறப்பட்டு தலாவாக்கொல்லைக்கு வந்து, அங்கிருந்து ஹட்டனுக்கு வந்து, அங்கிருந்து சாஞ்சி மலையில் வந்திறங்கி, சில மைல் தூரம் கால்நடையாக வந்து…, தான் வேலையில் சேரப்போகும் சிங்கமலை டிவிசனுக்கு வந்து சேர்ந்தார் வேலாயுதம்.

வைட் எனும் வெள்ளைக்காரத் துரையின் மேற்பார்வையிலுள்ள தேயிலைத் தோட்டமானது பாறைக்காட்டு டிவிசன், அல்குல்தென்னை டிவிசன், சிங்கமலை டிவிசன் என மூன்று டிவிசன்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. வைட் துரை வருவதற்கு முன்பாக இந்த மூன்று டிவிசன்களும் மிகவும் நஸ்டத்திலேயே இயங்கி வந்திருக்கின்றது.  வைட்  இன் நிர்வாகமும், நேர்மையும்,கண்டிப்பும் அத்துடன் அவரது கருணையும் காரணமாக தோட்டம் மிக இலாபத்தில் இயங்கி வருகின்றது. சிங்கமலையில் சுப்பர்வைசராக நியமிக்கப்பட்டு, சோமையா என்ற கணக்குப்பிள்ளையின் உதவியாலும், தாண்டவராயன் எனும் சுப்பர்வைசரின் உதவியாலும் வேலை பழகி வெள்ளைக்காரத் துரையின் நம்பிக்கைக்கு உள்ளானவராகவும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுகின்றார் வேலாயுதம் எனும் மேற்பார்வையாளர்.

இடும்பன் என்ற கண்டாக்டர் எனும் பாத்திரம் எதிர்மறையான பாத்திரமாக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இடும்பன் சுயநலவாதியாகவும், அதிகார துஸ்பிரயோகம் செய்பவராகவும் இருந்து வருகின்றார். இடும்பனுக்கு ஆதரவாக சில கங்காணிமாரும், சுப்பர்வைசர் சிலரும் செயல்பட்டும் வருகின்றார்கள். அதில் ஒருவர் தொழிற்சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். அதன் காரணமாக அவர்கள் மீது மிக கண்டிப்புடன் செயல்படுகின்றார் வெள்ளைக்காரத் துரை அவர்கள். அல்குல்தென்னை எனும் டிவிசனில் வேலை செய்பவர்கள்தான் மேற்படியான எதிர்மறைப் பாத்திரங்கள். இந்த நாவலில் வெள்ளைக்காரத் துரைக்கும் இடும்பனுக்குமான உறவு மிக சுவையான சித்தரிப்பு. இந்த எதிர் மறைப் பாத்திரங்களால்  வைட் இற்கு எதிரான கொலை முயற்சிகளும் மேற்கொள்ப்பட்டிருக்கின்றது. தொல்லை தாங்காது இடும்பனை தனது தோட்டத்தில் வேலைசெய்யாது வேறு தோட்டத்திற்கு போகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார். இடும்பனும் தான் வேறு தோட்டத்திற்கு போகின்றேன் அங்கு சேர்வதற்கான சிபாரிசுக் கடிதங்கள் தரவேண்டுமென கேட்டபோது, இவன் போய்த்தொலைந்தால் போதும் என்ற நோக்கத்தில் இடும்பனைப்பற்றிய நற்சான்றிதழ்கள் பலவற்றை கொடுத்திருக்கின்றார். அவற்றை பெற்றுக்கொண்ட இடும்பன் வேலைதேடிப் போகவில்லை. இவரால் அவனை வேலையை விட்டும் நீக்கமுடியவில்லை. தானே நற்சான்று வழங்கிய ஒருவனை எப்படி வேலையை விட்டு நீக்குவது என்ற சிக்கலால் இடும்பனை வேலையை விட்டு நீக்க முடியாது போனாலும் நீ வேலையே செய்ய வேண்டாம் என்று தடுத்துவிட்டார். இடும்பன் மோட்டார் சையிக்கிளில் சுற்றித்திரிவதும் தனக்கு சாதகமானவர்களுடன் சேர்ந்து தீங்கு இழைப்பவனாகவும் இருக்கின்றான்.

வைட் துரையின் நிர்வாகத்தின்கீழ்  கடைமை உணர்வோடு வேலைசெய்பவர்களாக சில நேர்மறைப்பாத்திரங்களும், இடும்பனின் அதிகாரதுஸ்பிரயோகங்களுக்கு சாதகமானவர்களாக சில எதிர்மறைப் பாத்திரங்களும் சித்திரிக்ப்படுகின்றது. வைட் நிர்வாகத்தின் விசுவாசத்திற்கு உகந்த பாத்திரமான வேலாயுதம் எனும் சுப்பர்வைசரின் அவலத்தை வெளிப்படுத்தும் நோக்கமே இந்நாவலின் பிரதான நோக்கமாகும்.

வேலாயுதத்தின் தம்பி குட்டப்பனும் சிங்கமலையில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றார். சுப்பர்வைசரான வேலாயுதம் இடும்பனுக்கு சாதகமான தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருவதால் கந்தையா (தொழிற்சங்கத் தலைவர்) மற்றும் கங்காணிகளான தங்கையா, கணபதி போன்றவர்களால் வேலாயுதமும் தாண்டவராயனும் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். அவர்களது குவாட்டர்சில் தராசு, படி போன்றவற்றை களவெடுப்பது. இரவு நேரம் அவர்களது குவாட்டர்சிற்கு கல்லெறிந்து கொலை மிரட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றது.

சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரஜா உரிமைச் சட்டம் அமுல்படுத்தியபோது வேலாயுதத்திற்கு விருப்பம் இல்லாதுவிட்டாலும் தகப்பனின் விருப்பத்திற்காக வேலாயுதமும் அவர்களது குடும்பமும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு பதிவு செய்கின்றார்கள். தாண்டவராயன் இலங்கைப் பிரஜா உரிமைக்காக பதிவு செய்கின்றார்.

வைட் துரையின் கண்காணிப்பில் பாறைக்காட்டு குறூப் தோட்டம் நல்ல இலாபத்தில் இயங்குவதால் நஸ்டத்துடன் இயங்கும் வேறு ஒரு தோட்டத்தை பொறுப்பேற்கும்படி  தோட்டக் கெம்பனி நிர்வாகம் கேட்டபோது. அதை மறுத்து வைட் துரை இலங்கையைவிட்டு ஆஸ்ரேலியாவிற்கு திரும்புகின்றார். அவருக்கு மாற்றாக அயர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மேசன் என்பவர் புதிய துரையாக வருகின்றார். அவர் ஒரு அதிகார துஸ்பிரயோகியாகவும், இடும்பனின் செல்வாக்கு தோட்டத்தில் மேலோங்குவதாகவும் நிலமை மாற்றமடைகின்றது. தோட்டத்தில் கொழுந்துகள் அற்றுப்போவதும், தொழிலாளர்களுக்கான வேலைகள் குறைந்து போவதுமாக நிறைவை நெருங்குகின்றது நாவல். வேலாயுதம் தோட்ட வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களின் பின்பு இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவேறியபோது. தனது வேலையை இராஜினமா செய்கின்றார். இடும்பனும் கொல்லப்படுகின்றான். இறுதியாக சுப்பர்வைசர் வேலாயுதம் இந்தியா செல்வதற்காக தோட்டத்திலுள்ளவர்களிடம் மனம் உருகி விடைபெற்று செல்வதோடு நாவல் நிறைவடைகின்றது.

இப்போது இந்த நாவலூடாக நான் பெற்ற அனுபவத்தையும் எனது சில எதிர்பார்ப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

வெள்ளைக்காரத் துரையாக வரும் வைட் என்பவர்  பேசுவது தமிழ். ஆங்கிலம் தெரிந்தவர்களையும் தமிழில் பேசுமாறே வற்புறுத்துவார். அவர் பேசும் தமிழை தோட்டத்தில் வேலை செய்பவர்களால் மட்டுமே தெளிவாக புரிந்து கொள்ள முடியும். தோட்டத்து வாழ்வோடு அனுபவம் இல்லாதவர்களுக்கு அது மிக சிரமமாகவே இருக்கும். “அவன் வெரட்… தேய்லே கன் வீஸ்னான்! குலி பாத் போட இல்லை. மேலே பாத் குலி வீஸ்னான்! என்டே கன் நசாம்! வெரட் போட்! ஒம்பது மனி! கேஸ் போட்! கன்க்குபுல்லேக்கி சொல்!” ‘அவன விரட்டு, குழியிக்குள் போட்டு புதைப்பதற்கில்லை. தேயிலைக் கண்டு வைச்சனான் குழியிக்குள்ள நடுவதற்கு. என்ர கண்டு நாசம். ஒன்பது மணிக்கு விரட்டியது என்று கேஸ் போட்டதாக கணக்குப்பிள்ளையிடம் சொல்லு’ என்பதுதான் வெள்ளைக்காரத் துரை பேசிய தமிழின் அர்த்தமாக நான் புரிந்துகொண்டேன். இதுபோன்ற தருணங்களில் எமக்கு நிதானமான வாசிப்பின் தேவை இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இவ்வாறு வெள்ளைக்காரத் துரை தமிழ் பேசினாலும் மலையக மக்களுக்கு எந்தவித சிரமும் இருப்பதில்லை. தோட்டங்களுக்கு நியமிக்கப்படும் துரைமார்கள் இலங்கையர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலை மாறியபோது, எமது யாழ்ப்பாணத்து தமிழர்களும் தேயிலைத் தோட்டங்களுக்கு துரைமார்களாக  நியமிக்கப்பட்டனர்!!

“அம்மா என்று தமிழ்த் துரையின் மகன் கூறிவிட, பதறிப் போன துரை தத்தக்கா புத்தக்கா என்று நடக்கமுடியாத அந்த சிசுவைக் கூட்டிக்கொண்டு நடைபயின்றார். பிள்ளை மடுவத்தை தாண்டுகையில், பால் குடித்துக்கொண்டிருந்த சிசுவைப் ‘பரக்’ என்று இழுத்துப் போட்டுவிட்டு, ரவிக்கை விளிம்பில் அலுப்பினாத்தியைக் குத்தியபடி மலையை நோக்கி ஓடும் அந்தத் தாயைப் பார்த்து ‘அம்மா’ என்று அழுத குழந்தையை துரை (யபழ்ப்பாணத் துரை-அசுரா) தன்னுடைய சிசுவிற்குச் சுட்டிக்காட்டி’ you see it is their language. Thesse laboures language. You must say mummy.” இவை ‘மனம் வெளுக்க’ எனும் தெளிவத்தை யோசப் ஐயாவின் குறுநாவலில் வருகின்ற ஒரு சம்பவம். பின்பு வரும் யாழ்ப்பாணத் தமிழ்த் துரைக்கு மலையகத் தமிழ், கூலிகளின் தீண்டாமை மொழியாக இருந்திருக்கின்றது.  ‘அறுவடைக் கனவுகள்’ நாவலில் வரும் வைட் துரை பேசிய தமிழ் மொழியை மலையக மக்கள் புரிந்து கொள்வதோடு அதைக்கொண்டாடியும் இருப்பார்கள்.

இந்த ‘அறுவடைக் கனவுகள்’  நாவலில் வரும் தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்த தகவல்கள் எனது ‘தற்போதைய’ கருத்தியல் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் சம்பவமாக கருதுகின்றேன். தொழிற்சங்கங்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கான சிந்தனைகள், கோட்பாடுகள் யாவும் நிறுவனங்களாகவும், அமைப்பாக்க முறைமைகளாகவும் செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது. இவை தனிமனித ஆற்றல்களையோ, தனிமனித அதிகார உறவுகளையோ (கணவன் மனைவிக்கிடையில், சகோதர உறவக்கிடையில், நட்புக்கிடையில்,சமூக கலாசார உறவுகளுக்கிடையில், பதவி-பொருள்-புகழ்  etc…etc. ) சார்ந்து இயங்குபவை அல்ல. இப்படிக் கூறுவதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கருத்தியல் சிந்தனைகள், கோட்பாடுகள், நிறுவனங்கள் அவசியம் அற்றது என்ற முடிவுக்கு நான் வந்ததாக கருதவேண்டாம். அவை மிக அவசியமானதாகவும் உள்ளது. இருப்பினும் அவைகளை ஒரு புனிதப் பொருளாக கொண்டாடும் போது ஏற்படும் விளைவுகளையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாவலில் வெள்ளைக்காரத் துரைக்கு ஆதரவாக செயல்படும் உத்தியோகத்தவர்களுக்கும். தீயவனாகவும், அதிகார துஸ்பிரயோகம் செய்யும் இடும்பன் என்ற பாத்திரத்திற்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர்களுக்கும் இடையில் தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியாக அமைந்திருக்கின்றது. வெள்ளைக்காரத் துரை மிகவும் நல்லவராகவும், தொழிலாளர்களுக்கு தொடந்து வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையிலான நல்ல திட்டங்களை மேற்கொள்பராக சித்தரிக்கப்படுகின்றார்.

“சோம்பேறித்தனமாக ஆட்சி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு, வைட் துரையின் கண்டிப்பும் சுறுசுறுப்பும் பிடிக்கவில்லை.

தொழிலாளர்களுக்குப் பிடிக்காமல் போனதால் தொழிற்சங்களுக்கும் பிடிக்கவில்லை! அபாண்டங்கள், கோஷங்கள், துவே ஷப் பெட்டிஷன்கள், வேலைநிறுத்தங்கள், தாக்குதல்கள், கொலை முயற்சிகள் போன்ற தொழிலாளர்களின் அல்லது தொழிற் சங்கங்களின் பலதரப்பட்ட ஆயுதங்கள் மழுங்கிப் போயின. வைட்டின் இடமாற்றங்களுக்கும் விரட்டல்களுக்கும் கடின வேலைகளுக்கும் கருவறுத்தல்களுக்கும் முன்னால்! சாணைக் கற்களுக்கு முன்னால் என்று கூடச் சொல்லலாம்!

சோம்பேறிகளும் பொய்யர்களும் களவாணிகளும் பந்தக்காரர்களும் ஆயுள் தண்டனை அடைந்தார்கள்! தொழிலாளியாக இருந்தாலும் உத்தியோகத்தனாக இருந்தாலும் தண்டனை தண்டனைதான!

அதே நேரம், உழைப்பாளிகளும் நேர்மையாளிகளும் அவரால் நேசிக்கப்பட்டார்கள். வைட்டின் நிர்வாக இரகசியம் அதுவாகத்தான் இருந்தது.” (54)

என்பதாக தொழிற்சங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் விபரிக்கப்பட்டிருக்கின்றது. இதில் தொழிற் சங்கத்தை குறை கூறுவதற்கில்லை. தொழிற் சங்கம் என்பது தொழிலாளர்கள் எனும் தொகுப்பை, அதன் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதற்கு இடும்பன் எனும் தனிமனிதனின் இயல்புகள், அவனது மனநிலை குறித்தெல்லாம் அக்கறை இல்லை. அவினிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படுகின்றது. தொழிற்சங்கத்திற்கு மனித ஆன்மா இல்லை, அன்பு-கருணை இல்லை. வைட் துரை இடும்பனுக்கு கொடுத்த நற்சான்றுப் பத்திரங்களின் அடிப்படையில் தொழிற்சங்கம் செயல்படுவதையும் நாவல் விபரித்திருக்கின்றது.

வெள்ளைக்காரத் துரை என்பவர்கள் எல்லோரும் நல்லவராக இருப்பார்கள் என்றும் இல்லை.

“ஒரு ராஜா போன்றவர் தோட்டத்துக்குத் துரை!

வேலைக்காரர்களின் சிற்றறைகளையும் குசுனி குளியல் அறைகளையும் சேர்க்காமல் பதினெட்டு அறைகள் கொண்டது அந்த பங்களா!

வசிப்பவர்கள் துரையும் அவருடைய மனைவியுமே. பிள்ளைகள் லண்டனில் படிக்கின்றனர்.

பங்களாவின் பூந்தோட்டத்தில் எல்லாவிதமான பூஞ்செடிகளும் இருக்கின்றன. கண்டிப் பூந்தோட்டத்துக்குக் கூட தன் பங்களாவில் இருந்து பூங்கன்றுகள் அனுப்பியுள்ளார் துரை.” (‘ஞாயிறு வந்தது’ குறுநாவல்-தெளிவத்தை ஜோசப்)

இவ்வாறுதான் துரைமார்களின் நிலை இருந்திருக்கின்றது. வைட் துரை என்பவர் விதிவிலக்காக அமைந்திருக்கலாம்.

இந்நாவலின் பிரதான நோக்கமாக இருப்பது தேயிலைத் தோட்டத்தில் உத்தியோகத்தர்களாக பணிபுரியும் சுப்பர்வைசர் என்பவர்கள் மீதான அனுதாபத்தை வாசகர்களிடம் எதிர்பார்ப்பதாகவே நான் உணருகின்றேன். “ஒரு அப்பாவிப் பரம்பரைதான் இந்த சுப்பர்வைசர் பரம்பரை. அப்பாவிகள் என்று ஏன் சொன்னேன்? எஸ்டேட் ஸ்டாஃப்ப்ஸ் என்னும் தோட்ட உத்தியோகத்தர் பட்டியலுக்குள்ளும் வர முடியாத, தங்களில் ஒருவர் என்று தொழிலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு இரண்டுங்கெட்டான் உத்தியோகம் இது.” என இந்நாவலுக்கான அணிந்துரையில் தெளிவத்தை ஜோசப் பதிவு செய்திருக்கின்றார். இந்த நாவலின் அனுபவத்தால் மட்டுமல்ல தெளிவத்தை ஜோசப் ஐயா அவர்களின் சில நாவல்களை வாசித்த அனுபத்தாலும். தோட்டத்து உத்தியோகத்தவர்கள் துரை மார் அனைவரும் கொழுந்து பறிக்கும் அடிமட்ட மக்களின் நலன்களில் அக்கறை அற்றவர்களாகவே இருந்திருப்பார்கள் எனும் தீர்மானத்திற்கே நாம் வரக்கூடியதாக இருக்கும். இந்த நாவலில் வரும்  வைட் துரை குறித்த சம்பவம் உண்மையாக இருப்பினும் இது ஒரு விதிவிலக்கான சம்பவமாகத்தான் என்னால் கருத முடிகின்றது.

இந்த ‘அறுவடைக் கனவுகள்’ நாவலில் வரும் பாத்திரமான ஒரு கொழுந்து பறிக்கும் பெண்தொழிலாளி தனது கதையை எழுதுவாரேயாயின் இந்த நாவலில் வரும் வேலாயுதத்தின் கதி என்னவாகும்! இந்த நாவலில் வரும் சம்பவங்களில் இருந்து வேலாயுதத்தையும் தொழிலாளர்களான கொழுந்து பறிக்கும் பெண்பாத்திரங்களையும் சிந்திக்கின்றபோது. வேலாயுதம் எனும் சுப்பர்வைசரின் மீது எனக்கு எந்த அனுதாபமும் எழவில்லை.

வேலாயுதத்திற்கு பதவி, சம்பளம் போன்ற தகுதிகளைவிட மிகப்பெரிய தகுதி என்ன தெரியமா!! அவர் உயர்ந்த சாதி என்பதே. “நாங்கள் உயர்ந்த சாதியாம். லயத்திலோ தோட்டத்திலோ எங்கே இருந்தாலும் சரி தாழ்ந்த ஜாதிக்காரப் பிள்ளைகளுடன் நாங்கள் விளையாடக் கூடாது! அவர்களோடு குளிக்கப் போக கூடாது! பாடசாலைக்கும் ஒன்றாகப் போய்விடக் கூடாது! யார் வீட்டுக்கும் போய்விடக் கூடாது!” (36) என கதை சொல்லியான வேலாயுதம் அவர்களே சாதியத்தைக் கேள்விக்குட்படுத்தியபோதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிகப்பெரிய தகுதிக்குடையவராகவே பார்க்கப்படுகின்றார்.

“ஸ்டாஃப்மாருக மேஜாதியாக இருந்தாத்தான் லேபஃர்ஸ அடக்க முடியும். இது இன்னைக்கி நேத்து வந்த பழக்கமில்லையே” (42) எனும் விதிமுறை கடைப்பிடிக்கப்படும்போது வேலாயுதத்தை நல்வராகக் காட்டுவது வேடிக்கையாகவும் இருக்கின்றது. உயர்சாதியினரை உத்தியோகத்தில் நியமிப்பது தொழிலாளர்களை அடக்கவும், தொழிலாளர்கள் அடங்கி ஒடுங்குவதற்குமான ஒரு தோட்ட சிஸ்ரமாக சாதியம் முன்னரங்கில் நிற்கும்போது. வேலாயுதம் சாதிய ஒடுக்குமுறையை கேள்விக்குள்ளாக்குபவர் எனும் அடையாளமானது கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவகையில் பயன் உள்ளதாக அமையும். அவர் தொழலாளர்கள் குறித்து அக்கறைகொண்டவராக இருப்பினும்.

வோலாயுதத்திற்கு மாதச் சம்பளம், வேலையில் சேர்ந்து சில மாதங்களிலேயே சமபள உயர்வு, பதிவி உயர்வு! போன்ற சலுகைகள் இருக்கின்றது. செல்லம்மா எனும் தொழிலாளி நேரம் பிந்தி வந்ததால் அவரை லயத்திற்கு திரும்பும்படி விரட்டுகின்றார். அந்த பெண் வேலை தரும் படி இறைஞ்சும்போது “இந்த மல நல்லா இருந்தா நானா கட்டிக்கிட்டுப் போகப் போறன்?… நீங்கதான் சம்பாதிச்சுக் கை நெறய வாங்கப் போறீங்க! நல்ல சம்பளத்தில வேறெங்காய்ச்சும் ஒரு வேல கெடச்சிச்சின்னா நான் பேய்றுவேன்! சரியா..” என்பதாக சுப்பர்வைசரின் வாழ்வாதாரத்திற்குரிய பலமான உரையாடல்களை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்களுக்கோ வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கை என்பது தேயிலைக் கொழுந்து மட்டுமே! ‘கை நெறய’ அவங்களால சம்பாதிக்க எப்படி முடியும். கொழுந்து பறிப்பதில் அவர்கள் படும் பாட்டையும் அவர்கள் எதிர்நோக்கும் அவலங்களையும் அஸூமத் அவர்கள் மிக விரிவா சித்தரித்திருக்கின்றார். கொழுந்து பறிக்கும்போது முத்திய இலைகளை தவிர்க்கவேண்டும். இலைகளை பாதியாக பிக்கக்கூடாது. நெறுக்கும்போது கொழுந்து ஈரமாக இருந்தாலும், கொழுந்து துப்பரவாக இல்லை என கருதினாலும் நிறையை வெட்டுவார்கள். இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகளுடனும் உத்தரவாதமற்ற நிலையிலும் உள்ள தொழிலாளர்களாக இருப்பவர்கள், இந்த கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்கள். தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ‘ஞாயிறு வந்தது’ எனும் குறுநாவலில் வரும் காத்தாயி எனும் பாத்திரத்தினூடாக மலையக பெண்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். தோட்டத் துரை மார்கள், உத்தியோகத்தர்கள், கங்காணி மார்களோடு படும் அவஸ்ததைகளோடு தமது கணவர்களோடு படும் அவஸ்தை மிகக்கொடூரமானதாக இருக்கும்.

இப்படியான எனது அபிப்பிராயத்தை இந்நாவல் மீதான எனது எதிர்மறையான விமர்சனமாக நீங்கள் கருதிவிடவேண்டாம். இக்கதை மாந்தர்களும் சம்பங்களும் ஒரு உண்மை நிகழ்வாக இருக்கலாம். அவற்றை அறிந்து கொள்வதும், அல் அஸூமத் அவர்களின் உரைநடைகளூடான வாசிப்பு அனுபவமும் மிகவும் ஒரு சுவையாகவே இருக்கின்றது. இந்த நாவலூடாக தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையும் தோட்டத்தொழில் துறைசார்ந்த ஒரு முழுமையான சித்திரத்தையும் பதிவு செய்திருக்கின்றார் அஸூமத் அவர்கள். தேயிலைத் தோட்டத்துறை சார்ந்த முழுமையான சித்தரிப்பை நான் உள்வாங்குகின்றபோது தோட்டத் துறை உத்தியோகத்தவர்கள் மீதான உணர்வு பூர்மான கருசனையோ, அனுதாபமோ தோன்றவில்லை என்பதுதான் எனது அனுபவமாக இருக்கின்றது.  இந்நாவலின் கதைசொல்லியாகவும், பிரதான பாத்திரமாகவும் வரும் தேயிலைத்தோட்டத்து உத்தியோகத்தரான வேலாயுதத்திற்கு மாறாக…, கொழுந்து பறிக்கும் ஒரு ‘காத்தாயி’ கதை சொல்லியாகவும் பிரதான பாத்திரமாகவும் சித்தரிக்கும் வகையில் கதை கூறப்பட்டிருப்பின் எப்படியிருக்கும் என்ற எனது கற்பனையின் வெளிப்பாடுதான் இது. இந்த உண்மையை அஸூமத் அவர்களின் ‘அறுவடைக் கனவுள்’ ஊடாகவே நான் வந்தடைந்திருக்கின்றேன். இதுவே நாவலின் மிகபெரிய வெற்றியாகவும் நான் கருதுகின்றேன்.

நான் அண்மையில் இலங்கை சென்று நண்பன் மல்லியப்பு சந்தி திலகருடன் கண்டி, நுவெரெலியா போன்ற தோட்டத்துறை சார்ந்த பிரதேசங்களூடாக பயணித்தேன். அப்போது தேயிலைத்தோட்டங்களும் அதில் வேலைசெய்யும் தொழிலாளர்களும் எனக்கு அழகிய பச்சைப் பசுமையான தோற்றமாகவும், பரவசமான  ஒரு காட்சியாகவுமே தோன்றியது. இந்த ‘அறுவடைக் கனவுகள்’ இன் வாசிப்பு அனுபவத்தின் பிற்பாடுதான் தவமுதல்வன் சொல்வதுபோல் இது பச்சைப் பசுமை அல்ல ’பச்சை இரத்தம்’என்பதை இந்த நாவல் எனக்குணர்த்தியது. இந்த நாவலில் வரும் தொழிற்சொற்கள் சிலவற்றின் அர்த்தம் சரியாக புரியாததால் மல்லியப்பு சந்தி திலகருடன் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்போது நான் அடிக்கடி தேயிலைச் செடி என்ற வார்த்தையை உபயோகித்தபோது, “மச்சி நீ முதலில் தேயிலை செடி என்று சொல்வதை நிப்பாட்டு! அதுசெடி அல்ல அது மிகப் பெரிய நீண்ட நெடிய மரம். அதனது சக்தியும், அதனது சுயமும், அதனது வீரியமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்தும் அழிக்கப்பட்டும் வருகின்றது. தேயிலைக் கொழுந்து எடுப்பதற்காக செடியாக குறுக்கப்பட்டது. கொழுந்து பறிக்கப்படாது விட்டால் நீண்ட நெடிய மரமாக வளரக்கூடிய ஒரு மரம் அது. இதோடு வேறொரு உண்மையையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு தேயிலை மரத்தை வளரவிடாது அதனது சுயமான வலிமையை வெளிக்காட்ட முடியாது செடியாக குறுக்கி வைத்திருக்கின்றார்களோ! அதேபோன்றுதான் மலையக மக்களின் வாழ்க்கையையும் திட்டமிட்டு குறுக்கி வைத்தார்கள். அவர்களது வாழ்வும் வளவும் செழிப்பின்றி அடக்கி ஒடுக்கப்பட்டது.” என்று அவர் சொன்ன ஓர் உண்மையையும் நான் தெரிந்து கொண்டேன்.

இறுதியாக இந்நாவலில் பதிவாகியிருக்கும் குறிப்புகள் (Reference) சம்பந்தமாக இங்குள்ள படைப்பாளிகளிடம் நான் கேட்க விரும்பவது,  இது சரியா…? தவறா…? இதனால் இந்நாவலின் மதிப்பும், தரமும் தாழ்ந்து போவதற்கு வாய்ப்புள்ளதா…? என்பதே. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் முன்னும் பின்னும் நடந்த வரலாற்றின் ஒரு துளியாகும் என்று இந்நாவலின் ஆசிரியரால் கூறப்பட்டிருக்கின்றது. தேயிலைத்தோட்டத்தில் சரியாக இரண்டு வருடத்திற்குள் நடந்து முடிந்த வரலாற்று சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சரியாக நாம் வரலாற்றுக்காலத்தை அறிந்து கொள்வதற்கு சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிகழ்ந்த சம்பவமானது கதை ஆரம்பமாகி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிகழ்ந்ததாகவும் அனுமானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அதையும் தவிர்த்து சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நடந்த காலத்திலிருந்தே கதை தொடங்குவதாக கருதிக்கொண்டாலும். சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிகழ்ந்தது 1964 ஒக்டோபர் 30 இல். அதிலிருந்து இரண்டு வருடம் என கணித்தாலும்…, 1966 ஒக்டோபர் மாதத்துடன் இதிலுள்ள வரலாற்றுச் சம்பவம் நிறைவடைகின்றது என நாம் திடமாக நம்புவதற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால் கதை கூறப்படும் ஆரம்பத்திலேயே…’யாழ்ப்பாணத்தைப் போல் சிதிலமாகியிருந்த ஸ்வெட்டெரில்.’(27) என ஒரு குறிப்பு வருகின்றது. 1983 இன் பிற்பாடுதானே யாழ்ப்பாணம் சிதிலமடையத் தொடங்கியது. மேலும் ’பாதாள பைரவி’ ’சித்தி’ ‘அவள் ஒரு தொடர்கதை’ போன்ற திரைப்படங்கள் சம்பந்தமான குறிப்புகள். ‘பாதாள பைரவி’1951இல் வெளிவந்திருக்கின்றது. ‘சித்தி’ 1966இல் வெளிவந்திருக்கின்றது. ஆனால் ‘அவள் ஒரு தொடர்கதை’ 13 நவொம்பர் 1974 இல் வெளிவந்தது. ‘அவள் ஒரு தொடர் கதை சினிமாவில் சுஜாதா வீட்டில் இருக்கும்போது வீட்டிலுள்ள அனைவரும் இயங்கிக் கொண்டிருப்பார்களே, அப்படியொரு இயக்கம் அது!’(71) என்பதாக ஒரு குறிப்பும் வருகின்றது. இவைகளை ஒதிக்கி, ஓரங்கட்டி நகர்ந்தபோதும்…, ‘வெளிப்புறம் வந்து பார்த்தேன். விளம்பரப் பலகை நாணிக் கொண்டிருக்க, ஒரு பின் நவீனத்துவப் பிட்டிஷன் அதில் நிர்வாணமாய்க் கிடந்தது’(199) பின் நவீனச் சொல்லாடல் தமிழில் பழக்கத்திற்குள்ளான காலம் எப்போது? இந்நாவலுக்கு அணிந்துரை எழுதிய தெளிவத்தை ஜோசப் ஐயா இவற்றை என்ன புரிதலோடு உள்வாங்கிக் கொண்டார்? என்பதையே நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

//நாவலில் கதை சொல்லியே பிரதான பாத்திரமாக இருப்பதால் இது நாவலுக்கு மிகப்பெரிய பலவீனம் என்பதே வாசிப்பு மனநிலை விவாதத்தில் கலந்துகொண்ட  அனைவரின் கருத்தாக இருந்தது.//

இவ்வாறான ஒரு பார்வைக்கு அப்பால் வேறொரு தளத்தில் வைத்து உரையாடுவதற்கான பல விடயங்களை இந்நாவலில் நான் சுவைத்திருக்கின்றேன். அது குறித்தும் விரிவாகக் கூறலாம் . இதுவே மிக அதிகமாகிப்போனதால் அவற்றை தவிர்த்துள்ளேன்.  குறிப்பாக அஸூமத் அவர்களின் நகைச்சுவையான உரைநடை. மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலார்களின் இறைநம்பிக்கையும், திருவிழாச் சடங்கு சம்பிரதாயங்கள் என்பன மிக யதார்த்தமானதாகவும், அறிந்து கொள்ளவேண்டியதுமான மிக முக்கியமான தகவல்காளாகவும் நான் கருதுகின்றேன்.

நகைச்சுவை ததும்பும் உரையாடல்கள் ஊடாக, தோட்டத் தொழிலாளர்கள், உத்தியோகத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்நாவலூடாக எமக்கு வழங்கிய அல் அஸூமத் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள்.

நன்றி - தூ
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates