Headlines News :
முகப்பு » » அரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு - அருண் அருணாசலம்

அரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு - அருண் அருணாசலம்


பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகள் மட்டுமின்றி அரச நிறுவனங்களும் நிர்வகித்து வருகின்ற போதிலும் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளில் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரச நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகவே இருக்கின்றன.

இது தொடர்பில் பல்வேறு செய்திகள் கட்டுரைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அரச பெருந்தோட்ட நிறுவனங்களான அரச பெருந்தோட்ட யாக்கம் (S.L.P. C) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை (JANAVASAMA) மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் நிறுவனம் என்பவற்றால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களில் தொழிலாளருக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமை, போதிய வேலை நாட்கள் வழங்காமை, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவை வழங்கப்படாமை, தோட்டத்தை முறையாக பராமரிக்காமை, போன்ற பல்வேறு சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறான சீர்கேடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அங்கு வேலை செய்யும் தோட்டத்தொழிலாளர்கள்தான்!

அரசாங்கத்துக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டன. அப்போது கண்டி, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி, புஸல்லாவை போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான தோட்டங்கள் அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பிளாண்டேஷன் நிறுவனம் என்பவற்றின் கீழ் தொடர்ந்தும் இயங்குவதற்கு விடப்பட்டன.

இந்தத் தோட்டங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் தொடர்பில் அவ்வப்போது பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வீதி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு போதுமான வேலை நாட்கள் வழங்கப்படாததால் பெரும் பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகினர். இதனால் வருமானத்துக்காக வெளியிடங்களில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தோட்டங்கள் பராமரிக்கப்படாததால் புல் வளர்ந்து புதர் காடுகளாக மாறியுள்ளன. பாம்பு, விஷப் பூச்சிகள், பன்றி, சிறுத்தைகள் வாழும் இடங்களாக மாறியுள்ளன. தொழிலாளரின் குடியிருப்புக்கள் திருத்தப்படாததால் மேலும் சிதைவடைந்துள்ளன.

அடிப்படை வசதிகளான நீர், பாதை, சுகாதாரம், கழிவறைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

தோட்டங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலேமே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் தொழிலாளர்கள் நினைக்கின்றனர். அதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை கடந்த காலங்களில் சந்தித்து தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்தே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போதும் கூட அவர்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே மேற்படி அரச பெருந்தோட்ட நிறுவனத்தோட்டங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றி அரச பொது நிறுவனங்கள் அமைச்சர் கபிர் ஹாசீம் மற்றும் தமிழ் முற்போக்குக்கூட்டணி தலைவர்கள் ஆகியோருக்கிடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு அமைச்சின் செயலாளர் தலைமையில் மூன்று நிறுவனங்களினதும் தலைவர்கள் அடங்கிய குழுவினை அமைத்து இடைக்காலத்தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு வரவேற்கத்தக்க விடயம் என்றாலும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு நீண்ட காலத்தீர்வு அவசியமாகும். தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரமே தேயிலையை நம்பியாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது அவர்கள் தோட்டங்கள் மாறிச்செல்லப்போவதில்லை. நிரந்தரமாக அதே தோட்டத்தில் இருக்கப்போகிறவர்கள்.

இதனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான காணி, வீடு, தொழில் உத்தரவாதம், அடிப்படை வசதிகள், ஊழியர் சேமலாப நிதியம் அனைத்தையும் உறுதிப்படுத்த மலையக தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனிடையே, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.தொ.கா. தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

தொழிலாளரின் நாள் சம்பளம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் இணக்கமான ஒரு தீர்வு காணப்படாமையே இதற்குக் காரணமாகும். இ.தொ.கா. தொழிலாளருக்காக நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதிலிருந்து பின்வாங்கியது.

பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் உலகச் சந்தையில் தேயிலையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாதெனவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகிறது. இதுவே புதிய கூட்டு ஒப்பந்தம் உரிய காலத்தில் செய்து கொள்ளப்படாமைக்கான காரணமாகும். இதேவேளை அரசின் வரவு செலவு திட்டத்தின் மூலம் தனியாருக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட போதும் அதனை தோட்டங்கள் வழங்காமல் இழுத்தடித்து வந்தன. இந்த கொடுப்பனவை வழங்குவதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர்களான அமைச்சர்கள் மனோகணேசன், பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் கொழும்பில் அக்கட்சியினர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் என்பவை குறிப்பிடத்தக்கவை.

கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் சம்பள உயர்வு கிடைக்காத நிலையில் இடைக்கால கொடுப்பனவாக இந்த 2500 ரூபாவை நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கேட்டிருந்தது. ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்த கொடுப்பனவு தொழிலாளருக்குக் கிடைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் உறுதியளித்துள்ளனர்.

எவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு வேறு அரசின் வரவு செலவுத்திட்ட அறிவிப்பினூடாக 2500 ரூபா கொடுப்பனவு வேறு. இரண்டும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக குழப்பிக்கொள்ளாமல் தனித்தனியாக பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates