Headlines News :
முகப்பு » » ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்துக்கு அழுத்தம் கொடுக்காத தலைமைகள் - விண்மணி

ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்துக்கு அழுத்தம் கொடுக்காத தலைமைகள் - விண்மணி


பெருந்தோட்டத்துறை சமூகத்தினருக்கென்று கடந்த வரவு  செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் சம்பந்தமாக இம்முறை வரவு செலவுத்திட்டத்திலே எவ்வித குறிப்பும் இல்லை.

பொதுவாக ஒரு வரவு செலவுத்திட்டத் தில் பிரேரிக்கப்படும் இத்தகைய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதனையடுத்து வரும் வரவு செலவுத்திட்டத்திலே விவரிக்கப்படும் வழமை இருந்து வருகின்றது. கடந்த வரவு செலவு திட்டத் தில் அறிவிக்கப்பட்ட வேறு சில விடயங் கள் குறித்து இம்முறை வரவு செலவு திட்டத்திலேயும் குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டதையடுத்து இக்கட்டுரையார் எழுதிய கவர்ச்சிகரமான 50 ஆயிரம் வீடுகளும் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்களும் என்ற கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்த சில விட யங்களை நாம் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்வது பொருத்தமுடையதாகும்.

அக்கட்டுரையில் இவ்வீடுகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வெவ் எண்ணிக்கை யில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன? இவ்வீடு களின் நிர்மாண வேலைகளை முன்னெடுக்கப் போகும் அரச நிறுவனங்கள் எவை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. எல்லாவற்றிற் கும் மேலாக எவ்வெக் காரணிகளினால் இவ் வேலைத்திட்டம் கைகழுவிப் போகக் கூடிய வாய்ப்பு உண்டெனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த விடயங்கள் குறித்து அர சின் பங்காளிகளாகவுள்ள நமது தலைவர் கள் ஒரு தூசாகவாவது கருத்தில் கொண்டார்களில்லை. இதுவரை காலமும் வசதியான மௌனம்தான் சாதித்து வருகின்றார்கள்.

மறுபக்கத்தில் எதிராணியிலேயுள்ள நம் மவர்களும் இவ்வேலைத்திட்டம் முறை யாக நடைமுறைப்படுத்தப்பட அரசு க்கோ அரசின் பங்காளியாயுள்ள நம்மவர்களுக்கோ நெருக்குவாரங்களை ஏற்படுத்த உருப்படியாக எதையும் செய்ததாக இல்லை. சும்மா இருந்து விட்டு எப்போதாவதொரு முறை ஏதேனும் கருத்து வெளியிடுவதால் பயனேதும் விளைந்து விடப் போவதில்லை.

ஆனால், போனதெல்லாம் போகட்டும் இதாவது ஒழுங்காகக் கிடைத்துவிடாதா என்ற இயல்பான மனித எதிர்பார்ப்பும் நப்பாசையும் இந்த 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படும் என்ற ஒரு எதிர்பார்ப்பை மலையக மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஆனால், கடந்த வரவு –செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இது சம்பந்தமான மேலதிக விவரங்களே தும் வெளியிடப்படாமல் மூடு மந்திரமாக இருந்த நிலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படாதிருந்தது. நமது தலை வர்கள் இது குறித்து எவ்வித அக்கறையுமில்லாமல் வாய்மூடி மௌனிகளாயிருந்தனர். இதற்கு முன்னர் மலையக மக்களுக்கென அறிவிக்கப்பட்ட சில திட்டங்களைப் போல இதுவும் ஒரு ஏமாற்று நாடகமாகத்தான் இருக்கப் போகின்றது என்பது அனைவரினதும் எண்ணமாக இருந்தது.

இப்போது இது மலையக மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டம் மாத்திரமல்ல அதற்கும் அப்பால் ஒரு கபடமான வேலை த்திட்டம் இதிலே மறைந்திருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.

பெருந்தோட்டத் துறையினருக்கான இந்த 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் தென் மாகாணத்தில் அகலவத்த மற் றும் தெனியாய பிரதேசங்களைச் சேர்ந்த பெருந் தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பேட்டியொன்றில் நிர்மாண பொறியியல் சேவை மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.

கேள்விகள் பல எழுகின்றன இந்த இடத் தில், இந்த 50 ஆயிரம் வீடுகளை மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் அமைக்க வேண்டு மெனத் தீர்மானித்தவர்கள் யார்? இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர், மலையகத்தைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்படவில்லையா? வீடமைப்பு அமை ச்சர் தனியாக தீர்மானித்துள்ளாரா? முழுமையான மலையகம் என்று எடுத்துப் பார்க்கும் பொழுது இவ்வீடுகளை அமைப்பதற்குத் தென்மாகாணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்னவாயிருக்கலாம்?இக்கேள்விகளுக்கான பதில்களிலேயே இவ்வேலைத் திட்டத்தின் வஞ்சகத் தன்மை மறைந்திருக்கின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகள் அடையா ளம் காணப்பட்டு தெனியாய மற்றும் அகலவத்த பகுதிகளில் வீடுகள் அமைக்க அடி க்கல் நாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் அளி த்துள்ள விளக்கம் மேற்படி கேள்விகளுக்கு பூரணமான விளக்கமாக அமையமாட்டாது.

ஒட்டுமொத்த மலையகத்தில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் மாத்திரமே பொருத்தமான காணிகள் இருப்பதாக தெரிவு செய்த நிபுணர்கள் யார் என்பதும் பெரும் மர்மமாக இருக்கிறது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்களில் தமிழ் பேசும் இந்திய வம்சாவளி மக்கள் பெரும்பான்மையாகப் பணிபுரிந்து வந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், அவர்கள் படிப்படியாக அத் தோட்டங்களிலிருந்து அகற்றப்பட்டு தெனியாய வழியாக இறக்குவானைப் பகுதித்தோட்டங்களை வந்தடைவது கடந்த பல பத்தாண்டுகளாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும். இவ்வாறு அகற்றப்படும் தொழிலாளர்களுக்கான இடங்களை நிரப்பி வருபவர்கள் சகோதர சிங்களம்பேசும் தொழிலாளர்களே.

இதேபோன்று களுத்துறை, மத்துகம, ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசத் தமிழ்ப்பேசும் தோட்டத்தொழிலாளர்க ளும் படிப்படையாக அங்கிருந்து அகற்றப்பட்டு அகலவத்த கலவான வழியாக நிவித்திகலைப் பகுதித் தோட்டங்களுக்கு வந்தடைந்து இப்போது அங்கிருந்தும் இர த்தினபுரி காவத்தைப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றார்கள்.

இவர்களில் கணிசமானோர் தேயிலைக் குறு நிலங்களைச் சரணடைகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்வதற்கு இது சந்தர்ப்பமில்லையெனினும், சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ்பேசும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இது நிறைவேறி வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தென்மலைக் குன்றங்களில் தேய்ந்துவரும் மலையகத்தின் பல பெருந்தோட்டங்களில் சகோதர சிங்களம் பேசும் தொழிலாளர்கள் அதிகளவிலும் தமிழ்பேசும் தொழிலாளர்கள் மிகக்குறைவாக வும் பணிபுரியும் ஒரு நிலை உருவாகியுள் ளது.

இந்நிலையில் அப்பகுதிகளில் வீடுகள் அமைக்கப்பட்டால் அவ்வீடுகள் பெருமள வில் சிங்களம் பேசும் மக்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது. மிகச்சிறிய அள வில் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் கிடை க்கலாம்.

சகோதர சிங்களம் பேசும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வசதியான வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தை இப்படி குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்காக குறிப்பிட்ட ஒரு சாராருக்காக பயன்படுத்துவதனால் தான் இதை ஒரு கபட நாடகமாகக் கொள்ள வேண்டியுள் ளது
இந்த விடயத்தில் தனியே வீடமைப்பு அமைச்சரை மட்டும் குறை சொல்வதி லும் நியாயமேதும் இருப்பதாகத் தெரிய வில்லை. இவர் அரசின் கொள்கைகளுக்கேற்ப தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையிலுள்ளவராவார்.

நமக்குள்ள கேள்வியெல்லாம் நம்மவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான். இப்படியான செய்தி வந்த பிறகாவது ஏதேனும் ஒரு விளக்கத்தை அளி த்திருக்கலாம்.

ஆகவே, நமது அரசியல்வாதிகளுக்கு பொறுப்புணர்வும் தேவையும் அக்கறையு மிருக்குமானால் இத்திட்டத்தை மீளாய்வு செய்து முறையாக நடைமுறைப்படுத்தப் படுவது குறித்த நடவடிக்கைகள் எடுப்ப தற்கும் மாறிவரும் அரசியல் சூழ்நிலை களுக்கேற்ப அரசுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதற்கும் இன்னமுமே போதிய அவகாசமிருக்கின்றது.

ஆனால், நம்மவர்கள் அப்படியெல்லாம் செயற்படுவார்கள் என்பதை எதை வைத்து நம்புவது?


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates