கொழும்புத் தமிழச்சங்கம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை ஆறு மணிக்கு நடாத்தி வரும் இலக்கியக் களம் 2013 டிசம்பர் ஆறாம் திகதி புதிய மெருகைப் பெற்றது. சாதாரணமான ஒரு அறிவித்தலுடன் சிறப்பு அழைப்பிதழ்களின்றி பாரிய ஏற்பாடுகள், ஆர்ப்பாட்டங்கள் இன்றி ஒரு இலக்கிய ஆளுமைக்கு ஒரு மணித்தியாலயத்தை வழங்கி வருவது இந்த களம்.
அன்றைய தினம் மலையகத் தொழிலாளிக்கேயுரிய தோற்றத்துடன் அந்த களத்தில் தனது இலக்கிய பதிவினை செய்யவந்திருந்தவர் பண்டாரவளை, ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த கதிர்வேலு விமலநாதன். நிகழ்வுக்கு தலைமை வகித்த வானொலி கலைஞர் எஸ்.எழில்வேந்தன் (கவிஞர்.நீலாவணன் மகன்). பொதுவாக நாட்டாரியல் அம்சங்களை எடுத்துக்கூறி மலையக நாட்டார் பாடல்களைப் பாடுவதற்கு கலைஞர் விமலநாதனை சபைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
மலையக நாட்டார் பாடல்களின் பின்புலங்களுடன் தனது உரையை ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் அந்த அவையை ஆக்கிரிமிப்பு செய்துகொண்டது விமலநாதனின் குரல். ஒரு புறம் மனதை மயக்கும் குரல்வளம் மறுபுறம் மளைக்க வைக்கும் அவரது அறிவு வளம். சங்க கால இலக்கியம் முதல் நவீன இலக்கியங்கள் வரை பல இலக்கியங்களை தொட்டுக்காட்டி அவற்றை மலையக நாட்டார் பாடல்களுடன் ஒப்பிட்டு மடை திறந்த வெள்ளம் போல உரையைத் தொடர்ந்தார் விமலநாதன்.
கும்மிப்பாடல்கள் வரிசையில் தனது உரையை ஆரம்பித்த விமலநாதன் புரட்சிக்கவி பாரதியும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் தங்களது புரட்சி வரிகள் பாமர மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தினால் கும்மிப்பாட்டு மெட்டிலேயே பல பாடல்களை எழுதினார்கள் என அவர்களது பாடல்களை எடுத்துச்சொல்லி, மலையகத்தில் இந்த கும்மிப்பாடல்கள் எவ்வாறு பாடப்படுகின்றன என மலையகக் கும்மியைப் பாடிக்காட்டினார்
தோட்டத்துச் சுத்தி கருத்த ரொட்டாம்
தொர வங்களாவ சுத்தி பூஞ்செடியாம்
தாராவும் கோழியும் மேயுதுங்க
தங்க தொர வாற வீதியில..
என்று ராகத்தோடு பாடிய விமலநாதன் கருத்த ‘ரோட்டு’ தொர (துரை) ‘பங்களா’ என ஆங்கிலச் சொற்கள் மலையகப் பாடல்களில் இயல்பாக வருவதை சுட்டிக்காட்டினார். மலையக மக்கள் ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டதாலும் அவர்களது சொல்பாவனைகள் இந்த மக்களின் வாய்மொழி பாடல்களில் கலந்திருப்பதையும் விளக்கினார். பிரிதொரு பாடலில் ‘நல்ல கணக்கப்பிள்ளை’ என்பதை ‘பெஸ்ட்டான’ கணக்கப்பிள்ளை என்று வருவதையும் இதற்கு உதாரணம் காட்டிணார்.
கையில் எந்த குறிப்பும் இல்லை. ஆனால் கம்பராமாயணச் செய்யுள்கள் அவர் நாவில் துள்ளி விளையாடின. கம்பராமாயணத்தில் இராவணனை அவனது வாழ்வை விளக்குவதற்கு கம்பர் எத்தனை வர்ணனைகளைக் கையாண்டுள்ளார் என விளக்கமளித்த விமலநாதன் சபையோரின் கவனத்தை ஆரம்பத்திலேயே பெற்றார். அந்த கம்பராமாணச் செய்யுளை இலக்கியச்சுவையோடு எடுத்துச்சொல்லி இந்த தோட்டத்துக் கணக்குப்பிள்ளைமார் இராவணன்களாக அடையாளம் காட்டி சில பாடல்களைப்பாடினார். அதில் இராவணன் அடுத்தவன் மனைவி மீது மையல் கொண்டது போல இந்த கணக்குப்பிள்ளையும் உழைக்கும் பெண்களான அடுத்தவர் மனைவிமாரை தமது இச்சைக்கு அழைப்பதையும் அதற்கு மறுத்துரைத்து மலையகப் பெண்கள் எதிர்க்குரல் எழுப்பி கணக்குப்பிள்ளையை எச்சரிக்கை செய்வதையும் மலையக நாட்டார் பாடலில் இருந்து எடுத்துச்சாகட்டினார்.
(கணக்குப்பிள்ளை)
கூடை மேல கூட வச்சு
கொழுந்து கிள்ளப் போறபுள்ள
கூடையை இறக்கி வச்சு -ஒரு
குளுந்த வார்த்த சொல்லுபுள்ள
(தொழிலாளப் பெண்)
கூடைய எறக்க மாட்டேன்
குளுந்த வார்த்த சொல்ல மாட்டேன்
ஏன் புருஸன் கண்டானா
எடுத்திடுவான் வேட்டுக்கத்தி
உனது இச்சைக்கு அடி பணியமாட்டேன், எனது புருஷனிடம் சொன்னால் வெட்டுக்கத்தியோடு வந்து உனது தலையை துண்டாடிவிடுவான் என வீரத்தோடு சொல்லும் பெண்ணை சங்ககால இலக்கியங்களோடு ஒப்பிட்டுப்பாடினார் விமலநாதன். இதன் போது மலையகத்தில் பாவனையில் உள்ள கோப்பிக்கத்தி, கவ்வாத்துக்கத்தி, மட்டத்துக்கத்தி மற்றும் வெட்டுக்த்தி என பல்வேறு கத்தி வகைகள் பற்றியும் விளக்கினார்
மலையகத் தோட்டங்களில் ஒரு காலத்தில் காதல் செய்வதற்கு தடையிருந்தது. அந்த தடையினை மீறியோர் ‘பற்றுச்சீட்டு’ நீக்கப்பட்டு வேறு தோட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அப்படியான சூழ்நிலைக்கு அகப்பட்ட காதலனும் காதலியும் தங்களது காதலைப்பாடிக்கொள்ளும் ஒரு பாடலை பாடும்போது சுவாரஷ்ணமான விடயம் ஒன்றைச் சொன்னார். காதலன் தான் தோட்டம் விட்டு போகும் தான் மாத்திற்கு ஒரு தடவை ‘தந்தி’ போல தான் வந்து போவதாகவும் அதனால் கவலைப்படவேண்டாம் என்றும் போது ஆறுதல் சொல்லுகிறான். இவற்றை விளக்கும் பாடல்.
(காதலன்)
தோட்டமினா நல்ல தோட்டம்
தொரமவனோ நல்ல தொர
தோசி கணக்கனாலே தங்க ரத்தினமே - இப்போ
தோட்டவிட்டு நானும் போறேன் தங்கரத்தினமே
(துரைகளை விட கணக்கப்பிள்ளையே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இந்த பாடல் கூறுகிறது என்றார்)
தோட்டம் விட்டு போறேனு
துயரமா எண்ணாதே
மாசம் தவறாம வந்திடுவேன்
தந்திபோலே….
(காதலி)
நீயிருக்கும் தகரலயம்
நானிருக்கும் ஓட்டுலயம்
ஆகாச தந்தி போட்டா ஆசைமச்சானே - நாம
ஆசை தீர பேசிடலாம் ஆசை மச்சானே.
இதில் வரும் ஆகாச தந்தி என்பது இன்றைய கம்பியில்லா தொலைபேசிகளை அன்றே கோரி நின்றள்ளதாக அன்றே பாடப்பட்டுள்ளது என்பதே அந்த சுவாரஷ்யமான தகவல்.
தமிழர்களிடத்தில் குறிப்பாக இந்துக்களிடையே நிலவும் சாதிய வேறுபாடு மலையக கலாசார பண்பாட்டுக்குள் இறுக்கமற்று இருப்பதனையும் கோயில் திருவிழா போன்ற விடயங்களில் அருள்வந்து ஆடுபவனே சாமி என்றும் அவன் எந்த சாதியாக இருந்தாலும் அவன் பறவைக்காவடி எடுத்தும் ஆடும்போது அவரிடம் ஆசிர்வாதம் பெறும் காட்சியையும் சுட்டிக்காட்டியவர், அவ்வாறு அருள்வந்து ஆடுவதற்கு மலையக மக்கள் பாடும் பாடல்களை சிலவற்றை பாடினார்.
ஆர்காட்டுப் பொட்டலிலே -கந்தையா
ஆறு லட்சம் காவடியாம் (அரோகரா)
இப்படி தொடர்ந்தது பாடல்…. மெய்மறந்த சபையோரில் பலருக்கு அருள் வந்துவிடும்போல் இருந்தது அவரது இசை.
தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டபோது தமது நாட்டைப்பிரிந்து பாடி வந்த ஒப்பாரி பாடல்களுடன் தனது உரையை நிறைவு செய்கையில் சபையில் பலரது கண்களும் அழுவதற்க தயாராகிவிட்டமையை காணக்கூடியதாக இருந்தது.
இந்தக் குறிப்பிலே ஒரு சில பாடல்களே சுட்டிக்காட்டப்பட்டாலும் விமலநாதனின் உரையில் திருக்குறள், நாலடியார், பரிபாடல், புறநானூறு, பாரதி பாடல்கள், கம்பராமாணாச் செய்யுள் என பல செய்யுள்களும் பாடல்களும் கரைபுரண்டு ஓடின. தமிழச்சங்கத்தில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடியது.
தலைமை வகித்த எஸ்.எழில்வேந்தன் ‘ஒரு தொழிலாளி வந்திருக்கிறார். எதோ நான்கு நாட்டார் பாடல்களை பாடப்போகிறார் என எண்ணியிருந்தேன். ஆனால், ஒரு தமிழ்ப் பேராசிரியர் போல சங்ககால இலக்கியம் முதல் நவீன இலக்கியங்கள் வரை தொட்டுக்காட்டி ஒரு ஆய்வுரையை வழங்கி எம்மை ஆச்சரியப்படவைத்துவிட்டார் விமலநாதன்’ என பாராட்டினார்.
என்றுமில்லாதவாறு அன்றைய நிகழ்ச்சியில் பலரும் தமது கருத்துக்களைப்பதிவு செய்தனர். கருத்துக்களை கூறிய அனைவரும் உணர்ச்சி மேலிட தமது கருத்துரையை வழங்கினர். திரு.வைத்தீஷ்வரன் அவர்கள் ‘ஆய்வுரை என்று வரும் பேராசிரியர்களே கையில் குறிப்புகளோடு வரும்போது எவ்வித குறிப்பும் இல்லாமல் ஒரு பேருரையை ஆற்றிய விமலநாதனின் அறிவு மலையகத் திறந்த வெளியில் சேகரித்தவை. பாடசாலைகளுக்கும் பாடப்புத்தகங்களுக்கும் வெளியேதான் உண்மையான அறிவும் தேடலும் நிறைந்திருக்கிறது என்பதற்கு விமலநாதன் மிகப்பெரிய உதாரணம்’ என வாழ்த்தினார். உளவியலாளர் திரு.ராஜரட்னம் தனது கருத்துரையில் ‘கொழும்புத் தமிழச்சங்கம் இதுவரை நடாத்திய நாட்டாரியல் ஆய்வு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது இன்றைய நிகழ்ச்சிதான், விமலநாதன் சிறந்த ஒப்புமை இலக்கிய ஆய்வாளன்’ என பாராட்டினார். சமூக செயற்பாட்டாளர் திரு.ஆறுமுகம், மலையகத்தில் இதுபோன்ற எத்தனையோ இலைமறை காய்கள் இருக்கின்றன என்றும் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார். மலையக சமூக ஆய்வு மையத்தைச் சேர்ந்த அருட்தந்தை. சக்திவேல், சிவஞானம் பிரபாகரன் ஆகியோர் ‘மலையக தேசியத்தின் எழுச்சிக்கு விமலநாதன் போன்றவர்களே குறியீடாகத் திகழ்கின்றனர்’ என பாராட்டினர். அதேபோல கொழும்புத் தமிழச் சங்கம் மலையகத்துக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த திரு. ஓங்காரமூர்த்தி திறமை இருப்பவர்களின் தகவல்களைத் தாருங்கள். அவர்களை அழைத்து கௌரவிக்க தமிழச்சங்கம் தயாராகவே இருக்கிறது என்றார். சுப்பையா கமலதாசன், விஜயகுமார் போன்ற இளம் மலையகச் செயற்பாட்டாளர்கள் விமலநாதனின் உரையில் பு+ரிப்படைந்தவர்களாக தமது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நண்பர் லெனின் மதிவானத்தின் ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ அறிமுக விழா பதுளையில் நடைபெற்ற போது விமலநாதனின் அரங்க ஆற்றுகையை முதன்முறையாக காணக்கிடைத்தது. அவரை கொழும்புத் தமிழ்ச்சங்த்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனும் ஆவல் என்னுள் எழுந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது. இவர் மண்வாசைன எனும் வானொலி நிகழ்ச்சியை ஊவா சமூக வானொலியில் தொடர்ச்சியாக நடாத்தி வருகிறார். அதில் இத்தகைய பாடல்கள் இடம்பெறுகின்றன. எனினும் மலையகத்திற்கு மட்டும் மடடுப்படுத்தப்பட்டிருந்த அவரது திறமை இன்று வெளிஉலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. விமலநாதனின் தொழில் ஒரு தனியார் சிறு தேயிலைத் தோட்டத்தை பாதுகாத்துக்கொள்வது. அவர் தனியே தேயிலைச் செடிகளை மட்டுமல்லாது அங்குள்ள மாந்தர்களின் வாய்மொழிக் கலைகளையும் பாதுகாத்து வைத்துள்ளார். என எனது கருத்தையும் நிகழ்வில் பதிவு செய்தேன்.
‘மண்வாசனை’ விமலநாதனை கொழும்புத் தமிழச்சங்கத்துக்கு அழைத்து வருவதில் என்னுடன் உழைத்தவர்களில் நண்பர் லெனின் மதிவானம், எல்ல, நிவ்பேர்க் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.ராஜமாணிக்கம், ஆசிரியர் மனோகரன் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. விமலநாதனைப் போன்றே தமிழச்சங்த்திற்கு அன்றையதினம் பார்வையாளர்கள் பலரும் புதிதாக வந்திருந்தனர். கருத்தும் தெரிவித்தனர். அவரகளது வேண்டுகோளில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் மலையகத்திற்கு வாய்ப்புத்தர வேண்டும் எனும் கருத்து அமைந்திருந்தது. கொழும்புத் தமிழச்சங்கம் அத்தகைய வாய்ப்பினை வழங்கியமையால்தான் இந்த கருத்தினைப் பதிவு செய்வதற்கே களம் கிடைத்தது என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அதேநேரம் இனி எந்தவொரு மலையகத் தொழிலாளியைப் பார்த்தாலும் ‘இவருக்குள்ளும் ஏதாவது விஷயம் இருக்கும்’ எனும் உள்ளுணர்வை ஏனைய சமூகத்தவருக்கு ஏற்படுத்திய பெருமைக்குரியவராக, மலையகத்தின் கௌரவத்தை தலைநகரில் உயர்த்தி பண்டாரவளை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணித்தார் விமலநாதன். அவரது கலைப்பயணங்கள் தொடரும் என்ற நம்பிக்கையே அன்றைய இலக்கிய களத்தின் விளைபொருளாக அமைந்தது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...