Headlines News :
முகப்பு » » மலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் - அருட்தந்தை மா.சத்திவேல்

மலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் - அருட்தந்தை மா.சத்திவேல்


நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அகிம்சை முறையில், ஜனநாயக வழியில் தமது வாக்குப் பலத்தை நாடறியச் செய்தனர். தேர்தல் தொடர்பாக மக்கள் எடுத்த தீர்மானம் அரசியல்வாதிகளையும் விழிப்படையச் செய்தது. ஆனால், மலையகத்தின் ஏகபோக உரிமையை தமதென நினைத்த அரசியல்வாதிகள் இருட்டுக்குள்ளே சுகம் கண்டனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம், புதிய அரசியல் பயண ஆரம்பம் இவற்றுக்கிடையில் மலையக மக்கள் வாழ்வில், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் பொருளாதார, அரசியல், சமூக ரீதியில் மாற்றம் நிகழுமா? இதுவே இன்றைய பிரதான கேள்வியாகவுள்ளது.

மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சொந்தக்காணி, தனிவீடு தொடர்பான கோஷங்கள் கடந்த ஒக்டோபரில் மீரியபெத்தையில் நிகழ்ந்த அனர்த்தத்தினைத் தொடர்ந்து மலையகமெங்கும் எதிரொலித்தன. இது மலையக அரசியல் தலைமைகளையும் திரும்பிப் பார்க்க செய்ததோடு, அவர்களின் அரசியலிலும் திருப்பத்தை ஏற்படுத்தி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஆதிக்கத்தை செலுத்தியது எனலாம்.

இதனைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர்களுக்கென சொந்த காணி, வீடு தொடர்பில் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகளும் அரசும் உறுதியாக இருப்பதைப் போன்று தோன்றுவதோடு அதற்கான அடிக்கல்லும் மீண்டும் நடப்பட்டுள்ளது. காணி, வீடு தொடர்பாகவும் அதன் அமைவிடம் சம்பந்தமாகவும் அமைச்சு மட்டங்களிலும் அதிகாரிகள், தோட்டக் கம்பனிகள் போன்றவற்றோடு பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மேலும், அமையப்போகும் வீடும், காணியும் 7 பேர்ச்சுக்குள் அடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்கள் மத்தியிலே உடன்பாடற்றதும் தெளிவற்றதுமான தன்மையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் மக்களை கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவே ஆகும்.

வீடு கட்டும் போது கட்டுமான பணிகளை வீட்டுரிமையாளரே செய்ய சுதந்திரம் உள்ளதா? முழுப்பணமும் அவர்களது வங்கியில் இடப்படுமா? தனது வீடு தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு இம்மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா? நிர்மாணிக்கப்படும் வீடுகள் தொடர்பில் அதன் கட்டுமான பணிகள் விடயத்தில் தமது கருத்தினை தெரிவிப்பதற்கும், தலையீடு செய்வதற்கும் இவர்களுக்கு உரிமை உள்ளதா? எச்சந்தர்ப்பத்திலும் காணி தொடர்பிலோ, வீடு தொடர்பிலோ கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுவார்களா? சுதந்திர இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரஜைகளுக்கான கௌரவம் இம்மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற காணி, வீடு தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தொழிலாளி ஒருவர் “இந்திய வம்சாவளி என்பதை எடுத்து விடட்டும், இந்நாட்டின் சுதந்திர பிரஜைகள் எனும் கௌரவத்தை வழங்கட்டும். காணி வீட்டை நாம் பெற்றுக் கொள்வோம்” என்றார். மக்கள் விழித்துள்ளார்கள் என்பதே இதன் மூலம் தெரியவருகின்றது,
நிறுவனங்களோ, அரசோ கொடுப்பதை அப்படியே மக்களிடம் கொடுப்பது அதிகாரிகளின் கடமை. அதேவேளை, அரசியல் ரீதியில் தேசிய வாழ்வோடு இணைந்து பயணிக்க ஏற்ற வகையில் மக்களுக்குத் தேவையான அரசியல், சமூக உரிமைகளை பெற்றுக் கொள்ள மக்களுக்கு வலிமை சேர்ப்பதே அரசியல்வாதிகளின் பொறுப்பும் கடமையுமாகும். ஆட்சியாளர்களோடு இணைந்து இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதும், தமது குரலுக்காக மக்களை திரட்டி சக்தியாக வைத்திருப்பதும் இவர்களின் இன்னுமொரு பொறுப்பாகும். இதனையே மக்கள் மலையக அரசியல்வாதிகளிடமும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வீட்டுத் திட்;டங்கள் நடைமுறைப் படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவையெல்லாம் முழுமை பெறவில்லை. இதற்கு கட்சி அரசியல் சாயம் பூசப்பட்டதும் ஒரு காரணம் என்பது கவலைக்குரிய விடயமே. நடைமுறைப் படுத்தப்படும் புதிய திட்டம் இவற்றுக்குள் சிக்கிவிடாது, மக்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியலை மையப்படுத்தி வாழ்வை பாதுகாக்கும் திட்டமாதல் வேண்டும். மலையக மக்கள் வாழ்வின் அடிப்படை அரசியல், சமூக உரிமைகளை முழுமையாக பெற்று இந்நாட்டின் சுதந்திர கௌரவ பிரஜைகள் என்ற நிலைக்கு உயர்வடைதல் வேண்டும். அதாவது இலங்கையில் வாழும் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளை இம்மக்களும் அனுபவித்தல் வேண்டும். இதற்கு போதுமான அளவு சொந்தக் காணியும் தாம் விரும்பியவாறு அடிப்படை தேவைகளுடனான வீடும் அமைதல் முக்கியமாகும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனிவீடு, காணி தேவை என்பன புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத் திற்கு உட்படுத்தாது, நடைபெறப் போகும் பொது தேர்தலில் மலையக மக்களின் வாக்குகளை பகற் கொள்ளையடிக்கும் கவர்ச்சி திட்டமாக்காது, மலையக மக்களை வாக்களிக்கும் தொடர் இயந்திரங்களாக்காது சுயமரியாதையுள்ள கௌரவமிக்க, தனித்துவமான பிரiஐகளாக வளர்ச்சி பெறும் நோக்கோடு தனிவீடு, காணி திட்டம் அமுலாக்கப் பட வேண்டும். இதன் மூலமே எனது காணி, எனது வீடு, எனது நாடு எனும் சிந்தனையோடும் உணர்வோடும் இந்நாட்டின் பிரiஐகளாக வாழவும், வளரவும் முடியும். இதுவே தாம் பாதுகாப்போடு வாழ்கின்றோம் எனும் மனவுறுதியையும் ஏற்படுத்தும்.

இன்று தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சுகவீனம் போன்ற காரணங்களுக்காக தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடிவதில்லை. தொழிலாளர்களின் தொகை குறைப்பு காரணமாகவும், புதிதாக தொழிலாளர்கள் இணைந்து கொள்ளாததன் காரணமாகவும், போதிய வருமானம் இன்மையாலும் வருமானத்தைத் தேடி நகர்ப் புறத்திற்கு செல்வதும், வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் தேடி வெளியேறுவதும் இவர்களில் பெரும்பாலானோர் ஆடைத் தொழிற்சாலைகளிலும், கடைகளில் சிப்பந்திகளாகவும், காவலர்களாகவும் சேவையாற்ற தள்ளப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவோ, சகாய நிதியோ கிடைப்பதில்லை. நிரந்தர தொழிலாளர்களாக அநேகமானோர் தொழில் புரிவதுமில்லை. இன்னும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கியும் படையெடுக்கின்றனர்.

நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று உழைத்தாலும் உழைப்பின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே தொடருகின்றது. அது மாத்திரமல்ல உழைக்கும் காலத்தில் மலையகத்திற்கு வெளியில் தொடர்ச்சியாக வாழ்வதால் இவர்களின் குடும்ப மற்றும் சமூக, கலாசார வாழ்வும் சிதைவடைகின்றது. மலையக வாழ்விற்கு எதிரான ஒரு வாழ்வு முறை இவர்களால் மலையகத்திற்குள் நுழைக்கப்படுகின்றது. இதன் மூலம் மலையக தனித்துவ அடையாளம் காக்கும் சமூக பற்றில்லாத சமூகமொன்று வளர்வதை அவதானிக்கலாம். இது முதலாளித்துவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளில் ஒன்று. இறுதியில் நோயாளியான சமூகமொன்றே மலையகத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இந்நிலையில் இருந்து மலையகம் விடுதலைபெற வேண்டுமாயின், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதாரத்தை தமதாக்கக் கூடிய காணியும், வீடும் சொந்தமாதல் வேண்டும்.

ஒரு திட்டமிட்ட காணிக் கொள்கை மூலம் புதிய வாழ்வுக் கலாசாரத்தை மக்கள் தமதாக்கும் போது தொழிலாளர்களின் அரசியலிலும், மலைகயத்திலும் புதிய அரசியல் யுகம் பிறக்கும். மக்கள் தொகைக்கேற்ப பிரதேச சபைகளும், நகர சபைகளும் உருவாகும். புதிய தலைமைத்துவங்கள் தலையெடுக்கும். மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக அல்லாது தேசிய அரசியல் நீரோட்டத்திலும் பங்கு பற்றுவதோடு, பொருளாதாரத்தில் தன்னிறைவையும், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பங்கு ஏற்கவும் வழிவகுக்கும்.

ஆதலால் மலையக மக்களுக்கு கிடைக்கப் போகும் வீடும், காணியும் சுய பொருளாதாரத்தை வளர்க்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்யவும், மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தனித்துவமான இனமாக தமது அடையாளத்தோடும், பாதுகாப்போடும் வாழவும் துணை செய்தல் வேண்டும். ஆனால், தற்போது மலையில் தொழில் செய்துவிட்டு மாலையில் வீட்டுக்குள் நுழைவோர் தொடர் கூடுகளில் (லயன்களில்) அடைந்து விடுகின்றனர். இனி தொழில் செய்துவிட்டு தனித்தனி கூடுகளில் அடைந்துவிடும் நிலைக்கு (புதிய 7 பேர்ச் காணி  வீட்டுத்திட்டம்) அமைந்துவிடும் என்பதில் தான் சமூக பயம் ஏற்படுகின்றது.

இவ்வாறான திட்டம் அமுலாக்கப்பட்டால் அது நவீன காலனித்துவ தனிவிட்டு சிறைக் கூடங்களாக அமைவதோடு, தோட்டக் கம்பனிகளிடம் மாதாந்தம் கைநீட்டி சம்பளம் வாங்கும் நிலையே தொடர்ந்திருக்கும். தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகமும் சம்பள உடன்படிக்கையில் கைசாத்திடுவதால் தொழிற்சங்கங்களின் பிடிக்குள்ளேயே சிக்கி தொழிற்சங்கங்களின் கைப்பொம்மைகளாகவே காலத்தை கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி பதவியேற்ற புதிய அரசாங்கம், அரச பணியாளர்களுக்கு 10,000 ரூபா அதிகரித்ததோடு, தனியார் துறையினருக்கு 2,500 ரூபா அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோரியது. மலையக தொழிலாளர்களுக்கு இவ்வதிகரிப்பு கிட்டுமா? அல்லது இந்நிலை தொடர்ந்து இன்னுமொருவரின் தேயிலைக்கு உரமாகி அவர்களின் சுகபோக வாழ்விற்கு உயிர்ப் பலியாக வேண்டுமா?

மஹிந்த அரசாங்கத்தால் வரவு  செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தையும், தரிசு நிலமாக இருக்கும் 37 ஆயிரம் ஹெக்டெயர் காணியை பெற்றுக் கொள்வதற்கும் மலையகம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படாதது ஏன்? மலையக கட்சிகளினதும், தொழிற்சங்கங்களினதும் அரசாங்க சார்பு நிலையே, இதற்குக் காரணமாகும்.

1930 – 1987 வரையான காலப்பகுதியில் 105 ஆற்று வடிநில அபிவிருத்தி திட்டங்களாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம், 1 லட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, 1980 காலகட்டத்தில் 1 இலட்சத்து 65 ஏக்கர் பெருந்தோட்ட காணி 55 ஆயிரம் குடும்பங்களுக்கு (குடும்பத்திற்கு சராசரியாக 3 ஏக்கர்) பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்குமிங்குமாக ஒரு சில தமிழ் குடும்பங்களுக்கு காணி கிடைத்தனவே தவிர சமூகமாக மலையக மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு காணி பெற்றுக் கொண்டவர்கள் இரண்டு, மூன்று பரம்பரையினராக ஒரே காணியில் தொடர்ந்து வாழ்வதோடு விவசாயத்திலும், வீட்டுத் தோட்டத்திலும ஈடுபடுகின்றனர். மலையக பிரதேசத்தில் காணிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தேயிலை செய்கையோடு, மா, பலா, வாழை, தென்னை மரங்கள் நட்டுள்ளதோடு ஆடு, மாடு கோழிகளை வளர்ப்பதையும், வேறும் பலர் கோப்பி, மிளகு என்பவற்றோடு பயன்தரும் மரங்களை வளர்ப்பதையும் காணலாம்.

இதனடிப்படையிலேயே இவர்களிடையே குடும்பப்பற்றும், சமூகப்பற்றும், பிரதேசப்பற்றும், இனப்பற்றும், தேசப்பற்றும் மேலோங்கி வளர்வதை அவதானிக்கலாம். மேலும், ஒன்றிணைந்த சமூகமாக தமது அடையாளங்களை பேணுவதற்காக உரிமை குரல் எழுப்புவதையும அவதானிக்கின்றோம்.

மலையக மக்களாகிய நாமும் இந்நாட்டின் பிரஜைகள். சுய கௌரவத்தோடும், சுய மரியாதையோடும், சமூகப்பற்றோடும், தேசப்பற்றோடும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் காணி வீட்டுக்கான புதிய கொள்கை மலையகத்திற்கென வகுக்கப்படல் வேண்டும். இக்கொள்கை மூலம் மலையக மக்களுக்கு காணி வழங்கப்படுகின்ற போது பாரம்பரிய தொழிலில் ஈடுபடுவதோடு, தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி முன்நகர்வதற்கும், சமூகமாகவும், கூட்டாகவும் எதிர்காலத்தை திட்டமிடவும் முடியும். மேலும், கிராமிய பண்பாட்டில் சமூகமாக வாழும் போது மலையகத்திற்கே உரிய தனித்துமான இனத்துவ அடையாளங்களை பாதுகாத்து தமது இருப்பையும் பாதுகாக்க முடியும்.

தற்போது மலையகத்தில் மாற்றத்திற்காக தலைமைத்துவத்தை ஏற்றிருக்கின்ற புதிய அரசியல் தலைவர்கள் ஒன்றித்த சக்தியாக இயங்க தொடர் முயற்சியில் ஈடுபடல் வேண்டும். அவ்வாறு இயங்க எடுத்திருக்கின்ற முயற்சி வரவேற்கத்தக்கதே. இது வெறுமனே தேர்தல் அரசியலுக்காக அல்லாது மலையக மக்களின் சுதந்திர கௌரவ வாழ்விற்கான கூட்டாக இருத்தல் வேண்டும்.

ஆதலால் மலையகத்தில் மண் மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கான காணி அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

பகிர்ந்தளிக்கப்பட கூடிய காணிகள் அளந்து அடையாளமிடப்படல் வேண்டும்.
பொதுத் தேவைகளுக்கான காணி வேறாக்கப்படல் வேண்டும் (கோயில், சிறுவர் பாடசாலை, விளையாட்டுத் திடல், மாயனம்…)
காணி தேவையானோர் கண்டறியப்பட விண்ணப்பங்கள் கோரப்படல் வேண்டும்.
காணி உறுதிப் பத்திரம் கொடுக்கப்பட ஆவன செய்தல் வேண்டும்.
இதற்கான கால எல்லையையும் நிர்ணயித்தல் வேண்டும்.

அரசியல் தலைமைகளும் சிவில் சமூகமும் தமது எல்லைகளைக் கடந்து மலையகத்தின் எதிர்காலம் கருதி திறந்த மனதுடன் செயற்பட முனைவதோடு, புத்திஜீவிகளையும் இணைத்துக் கொள்ளல் நலமானதாக அமையும்.

மலையகத்தின் எதிர்கால நலன் கருதி பெருந்தோட்ட மக்களுக்கான சொந்தக் காணி, வீட்டுரிமை தொடர்பாக செயல்படும் மலையகத்திற்கு வெளியிலுள்ள அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூகங்களோடும் கைகோர்ப்பதன் மூலமே வெற்றியைக் காண முடியும்.

மலையகத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்பதற்காகவும், தமிழர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக இருக்கும் வரை நாட்டின் ஜனநாயகமும், சுதந்திரமும், நல்லாட்சியும் இருட்டுக்குள்ளேயே இருக்கும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates