Headlines News :
முகப்பு » , » எங்களுக்கும் ஒப்பறேசன் பண்ணுங்க மோடி ஐயா!

எங்களுக்கும் ஒப்பறேசன் பண்ணுங்க மோடி ஐயா!



இந்தியப் பிரதமர் மோடியின் மலையக விஜயத்தின் போது அவரை குளவிகள் கடிக்கக்கூடும் என்றெண்ணி குளவிக் கூடுகளை கலைக்கும் ஒப்பரேஷன் தொடங்கியுள்ளது. மோடி ஹெலிகொப்டரில் வந்திறங்கும் சுற்றுவட்டாரத்திலிருந்து அவர் விஜயம் செய்யும் பாதைகளை அண்டிய பகுதிகளில் உள்ள இந்த குளவிக் கூடுகளை கலைக்கவென பொலிசாரும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சிங்கள செய்திப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. இது பற்றி இன்றைய டெய்லி மிரர் பத்திரிகையின் முகப்பில் ஒரு கேலிச்சித்திரத்தையும் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு இவ்வருடம் நிகழவிருக்கும் வெசாக் சிறப்பு நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் மோடி மலையகத்துக்கும் விஜயம் செய்யவிருக்கிறார். தமிழ் முற்போக்கு முன்னணியும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அவரை யார் வரவேற்பது. யார் அதிக சிரத்தை எடுத்து வரவேற்புக்கான அலங்காரங்களை செய்வது என்கிற போட்டியிளும் வம்புச் சந்தையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த வம்புச் சண்டையில் தாம் தாக்கப்பட்டதாக செந்தில் தொண்டமானும் இரு தினங்களுக்கு முன்னர் பொலிசில் முறைப்பாடு செய்த செய்திகளும் வெளியாகி இருந்தன.


இப்படித்தான் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இளவரசர் சார்ல்ஸ் மலையகத்துக்கு விஜயம் செய்த போது பிச்சைக்காரர்களைத் தேடி தேடி பிடித்து ஜெயிலில் அடித்ததும் நினைவுக்கு வருகிறது.

அவர் போகுமிடங்களிலெல்லாம் மலையக மக்களின் உண்மையான உருவ வடிவம் தெரியாத படி கண்ணில் படுபவர்களையெல்லாம் அழகானவர்களாகவும், அழகாக உடை உடுத்தியவர்களையும் மாத்திரம் கொண்டு வந்து நிறுத்தினர். வேடிக்கை என்னவென்றால் அவர் சென்ற மேக்வூட் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் பெண்கள் கூட அழகான ஆடை அணிவிக்கப்பட்ட பெண்களாக அவர் முன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்கள். அனைவரும் புத்தாடை அணிந்துதான் வேலைக்கு வரவேண்டும் என்று தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கட்டளை இட்டிருந்தது.

அதே மெக்வூட் தோட்டத்தில் பணக்கார ஜாம்பவான்களின் முன்னிலையில் அவரது பிறந்த நாள் கேக்கும் வெட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. அவரின் வருகைக்காக விசேடமாக உலங்கு வானூர்தி இறங்கு தளம் அமைக்கப்பட்டதுடன். அத்தனை காலம் கவனிப்பாரற்று இருந்த தொழிலாளர்களின் குடியிருப்புப் பாதைகள் எல்லாம் அவசர அவசரமாக பல தசாப்தங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டன. லபுகல தோட்டம் பல கொடி செலவில் தயார்படுத்தப்பட்டது. இத்தனையையும் பார்த்துவிட்டு பிரமித்துப் போயிருந்தார் சார்ல்ஸ் இளவரசர்.


ஆனாளப்பட்ட அந்த “வாழ்நாள் மகாராசன்”  அன்றும் "வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்." தமது காலனித்துவ எச்சங்களை பெருமிதத்தோடு கண்டுகளித்துவிட்டுப் போனார்கள். தோட்ட மக்களுக்கு ஆன காரியம் தான் ஒன்றும் இல்லை. இந்த ஐந்தாண்டு பிரதமரால் என்ன ஆகப்போகிறது என்கிற கேள்வி எம் மக்களுக்கு இருக்கத் தானே செய்யும்.

ஆகக் குறைந்தது மோடியால் மலையக மக்களுக்கான  நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் ஏதாவது நிர்ப்பந்தத்தையாவது ஏற்படுத்த முடியுமா என்கிற கேள்விக்கு பதில் உங்களுக்குத் தெரியும்.

மலையகத்துக்கான நிர்வாக அலகு பற்றிய கோரிக்கையை வலுவாக முன்வைக்காத அரசாங்க பங்காளிக் கட்சியாக இருக்கின்ற மலையக முற்போக்கு முன்னணி; மோடியிடமா இதனை முன்வைக்கப் போகிறார்கள் என்கிறீர்களா. சரி இந்த விஜயம் மலையகத்தில் எதனை சாதிக்கப் போகிறது சென்று இத்தனை எடுப்புகளும் இத்தனை அடிபாடும். போனதன் நம் அடிமைகள் வெளியிடப்போகும் தடாலடி சாதனை அறிவிப்புகளுக்காக நாங்களும் மக்களுடன் சேர்ந்து காத்திருக்கிறோம்.

வேறொன்றும் வேண்டாம். ஒரு சில மணி நேரத்துக்காக குளவித் தாக்குதலில் இருந்து தன்னை முற்காத்துக் கொள்ள நடத்திய ஒப்பறேசனை, வாழ் முழுதும் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் மக்களுக்கும் அருளச் செய்து விட்டு போகும்படி மோடியிடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம். ஆமென்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates