பத்தனை சிறிபாத தேசியக் கல்வியற் கல்லூரியானது
தோட்டப்புர மாணவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின்
அடிப்படையில் உருவாக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.
75% மான
மலையக மாணவர்களை உள்ளடக்க வேண்டும் அதன் மூலம் மலையகத்தவர்கள் ஆசிரியர் சேவையில்
இணைந்து மலையகக் கல்வி வளர்ச்சிக்கு உதவ வழிசமைக்க வேண்டும் என
எதிர்பார்க்கப்பட்டாலும் 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை
கல்வியற்கல்லூரிக்கு இணைத்துக் கொள்வதற்கான நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில்
மலையக மாணவர்களில் பெரும்பாலானோரை உள்ளடக்காத நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
தோட்டப்புறத்தை உள்ளடக்காத ஏனையோரை அதிகளவில்
உள்வாங்கி நேர்முகத்தேர்வுக்கு அழைத்ததாக செய்திகள் கசிந்துள்ளன. இதனால் கல்வியற்
கல்லூரிக்குச் சென்று ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் காத்திருந்த பெரும்பாலான
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள போதும் தன்னை
நேர்முகத்தேர்விற்கு ஏன் அழைக்கவில்லை என கல்லூரி வாசலில் மாணவர்கள்
காத்துக்கிடக்கின்றனர். அத்தோடு தனக்கு
அநீதி இழைத்ததால் மனித உரிமை ஆணைக்குழுக்கு சென்று முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்
மாணவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான அநீதிக்கு காரணம், தோட்டப்புற மாணவர்களை உள்ளடக்கிய
பெயர் பட்டியலைத் கல்லூரி நிர்வாகம் தொலைத்துவிட்டதாகவும் பின்னர் அப்பட்டியலின் பிரதியைத் தேடி அவசர
அவசரமாக நேர்முகத்தேர்வுக்கு மாணவர்களுக்கு அழைத்ததாகவும் அதனால் பல குழப்பங்கள்
ஏற்பட்டிருக்கலாம் எனவும்
நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நேர்முகத்
தேர்வில் ஜனநாயக முறையை பின்பற்றவில்லை என மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையில் ஜனநாயகத் தன்மையாக நேர்முகத்தேர்வு
நடைபெற்றதா, மலையக மாணவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டனர்,
இதற்கு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளனவா போன்ற விடயங்களை உடனடிமாக
அலசியாராய வேண்டும். காரணம், இது தனிப்பட்ட மாணவர்களின்
பிரச்சினை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தின் பிரச்சினை. மலையகத்தவர்கள் திட்டமிட்ட
அடிப்படையில் உரிமை மீறலுக்கு உள்ளாவது சாதாரணமான விடயமாகிவிட்டது. ஆனால் குட்டக்
குட்ட குனிபவர்களாக எத்தனை காலம் தான் இருப்பது?
ஜுன் மாதத்தில் நேர்முகத்தேர்வுக்கு
அழைக்கப்பட்டவர்களை கல்வியற் கல்லூரிக்கு இணைக்க உள்ளனர். இதற்கு முன்
இப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் முன் வர வேண்டும். ஜனநாயக முறையின்
அடிப்படையிலும் பெபேறுகளின் அடிப்படையிலும் 75 சதவீதமான மலையக மாணவர்களை
இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
கல்விப் பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணனின்
கவனத்துக்கும் இதனைக் கொண்டு வருகிறோம். இதன் உண்மைத் தன்மையை தேடிப்பார்த்து உரிய
நேரத்தில் வேகமாக இயங்காவிட்டால் மலையகத்துக்கான ஆசிரியர்கள் பலர் கிடைக்காமல்
போய் விடுவார்கள்.
உரிய அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தகுந்த
நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...