Headlines News :
முகப்பு » » இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையத்தக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும் சபையில் திலகர் எம்.பி கோரிக்கை

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையத்தக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும் சபையில் திலகர் எம்.பி கோரிக்கை



இலங்கையில் நாடளாவிய ரீதியில் தேசிய பல்கலைக்கழங்கள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் அந்த பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களினதும் தொழில் செய்து கொண்டே பட்டப்படிப்பையும் மேற்கொள்ளவும் என உருவாக்கப்பட்டதே ‘இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்’. இந்த திறந்த பல்கலைக்கழகம் பல பிராந்திய நிலையங்களையும்  (Regional Center) பல நகரங்களில்  கற்கை நிலையங்களையும் (Study Center) கொண்டிருக்கின்றன.

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரில் 2002 ஆம் ஆண்டில் இருந்து கற்கை நிலையம் இயங்கிவருகின்றபோதும் இதுவரை அதற்கென ஒரு கட்டடிம் ஒன்று இல்லாமல் (சனி ஞாயிறு) பாடசாலைகளிலும், வாடகை நிலையங்களிலும் இயங்கிவருகின்றது. ஏற்கனவே இந்த கற்கை நிலையத்துக்கான கட்டடம் ஒன்றை அமைக்க ஹட்டன் நகரில் உரிய காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதும் அங்கு வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. 300 க்கும் அதிகமான மாணவர்கள் கற்கும் இந்த கற்கை நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் ஒன்றை அமைக்க உயர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கும் பிரேரணையை முன்வைக்கின்றேன்.

2016 ஆண்டுக்கான  வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் அரசாங்க தரப்பு உறுப்பினர்களுக்கு மிகக் குறைந்த அளவான நேரமே ஒதுக்கீடு செய்யப்படுகின்ற கல்வி அமைசசு விவாதத்தில் 5 நிமிடங்களே கிடைத்த நிலையில் நான் பிரதிநிதித்துவம் செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் முக்கியமான கல்விசார் பிரச்சினை ஒன்றை கலந்துரையாடுவதற்கு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நுவரெலியா மாவட்டம் என்பது மூவின மக்களும் செறிந்துவாழும் இயற்கை எழில் நிறைந்த அழகிய மாவட்டம். எமது மாவட்டத்தில் பாடசாலை மட்டக் கல்வியைப் பெற்றுக்கொடுக்க போதிய பாடசாலைகள் அமைந்து காணப்படுகின்றன. அதேநேரம் நுவரெலியா மாவட்ட மாணவர்களின் உயர்கல்வி தேவைகளுக்கு என அந்த மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்திருக்கவில்லை. நுவரெலியா மாவட்டத்தைத் தளமாகக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டியதன் அவசியத்தை மாவட்ட மக்களும் கல்விச் சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றபோதும் அந்த அவா இந்த முறை வரவு செலவுத்திட்ட யோசனையிலும் எமக்கு எட்டாக் கனியாகிவிட்டது.

இந்த நிலையில்தான் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘இலங்கைத் திறந்த பல்கலைக்கழ – கற்கை நிலையம்’ குறித்து நிலவும் கட்டடத் தேவைப்பாடுகளை இந்த உச்ச சபையிலே முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். 

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தலைநகரை தளமாகக் கொண்டு நாடு முழுவதுமாக 6 பிராந்திய நிலையங்களையம் 18 கற்கை நிலையங்களையும் கொண்டதாக இயங்கி வருகின்றது.

அதில் ஒரு கற்கை நிலையமாக இயங்கி வரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையமானது தற்போது 11 பாடநெறிகளை நடாத்திக்கொண்டிருப்பதுடன் நடப்பாண்டிலே பதிவுசெய்யப்பட்ட 436  மாணவர்களையும் கொண்டதாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த விபரங்களை நான் இந்த சபையிலே சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் கற்கை நிலையத்தில் நிரந்தர கட்டடிங்களைக்கொண்ட ரத்னபுர, பொலன்னறுவை, காலி, அம்பாறை, பத்தளம், பண்டாரவளை மற்றும் மொராகரலை மாவட்டங்களை விட அதிகளவான மாணவர்கள் நடப்பு ஆண்டிலே பதிவு செய்யப்பட்டு கற்றை நெறிகளைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஹட்டன் கற்கை நிலையத்திற்கென பிரத்தியேகமான கட்டடம் ஒன்று இல்லாமை காரணமாக ஆரம்ப காலங்களில் பாடசாலை மண்டபங்களை இரவல் வாங்கி பயன்படுத்தி வந்தார்கள். பின்னர் அது தொண்டமான் தொழில் பயிற்சி நலையத்தில் தற்காலிகமாக இயங்கிவந்தது.

தொண்டமான் மன்றத்தின் கீழ் இயங்கிவந்த தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிறுவனமும் கடந்த ஆட்சியிலே முறையற்ற வகையில் நிர்வகிககப்பட்டு அதன் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படாத நிலையில் அதன் செயற்பாடுகள் முடங்கியதுடன் தற்போது ஹட்டன் கத்தோலிக்க கன்னியர் மடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கிக்கொண்டு வருகின்றது.இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் இணையத்தளத்தினை பார்வையிட்டால் ஒவ்வாரு கற்கை நிலையங்களும், பிராந்திய நிலையங்களும் நிரந்தர கட்டத்தில் நிரந்தர முகவரியில் இயங்கி வருவதனை அவதானிக்கலாம். ஹட்டன் நிலையான காரியாலயம் இல்லாமல் நிலையான முகவரி இல்லாமல் கற்கை நிலையம் இயங்கிவருகின்றது.

இந்த கற்கை நெறிக்கான காணி ஹட்டன் மல்லியப்புசந்தியில் இருந்து 300 மீற்றர் தொலைவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது இலங்கை திறந்த பல்கலைகக்கழகத்திற்கான காணி என உறுதிப்படுத்தப்படட ஆவணங்கள் உள்ளன. ஆனால் இந்த கட்டடம் அமைக்கப்படாததன் காரணமாக அந்த நிலம் வெளியாரின் அபகரிப்புக்கும் உள்ளாகி வருகின்றமை இன்னுமொரு பிரச்சினையாக உள்ளது.

இந்த கற்கை நிலையத்துக்கான கட்டடம் அமைப்பதற்கு இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் நுவரெலியா மாவட்ட கட்டட ஆய்வு நிறுவனத்தின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு  அம்பகமுவை பிரதேச செயலகத்தின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது. அது சம்பந்தமான ஆவணங்களை நான் ஹன்சார்ட் பதிவுகளுக்காக இந்த உச்ச சபைக்கு சமர்ப்பிக்கிறேன். 

கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த கற்கை நிலையத்துக்கான கட்டடத்தைப் பெறும் பொருட்டு இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரை கலாநிதி ஏ.எஸ். சந்திபோஸ் அவர்களை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தற்போதைய அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுடாக அப்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவர்களிடம் இந்த விடயத்தைக் கொண்டு சென்றிருந்தேன்.  எனினும் எனது முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, நான் பிரதிநித்துவம் செய்யும் நுவரெலியா மாவட்ட மக்களின் தேவையாக தற்போதைய அமைச்சரிடம் இந்த கட்டடத்தினை வெகு விரைவில்  அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.

கௌரவ அமைச்சர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள் என்றும் எங்கள் மதிப்புக்குரிய சிரேஷ்ட அமைச்சர். நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த 100 வேலைத்திட்டத்திலே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கான ‘பசுமைபூமி’ வீட்டுக்காணித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டவர்.

அதேபோல தற்போது உயர்கல்வியுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் பணியாற்றும் அவர் அண்மையில் கிராமிய பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாதைகளை அபிவிருத்தி செய்யும் மத்திய மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளுக்கு நுவரெலியா மாவட்ட பிரதிநிதியாக என்னையும் அழைத்திருந்ததோடு மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்தின் 42 வீதிகளை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு 
 நுவரெலியா மாவட்டத்தில் உயர்கல்வி வாய்ப்புக்களை பெறுவதற்கு சிரமப்பட்டிருக்கொண்டிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி எதிர்கால சந்தததியினரின் சுபீட்சமான வாழ்வுக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் கற்கை நிலையத்தை ஹட்டன் நகரிலே ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமைத்து தருவதற்கு ஆவண செய்யவேண்டும் எனும் எனது பிரேரணையை முன்வைத்து அதனை அவர் செய்து தருவார் என்ற நம்பிக்கையோடு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates