Headlines News :
முகப்பு » » இலங்கை தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது - முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை

இலங்கை தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது - முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை

உலக நாடுகளின் தேயிலை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கூறுகிறார்

உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளை விட இலங்கையிலுள்ள தோட்ட தொழிலாளருக்கு அதிக சம்பளமும் பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளில் சுமார் இரண்டரை டொலர்கள் மாத்திரமே நாளாந்த சம்பளமாக தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், இலங்கையில் நாளாந்த சம்பளமாக நான்கரை டொலர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.

கேள்வி: 2015 மார்ச் மாதத்துடன் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையேயான சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. அடுத்த ஒப்பந்தத்திற்கு தயாராகி விட்டீர்களா? தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கமுடியும்?

பதில்: உண்மையிலேயே இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலையில் 95 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. தேயிலை விற்பனையில் இலங்கையை போல் இந்தியா, கென்யா, சீனா போன்ற நாடுகளும் உலக சந்தையில் இருக்கின்றன. இது இலங்கையின் தேயிலையாக இருந்தாலும் உலக சந்தையிலேயே விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நாங்கள் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகின்றோம், தேயிலை உற்பத்தி செலவு போன்றவை உலக சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டே அமையவேண்டும்.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகமாவே இருக்கின்றது. இந்தியா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக இரண்டு டொலர்களை (சுமார் 260 ரூபா) வழங்குகின்றனர். இலங்கையில் நாங்கள் சுமார் நான்கரை டொலர்களை வழங்குகின்றோம். இதேபோல் ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளை விட இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. தோட்ட தொழிலாளர்களுக்கு நாம் வாங்கும் சம்பளமே உலகின் ஏனைய தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மிக அதிகமாகவுள்ளது.

ஏனைய நாடுகளில் நாளாந்தம் தோட்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் தேயிலையை விட நாமே குறைவாக உற்பத்தி செய்கின்றோம். கென்யாவில் நாளாந்தம் இரண்டரை டொலர் சம்பளம் பெறுவதற்கு 48 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் இரண்டு டொலர்கள் சம்பளம் பெற குறைந்தது 27கிலோக்களாவது பறிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் நான்கரை டொலர் நாளாந்த சம்பளத்திற்கு ஆகக்கூடியது 18 கிலோ தேயிலை பறித்தால் போதுமானது. தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இலங்கையிலேயே தேயிலை உற்பத்திச் செலவு அதிகரித்து காணப்படுகின்றது.

தேயிலை விலை உலக சந்தையில் கிலோ 400 ரூபாவாக இருக்கும் போது உற்பத்திச் செலவு 500 ரூபாவாக இருக்கின்றது. வருடாந்தம் 300 நாட்களாவது தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற ஷரத்தும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஒப்பந்தத்தில் உள்ளபடி தோட்டத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்: இல்லை , இல்லை. 300 நாட்களுக்கு மேலாகவே வேலை வழங்கியுள்ளோம். தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால் எமக்கொன்றும் செய்யமுடியாது.

கேள்வி: கடந்த வருடம் மாத்திரம் 90 சதவீத தொழிலாளர்களுக்கு 16 நாட்களுக்கு குறைவாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: இந்த புள்ளிவிபரங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், எங்களிடம் தான் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. இணையதளங்களில் பெறப்படும் புள்ளிவிபரங்கள் சரியானவையல்ல. உதாரணத்திற்கு எமது நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் 300 நாட்களுக்கு அதிகமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்குவது பிரச்சினையல்ல. அவர்கள் வேலைக்கு வருவதில் தான் பிரச்சினை இருக்கின்றது. ஹட்டன் பகுதியிலுள்ள தோட்டங்களில் கடந்த வருடம் 300 நாட்களுக்கு மேலாக வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தோட்டங்களில் குறிப்பிட்டளவு வேலை வழங்கியுள்ளோம்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் 76 சதவீத நாட்கள் வேலை வழங்கவேண்டுமென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்கள் வழங்கினால் தான் 140 ரூபா அவர்களது நாளாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கூற்று சரியானதா?

பதில்: நான் அதை தெளிவுபடுத்த வேண்டும். இயற்கை அனர்த்தங்கள் இல்லாவிட்டால் வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கவேண்டும். வரட்சியான காலத்தில் மாதாந்தம் 22 நாட்கள் வேலை வழங்க முடியாவிட்டால் அதற்காக நாங்கள் சம்பள முற்பணம் வழங்குவோம். சில மாதங்களில் ஐந்து அல்லது ஆறு நாட்களே வேலை வழங்கக் கூடியதாகவும் இருக்கும். இந்நாட்களில் நாங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம் வழங்குவோம். அதிகமாக வேலை வழங்கப்படும் மாதங்களில் அந்த சம்பள முற்பணத்தை தவணை ரீதியில் அறவிட்டுக் கொள்வோம்.

கேள்வி: 2015 கூட்டு ஒப்பந்தத்திற்கு இவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா?

பதில்: இதுவரை கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை. முத்தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தேயிலை முகாமைத்துவ நிறுவனங்கள் தாங்கிக் கொள்ளும் தொகையையே நிர்ணயிக்க வேண்டும். இறப்பர் தோட்டத் தொழிற்றுறை இப்போது கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. தேயிலை கொழுந்து கொள்வனவு செய்து தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் தேயிலை தொழிற்சாலைகள் நஷ்டம் என்ற காரணத்தால் இப்போது மூடப்பட்டுள்ளன. ஆனால், தோட்டங்களில் இப்படிச் செய்ய முடியாது. தேயிலைத் தோட்டங்களில் நிரந்தரமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு வருடாந்தம் 300 நாட்கள் வேலை நாட்கள் வழங்க வேண்டும். சம்பளம் உட்பட இதர வசதிகளையும் வழங்கித்தான் ஆகவேண்டும்.

கேள்வி: தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் குறிப்பிட்ட தொழிற்சங்கங்களுக்குமிடையே தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இப்போது நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைத்துக் கொள்ளப்படுமா?

பதில்: 40 சதவீத அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றலாம். இருந்தும் இந்தமுறை இதற்கு தகுதியான தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

கேள்வி: புதிய அரசின் இடைக்கால வரவு–செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசின் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவாக வழங்கப்பட்ட 3,000 ரூபாவுடன் இம்மாதம் 5,000 ரூபா சேர்த்து 8,000 ரூபா வழங்கப்படுகின்றது. எஞ்சிய தொகை ஜூலை மாதம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் தனியார் துறை ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 2,500 ரூபாவாவது சம்பள அதிகரிப்பு வழங்கும்படி அரசாங்கம் தனியார் துறை வேலை கொள்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள அதிகரிப்பு வழங்க முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்: எந்த தொழிற்றுறையாக இருந்தாலும் அந்த தொழிற்றுறை இலாபமீட்டும் வகையில் செயற்பட வேண்டும். தற்போது ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு கிட்டத்தட்ட 500 ரூபாவாக இருக்கின்றது. தேயிலை உலக சந்தையில் 400 ரூபாவிற்கே விற்பனையாகிறது. நாங்கள் உலக சந்தையில் தேயிலை விற்பனையாகும் தொகையை அடிப்படையாக கொண்டே சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவால் அதிகரிக்கும்படி கூறினாலும் அதை எம்மால் செய்ய முடியாது.

கேள்வி: தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து விரிவாக கூறுவீர்களா?

பதில்: ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்கால கொடுப்பனவு, இலவச வைத்திய சிகிச்சைகள், இலவச வீடு ஆகியன தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 20 வருடங்களில் நாங்கள் 20,000 வீடுகளை புதிதாக நிர்மாணித்துள்ளோம். நாங்கள் வீடமைப்புக்கு இலவசமாக காணிகளை வழங்கியுள்ளோம். இதேவேளை, பழைய லயன் அறைகளை பெரும் பொருட்செலவில் புதுப்பித்துள்ளோம். லயன் அறைகளுக்கு புதிதாக கூரைத்தகடுகளை வழங்கியுள்ளோம். இதற்காக எமது நிறுவனங்கள் ஐம்பது சதவீதத்தை வழங்கியுள்ளன. எஞ்சிய 50 சதவீதத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் செலவிட்டது.

கேள்வி: தேயிலை ஏற்றுமதி வரி, தேயிலை ஏற்றுமதி மீதான செஸ் வரி மற்றும் தேயிலை விற்பனை தொடர்பான விளம்பரத்திற்காக அறவிடும் (Promotion) வரி ஆகியவற்றை அரசாங்கம் நீக்கினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கணிசமான தொகை சம்பள அதிகரிப்பு வழங்க முடியாதா?

பதில்: மொத்தமாக ஒரு கிலோ தேயிலைக்கு 13 ரூபா 50 சதத்தை வரியாக செலுத்தி வருகின்றோம். இவ்வரிகளை இரத்துச் செய்தாலும் கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது. கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் தேயிலையின் விலை அதிகரித்தால் மட்டுமே சம்பள அதிகரிப்பை வழங்கமுடியும்.

கேள்வி: இப்போது தேயிலை தோட்டங்களில் வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீதிகள் அனைத்தையும் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. முன்னர் இவையனைத்தையும் தோட்ட உரிமையாளர்களே செய்துவந்தனர். எனவே இப்போது உங்களது இலாபம் அதிகரித்திருக்கும் அல்லவா?

பதில்: இப்போதும் ஒருசில தோட்டங்களில் இப்பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். முன்னர் தோட்டங்களில் குடியிருக்கும் தொழிலாளர்கள் கட்டாயமாக தோட்டங்களில் வேலை செய்ய வேண்டும். இப்போது அந்த நிலையில்லை. தொழிலாளர்கள் மிக சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் வேலை செய்துகொண்டு தோட்டங்களில் குடியிருக்க முடியும். அவர்களுக்கு இன்று வேலை செய்ய முடியவில்லையென்று தோன்றினால் அவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள். தோட்டங்கனை தேசிய மயமாக்கும் போது சுமார் நான்கரை இலட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். இப்போது இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் மாத்திரமே இருக்கின்றனர்.

இது குறித்து குறை சொல்ல முடியாது. தோட்டங்களில் கல்வி மேம்பட்டுள்ளது. பலர் நகரங்களில் தொழில் புரிகின்றனர். இதன்காரணமாவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தோட்ட மக்களின் முன்னேற்றத்தை குறை சொல்ல முடியாது. தோட்டத் தொழிலாளியான பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது போன்ற அனைத்திற்கும் தோட்ட நிர்வாகமே செலவிடுகின்றது. குழந்தை பிறந்து ஏற்பு ஊசி முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்குத் தேவையான தடுப்பு ஊசிகளை ஏற்ற தாயாருக்கு சம்பளத்துடனான குறிப்பிட்ட நேர விடுமுறை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவுகள் அதிகரித்து வந்த போதும் தேயிலையின் விலை உயரவில்லை. செலவுகள் அதிகரிக்கின்றனவே தவிர தோட்டங்களின் வருமானங்கள் அதிகரிக்கவில்லை.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது சாத்தியப்படுமா? ஜே.வி.பியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றது. இது குறித்து ஆராயப்படுமா?

பதில்: உலகில் எந்த நாட்டிலுமே விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்குவதில்லை. பெருந்தோட்டத் துறைக்கும் இது பொருந்தும். அதாவது, உற்பத்தியளவு நிரந்தரமாக இருக்கும் தொழிற்றுறைகளுக்கு மாதச்சம்பளம் வழங்கலாம். நிரந்தர உற்பத்தியை எதிர்பார்க்க முடியாத விவசாயத்துறைக்கு எவ்வாறு மாதச்சம்பளம் வழங்குவது? பலதரப்பினர் மாதச்சம்பளம் வழங்கும்படி கோரிக்கை விடுக்கலாம். அது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். வருடம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தால் விவசாயத்துறை தொழிலாளர்களுக்கும் மாதச்சம்பளம் வழங்கமுடியும்.

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையகத்திலுள்ள அரசியல்வாதிகள் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடமைப்புக்கென ஏழு பேர்ச்சஸ் காணி பெற்றுத் தருவதாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தார்கள். திகாம்பரம், இராதாகிருஷ்ணன் மற்றும் வேலாயுதம் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி அவர்கள் பிரசாரம் செய்த வேட்பாளரை வெற்றியடையச் செய்தனர். மலையக மக்களின் வீடமைப்பிற்கு ஏழு பேர்ச்சஸ் காணியை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தயாரா?

பதில்: தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே வீடமைப்பிற்கு ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

இதுவொன்றும் புதிதல்ல. தொழிலாளர்களுக்கு அரசாங்கமோ வெளிநாடுகளோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ வீடுகளை அமைத்துக் கொடுக்கத் தயாராகவிருந்தால் அதற்கான காணியை வழங்க முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே கொள்கையளவில் தயாராகவேயிருந்தது. நாங்கள் காணியை தரமாட்டோம் என ஒருபோதும் கூறவில்லை. எமது தொழிலாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருக்கமாட்டோம்.
நன்றி  வீரகேசரி 15.02.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates