யுனெஸ்கோ அமைப்பு உலகளவில் பல நாடுகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இலங்கையில் கல்வியின் நிலை மேம்பட்டுள்ளது என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் சூழலில், மலையகப் பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பல்தரப்பினர் கூறுகின்றனர்.
நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வசிக்க்கும் மலையகப் பகுதிகளில் கல்வியின் தரம் ஐம்பது, அறுபது வருடங்கள் பின்தங்கியுள்ளது என்று கூறுகிறார், மலையகத்தின் சமூக விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவரும் ஓய்வுபெற்ற உயரதிகாரியுமான தர்மலிங்கம் மனோகரன்.
'பள்ளிகள் உண்டு ஆனால் தரமில்லை'
மலையகத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி |
மலையகப் பகுதிகளில் 800க்கும் மேலான பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், ஐந்து அல்லது ஆறு பள்ளிக்கூடங்களே தரம் வாய்ந்ததாக உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தேசிய மட்டத்தில் சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக மலையகப்பகுதியில் இது முற்றாக இல்லை எனும் சூழலே பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.
இலங்கை நகர்புறத்தில் இருக்கும் ஒரு பள்ளி |
மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பல வளங்கள் வழங்கப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அவர், தோட்டப்பகுதிகளில் ஆசிரியர் நியமனங்கள் தொழிலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம் என்றும் மேலும் கூறுகிறார்.
பெருந்தோட்டத்துறையைச் சார்ந்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் கூட இதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
மேலதிக தகவல்களுக்கு பி.பி.சி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...