Headlines News :
முகப்பு » » தேர்தல் முறை மாற்றமும் மலையகத் தமிழரும் - பி.பி.தேவராஜ்

தேர்தல் முறை மாற்றமும் மலையகத் தமிழரும் - பி.பி.தேவராஜ்



டொனமூர் திட்டத்தின் கீழ் சர்வஜன வாக்குரிமையும் தனித் தொகுதி அங்கத்தவர் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டசபை அமைப்பதற்காக நாடு 50 தனி அங்கத்தவர் தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிக ளவு வாக்குகளை பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இது தவிர 8 நியமன அங்கத்தவர்களும் 3 உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களுட்பட ஒட்டுமொத்தமாக 61 அங்கத்தவர்கள் சட்டசபையில் இடம்பெற்றனர்.

1947ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் அறிமுகத்துடன் புதிய பிரதிநிதிகள் சபையில் 101 அங்கத்தவர்கள் இடம்பெற்றனர். இதில் 95 பேர் தொகுதிகள் மூலமாக தெரிவு செய்யப்பட்டனர்.

6 பேர் நியமன அங்கத்தவர்களாக இடம்பெற்றனர். தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் 89 தொகுதிகளிலிருந்து தெரிவாகினர். பல அங்கத்துவ தொகுதிகள் சில இதில் இருந்தன.

பல அங்கத்தவர் தொகுதி மூலம் ஏதாவது ஒரு தொகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட கணிசமான தனித்துவ அடையாளமுடைய குழுவினர் இருந்தால் அவர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

1959ஆம் ஆண்டு புதிய தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்ட போது அங்கத்துவ தொகை 145 ஆக அதிகரிக்கப்பட்டது. பல அங்கத்தவர் தொகுதிகள் இருந்ததால் 151 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

1974ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின்படி தொகுதிகளின் தொகை 160ஆக கூட்டப்பட்டது.

இவர்கள் பல அங்கத்தவர் தொகுதிகள் உட்பட 168 அங்கத்தவர்கள் தெரிவு செய்வதற்கு இடமளித்தது.

1989ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு மாவட்ட விகிதாசார தேர்தல் அறிமுகமாகியது. மொத்தமாக 225 அங்கத்தவர்களை பாராளுமன்றம் கொண்டிருந்தது.

மொத்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு 160 அங்கத்தவர்கள் இடம்பெற்றார்கள். நிர்வாக மாவட்டங்கள் தேர்தல் தொகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 9 மாகாணங்களுக்கும் தலா 4 என 36 அங்கத்தவர்கள் நிர்ணயம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அந்தந்த மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த அங்கத்தவர்களை நியமனம் செய்யும் உரிமை ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்சியும் அல்லது சுயேச்சை குழு பெற்ற விகிதாசார வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 29 தேசிய பட்டியல் அங்கத்தவர்கள் ஒதுக்கப்பட்டனர்.

விகிதாசார முறை அறிமுகமாகியது ஜேர்மனியில் உள்ள தொகுதி விகிதாசார கலப்பு முறையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்பட்டது என்று விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் ஜேர்மனியில் 50 சதவிகிதம் தனித்தொகுதி மூலமாகவும் 50 சதவிகிதம் விகிதாசார அடிப்படையிலும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். எனவே கலப்பு முறை என்றாலும் இது ஜேர்மனியுடைய முன்னுதாரணத்தை கொண்டிருக்கவில்லை.

உலக நாடுகளில் வழக்கத்திலுள்ள பல தேர்தல் முறைகள் உள்ளன.
தொகுதி முறை
1. குறிப்பிட்ட மக்கள் தொகையுடைய ஒரு தொகுதியை நிர்ணயம் செய்த பின்னர் அந்த தொகுதியில் போட்டியிட்டு எண்ணிக்கையில் யார் அதிகமாக வாக்குகளை பெறுகிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். இதை ஓட்டப் பந்தயத்தை போல் யார் பந்தயத்தில் முதலிடம் பெற்று, பந்தய எல்லையை முதலில் தாண்டுகிறாரோ அவருக்கே வெற்றியென்பது போன்றதாகும். இந்த முறையை பல அங்கத்தவர் தொகுதிகளுக்கும் பயன்படுத்தலாம்.

1978க்கு முன்னர் இலங்கையில் இந்த முறைதான் நடைமுறையிலிருந்தது.
2. இத்தகைய ஒரு தேர்தல் முறை மூலம் ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று முதலில் வந்து விட்டாலும் இது இதர அங்கத்தவர்கள் பெறும் வாக்குத் தொகையை விடக் குறைவாக இருக்கலாம். எனவே இது ஒரு தொகுதி மக்களின் அபிலாசைகளை சரிவர பிரதிபலிக்காது என்று விமர்சிக்கப்பட்டது.

மேலும், நாடளாவிய ரீதியில் கணிப்பீடு செய்யும்போது மக்கள் விருப்பத்திற்கும் தேர்தல் முடிவுகளுக்குமிடையில் முரண்பாடுகள் நிலவுவதால் இது உண்மையாகவே நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இல்லாததால் இது உண்மையான ஜனநாயகம் அல்ல என்று விவாதிக்கப்பட்டது.

3. சில நாடுகளில் இரண்டு சுற்று வாக்குகள் கணக்கிடப்படுகின்றது. போட்டியிடுபவர் முதல் சுற்றில் 50 சதவீதமான வாக்குகளுக்கு அதிகமான வாக்குகளை பெற்றால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் ஒருவரும் 50 சதவிகிதமான வாக்குகளுக்கு அதிகம் பெறவில்லையென்றால் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வழக்கமாக அதிகமான வாக்குகளை பெற்ற முதலிரண்டு வேட்பாளர்களுக்கிடையில் தான் இந்த இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும். இந்த சுற்றில் அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
(3ஆம் பக்கம் பார்க்க)
தேர்தல்.......

இந்த முறையின்படி ஒரு கட்சி வேட்பாளர் பட்டியலில் ஆகக் குறைந்த வாக்குகளை பெற்றவரின் வாக்குகள் விகிதாசார அடிப்படையில் அதன் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு வேட்பாளரையும் கணக்கிலெடுத்த பின்னர் இதில் அதிக வாக்குகள் பெறுபவர் தேர்;ந்தெடுக்கப்படுகிறார். இந்த அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களை தெரிவு செய்ய முடியும்.

இவ்வாறு உலக நாடுகளில் பல்வேறு விதமான தேர்தல் முறைகள் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய தேர்தல் முறைகளுக்கிடையிலேயே சில வேறுபாடுகளும் உண்டு.

இலங்கையில் தற்போது ஒரு மாவட்டம் பல அங்கத்தவர் தொகுதியாக கணிப்பீடு செய்யப்படுகிறது. முதலில் கட்சி வாரியாகவோ அல்லது சுயேச்சை குழு மூலமாகவோ வாக்குகளை பதிவு செய்த பின்னர் ஒரு கட்சிப் பட்டியலில் உள்ள மூன்று வேட்பாளர்களுக்கு மட்டும் விருப்பு வாக்குகள் அளிக்கப்படுகின்றன.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை குறைக்க வேண்டுமென்பது ஒவ்வொரு தேர்தலின் போதும் முன்வைக்கப்படும் ஒரு முக்கிய ஆலோசனையாக உள்ளது. ஆனால் தேர்தலின் பின் ஜனாதிபதி அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற கருத்து பின்போடப்படுவது வழக்கமாகி விட்டது. இது ஒருவேளை ஜனாதிபதி அதிகாரங்களை குறைக்க முடியாமலே போய்விடுமோ என்ற ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள சில அதிகாரங்களை குறைப்பதையே அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருந்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இப்பொழுது ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை குறைப்பது பற்றி ஆட்சேபனை இல்லை. ஆனால் தேர்தல் முறையையும் மாற்றாமல் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு தங்களுடைய ஆதரவு கிடைக்காது என்று கூறிவிட்டார்கள்.

எனவே தற்போது ஜனாதிபதி முறை, தேர்தல் முறை இரண்டையும் சேர்ந்தே மாற்றலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசிய கட்சியும் ஆதரவளித்துள்ளார்கள்.

இப்பொழுது உள்ள தேர்தல் முறை முன்னர் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையை விட மலையகத் தமிழர்களுக்கு சற்று அதிகப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக உள்ளது. மாவட்ட அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் மலையகத் தமிழர் மக்களுக்கு மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பது இப்பொழுதும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியாத நிலையே இன்று நிலவுகிறது. இப்படி இருக்கும் போது தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் இப்பொழுது இருப்பதை விட மேலும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைக்கக்கூடிய நிலை இருக்கின்றது. எனவே தேர்தல் மாற்றத்தைப் பற்றி வெகு கவனமாக ஆராய்ந்து புதிய ஆலோசனைகளை சமர்ப்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம் மலையக மக்களுக்கு உண்டு. பாராளுமன்றம் முதல் உள்ளுராட்சி தேர்தல்கள் வரை மலையக தமிழர் பிரதிநிதித்துவத்தில் எத்தகைய பிரச்சினைகளை ஏற்படுத்தும், இதற்கு மாற்று வழி காண முடியுமா என்பதை பார்ப்பதே இந்த குறிப்பின் நோக்கமாகும்.

1978ஆம் ஆண்டு இலங்கை அரசியல் யாப்பிலே வாக்குரிமையும், தேர்தலும் என்ற அத்தியாயத்தில் விதி 99(யு) இவ்வாறு கூறுகிறது. ….விதி 98 இன் கீழ் 196 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 29 தேசிய அங்கத்தவர் பட்டியலில் ஒவ்வொரு கட்சிக்கும் அல்லது சுயேச்சை குழுவிற்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும்……

தேர்தல் ஆணையாளர் இத்தகைய ஓர் அறிவித்தலை கொடுக்கும் முன் ஏதாவது ஒரு சமூகத்திற்கு இனத்துவ அடிப்படையிலே அல்லது வேறு வகையிலோ விதி 98இன் கீழ் அந்த பிரிவைச் சார்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாசார அங்கத்துவத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பது பற்றி குறிப்பிட்ட அந்த கட்சியின் அல்லது சுயேச்சை குழுவின் செயலாளரோடு தொடர்பு கொண்டு கூடுமான அளவில் சகல இனப் பிரிவினரும் தங்கள் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனரா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்…..

ஆனால் நடைமுறையில் இந்த விதி கடைப்பிடிக்கப்படவில்லை. முன்னைய பாராளுமன்றத்தில் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இயங்கிய பாராளுமன்றத் தெரிவுக் குழு தேர்தல் முறை மாற்றம் பற்றி பல சிபாரிசுகள் செய்துள்ளது. 140 பேர் தொகுதி அங்கத்தவர்களாகவும், 70 பேர் மாவட்ட விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதே தெரிவுக்குழு சமர்ப்பித்திருக்கும் சிபாரிசாகும். இது தவிர வேறு பல சிபாரிசுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதில் கீழ்கண்ட சிபாரிசும் உள்ளது…. தனி தொகுதி அங்கத்தவர் தொகைக்கும் விகிதாசார அங்கத்தவர் தொகைக்கும் இடையே 2:1 என்ற விகித முறை நடைமுறையில் இருக்கும். ஆனால் ஒரு மாவட்டத்தின் தன்மை அதனுடைய விஸ்தீரணம் மக்கள் தொகையில் இனப்பிரிவுகள் என்பதை மனதில் கொண்டு மாவட்ட விகிதாசார அங்கத்துவ தொகையை மாற்ற முடியும்.
இந்த முக்கியமான விதி மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வழிவகுக்கின்றது.

இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இலங்கையின் பல்லினத் தன்மை தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 1924இல் செயல்பட்ட சட்டசபையில் இது பிரதிபலிக்கிறது. 1947ஆம் ஆண்டு அறிமுகமாகிய சோல்பரி அரசியல் யாப்பில் இந்த கோட்பாடு அடக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1959இலும், 74இலும் புது தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது இது ஆணைக்குழுவின் நிர்வாகக் கட்டளையில் அடங்கியிருக்கிறது.

இதுபோலவே 1978 அரசியல் யாப்பிலும் இந்த கோட்பாடு ஐயம் திரிபர பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates