Headlines News :
முகப்பு » » இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு ஊவா தமிழர்களுக்கு விமோசனம் தருமா? - எஸ். செல்வராஜா

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு ஊவா தமிழர்களுக்கு விமோசனம் தருமா? - எஸ். செல்வராஜா


ஊவா மாகாண சபையிலிருந்து முதலமைச்சர் மற்றும் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் புதிய பாராளுமன்றத்திற்கு பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவாகியுள்ளனர்.

மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 200806 வாக்குகளையும், ஊவா மாகாண அமைச்சர்களான ரவி சமரவீர 58 ஆயிரத்து 507 வாக்குகளையும், வடிவேல் சுரேஸ் 52 ஆயிரத்து 378 வாக்குகளும் ஆனந்த குமாரசிரி 44 ஆயிரத்து ஏழு வாக்குகளும், ஊவா மாகாண சபை உறுப்பினர்களான பத்ம உதய சாந்த குணசேகர 57 ஆயிரத்து 356 வாக்குகளும் சாமர சம்பத் தசநாயக்க 64 ஆயிரத்து 418 வாக்குகளும் பெற்று புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மேலும், பண்டாரவளை மாநகர மேயராக இருந்த சமிந்த விஜயசிரி ஐ.தே.க. சார்பாக 58 ஆயிரத்து 291 வாக்குகளை பெற்று பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 406 வாக்குகளையும், சுமேத ஜி. ஜயசேன 69 ஆயிரத்து 82 வாக்குகளையும் ரன்ஜித் மத்தும பண்டார 82 ஆயிரத்து 316 வாக்குகளையும், பெற்று பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி. தேனுக்க விதானகமகே 43 ஆயிரத்து 517 பெற்று இம்முறையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி.க்களான ரோகன புஸ்பகுமார உதித்த லொக்குபண்டார ஆகியோரும் முன்னாள் அமைச்சர்களான லக்ஸ்மன் செனவிரட்ன, ஜகத் புஸ்பகுமார, விஜித் விஜய முனி சொய்ஸா ஆகியோர் இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

இப் பாராளுமன்ற தேர்தலையடுத்து ஊவா மாகாண சபையில் முதலமைச்சர் மற்றும் மூன்று மாகாண அமைச்சர்கள் இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான ஆறு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவ் ஆறு வெற்றிடங்களும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மூன்று பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மூன்று பேரும் அடங்குவர்.
ஊவா மாகாண புதிய முதலமைச்சராக மாகாண அமைச்சர் அநுர விதானகமகே நியமிக்கப்படுவாரென்றும் அத்துடன் வெற்றிடமாகவுள்ள மாகாண சபை உறுப்பினர் பதவிகளுக்கு மாகாண சபையின் பட்டியலில் அடுத்தபடியாகவுள்ள மானெல் ரட்ணாயக்க சுமித் சமயதாஸ பிரகத்தி ஆகியோர் நியமிக்கப்படுவரென்றும் மாகாண முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம்
ஊவா மாகாண சபையிலிருந்து அறுவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதையடுத்து ஊவா மாகாண சபையின் ஆட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு கட்சிக்கு மாற்றமடையவுள்ளது.

அக்கட்சியின் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும், ஊவா மாகாண சபை உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி இ.தொ.கா. சார்பில் சேவல் சின்னத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவர் தோல்வியடைந்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அவன் உபதலைவர் அ. அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு 53 ஆயிரத்து 741 வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் பதுளை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரமும் மேற்படி வெற்றியாகுமென்று கருதப்படுகின்றது.

பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களின்றி அரசியல் அனாதைகளாக இருந்து வந்த பதுளை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக இம்முறை இரு தமிழர் பிரதி நிதித்துவங்கள் கிடைத்துள்ளமை விசேடம்சமாகும்.

பதுளை மாவட்டம் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்ட போதிலும் இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10259 வாக்குகளை மட்டுமே பதுளை மாவட்டத்தின் பெற்றிருந்தது.

மக்கள் விடுதலை முன்னணி பதுளை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 445 வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியவில்லை.

சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக்கட்சி பதுளை மாவட்டத்தில் 500 வாக்குகளைப் பெற்று படுதோல்வியை அடைந்துள்ளது.

பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கும் வடிவேல் சுரேஸ், அ.அரவிந்தகுமார் ஆகிய இருவருக்கும் பதுளை மாவட்ட தமிழ் மக்கள் விடயத்தில் பெரும் பொறுப்புக்கள் இருக்கின்றன.

இவர்கள் எவ்வகையிலும் அப்பொறுப்புக்களிலிருந்து விலகி செல்ல முடியாது.

இத்தேர்தலை முன்னிலைப்படுத்தி ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஸ், 176 தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அரச திணைக்களங்களில் ஊழியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால் இந் நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றன.

இதனை அவர் நிரந்தர நியமனங்களாக மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் 405 பேருக்கு ஊழியர் நியமனங்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தார். தேர்தல் முடிந்து வெற்றி பெற்றதும் அந்நியமனங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். அவ் உறுதி நிறைவேற்றப்படல் வேண்டும்.

பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான அ. அரவிந்தகுமாரும், தேர்தலில் வெற்றி பெற்றதுடன் பதுளை மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வைப்பதாக உறுதியளித்திருந்தார். அவ் உறுதிகளும் நிறைவேற்றப்படல் வேண்டும்.

பதுளை மாவட்ட தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே இரு தமிழர்களை ஆகக்கூடிய விருப்பு வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். தெரிவு செய்யப்பட்ட இருவரும் தமக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து மக்களின் தேவைகள், அபிலாஷைகள், விருப்புக்கள் ஆகியவற்றிற்கேற்ப செயற்பட்டு அவற்றின் நிவர்த்தி செய்ய முன் வரவேண்டும். அதற்கு சான்று அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளாகும்.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம் இவ்வேட்பாளர்கள் எவருமே பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. இ.தொ.கா. “சேவல்” சின்னத்தில் தனித்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்கமுத்து அசோக்குமார் 5479 வாக்குகள், அ.க. கனரத்தினம் 4710 வாக்குகள், ஆறுமுகம் கணேசமூர்த்தி 2418 வாக்குகள், வேலு ரவி 1489 வாக்குகள், செல்லையா சகாதேவன் 1384 வாக்குகள், பெருமாள் மாணிக்கராஜா 1358 வாக்குகள், சவுந்திர மணி கோபிநாதன் 1114 வாக்குகள், காத் தான் மாரிமுத்து 926 வாக்குகள், சண்முகம் ஜெகதீஸ்வரன் 856 வாக்குகள், நடராஜா ரகுபதி 664 வாக்குகள், வடிவேல் தேவராஜ் 630 வாக்குகள்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates