Headlines News :
முகப்பு » » புதிய கூட்டு ஒப்பந்தம் : நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தருமா? - எம்.நேசமணி

புதிய கூட்டு ஒப்பந்தம் : நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தருமா? - எம்.நேசமணி


கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது அரசியல் மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை கௌரவம் பார்க்காது ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் முன்வைக்கவும் வேண்டும். மாறாக, ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களையும் அறிக்கைகளையும் விட்டு கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை குழப்பியடிக்கக் கூடாது. 


பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படும் ஓர் உடன்படிக்கையாகும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைடைந்தது. எனவே அடுத்த இரு வருடங்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்.
புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டு கமிட்டி போன்றவற்றை சேர்ந்த பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முதலாளிமார் சம்மேளனம் வழமைபோல் தமது பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அதனை செவிமடுத்த தொழிற்சங்க பிரதிநிதிகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொகை பற்றி இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமல் புதிய கூட்டு ஒப்பந்த்துக்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நிறைவடைந்தாலும் அப்பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்கப்படும் சம்பள உயர்வு ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நிலுவையுடன் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதே வழமை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடுத்த இரண்டு வருடங்களுக்கான சம்பள உயர்வை நிர்ணயிக்கும் புதிய கூட்டு ஒப்பந்தத்தினை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேவேளை, தொழிற்சங்கங்களும் சில அரசியல் கட்சிகளும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருவதுடன் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பத்திலேயே தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பானது தொழிலாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள் மத்தியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை பொறுத்த வரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர்த்தப்பட வேண்டிய நாள் சம்பளத்தை ஆரம்பத்திலேயே முன்வைத்தது கிடையாது. இவ்வாறான நிலையில் இம்முறை தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற இ.தொ.காவின் அறிவிப்பு அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்களும் அந்த அறிவிப்பு பற்றிய தமது கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் முன்வைக்கத் தொடங்கின. அந்த வகையில் மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு அடுத்தபடியாக உள்ள தொழிற்சங்கமாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம், இ.தொ.கா. ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்தால் மலர் தூவி வரவேற்போம் என்று அறிவித்தது.

அதேபோன்று மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இந்த சம்பள உயர்வு விடயம் பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கைகளை வெளியிடத் தொடங்கின. குறிப்பாக தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே எல்லா தொழிற்சங்கங்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிப்பை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆயிரம் ரூபாவை நாட்சம்பளமாக கம்பனிகளால் வழங்க முடியுமா? அவ்வாறு வழங்கக்கூடிய நிலையில் கம்பனிகள் உளள்னவா? இப்படியான கேள்விகளும் இன்று பலர் மத்தியில் நிலவுகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்த வேண்டும் என்று கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அந்த தொகையானது அடிப்படை சம்பளத்துடனா அல்லது கொடுப்பனவுகள் அடங்கிய தொகையா என்று அறிவிக்கவில்லை.

கொடுப்பனவுகளுடன் கூடிய ஆயிரம் ரூபா நாள் சம்பளம் என்றால் அடிப்படை சம்பளம் எவ்வளவு, கொடுப்பனவுகள் எவ்வளவு, என்னென்ன நிபந்தனைகள் போன்றவற்றையும் அறிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஏற்கெனவே மேற்கூறிய கேள்விகளுக்கு உரிய பதில் வழங்க முடியாது. எது எப்படியோ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே அநேகமானோரின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளை வகித்த காலத்தில் செயற்பட்ட விதத்திற்கும் தற்போது செயற்படும் விதத்திற்கும் இடையில் சற்று வித்தியாசத்தை காணமுடிகிறது. அதனை இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் காணமுடிகிறது.

எது எப்படியாக இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விடயத்தை அரசியலாக்காமல் உரிய முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, திரைமறைவில் ஒன்றும் மக்களுக்கொன்றுமாக கருத்துக்களை கூறி சுய இலாபம் தேட முற்படக்கூடாது.

முதலாளிமார் சம்மேளனம் எப்போதும் கம்பனிகளை பற்றியும் அவர்களது பிரச்சினைகள் பற்றியும் பேசி கூடுமானவரை அவர்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தங்களை செய்துகொள்ள முயற்சிக்கும் அதேவேளை, தொழிற்சங்கங்களோ தொழிலாளர்களைவிட கம்பனிகளின் நலன்களிலேயே அக்கறை செலுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசியல் மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை கௌரவம் பார்க்காது ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் முன்வைக்கவும் வேண்டும். மாறாக, ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை குழப்பியடிக்கக் கூடாது.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திகழ்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவர்களது பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்வாதாரம் போன்றன குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

நன்றி  - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates