Headlines News :
முகப்பு » » ஹட்டன் நகரம் மட்டுந்தான் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமா? - என்னென்ஸி

ஹட்டன் நகரம் மட்டுந்தான் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமா? - என்னென்ஸி



நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலிய –  மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நுவரெலியா மாநகர சபை, ஹட்டன் – டிக்கோயா நகர சபை, தலவாக்கலை – லிந்துலை நகர சபை என்பன அமைந்துள்ளன.

இந்தத் தேர்தல் தொகுதியில் நுவரெலியா பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபை என்பன காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மட்டும் சுமார் 30 சிறிய நகரங்களும் கடை வீதிகளும் உள்ளன. இவற்றில் கொட்டகலை, கந்தப்பளை, நானுஓயா, நாகசேனை, பசுமலை, அக்கரப்பத்தனை, வட்டகொடை போன்றவை சுமாரான நகரங்கள். ஏனையவை சிறிய கடை வீதிகளாகும்.

அதேபோன்று அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களும் கடைவீதிகளும் (பஜார்) அமைந்துள்ளன. மஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வூட், கினிகத்தேன என்பன சுமாரான நகரங்கள். ஏனையவை கடைவீதிகள் (பஜார்).

இந்த மாநகரம், நகரங்கள் மற்றும் கடைவீதிகளில் பெரும்பாலும் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் சகோதர சிங்கள மற்றும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.

நுவரெலியா மாநகர சபையைத்தவிர ஏனைய இரண்டு நகர சபைகளும் பிரதேச சபைகளின் கீழ்வரும் சிறிய நகரங்களும் நிச்சயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மேற்படி நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், பொது சுகாதாரம், வீதிகள் உள்ளிட்ட அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆனால், மலையக அரசியல் தலைவர்கள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் இந்த நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை. அதேவேளை நுவரெலியா மாநகரம் அபிவிருத ்தியடைவதற்கு அங்கிருந்து தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மட்டுமன்றி அரசாங்கமும் முன்னுரிமை கொடுக்கிறது.

நுவரெலியா நகரம் பொருளாதார ரீதியிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை, விவசாயம் போன்றவற்றிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் அந்த நகரை அபிவிருத்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் உள்ளது. அதனடிப்படையில் நுவரெலியா அபிவிருத்தி செய்யப்படுகிறது.

ஆனால், ஹட்டன் – டிக்கோயா, தலவாக்கலை – லிந்துலை ஆகிய இரண்டு நகர சபைகளையும் எடுத்துக்கொண்டால் மலையக அரசியல்வாதிகள் ஹட்டன் நகர அபிவிருத்திக்கே முதலிடம் வழங்குகின்றனர். இது இன்று நேற்றல்ல. நீண்ட காலமாகவே இடம்பெற்று வரும் ஒரு விடயமாகும்.

ஹட்டன் நகரத்தில் வீதிகள், நகரக்கட்டமைப்பு, பொதுவ சதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது உண்மை. பிரதான ரயில் நிலையம், பஸ் நிலையம், பிரசித்தி பெற்ற பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இருப்பதால் தமது தேவைகளுக்காக நகரத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். அந்த வகையில் ஹட்டன் நகரம் நிச்சயம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதேவேளை, ஹட்டன் நகரத்துக்கு மலையக தமிழ் அரசியல்வாதிகள் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் ஏனைய மலையக நகரங்களுக்கும் கொடுப்பதில்லை? அல்லது கொடுக்க முடியாது? ஹட்டனில் மட்டுந்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். ஏனைய நகரங்களில் வாழ்பவர்களெல்லாம் வேற்றுக்கிரகவாசிகள் என்று நினைக்கின்றனரோ தெரியவில்லை.

முன்னர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் கொட்டகலையை அபிவிருத்தி செய்து அந்த நகரை மலையகத்தில் முதல் நகரமாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. பின் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது கொட்டகலை சுயமாக முன்னேறி வரும் ஒரு நகரமாகவே தெரிகிறது.

அதன் பின்னர் ஹட்டன் நகரத்தை அபிவிருத்தி செய்து அதனை மாநாகர சபையாக உருவாக்கப்போவதாக கடந்த முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கூறப்பட்டது.

ஆனால் மாநகர சபை வெறும் பேச்சாகவே இருந்தது. செயல் வடிவம் பெறவில்லை. ஆனால் நகரில் பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் மலையகத்தின் ஏனைய எந்தவொரு நகரத்துக்கும் எவ்வித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.

மஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வூட், அக்கரப்பத்தனை, கந்தப்பளை போன்ற பிரதான நகரங்களில் கூட குறிப்பிடத்தக்க அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டிருக்கவில்லை.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மற்றுமொரு நகர சபையான தலவாக்கலை – லிந்துலையை எடுத்துக் கொண்டால் அந்த நகரம் எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஒதுக்கப்பட்ட நகரமாகவே காணப்பட்டது. எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டத்தையும் அங்கு முன்னெடுக்கவில்லை.

தலவாக்கலை மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்றனர் ; செல்கின்றனர். அமைச்சர்களாகவும் இருந்தனர் ; இருக்கின்றனர். அரசியல் கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் என்பன அந்த நகரத்தில் நடத்துகின்றனர். ஆனால் நகர அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முன்வருகிறார்கள் இல்லை.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத் திட்டத்தினால் நகரிலுள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள், கடைக்கட்டிடங்கள், நகர சபைக் கட்டிடம், வாடி வீடு, பாடசாலைகள், பாலங்கள் என பல நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் நகரம் ஓரளவு அபிவிருத்தியடைந்திருக்கிறது.

அதேவேளை ஏ7 வீதி அபிவிருத்தி, ஹட்டன் மல்லியப்பு சந்தி முதல் நுலரெலியா வரை நீடிக்கப்பட்டதால் தலாவாக்கலை நகரம் புதுப்பொழிவு பெற்றது. அந்த வகையில் வீதி அபிவிருத்திக்கு உதவிய கடந்த அரசினை பாராட்ட வேண்டும்.

தலவாக்கலை நகரமும் பெருந்தோட்டங்களின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பிரதான நகரமாகும். ஹட்டன், நுவரெலியா, நாவலப்பிட்டி, டயகம, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களுக்கு செல்ல மத்திய இடமாகவும் பெருந்தோட்ட மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நகரமாகவும் உள்ளது. அரச, தனியார் வங்கிகள், பிரபல பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், ரயில், பஸ் நிலையங்கள் என்பனவும் அமைந்துள்ளன.

இந்த நகரத்தில் பொதுத்தேவைக்கான மண்டபம், பொதுச் சந்தை, பொது கழிவறைகள், இ.போ.ச. பஸ் சாலை என்பன தேவையாக இருப்பதுடன் விளையாட்டு மைதானமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் பல தேவைகள் இருக்கின்றன.

தற்போது தலவாக்கலை நகரம் ஓரளவேனும் அபிவிருத்தியடைந்து வருகிறதென்றால் அதற்கு எந்தவொரு அரசியல்வாதிகளும் காரணமல்ல. சுயமாக அபிவிருத்தியடைந்து வருகிற ஒரு நகரம் என்றே கூற வேண்டும். இந்த நகர அபிவிருத்தி தொடர்பில் அரசியல்வாதிகள் உரிமை கொண்டாடவும் முடியாது என்றே நகர மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது போன்றே பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோர்வூட், கந்தப்பளை, நானுஓயா, ஹோல்புறுக், அக்கரப்பத்தனை, கொட்டகலை, வட்டக்கொடை போன்ற நகரங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

ஹட்டன் நகர அபிவிருத்திக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது போல் ஏனைய நகரங்களின் அபிவிருத்திகளுக்கும் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். எந்தவொரு நகருக்கும் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நகரங்களையும் அபிவிருத்தி செய்ய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என்பதே நகர மக்களின் வேண்டுகோளாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates