கொத்தடிமைகளாக குடியேற்றப்பட்ட காலம் முதல் இன்றைய 2013ஆம் ஆண்டு காலம் வரையிலும் இரண்டு கோடிகளுக்குச் சொந்தமான லயத்து வீடுகளிலே காலத்தை கடத்தி விட்டோம். காலை எழுந்த உடனே பிரட்டுக்களம் ஆண்களுக்கும் பொதுபைப்பு பெண்களுக்கும் உரித்தாக்கபட்டிருக்கிறது. தினமும் தண்ணீர் சண்டையும், கால்வாய் (காண்) சண்டையும் இன்றுவரை ஓயாத போர்களமாகவே இருந்து வருகின்றது. இந்நிலை இலங்கை அரசுக்கும் அந்நிய நாடுகளுக்கும் இதுவரையிலுமே தெரியாமல் இருப்பாதாகவே காட்டிக்கொள்கின்றனர். என்று ஓயும் இந்த லயத்து போர் என்று எண்ணிக்கொண்டிருந்த எமக்கு ஒரு அதிஷ்ட சீட்டிழுப்பு விழுந்துள்ளது. அதுதான் இந்திய அரசின் நிதியுதவியில் நாடளாவிய ரீதியில் 49,000 வீட்டுத்திட்டம். இதில் 5,000 மலையகத்தெக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்பது எம்மவர்களின் நீண்ட கால ஒன்று பட்ட குரலினாலே என்றால் அது மிகையல்ல. இவ்வீட்டுத்திட்டங்கள் தொடர்பான ஓர் சிறிய ஆய்வினை இனி காணலாம்.
கடந்த காலங்களில் குறிப்பிடபட்ட விடயங்களின் அடிப்படையில் ஒரு நபருக்கு 20 பேர்ச் காணி ஒதுக்கி தரப்படும் என்ற ஒருவகை பேச்சி மலையக அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒலிக்கபட்டு வருகிறது. இது உண்மையிலேயே வரவேற்க்கத்தக்க விடயம்.1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் சிறு தேயிலை, இறப்பர் உற்பத்தியாளர்கள் 250,000 பேருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கபட்டது. இதில் 99 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்திருந்த வரலாறு யாரும் மறுக்கமுடியாது. இந்நிலை எதிர்காலத்தில் வழங்கப்படும் காணி பகிர்வில் இல்லாமல் இருக்க வேண்டுமாயின் அரசியல் பிளவுகளில் உள்ள மலையக மக்கள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்பது அவசியமானது.
இது இப்படி இருக்க, 1995ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோட்ட கம்பனிகள் 10 பேர்ச் காணிகள் ஒதுக்கியது. எனினும் டிரஸ்ட் நிறுவனத்தினால் 7 பேர்ச் காணி அளவே வழங்கப்பட்டது. இக்காணிகள் வழங்கப்பட்ட போது 15 வருட குத்தகை முறையில் 45,500 ரூபா செலுத்திய பின் காணி உறுதிபத்திரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட போதிலும் இதுவரையிலும் காணிக்கான உறுதிபத்திரம் வழங்கப்படவில்லை. இது எப்போது உறுதியாக்கப்படும் என்பது எழுத்துவடிவில் இன்னும் வரையப்படவில்லை. 2005 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மேல்மாடி லயன் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1.26 பேர்ச் காணி அளத்திட்டத்தில் தொடர்குடியிறுப்பாகவே அமைக்கப்பட்டது. இவ்வளவு திட்டத்தில் வீடு கட்டக்காரணம் இடப்பற்றாகுறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மலையக காணிகளில் 9 இலட்சம் காணிகள் பாரிய அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இத்திட்டதில் எத்தனை மலையக சிறும்பான்மையினர் பயன் பெறுகின்றனர் என்பது வினாவாகவே உள்ளது. அத்தோடு, மேல்மாடி லயன் குடியிருப்புகள் எந்த மலையக அரச தொழில் இருப்பவர்களுக்கும், தனியார், கொழும்பு பிரதேசங்களில் தொழில் புரிபவர்களுக்கும் வழங்கப்படவில்லை. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே என்று கூறப்பட்டது. எனினும் இது சரியாக பகிர்ந்தளிக்கபடவில்லை.
இத்திட்டத்தில் 60 ஆண்டு கால குத்தகை அடிப்படையிலேயே வீடுகள் வழங்கப்பட்டது. முழு கடன் தொகையையும் செலுத்திய பின்பே வீடு உறித்தாகும். அப்படி என்றால் அடுத்து பிறக்கும் குழந்தையும் கடன் சுமையுடனே பிறக்க நேரிடுகின்றது. இப்படி மலையகம் கால காலமாக வீடு, காணிக்காக போராடி கொண்டு வந்திருக்கிறோம்.
தற்போது 5000 வீட்டுத்திட்டம் நானோயா பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது சரியான முறையில் அரசியல் பிளவுகள் இன்றி செயல்படுத்தப்படல் வேண்டும். மலையகத்திற்கு அண்ணளவாக 206,000 வீடுகளுக்கான தேவைப்பாடு உள்ளது. இவ்வாறு வருடத்திற்கு வருடம் ஒவ்வரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் மலையகத்தில் வீட்டு பிரச்சனைகள் முற்றாக நீங்கும். அதேவேளை வெளிநாடுகளில் இருந்த இயங்கும் சமூக சேவை மன்றகளினதும் உதவிகளை கல்விக்கு மாத்திரம் செயற்படுத்தாமல் இவ்வாறான வீட்டுத்திடங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டால் துரித காலத்தில் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படும். புதிய எழுச்சியை நோக்கிய மலையகத்தின் பயணத்தில் இவ் 5000 வீட்டுத்திட்டம் ஒரு மைல்கல்.
நன்றி - http://upcountryresearch.com
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...