Headlines News :
முகப்பு » » சொந்தம் கொண்டாடும் கலாசாரம் மலையகத்தில் எப்போது வரும் - மைக்கல் ஜோக்கிம்

சொந்தம் கொண்டாடும் கலாசாரம் மலையகத்தில் எப்போது வரும் - மைக்கல் ஜோக்கிம்

 
இராஜாங்க கல்வியமைச்சர் அண்மையில் பத்தனை, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு சுற்றாடல் உட்பட அனைத்து அம்சங்களிலும் சீர்கேடுகள் காணப்படுவதாக கவலை தெரிவித்திருந்தார். இந்த விடயத்திற்கு அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்ததுடன், பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து கட்டுரைகளையும் எழுதி வருகிறார்கள்.

அனைவருமே பல போராட்டங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் கல்லூரி பாதுகாக்கப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். கல்லூரியின் சூழ்நிலை இப்படியிருந்தால் அங்கிருந்து கற்று வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் எப்படித் திறமையானவர்களாக வெளியேற முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் அசட்டைப் போக்கு குறித்து காரசாரமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அனைவரும் இந்த கல்லூரி பாதுகாக்கப்படவேண்டுமென்ற ஆதங்கத்துடனேயே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் காட்டும் அக்கறை பாராட்டப்பட வேண்டும். அதேவேளை இந்த விவகாரம் வெளிக் கொணர்ந்திருக்கும் இன்னொரு அம்சம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

ஏன் கல்லூரிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது? நிர்வாகம் சொல்வது போன்று போதிய நிதி வசதி வளம் இல்லாமை மட்டுமா? அல்லது இந்த கல்லூரிக்கு சொந்தம் கொண்டாட எவருமே முன்வரவில்லை என்பதா? இது மலையக பெருந்தோட்ட மக்களின் சொத்து என்றால் அதற்கு யார் சொந்தம் கொண்டாட வேண்டும் என் ஒரு கேள்வி எழுகிறதல்லவா?

பெருந்தோட்ட மக்களை நிரந்தர அடிமைத் தொழிலாளர்களாக வைத்திருப்பதற்காக காலனித்துவவாதிகள் மக்கள் மத்தியில் தமக்கு எதுவுமே சொந்தமில்லை என்ற உணர்வை ஏற்படுத்தவே வீடுகள் என்ற பெயரில் லயன் அறைகளையும் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து அவை இலவசமாக வழங்கப்படுவது போன்ற மாயையும் ஏற்படுத்தியிருந்தனர். மக்கள் மரணமானபோது பிரேதப்பெட்டிகள் உட்பட, சடலத்தை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்து மரணத்தின்போதுகூட நாங்கள் “எதற்கும் சொந்தக்காரர்கள் அல்ல” என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தார்;கள். மொத்தத்தில் நாம் எதற்கும் சொந்தமில்லாதவர்கள், நாம் எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாது. சொந்தமில்லாத எதனைப் பற்றியும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அதனை பாதுகாக்க நாம் ஏன் அக்கறைப்பட வேண்டும் என்று “சொந்தம் கொண்டும் கலாசாரமே” இல்லாத ஒரு சமூகமாக மலையக சமூகம் வளர்க்கப்பட்டிருக்கிறது. நாம் சொந்தம் கொண்டாடும் கலாசாரம் இல்லாத ஒருசமூகமாக வளர்ந்திருக்கிறோம் என்பதை தான் இப்போது நடக்கும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

இதே சொந்தம் கொண்;டாடாத கலாசாரத்தையே ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியிலும் காணமுடிகிறது. நிர்வாகம் , விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பல நூறுபேர் கற்கும் ஒரு பொது சொத்து எப்படி சொந்தம் கொண்டாட எவருமில்லாத ஒரு நிறுவனமாக இருக்க முடியும?;.

நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணம் சொல்லும் பீடாதிபதி புல் வெட்டும் இயந்திரம் இயங்கவில்லை என்று மிகவும் சாதாரண காரணத்தை காட்டி நிலைமைக்கு தான் காரணமில்லை என்று சொல்லி “சொந்தம் கொண்டாட” முடியாததற்கான காரணத்தை சொல்கிறார். மறுபுறம் எதிர்கால ஆசிரியர்களை உருவாக்கும் நிறுவனம் என்ற வகையில் மாணவர்கள் ''எமது கல்லூரி" என்று நாம் சொந்தம் கொண்டாடியிருந்தால் கல்லூரிக்கு இந்த நிலைமை வந்திருக்காது. மாணவர்களோ, விரிவுரையாளர்களோ சொல்லி கல்லூரிக்கு சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.

கல்லூரியில் அனைவரும் நினைத்திருந்தால் ஒரு நாள்  இரண்டு நாள் சிரமதானத்;தின் மூலம் வளப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் தங்கள் கல்லூரியை சீராக வைத்திருக்க முடியாதா?. கல்லூரி மைதானம் புல் மண்டிக்கிடப்பதால் மாணவர்கள் பெருந்தெருவில் காலை அப்பியாசங்களை செய்தார்கள் என்று அறிய முடிகிறது. மைதானத்திக்கு இந்த மாணவர்கள் ஏன் சொந்தம் கொண்டாவில்லை?

மறுபுறம் இதற்கு முன்னர் வளப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் சிரமதானங்கள் மூலம் கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தியிருந்தாலும்கூட நிர்வாகம்; இதற்கென இருக்கும் ஊழியர்களை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களை தக்கவைக்கவில்லை அதனால் மாணவர்கள், நல்லெண்ணம் படைத்த சில விரிவுரையாளர்கள் மத்தியில் அந்த ஆர்வம் இல்லாமல் போய்விட்டது என்பதை கடந்த காலத்தில் இவ்வாறான நல்ல முயற்சியில் ஈடுபட்ட விரிவுரையாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ளமுடிந்தது. இது நிச்சயமாக நிர்வாகத்தின் திறமையின்மைதான். ஆயினும் இந்த சூழலில்கூட சொந்தம் கொண்டாடும் தன்மையை உருவாக்க முயன்ற விரிவுரையாளர்களும், இதில் பங்குபற்றி மாணவரும் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். முன்னேற்றத்தை விரும்பாத காலைவாரிவிடும் சிலரும் இந்த நிலைமைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்படியானவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது.

நிர்வாகம் மற்றவர்கள் குறைசொல்லி தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் இவ்வாறான ஒரு நிலை காணப்படுவதாகவே வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் முடிவுக்குவர வேண்டியுள்ளது.

எங்களுக்கு பின்னர் இந்தக் கல்லூரி ஆயிரக்கணக்கான மாணவருக்கு பயன்பட வேண்டும் என்று நிர்வாகமும், விரிவுரையாளர்களும் கல்லூரிக்கு சொந்தம் கெண்டாட விரும்புகிறார்களா? எங்களுக்குப் பின்னர் எமது சமூகத்தின் அறிவுக் கண்களை திறக்கவிருக்கும் ஆசிரியமாணவர்களுக்காக இந்த கல்லூரியை பாதுகாப்பது நமது கடமை என்ற சொந்தம் கொண்டாட ஆசிரியர் மாணவர்கள விரும்புகிறார்களா என்பதை இந்த கல்லூரி சமூகம் மக்களுக்கு காட்டியாக வேண்டும்.

அடிமை வாழ்க்கை வாழ்ந்த தென்னாபிரிக்கா நாட்டு மக்கள் சொந்தம் கொண்டாடும் பண்பை வளர்த்துக் கொண்டவுடன் எவ்வளவு விரைவாக முன்னேறினார்கள் என்பதை பார்த்தாவது சொந்தம் கொண்டாடும் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டாமா?

ஒரு சமூகம் முன்னேற, அச்சமூகத்துக்கு சொந்தம் கொண்டாடும் பண்பு மிகவும் அத்தியாவசியமானது. ஸ்ரீபாத கல்லூரி சமூகம் சிரமதானம் மூலம் நிலைமையை முடிந்தளவு சீர்படுத்த முன்வந்து செயற்படவேண்டும். அதற்கு சமூக நலன்விரும்பிகளும், பல பொது தொனண்டு நிறுவனங்களும் நிச்சயமாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றன. 

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates