Headlines News :
முகப்பு » » நீதி மன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்க மறுக்கும் தோட்ட நிர்வாகங்கள்

நீதி மன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்க மறுக்கும் தோட்ட நிர்வாகங்கள்


பிரச்சினைகள் ஏற்படும் போது பேச்சு வார்த்தை மூலம் அவற்றிற்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழில் ரீதியாக தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனியுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. தோட்ட நிர்வாகங்கள் தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வராத பட்சத்தில் பிரச்சினைகள் மேலிடத்துக்கு கொண்டு செல்லும் நிலையேற்படுகின்றது. குறிப்பாக தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் நியதிச்சபையை நாடவேண்டிய நிலை ஏற்படலாம்.

இங்கு பிரச்சினைகள் விசாரிக்கப்பட்டு வழங்கப்படும் தீர்ப்பைக் கூட சில தோட்ட நிர்வாகங்கள் ஏற்று மதிப்பளிக்க முன்வராமல் இழுத்தடிப்புச் செய்வதால் தொழிலாளரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கின்றன. பிரச்சினைகளால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி, நியாயத்தை வழங்காமல் கெடுபிடிகள் காட்டி வருகின்றன.

தொழில் ஆணையாளர் ஏற்றுக் கொண்டு பின்னர் அதனை நடைமுறைப்படுத்த முன்வராது பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நிர்வாகங்களே பிரச்சினைகள் நீடித்துச் செல்ல வழிவகுத்து விடுகின்றன.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, றைகம் தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான ரீ. சந்திரன் (35) என்ற தொழிலாளியை தோட்ட நிர்வாகம் வேலையிலிருந்து இடை நிறுத்தி இதுவரைகாலமும் வாழ்ந்து வந்த குடியிருப்பி லிருந்து உடைமைகளை பலவந்தமாக வெளியில் வீசி வெளியேற்றப்பட்டார்.

இந்த மனிதாபிமானமற்ற செயல்குறித்து இ.தே.தோ. தொ. சங்கம் தோட்ட நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து களுத்துறை தொழில் நியதிச் சபையில் வழக்கொன்றை தாக்கல் செய்தது. சுமார் ஒருவருடகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் பின்னர் பாதிப்புக்குள்ளான தொழிலாளிக்கு மீண்டும் வேலை வழங்கவும், அவர் வசித்து வந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிப்பதற்கு இடமளிப்பதாக தோட்ட நிர்வாகம் இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதன்படி கடந்தாண்டு அக்டோபரில் குறித்த தொழிலாளி மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டபோதிலும் ஒரு வருடத்தை அண்மித்துள்ள நிலையில் அவருக்குரிய குடியிருப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக குறித்த தொழிலாளி தமது ஐந்து பிள்ளைகளுடன் கடந்த ஒருவருடகாலமாக தமது உறவினர் ஒருவனின் வீட்டில் தஞ்சம் புகுந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே வசித்து வருகின்றார்.

தொழில் நியதிச்சபை முன் இணக்கப்பட்டிற்கு வந்தும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது கெடுபிடிகாட்டி பிரச்சினையை தொடரும் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரப் போக்கு, பழிவாங்கல் குறித்து பாதிப்புக்குள்ளான தொழிலாளியிடமிருந்து அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளதுடன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

பிரச்சினை சமாதானமாகத் தீர்த்து வைக்கப் பட்டுள்ளதாக தொழில் நியதிச் சபையினால் கடிதமூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதி லும் குடியிருப்பு தொடர்பாக குறிப்பிடப்பட் டுள்ள இலக்கம் தவறானதாகும்.

குறித்த குடியிருப்பல்ல என தோட்ட நிர்வாகம் சுட்டிக் காட்டி மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவித்து சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து தொழிலாளருக்கு தோட்ட நிர்வாகத்துக்கு மிடையே நல்லுறவைக்கட்டியெழுப்ப வேண்டியதை விடுத்து நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்து நடந்து கொள்ளும் இது போன்ற நிர்வாகங்களினால் தோட்டங்களில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு ஒற்றுமை சீர்குலையும் ஒரு நிலையே ஏற்படும் என்பதில் சந்தேகம் கிடையாது.
நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates