Headlines News :
முகப்பு » » மலையகத்திற்கு ஏன் பல்கலைக்கழகம் வேண்டும்! - பா.திருஞானம்

மலையகத்திற்கு ஏன் பல்கலைக்கழகம் வேண்டும்! - பா.திருஞானம்


நாட்டின் கல்வி முறையில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவது சிறந்த அம்சமாகக் காணப்படுகின்றது. ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி வாய்ப்புகளும் இன, மத, மொழி, பால், வகுப்பு, சமூக வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கின்றது. அவரவர் தாய்மொழி மூலம் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதமாகும். இதன் காரணமாக நம் நாடு அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான எழுத்தறிவினையும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுமளவிற்கு உயர் கல்வியின் அடைவுகளையும் பெற்றுள்ளது.

சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் 1945இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வி முறைமை மற்றும் அதன் பின்னர் அரசாங்கங்களால் கல்வி மேம்பாட்டிற்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கைகள் என்பன நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளன.

ஆரம்ப கல்வி மற்றும் இரண்டாம் நிலைக்கல்வி மட்ட அடைவுகளில் நாம் திருப்தியான அடைவுகளை கொண்டிருந்த போதிலும் பல்கலைக்கழக மட்டத்திலான பெறுபேறுகளில் அவ்வாறு கொள்ள முடியாதுள்ளது.

ஏனெனில்,  2013இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றியோர் 2,46,665 பேராகும். அதில் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிப்பெற்றவர்கள் 1,43,740 பேர்.

பல்கலைக்கழக அனுமதிக்க விண்ணப்பித்தோர் 55,901 பேர்.

 பல்கலைக்கழக அனுமதிப் பெற்றோர் 25200 பேர்மாத்திரமேயாகும். இதன்படி நோக்குமிடத்து க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றியோரில் 10.2 வீதத்தினர் மாத்திரமே பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பினை இன்று பெறுகின்றனர். அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிப் பெற்ற 1,43,740 பேரில் 17.5 வீதத்தினரே பல்கலைக்கழக உயர்கல்வி முறைக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மலையகத்திலிருந்து உயர் கல்விக்கு உள்வாங்கப்படுவோரில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உயர்கல்விக்கு மலையக மாணவர்கள் மேலும் உள்வாங்கப்பட வேண்டுமானால் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

இது குறித்து மலையகத்தைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரனிடம் வினவிய போது, தற்போது மலையகத்திலுள்ள பெரும்பாலானோர் தமது உயர்கல்வித் தேவைகளுக்காகத் தனியார்துறை கல்வி நிறுவனங்களையே நாடவேண்டியுள்ளது. இது பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களுக்கு ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், வறியவர்கள், கீழ்மட்ட, மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு இது எவ்வாறு சாத்தியமாக முடியும் என்பது கேள்விக்குறியாகும். தனியார்துறை கல்வி நிறுவனங்கள் அறவிடும் பெருந்தொகையான பணத்தினை இவ்வறிய பிள்ளைகளின் பெற்றோர்களால் நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்த முடியுமா?

இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனும் தமது வாழ்க்கையை வெற்றிகரமானதாக அமைத்துக் கொள்ளவே விரும்புகின்றான். வாழ்க்கையின் வெற்றி என்பது தனக்கு விருப்பமான உயர் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலொன்றினை அமைத்துக் கொள்வதிலேயே தங்கியுள்ளது.

இன்றைய உலகில் நல்ல உயர்கல்வியை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்வதன் மூலமே இதனை சாத்தியப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சாத்தியமான உயர்கல்வி சூழல் இன்னும் முழுமையாக தோற்றுவிக்கப்படவில்லை.

அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் என்ற நிலைமையை இலவச கல்வியை அறிமுகப்படுத்தி 75 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் நம் நாடு அடைந்து கொள்ள முடியாதுள்ளமை ஓர் பின்னடைவே ஆகும்.

பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பாடநெறிகள் அறிவியல் சார்ந்தவையாகவும் இன்றைய காலக்கட்டத்திற்குப் பொருந்தக் கூடியவையாகவும், குறிப்பிட்ட அறிவியல், துறையைச் சார்ந்து இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தரக் கூடியவையாகவும், பல்கலைக்கழகங்களில் கற்று வெளியேறும் பட்டதாரிகளின் சிந்திக்கும் திறன் மற்றும் அறிவியல் செயலாற்றம் என்பனவற்றை மேம்படுத்துவதாகவும், உலகலாவிய தொழிற்சந்தையில் போட்டியிட்டு தனக்குரிய தொழில் தகைமையின் அடிப்படையில் தொழிலொன்றினைப் பெற்றுகொள்ளக் கூடியதாயுமிருத்தல் வேண்டும். இதற்கு இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும்.

அவற்றினால் வழங்கப்படும் பட்டங்கள் உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றிருத்தல் வேண்டும். வெளியேறும் பட்டதாரிகள் ஆய்வியல் திறன்களையும் பிரச்சினைகளுக்கு நடைமுறை சார்ந்த தீர்வுகளை காணக்கூடிய தகைமைகளைக் கொண்டவர்களாயிருத்தல் வேண்டும்.

இலங்கையிலுள்ள ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர ஏனையவைகள் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவைகளாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எனவே, அனைத்தும் உலக தரத்திற்கு தரம் உயர்த்தப்படல் வேண்டும். இதனை அடைவதற்கு பல்கலைக்கழகங்களில் பெளதீக கற்றல் மற்றும் கற்பித்தல் வசதிகள், ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பவற்றிற்கான வளங்களை அதிகரித்தலும் தொழில்நுட்ப வாய்ப்புகளை விரிவுபடுத்தலும் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளாகும்.

நாட்டின் உயர் கல்வித்துறை தொடர்ச்சியாக எதிர்நோக்கும் மற்றுமொரு முக்கிய பிரச்சினை, பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கற்கை நெறிகள் மற்றும் பட்டங்களுக்கும் விருத்தியடைந்துவரும் கைத்தொழில் துறையின் தொழிலாளர் தேவைகளுக்குமிடையே பொருத்தப்பாடு காணப்படாமையாகும். இது தொழிற்சந்தையில் தேவைகளை கவனத்திலெடுத்து பல்கலைக்கழக கற்கை நெறிகளை வடிவமைக்காமை, மிகவும் ப.ைழமை வாய்ந்த கற்கை நெறிகளை நவீன உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்காமை, தனியார் துறை சார்ந்த கைத்தொழிற்றுறையுடன் அரச பல்கலைக்கழகங்கள் இணைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமை, புதிய ஆய்வுகள், புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகள் போதியளவு இடம்பெறாமை போன்றவற்றால் தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே, உயர்கல்வி சார்ந்த மேற்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பின்வரும் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் பெளதீக மற்றும் மனித வளங்களை அதிகரிப்பதனூடாக அந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பிராந்திய தேவைகள், சமூகங்களை உள்வாங்கல், புதிய பாட நெறிகளை அறிமுகப்படுத்தல், மேலதிக பட்டதாரி மாணவர்களை உள்வாங்கள் என்பதன் அடிப்படையில் புதிய பல்கலைக்கழகங்களை மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளை ஸ்தாபித்தல், உயர்கல்வியில் பின்தங்கிய சமூகங்களுக்கு குறிப்பாக பெருந்தோட்ட இந்திய வம்சாவளி சமூகம், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான வறியவர்கள், மிகவும் வசதிகுறைந்த பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் விஷேட கோட்டா முறையினை அறிமுகப்படுத்தல் மற்றும் அனுமதிக் கொள்கையை கடைப்பிடித்தல்.

பொருளாதார ரீதியான பிரச்சினைகளால் உயர்கல்வியைத் தொடர முடியாதிருக்கும் மற்றும் இடைநிறுத்தம் மாணவர்களுக்கு மேலதிக நிதிவசதிகளை அளித்தல், அறிவியல் ரீதியாக வளர்ச்சியுறும் உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் கைத்தொழிற்துறையின் தேவைகளை கருத்திற் கொண்டும் பட்டதாரிகளின் தொழில்சார்ந்த போட்டித்திறனை மேம்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக கற்கை நெறிகளை புதுப்பித்தல் வேண்டும். புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தல் வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டிருந்ததைப் போல சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் 1945இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை மற்றும் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்களால் கல்வி மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்கல்வி வரையிலான கல்விக் கொள்கைகள் என்பன இலங்கையின் கல்வி மட்ட அடைவுகளுக்கு பெரிதும் பற்காற்றியுள்ளதாயினும் இலங்கையில் வாழும் எல்லா சமூகத்தினரும் எவ்வித தடைகளுமின்றி இலவச கல்விக்கான வாய்ப்புக்களை அனுபவிக்கக்கூடியதாக இருந்ததா? மற்றும் அனைத்து சமூகத்தினருக்கும் 194இலிருந்து அரசின் இலவச கல்விக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டதா? என்ற வினாவை எழுப்பினால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் 1975ஆம் ஆண்டு தோட்ட பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் வரை அவர்களுக்கு இலங்கை அரசின் இலவச கல்வியை பெற்றுக் கொள்வதற்கான உரிமையும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டிருந்தன.

இந்நாட்டில் பிறந்த அனைத்து குடிமகனுக்கும் இவ்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு மட்டும் ஏறக்குறைய 30 வருடங்கள் குறிப்பாக ஒரு பரம்பரையினருக்கே இலவச கல்வி மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை மிகவும் வேதனையுடன் சுட்டிக் காட்டவேண்டும். இதன் காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களின் கல்வி அடைவுகள் குறிப்பாக உயர்கல்வி அடைவுகள் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களான சிங்கள மக்கள் முஸ்லிம்கள் வடகிழக்குத் தமிழர்கள் ஆகியோரின் அடைவுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

உதாரணமாக பின்வரும் தரவுகள் இதனை எடுத்து காட்டுகின்றன.

பல்கலைக்கழங்களில் கல்விகற்கும் மொத்த மாணவர்கள் ஏறக்குறைய 90000 பேர் இவர்களில் இந்திய வம்சாவளிச் சேர்ந்தவர்கள் வெறும் 476பேர் மட்டுமேயாகும். இதிலும் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகள் 200க்கும் குறைவானோராகும்.

2013ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பெற்றோர் 25200 பேராகும். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 123 பேர் மட்டுமேயாகும். இதிலும் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகள் 60 இற்கும் குறைவானோரே.

இவர்களில் 60% த்திற்கும் அதிகமானோர் கலைத்துறைக்கே தெரிவு செய்யப்படுகின்றனர்.

30 வீதத்தினர் முகாமைத்துவ பீடத்திற்கும் 10 வீதத்திற்கும் குறைவானோரே மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், கணணி ஆகிய பீடங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். வருடத்திற்கு 15 பேருக்கும் குறைவானோரே இத்துறைகளுக்கு தெரிவாகின்றனர். பல்கலைக்கழத்தில் கடமையில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர்கள் 794பேரில் மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தோர் ஒருவரும் இல்லை. (5பேர் ஓய்வுபெற்றுள்ள நிலையில்) விரிவுரையாளர்கள் 4482 பேரில் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 18பேர் மாத்திரமேயாகும். மொத்த பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் 5176பேரில் 15 இலட்சம் மக்கள் தொகையையும் ஏறக்குறைய 7% இனவிகிதாசாரத்தையும் கொண்டுள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் சமூகத்தைச் சாந்தோரின் சதவீதம் 0.35 மட்டுமேயாகும்.

எனவே உயர்கல்வி மேம்பாடு மற்றும் பல்துறைசார் சமூக எழுச்சி அறிவியல் வளர்ச்சி என்பன கருதி

01. மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரி ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

02. பல்கலைக்கழக அனுமதியில் விசேட கோட்டாமுறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

03. விஞ்ஞான மற்றும் கணித பாடநெறித்துறைகள் புதிதாக மலையகப் பாடசாலைகளில் ஆரம்பித்தல் வேண்டும்.

04. போதியளவான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

05. பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத்தரம் உயர்த்தப்படல் வேண்டும். அவற்றில் கா.பொ.த. உயர்தரம் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

06. கா.பொ.த. உயர்தரமுள்ள பாடசாலைகளில் விடுதி வசதிகளும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் கூறினார்.

இது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனிடம் வினவிய போது, தற்போதைய நல்லாட்சியில் 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் கல்வி வளர்ச்சி மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரி ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எனக்கு பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் காணப்படும் 3000 தமிழ் மொழிமூலமான அனைத்துப் பாடசாலைகளும் எனது நேரடி கண்காணிப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதன்படி மலையகத்தில் கணிதம், விஞ்ஞானம், விளையாட்டு, நுன்கலை கல்வி கற்பிப்பதற்கு 25 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 250 பில்லியன் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டிய, கெட்டபுல தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கு 05 ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள் ஆங்கில மொழியில் கல்வி கற்க புதிய பாடசாலை ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தில் ஒவ்வொரு பிரதேச காரியாலங்களுக்கு உட்பட்ட தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 2016 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு காலத்திற்கான புதிய கல்வி கொள்கையில் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது. மலையகத்தில் ஆரம்ப மாதிரி பாடசாலைகளும் அமைக்கப்படவுள்ளன. அதேபோல் தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு ஆளணி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர் தரத்தில் கணித, விஞ்ஞான கல்வியை அபிவிருத்தி செய்யவும், அதற்கான ஆசிரிய நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலை அதிகரிக்கும் பட்சத்தில் மலையகத்தின் கல்வி வளர்ச்சியும் உயர் கல்வி அபிவிருத்தியும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான செயற்றிட்டம் வடகிழக்கு பகுதியிலும் ஆரம்பிக்கப்படும். அங்கும் யுத்தத்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளன. அவையும் இதேபோல் அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார்.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates