Headlines News :
முகப்பு » » காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு…: மனோ கணேசன்

காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு…: மனோ கணேசன்


கல்வியுரிமை, காணியுரிமை, ஆட்சியுரிமை ஆகிய மூன்று தேசிய இலக்குகளை நோக்கி மலையகம் நகர வேண்டும் – மலையக அபிவிருத்திக்கு நூல் வழங்கும் நிகழ்வில் மனோ கணேசன்

மலைநாட்டு தமிழரது கல்வியுரிமையின் அடையாளமாக, மலையக பல்கலைக்கழகம்; மலைநாட்டு தமிழரது காணியுரிமையின் அடையாளமாக, சொந்த நிலத்தில் வீடு; மலைநாட்டு தமிழரது ஆட்சியுரிமையின் அடையாளமாக, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா பிரதேசசபைகள், மேலும் பிரிக்கப்பட்டு மொத்தம் பன்னிரண்டு பிரதேசசபைகள்; ஆகிய மூன்று குறைந்தபட்ச உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மலையக இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவற்றை பற்றி பேசுவது கட்சி அரசியல் அல்ல. கட்சி அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. இந்த இலக்குகளை நோக்கி மலையக அரசியல்வாதிகளை தள்ளுங்கள் என்று சொல்லவே இங்கு நான் வந்தேன்

ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கே. ரி. குருசாமியின் ஏற்பாட்டில், அறிவியல், சமூகவியல், அரசியல் விடயதானங்களை கொண்ட நூல்தொகுதியை, அங்கத்தவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு வழங்கிவைக்கும் வைபவம், கதிரேசன் வீதி விஸ்வகர்மா மண்டபத்தில் நடைபெற்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம், ஜமமு மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார், மாநகரசபை உறுப்பினர் கே.ரி. குருசாமி ஆகியோருடன் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போஷகர்கள், நிர்வாகிகள் மற்றும் பெருந்தொகை மலையக இளைஞர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மேலும் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது,

கல்வியை எப்பாடு பட்டாவது வளர்த்து விடுவோம், என்பது உங்கள் கொள்கை. அதுதான் நானும் நம்பும் கொள்கை. மலையகத்துக்கு விடிவை கொண்டுவரும் கொள்கை. எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்பவைகளை பகுத்து அறியும் அறிவை தரும் கொள்கை. கல்வியை மேம்படுத்துவோம் என்ற எமது இந்த கொள்கையின் அடையாளமாகத்தான் இங்கே, பட்டதாரியான நமது மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார் அமர்ந்துள்ளார். நூறு கோவில்களுக்கு ஒரு பாடசாலை சமன் என்பார்கள். பாடசாலை என்பது முறைசார் கல்வியை தரும் ஒரு நிறுவனம். வாழ்நிலைமையால் கல்வியை கைவிட்டவர்களுக்கு முறைசாராத அறிவை ஊட்டுவதுதான் நூலகம். ஆகவே என்னை பொறுத்தவரையில், இன்று இங்கே ஒரு நூலகம் பத்து பாடசாலைகளுக்கு சமன். ஆகவே ஒரு நூலகம், ஆயிரம் கோவில்களுக்கு சமன். இங்கே அளப்பரிய வாசிப்பு பழக்கத்தை எங்கள் மாநகரசபை உறுப்பினர் குருசாமி ஆரம்பித்து வைத்துள்ளார்.

எங்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலு குமார் சொன்னது போல், அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் ஓடி போனால் இங்கே வருபவன் எல்லோருமே திருடனாகத்தான் இருப்பான். நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டு, அரசியலை குறை சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. அதாவது என் கட்சி அரசியல் பேச வரவில்லை. அதற்கு தேவையும் கிடையாது. ஆனால், உங்களுக்கு அரசியல் தேவை. மலையகத்துக்கு தேசிய அரசியல் தேவை. அதன்மூலம்தான் மலையகம், ஈழத்தமிழருடன் கரங்கோர்த்து, சர்வதேசிய கண்காணிப்பு வலயத்துக்குள் நுழைய முடியும். அது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

உலகம் இன்று இலங்கையை பார்க்கிறது. இங்கே நாங்களும் இருக்கிறோம் என சொல்வதற்கு தயாராகுங்கள். அதிலிருந்து ஒதுங்கி ஓடாதீர்கள். ஓடிவிட்டு, எங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என, ஈழத்தமிழர்களை குறை சொல்லாதீர்கள். மனோ கணேசன் ஈழத்தமிழருடன் ஓடிவிட்டான் என்றும் குறை சொல்லாதீர்கள். நான் என் தாயின் எட்டியாந்தோட்டை களனி கங்கை நதிக்கரையில் பிறந்து, என் தந்தையின் கண்டி மகாவலி நதிக்கரையில் வளர்ந்தவன். நான் முதலில் இலங்கையன். அப்புறம் தமிழன். அப்புறம் மலையக தமிழன். என்னை யார் என்று தெரிந்துகொண்டுதான் ஈழத்தமிழ் உடன்பிறப்புகள் என்னை சந்தோசமாக ஏற்று கொண்டுள்ளார்கள்.
இந்த நாட்டில் இன்று சிங்கள, வடகிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒப்பிடும்போது மலையக மக்கள் குறிப்பாக தோட்ட தொழிலாளர் சமூகம் பின்தங்கியது. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதை எப்படி மாற்றுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாம் சிந்திக்கிறேன். ஏனெனில் நானும் உங்களை போல் ஒரு மலையக தமிழன். மனோ கணேசன் ஒரு மலையக தமிழன் இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் என்னை கண்டு பயப்படுபவர்கள். அதனால்தான் என்னை தூர தள்ளி வைக்க நினைக்கிறார்கள். ஏனென்றால் நான் சொல்லும் கருத்துகள் பலரை சுடுகின்றன. உண்மை சுடத்தான் செய்யும்.

காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் *சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு, சொந்த நிலத்தில் வீடு கட்டி வாழும் உரிமையை பெற்று மலையக சமூகம், இந்நாட்டில் வாடகைக்கு வாழும் சமூகம் என்ற அவப்பெயரை அகற்ற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்கள் இருப்பதை போல் மலையகத்தில் ஒரு மலையக பல்கலைக்கழகம் தேவை என்பதை உணர வேண்டும். 15,000 பேருக்கு ஒரு பிரதேச சபை ஏனைய இடங்களில் இருக்கும்போது, ஏன் மலையகத்தில் மாத்திரம் நீண்ட காலமாக 200,000 பேருக்கு ஒரு பிரதேசசபை இருக்கின்றது என கேள்வி எழுப்ப வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று, கல்வியுரிமை, காணியுரிமை, ஆட்சியுரிமை ஆகியவற்றை உறுதிபடுத்தும் இந்த இலக்குகளை நோக்கி மலையக அரசியல்வாதிகளை தள்ளுங்கள்.

*1977 மே மாதம் 07 ஆம் திகதி டெவன் தோட்டத்தின் 7000 ஏக்கர் காணியை சிங்கள் மக்களுக்குப் பிரித்து கொடுப்பதற்கு அன்றைய அரசாங்கம் செய்த சதி திட்டத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வெகுண்டு எழுந்த போது துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி தன்னுயிர் நீத்த தியாகி சிவனு லெச்சுமணன்.

நன்றி - இனியொரு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates