மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தலைவர் அமரர் பெரி.சந்திரசேகரன் இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனா கத்திகழ்ந்தார்.
அவர்களின் இருண்ட லயத்துவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர் அளப்பரிய அக்கறை கொண்டிருந்தார். கொள்கையளவில் அரசு இத்திட்டத்தை ஏற்றுச் செயற்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கியவர் அமைச்சர் சந்திரசேகரன் ஆவார்.
தலவாக்கலையில் காடையர்களை எதிர்க்கும் போர்க்குணத்தை, தொண்டமானை எதிர்த்துக்களம் நின்ற துணிச்சலை, பிந்துனுவெவ படுகொலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வீரத்தை, சிறைப்பட்டுப்போனாலும் துவண்டுபோகாத மனவலிமையை, அமைச்சர் பதவிவகித்தபோதும் பணிவு காட்டப்பழகிய உயர்பண்பை, உதவி கேட்டுவந்தவர்களுக்கு எந்தத்தருணத்திலும் உதவிடமுனையும் உயர் குணத்தை அமைச்சர் சந்திரசேகரன் தனது அரசியல் வாழ்வில் வெளிப்படுத்தியுள்ளார்.
மலையகத் தமிழர்களின் நலனில் மட்டுமல்ல வட கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையிலும் உரிமையோடு கூடிய தீர்வை எட்டுவதிலும் அவர் தீவிர ஈடுபாடு காட்டினார். சிறுபான்மை இனங்களின் உரிமைக்காவலனாகவே அவர் திகழ்ந்தார்.
அவருடன் அயராது இணைந்து பணியாற்றிய எச்.எச்.விக்ரமசிங்க, அமைச்சர் சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி உரைகளைத்தொகுத்து மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற மகுடத்தில் ஒரு முக்கிய அரசியல் ஆவணத்தை வெளியிட்டிருப்பதை லண்டனில் வாழும் மலையகத்தமிழர்கள் மிகப்பெரிய செயற்பாடாகவே கருதுகின்றனர் என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் லண்டனில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில் தலைமை வகித்துப்பேசுகையில் தெரிவித்தார்.
இ.தொ.கா கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கரு.ரட்ணம் விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் பெரி.சந்திரசேகரன் அவர்களின் மறைவிற்கு கூட்ட ஆரம்பத்தில் இரு நிமிஷ மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழா நிகழ்வுகளை நா.நவநீதன் நடத்திச் சென்றார்.
தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வீ.ராம்ராஜ் பேசுகையில்:
ஏககாலத்தில் நான்காம் மாடியில் சிறைவைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட முறையில் அறிமுகமான தலைவர் பெரி.சந்திரசேகரன் இறுதிக்காலம் வரையில் என்னுடன் நல்லுறவு பேணி வந்தவர் ஆவார். இலங்கையின் இன்றைய சூழலில் மலையகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளின் மத்தியில் மலையகத்தை வழி நடத்திச் செல்லவல்ல ஒரு பெரும் தலைவன் மறைந்துவிட்டமை நமது பெரும் துரதிர்ஷ்டமாகும்.
அவரது அரசியல் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இணைத்துத் தொகுத்து எச்.எச்.விக்ரமசிங்க வெளியிட்டிருக்கும் இந்த நூல் மலையகம் பேணிப்பாதுகாத்து வைத்திருக்கவேண்டிய பொக்கிஷமாகும்´ என்று தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் வீ.ராம்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
ஆர்.நடராஜா பேசுகையில்,
அமைச்சர் பெரி சந்திரசேகரனின் பிறப்பிடத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவரின் வாழ்வின் வளர்ச்சியை நான் நேரில் பார்த்தவன். அவருடைய அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற இந்த நூல் இந்தியாவில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டமை மகிழ்ச்சி தருவதாகும்.
இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிக முக்கியமானதாகும். அந்தப்பணியில் என்னாலான சகல உதவிகளையும் செய்யத்தயாராக உள்ளேன் என்று சமூகசேவையாளர் ஆர்.நடராஜா உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அமைச்சர் பெரி.சந்திரசேகரனின் நெருங்கிய நண்பராகத்திகழ்ந்த யோகன் அமைச்சரின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடி அஞ்சலி செய்தார். லண்டனின் மலையக மக்கள் ஒன்றியத்தின் சார்பில் உபதலைவர் மகேந்திரன் அமைச்சருக்கு மலரஞ்சலி நிகழ்த்தினார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...