Headlines News :
முகப்பு » » ஆறு தசாப்த காலத்தின் பின்னர் இந்திய தலைவரின் மலையக வருகை

ஆறு தசாப்த காலத்தின் பின்னர் இந்திய தலைவரின் மலையக வருகை


டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை எதிர்வரும் 12 ம்திகதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இவரை வரவேற்க மலையகம் தயாராகி வருகின்றது.

மலையக இந்திய வம்சாவளி மக்களின் தொப்புள் கொடி உறவாக இந்திய தேசம் உள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் ஒரு வரலாறு நிகழ்வாகும்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை யின் வரலாறு:

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை 1865 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டது.

மேற்படி வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளுக்கான கட்டடப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை 152 வருடம் பழைமை வாய்ந்ததாகும். டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு 150 கட்டில்களைக் கொண்ட வைத்தியசாலையாக இயங்கியது.

வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தி யில் இயங்கி வந்த டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் கடந்த காலங்களில் தியாக சிந்தையுடன் பணி புரிந்ததை மறுக்க முடியாது.

வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை நிலவியதால் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை, நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலை மற்றும் கண்டி மாவட்ட வைத்தியசா லைக்கு மாற்றப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலும் 2016 ம் ஆண்டு காலப் பகுதியில் பெண் ஒருவ ருக்கு வயிற்றிலிருந்த 15 கிலோ கிராம் சதைக்கட்டியை டிக்கோயா மாவட்ட விசேட வைத்திய நிபுணர்கள் சத்திரசிகிச் சையூடாக அகற்றியமை ஒரு சாதனை யாகும்.

அவ்வாறே ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகளை சத்திர சிகிச்சையினூடாக பிரசவிக்கச் செய்தமை இவ் வைத்தியசாலை வரலாற்றில் முக்கியமானதாகும்.

டிக்கோயா மவட்ட வைத்தியசலையின் புதிய கட்டடம்:

மலையக அரசியல் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அர சாங்கத்தின் 120 கோடி ரூபா நிதியு தவியில் டிக்கோயா மாவட்ட வைத்தி யசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் இன்றைய ஜனாதிபதியும் அக்காலத்தில் சுகாதார அமைச்சரு மாக இருந்தவருமான மைத்திரிபால சிறிசேன அவர்களால் 2011 ஜூன் மாதம் 4 ம் திகதி நாட்டப்பட்டது. இந்நி கழ்வில் அன்றைய இந்தியத் தூதுவ ரும் கலந்து கொண்டார்.

நவீன முறையில் மூன்று மாடிக் கட்டடத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட் டடமானது இந்திய அரசின் 120 கோடி ரூபா நிதியுதவியில் 150 கட்டில்களை கொண்டதாக உள்ளது. சத்திரசிகிச்சைப் பிரிவு. இரண்டு லிப்ட்கள். சமையலறை, சலவையறை ஒன்றுகூடலறை. வைத்தியர்களுக்கான ஓய்வறை.சிறுவர் பூங்கா, வைத்தியர் விடுதிகள் என சகல வளங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மானப் பணிகளுக்கான சகல வளங்களும் பொருட்களும் இந் தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்திய பணியாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் 2013  ஆண்டு பூர்த்தியடைந்தது.

கடந்த மூன்று வருடங்களாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படாத நிலையில் மலையகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. வைத்தியசாலையை உடனடியாகத் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் திலின விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில் "டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் மாகாண அமைச்சினுடாக இவ்வைத் தியசாலையின் அபிவிருத்தியை முன் னெடுக்க முடியும் என எண்ணுகிறேன். ஏனெனில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மாத்தளை மாவட்ட வைத்தியசாலை, நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலை, ஹங்குராங்கெத்த மாவட்ட வைத்தியசாலை ஆகியன சிறப்பாக இயங்குகின்றன. அவ்வாறான நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையையும் சிறப்பாக நடத்த முடியும்" எனத் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம்:

1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம் திகதி இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை காந்தியடிகள் மேற்கொண்டிருந் தார். இது அரசியல் ரீதியான விஜயமல்ல. 1927 ஆம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த காந்தியடிகள் மூன்று வாரங்கள் தங்கியி ருந்து கொழும்பு, கண்டி, யாழ்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹட்டன் உட்பட பல முக்கிய இடங்களுக்கு விஜயம் மேற் கொண்டிருந்தார்.

சிலாபத்தில் அமைந்துள்ள கொரி யாவின் மாளிகையில் தயங்கியிருந்த மகாத்மா காந்தி ஹட்டன் காசல்ரீ சமர்வில் தோட்டத்திலுள்ள செட்டியார் ஒருவரின் பங்களாவிலும் ஒரு நாள் தங்கியிருந்தார். மேற்படி பங்களா தற்போது சமர்வில் தமிழ் வித்தியால யமாக இயங்குகின்றது. செட்டியாரின் கல்லறை இன்றும் காசல்ரீ நீர்த்தேக் கத்தில் காட்சியளிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு விஜயம் மேற்கொண்ட காந்தியடிகள் 35 முக்கிய உரைகளை நிகழ்த்தியதுடன், மாத்தளை விஜயத்தின் போது அவர் அடிக்கல் நாட்டிய பாடசாலையே பாக்கிய தேசிய கல்லூரியாகும். காந்தியின் சுற்றுப் பயணத்தின் போது இயங்கக் கூடியளவிலான அமைப்புகள் இல்லாத போதும் மன்றங்களே அதிகளவில் இயங்கின. அவ்வாறான நிலையில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மகாத்மா காந்தி இந்தியாவிற்கு திரும்பிச் செல்கையில், "திடமான அமைப்பொன்று இலங்கையில் அவசியமானது. இல்லையெனில் சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளை தமிழர்கள் சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்.

நேருவின் மலையக விஜயம்:

1931 ம் ஆண்டு தனிப்பட்ட விஜ யத்தை மேற்கொண்ட ஜவஹர்லால் நேரு நுவரெலியாவில் தங்கியிருந் தார். பின்னர் 1939 ம் ஆண்டு காந் தியின் எண்ணக்கருவிற்கமைய திடமான அமைப்பொன்றை உறுவாக் கும் நோக்கில் காந்தியின் தூதுவராக இலங்கை வந்த நேரு, தனவந்தர்களு டன் ஹட்டன் டன்பார் மைதானத்தில் கலந்துரையாடிய பின்னர் காத்திரமான உரையையும் நிகழ்த்தியதன் பின்னரே 1939 ஜூலை 25 ம் திகதி இலங்கை_ இந்தியன் காங்கிரஸ் உருவாகியது.

இதில் சௌமியமூர்த்தி தொண்ட மான்,அஸிஸ், சி.வி.வேலுப்பிள்ளை, கே.ராஜலிங்கம், எஸ்.எல்.சுப்பையா, ராமானுஜம், ஜீ.எல்.மோத்தா.கே.குமார வேல், வைத்தியலிங்கம் முதலானோர் முக்கியமானவர்கள். இவர்களில் ஏழு பேர் சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மலையக இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிக ளாக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றனர்.

1940 செப்டம்பர் 7ம், 8ம் திகதிகளில் கமபளையில் நேருநகர் பந் தலில் கம்பளை மாநாடு பெருவிழாவாக நடைபெற்றது. இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.சத்திய மூர்த்தி, தொழிற்சங்கத் தலைவரான வி.வி கிரி ஆகியோர் அம்மாநாட்டின் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட னர். இந்நிகழ்வில் தொண்டமான் வர வேற்புரை நிகழ்த்தினார்.

1948 ம் ஆண்டு இலங்கை சுதந்தி ரமடைந்த பின்னர் இலங்கை-இந்தியன் காங்கிரஸின் பெயர் மாற்றப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாறியது. எனினும் 1954 ம் ஆண்டு கருத்து முரண்பாடுகளினால் அஸிஸ் பிரிந்து சென்று ஜனநாயக தொழிலா ளர் காங்கிரஸை ஆரம்பித்தார். அதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங் கிரஸின் செயலாளராக இருந்த சி.வி. வேலுப்பிள்ளை தனியாகப் பிரிந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை உரு வாக்கினார். பின்னர் தொண்டமான் காங்கிரஸ் என்றும் அஸிஸ் காங்கிரஸ் என்றும் இரண்டாகப் பிளவுபட்டது.

1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தி யாவின் பிரதமரான பின்னர் 1957 ம் ஆண்டு மே மாதம் 17 ம் திகதி ஜவ ஹர்லால் நேரு தனது மகள் இந்திராவு டன் இலங்கை விஜயம் மேற்கொண் டிருந்தார். இது ஒரு அரசியல் மற்றும் ஆன்மிக விஜயமாக அமைந்தது. புத்த ஜயந்தியின் 2500 ஆண்டைக் கொண் டாடும் முகமாக நேருவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்தது. இதன் போது அனுராதபுரத்திற்கு விசேட ரயிலில் பயணம் செய்த நேரு, அங்கு ஜயந்தி மாவத்தை எனும் புதிய நகரத்தையும் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் இலங்கை வருகை தந்த ராஜீவ் காந்தி மலையகத்திற்கு வருகை தரவில்லை. இவ்வாறாக இந் தியப் பிரமுகர்களின் வருகை இருந்த போதிலும் அது மாநிலத் தலைவர்க ளின் வருகையாகவே அமைந்தது.

மோடியின் மலையக விஜயம்:

1957 ம் ஆண்டு வருகை தந்த நேருவின் விஜயத்தையடுத்து 60 ஆண்டுகளின் பின்னர், தேசிய வெசாக் நிகழ்வையொட்டி இலங்கை அரசாங் கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வருகை தரவுள்ள இந்தியப் பிரதமரின் மலையக விஜயம் வரலாற்றில் இரண்டாது தடவையாக இடம்பெறுகிறது. 60 வருடங்களின் பின் பாரதப் பிரதமரின் விஜயமாக மோடியின் வருகை அமை கின்றது. எனவே இந்திய தேசத்தின் பிரதமர் நரேந்திரமோடியின் மலையக விஜயம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் டிக்கோயா மாவட்ட வைத்திய சாலையைத் திறந்து வைத்து நோர்வூட் மைதானத்தில் மலையக மக்கள் மத்தியில் விசேட உரையும் நிகழ்த் தவுள்ளார். மோடியின் வருகையை மலையக மக்கள் வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
மு. இராமச்சந்திரன்

நன்றி - தினகரன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates