ஓர் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாக ஆதங்கம் நிறைந்தவனாய் எழுதுகிறேன்.
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 21 ஆம் திகதி மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்திருந்தனர்.
அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாரானபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவ்விடத்துக்கு வந்து குழப்பம் விளைவித்தனர் என்பது செய்தி.
ஆம்! மலையக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சம்பள அதிகரிப்பு போதுமானது அல்ல என்பது வெட்டவெளிச்சமானதாகும். இரண்டு வருடங்களுக்கு வெறும் 70 ரூபா (நாளொன்றுக்கு)அதிகரிப்பில் அவர்களால் என்ன செய்துவிட முடியும்?
இந்த இரண்டு வருடங்களுக்குள் எரிபொருளோ, மின்கட்டணமோ, போக்குவரத்துச் செலவோ, இதர அத்தியாவசிய செலவுகளோ அதிகரிக்க மாட்டாது என்பதை ஒப்பந்தக்காரர்களால் நிச்சயித்துக் கூறமுடியுமா?
ஐந்து பேர் உள்ள குடும்பம் ஒன்றுக்கு இந்த அதிகரிப்பு போதுமானது என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்தமையை எண்ணி தலைமைகளை உருவாக்கியவர்கள் என்ற வகையில் மலையகம் வெட்கம் கொள்கிறது.
அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து பார்த்தவன் என்ற வகையில் அவர்களின் வேதனையை வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது.
இதைத் தட்டிக்கேட்க திராணியற்றவர்களாக தொழிலாளர்கள் மனதுக்குள் குமுறி அல்லல் படுகிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.
அவர்கள் ஆரம்பம் முதலே அடக்கியாளப்பட்டவர்கள். ஆதலால் கூச்ச சுபாவம் அவர்களைத் தட்டிக்கேட்க விடுவதில்லை என்பது ஒருபுறமிருக்க நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கடமையல்லவா?
சரி… ஆகட்டும்.
நிலைமை இப்படியிருக்கையில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டத்தை அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையாகக் கருதப்படும் கொட்டகலையில் நடத்துவதற்கு எதிர்ப்புக் கூட்டணி தீர்மானித்து அதற்கான திகதியை முன்னரே அறிவித்திருந்தது.
எனினும் அன்றைய தினத்தில் அதே இடத்தில் கூட்டு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இ.தொ.கா. அறிவிக்கவில்லை.
மக்களாகவே சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்காக கூடினார்கள் என இ.தொ.கா. கூறினாலும் தலைமைத்துவம் வழங்கப்படாமல் மக்கள் கூடினார்கள் என்பதை நியாயப்படுத்த முடியுமா?
எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியதன் பின்னணி என்ன?
கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பள உயர்வு கிடைத்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதை ஏன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட மறுநாளோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ நடத்தியிருக்கக் கூடாது?
ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொந்தக் காசில் தான் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார்களா?
அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் நகுலேஸ்வரன், நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சக்திவேல், மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இருந்ததாக பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள். இவர்கள்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்தியதாகவும் சிலர் கூறினார்கள்.
"ஆறுமுகனின் கோட்டைக்குள் எந்த நாயும் வரக் கூடாது. வரவும் விடமாட்டோம்" என அதிகாரத் தொனியில் இந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கு பேசினார்கள்.
அவ்வாறெனின் இவர்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலைமைபீடத்தால் கூற முடியுமா?ஆக, நியாயத்தை அதிகாரம் ஆட்டிப்படைக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகரே என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
அரசியல் தலைமை என்பது மக்கள் சேவை என்பதில் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதாரணமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு தலைமைத்துவத்தை மலையகம் எதிர்பார்க்கிறது.
தொழிலாளர்கள் அப்பாவிகள் என்பதால் சில சந்தர்ப்பங்களில் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக கொட்டகலையில் கொம்பு முளைத்த வெள்ளைக் காகம் நான்கு கால்களுடன் பறக்கிறது பாருங்கள் எனச் சொன்னால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
கொட்டகலையில் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக வேறொரு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம்.
ஆனால் அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் வெளிப்படையே.
-இராமானுஜம் நிர்ஷன்
நன்றி - புதியமலயகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...