Headlines News :
முகப்பு » » ஊவா, சப்ரகமுவ மாகாண உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன? - அ.மத்தியூ

ஊவா, சப்ரகமுவ மாகாண உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன? - அ.மத்தியூ


நுவரெலிய மாவட்டத்தை நம்பி அண்மைக் காலங்கள்வரை உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வியைக் கற்றுவந்த ஊவா மற்றும் சப்ரகமுவ மாணவர்களுக்கு தற்போது நுவரெலியா மாவட்டத்தில் கல்வியை தொடர முடியாத நிலை தோன்றியுள்ளது..

மலையகத்தைப் பொறுத்தவரை ஹட்டன், நுவரெலியா கல்வி வலயப்பகுதிகளிலேயே ஓரளவுக்கு ஆசிரியர் வளங்களைக்கொண்ட, குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை உருவாக்கும் கணித, விஞ்ஞான உயர்தர பாடசாலைகள் உள்ளன. எனவேதான் வாய்ப்புக்களின்றித் தவித்த மலையக பகுதிகளான ஊவா, சப்ரகமுவ மற்றும் ஏனைய மலையக பகுதி மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் அனுமதி பெற்று உயர்தர விஞ்ஞான, கணிதப் பிரிவில் கல்வியைக் கற்று வந்தனர்.

இதனால் நுவரெலியா மாவட்ட மாணவர்களுக்குப் பல பாதிப்புக்களும் இருந்தன. அத்துடன் ஊவா, சப்ரகமுவ பகுதிகளில் உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவு பாடசாலைகள் உருவாகாத நிலைக்குப் போய்விட்டன. இதனால் அந்த மாவட்டங்களுக்குரிய மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் பல்கலைக் கழகம் செல்வதே இல்லை என்ற நிலை ஏற்பட்டு, எல்லோருமே நுவ‍ரெலியாவிற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்ளேயே பல்கலைக் கழகம் சென்றனர். இது நுவரெலியா மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக் கூடிய எண்ணிக்கை குறைவடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாகும்..

பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை போன்ற பகுதிகளில் உயர்தர கணித விஞ்ஞான பிரிவை ஆரம்பித்தால் மலையக சமூகம் சார்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். எனவே, மலையக அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வைக் கொண்டுவர அரசை வலியுறுத்த வேண்டும் இதற்கு உடனடித்தீர்வு தேவையாகும்.

 அதேசமயம், நிரந்தரமான தீர்வே மிக முக்கியமாகும். உயர்தர கணித, விஞ்ஞான பெறுபேறுக்கு அடிப்படையாக அமைவதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்தான்.

தற்போது க.பொ.த. சாதாரணதர பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், உயர்தரத்தினை இவ்வருடம் தொடரவுள்ள மாணவர்களுக்கு உடனடி தீர்வு தேவையாக உள்ள நிலையில், மாற்று வழி முறைகள், தீர்வுகள் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றன. அந்தத் தீர்வுகள் பொருத்தமானதாக, சாத்தியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாணவர்கள் 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுத வேண்டியவர்கள். எனவே இடையில் கல்வியை கைவிட நேர்ந்தால் விளைவை அனுபவிக்கப் போவது மாணவ சமூகமேயாகும். மலையகத்தைச் சார்ந்த 8 பேர் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சிலர் அமைச்சர்களாகவும் உள்ளனர். மாகாண சபையிலும் அமைச்சர்களாக இருக்கின்றனர்: இது தொடர்பில் இவர்கள் ஏன் தேவையானவற்றைச் செய்யவில்லை? உண்மையில் இப்பிரச்சினையைப்பற்றி இவர்கள் கவனம் செலுத்தவில்லையா? எனவே ஊவா, சப்ரகமுவ பிரதேச உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான தீர்வு என்ன? இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இதுபோன்ற அடிப்படை பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையும், அக்கறையீனமுமே ஆகும். எனவே இனிமேலாவது இப்பிரச்சினைக்கு உடனடியான நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும்.

தீர்வானது பல தரப்பினரதும் ஆலோசனைகளுடன் மேற்கொள்வதே சிறந்தது. இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவது தொடர்பாக பேசப்படுகிறது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள் நியமனம் செய்வது மற்றும் வடகிழக்குப் பகுதி பட்டதாரிகளை நியமிப்பது என்று பல தீர்வுகள்பற்றி தற்போது கூடிய அக்கறை காட்டப்பட்டுவருகிறது

இதே வேளை, மாணவர்களுக்கு தற்காலிக தீர்வாக ஊவா மற்றும் சப்ரகமுவ மாணவர்களை அந்தந்த பிரதேச பாடசாலைகளிலேயே பதிவு செய்துவிட்டு, அவர்களை நுவரெலிய மாவட்ட பாடசாலைகளில் கல்வியைத் தொடர அனுமதிப்பதுடன், பின்னர் தமது பிரதேச பாடசாலைகளுக்கே சென்று பரீட்சை எழுதச் செய்யலாம் (பதிவுகள் எதையும் மாற்றாமல் தற்காலிக இடமாற்றம்போல்.) நுவரெலியா மாவட்டத்தில் கற்கும் பாடசாலைகளில் தினவரவு மற்றும் ஏனைய நடைமுறைகளை மேற்கொண்டு, அவற்றைப் பின்னர் பரீட்சை எழுதுவதற்கு பதிவு செய்த பாடசாலைக்கு அனுப்பமுடியும். இதனை மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள் ஆலோசனைகளுடன் மேற்கொள்ள வேண்டும். அதேவேளை குறித்த கால எல்லைக்குள் ஆசிரியர் பற்றாக் குறையை தீர்த்து மாவட்டத்திற்கு ஒரு கணித, விஞ்ஞான பாடசாலை என்ற ரீதியிலாவது தீர்வு காண வேண்டும்.

பரந்துபட்ட கலந்துரையாடல் ஒன்றை மாகாண, வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள், கல்வி சார் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு, நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மேற்கொண்டு சாத்தியமான தீர்வை கல்வி இராஜாங்க அமைச்சர் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates