Headlines News :
முகப்பு » , » உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்

உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் தற்போதைய நடைமுறையில் இரு வருடங்களுக்கு இந்தச் சிறுதொகையை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

நாளாந்த தேயிலை விலைபங்கீட்டுக் கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தமாக 620 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும் சில நியமங்களின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படுகின்றன.

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தால் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்.." என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்களில் கேலிக்கையாகக் கூறுவதுண்டு. 

அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.

ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன. 

அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள். 

மலையகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கு அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

அதேபோன்று 'சிறுவர் தொழிலாளர்கள்" என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

மலையக தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

எனினும் ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை 105 ரூபாவாக அதிகரித்துள்ளோம் என கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மார்தட்டிக்கொள்கின்ற போதிலும் அதில் 75 வீத வரவுக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கை குறித்து கரிசனை கொள்ளவில்லை என்றே கூறமுடியும்.

அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் தாம் முன்வைக்கும் சம்பளக் கோரிக்கை எதுவென்பதை இறுதி வரை மக்களுக்கு தெளிவுபடுத்தாததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தொழிலாளர்களின் வரவுக் கொடுப்பனவை விட அடிப்படைச் சம்பளத் தொகையை அதிகரிக்கும் நோக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இறுதி வரை கருத்து தெரிவிக்கவில்லை.

கூட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அப்பால் பல்வேறு தோட்டங்களில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆயினும் இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

அதேபோன்று வெளிப்படைத் தன்மையில்லாமல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்பட்டதையும் இங்கு மறுக்க முடியாது.


நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இலாபமீட்டலிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதன் மூலமே அவர்களின் எதிர்கால இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும். 

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates