இலங்கையில் முதலாவது தொழிலாளர் போராட்டமான அச்சுத் தொழிலாளர் போராட்டம் நிகழ்ந்து 130 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தப் போராட்டம் தான் இலங்கைக்கு முதலாவது தொழிற்சங்கத்தை அறிமுகப்படுத்தியது, இந்தத் தொழிற்சங்கத்தின் பின்னர் தான் நாட்டில் பல தொழிற்சங்கங்கள் உருவாவதற்கு வித்தாக அமைந்தது. மலையகத்தின் முதல் தொழிற்சங்கம் கூட நாற்பது வருடங்களின் பின்னர் தான் உருவானது. ஏன் அதிக உழைக்கும் வர்க்கத் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு துறையில் தொழிற்சங்கமொன்று உருவாவதற்கு நான்கு தசாப்தங்கள் எடுத்தன என்பதற்கான காரணங்களை குமாரி ஜெயவர்த்தன தனது “இலங்கையின் முதலாவது வேலைநிறுத்தம்” என்கிற நூலில் விளக்குகிறார். அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் பற்றிய விபரமான வரலாற்று ஆய்வுப் பதிவுகளை செய்தவர் குமாரி ஜெயவர்த்தன என்றால் அது மிகையாகாது. தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“1893ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தொழிலாளர் இயக்கத்தில் பிரெடெரிக் ஏங்கெல்சின் கால சேவையைப் பாராட்டி வியன்னா நகரில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பின் போது; பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தமது சேவைக்கான அதி உயர்ந்த பரிசு என்பது’ சைபீரியச் சிறைச்சாலைகளிலிருந்து கலிபோர்னியாவின் தங்கச் சுரங்கங்கள் வரை, அவுஸ்திரேலியா போன்ற மிகத் தூர இடங்களுக்கும் பூமியின் நாலா பக்கங்களிலும் தொழிலாளர் இயக்கம் பரவியதுதான் எனப் பிரகடனம் செய்தார். இந்தப் பட்டியலில் அவர் இலங்கையையும் சேர்த்திருக்கலாம், ஏனெனில், அவர் கூறிய 'விழிப்புணர்வின் தீப்பொறி' கொழும்பு தொழிலாளரிடையே அவ்வேளையே இடம் இடம்பெற்றிருந்தது. 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி எச்.டபிள்யூ. கேவ் கொம்பனியைச் (H.W. Cave and Co) சேர்ந்த 60 அச்சுத் தொழிலாளர்கள் தமது சம்பளம் தாமதம் ஆனதற்காக 5 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.”
இலங்கை தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் முன்னோடிப் போராட்டமாகக் கருதக்கூடிய இந்த போராட்டத்தினதும், முதலில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்கிற ரீதியிலும் இந்த ஆண்டு இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் அதன் நினைவாக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லும்படியாக ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இலங்கையில் ஒரு அரசாங்க ஊழியர் ஒரு நாளைக்கு 10 மணிநேர வேலைகளை செய்யும் நிலையே இருந்தது. ஒரு தனியார் துறை ஊழியர் சுமார் 12 மணிநேரம் அல்லது 14 மணி நேரம் தினசரி வேலையாகக் கொண்டிருந்தார் . பயிற்சி பெற்ற ஒரு தொழிலாளிக்கு மாதத்திற்கு சுமார் முப்பது ரூபாவும், திறமையற்ற தொழிலாளிக்கு சுமார் பன்னிரண்டு ரூபா சம்பளமும் வழங்கப்பட்டது. இந்த ஊதியம் அதிகரிகப்பட்ட அதிகரிக்கப்பட்ட சில சந்தர்ப்பங்கள் இருந்ததைப் போலவே குறைக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. பணிக்குத் தாமதமாக வருவது அபராதம் விதிக்கப் போதுமான குற்றமாக கருதப்பட்டது. அபராதம் ஒரு நாள் சம்பளத்தை விட அதிகமாகும். வேலையாட்களை மதிக்காதது, கீழ்ப்படியாமை, ஓய்வெடுப்பது போன்றவையும் இதே போன்ற குற்றங்களாக கருதப்பட்டன. பணியிலிருந்து வெளியேறுவது கடுமையான குற்றமாகும்.
19 ஆம் நூற்றாண்டில், நெசவாளர்கள், மாட்டு வண்டிக்காரர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே கணிசமான அளவு தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதும், அவை எந்த அமைப்பும் அல்லது தலைமையும் இல்லாமல் நடத்தப்பட்டன. அதுவும் அவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவது மற்றும் சட்டப்பூர்வ உரிமங்களை வழங்குவது தொடர்பானவையாக இருந்தன. ஆனால் இவ்வாறு ஒரு நவீன தொழில்துறை போராட்டத்தின் வடிவத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிற முதல் வேலைநிறுத்தம் 1893 இல் கொழும்பில் நிகழ்ந்த அச்சுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டமே.
1891 ஆம் ஆண்டில் இலங்கையில் பத்திரிகை அலுவலகங்களிலும், அச்சு நிறுவனங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சுத் தொழிலாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் பணிபுரிந்தனர். இந்தக் காலப்பகுதியில் கொழும்பில் தினமும் ஆங்கிலப் பத்திரிகைகள் மாத்திரம் வெளியிடப்பட்டன. தொழிலாளர் எழுச்சிக்குப் பின்னர் முதலாளிகளுக்கு சார்பான பத்திரிகைகள்; தொழிலாளர்களின் ஓர்மத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் உடனடியாக செய்திகளை வெளியிட்டன. உதரணத்துக்கு; அன்றைய ஊதியத்தை விடக் குறைந்த ஊதியத்தில் பணியில் அமர்த்துவதற்காக இந்தியர, சீன, மலாய்த் தொழிலாளர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளியிட்ட செய்தியைக் குறிப்பிடலாம்.
1893ல் கொழும்பில் அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமானது தொழிற்சங்கங்களின் அவசியத்துக்காகக் அன்று போராடிய ஏ.ஈ.புல்ஜென்ஸ் மற்றும் கலாநிதி லிஸ்போ பிந்து (Lisboa Pinto) ஆகியோர் மேற்கொண்ட மகத்தான முயற்சிகளின் விளைவு என்றும் கூறலாம். பறங்கி சமூகத்தைச் சேர்ந்த புல்ஜென்ஸ் இங்கிலாந்து சேரணு உயர்கல்வியைக் கற்று இலங்கைக்கு திரும்பி பொதுக் காரியங்களில் ஈடுபட்டவர். தொழிலாளர் பிரச்சினைகள் முதலில் லிஸ்போ பின்ரோவால் வெளியிடப்பட 'சுயாதீன கத்தோலிக்கம்' (Independent Catholic) இதழில் விவாதிக்கப்பட்டன. அச்சுத் தொழிலாளர்களின் முக்கிய குறைகளாக ஊதியமின்மை, மோசமான வேலை மற்றும் வாழ்க்கைத் தரம் என்பவற்றை முன்வைத்தனர்.
ஜூலை 1893 இல் , புல்ஜென்ஸ் அப்பத்திரிகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அது தொழிலாளி தனது சொந்த பலத்தையும் உரிமைகளையும் எவ்வாறு வென்றெடுப்பது என்பதை விளக்குகின்ற கட்டுரையாக அமைந்திருந்தது. அதன்படி, தொழிலாளர் சங்கங்களை கட்டியெழுப்புவதும், அவற்றின் மூலம் போராடுவதும், ஆட்சியாளர்களை அதன் மூலம் மண்டியிட வைப்பது எப்படி என்பது பற்றியும், உலகின் தொழிலாளர் போராட்டங்களைப் பற்றியும் அக்கட்டுரை விளக்கியது. இந்த கட்டுரை தொழிலாளர்களுக்கான ஒரு வேண்டுகோளாக இருந்தது.
கட்டுரை வெளிப்படுத்திய சில உண்மைகள் மிகவும் வெளிப்படையானவை. பயணம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்ற மிக பலத்த மழை பெய்யும் நாளில் - காலி முகத்திடலில் மின்னல் தாக்கியதில் முத்து என்பவர் உயிரிழந்துள்ளார். அன்று காலை நகரத்தில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தில் தாமதமாக வந்ததற்காக ரூ.15 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் கொழும்பில் உள்ள எந்தவொரு பெரிய நிறுவனத்திலும் எந்த நாளிலும் மொத்த அபராதத் தொகை இவ்வளவு பெரியதாக இருக்குமா என்பது சந்தேகமே!
12 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஊழியருக்கு ரூ.12 அபராதம் விதிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மழை நாளில் தாமதமாக வந்ததற்காக. இந்த அலுவலகத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த அபராதம் ஒரே மாதத்தில் ரூ. 170.
இந்த அநீதிகள் அனைத்தும் சமத்துவத்திற்கான நற்பெயரை அனுபவிக்கும் ஒரு நிறுவனத்தால் நிகழ்த்தப்பட்டது என்று கட்டுரை கூறுகிறது. இது போன்ற ஒரு நிறுவனத்தில் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தால் " நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்" என்று அப்பத்திரிகை வாதிட்டது.
ஆனால் இந்தப் பிரச்சாரம் பலவீனமாகவே இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக புல்ஜன்ஸ் அப்பத்திரிகையின் ஊடாக மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக எச் டபிள்யு கேவ் நிறுவனத்தின் அச்சுப் பிரிவைச் சேர்ந்த சிலரை விவாதத்திற்குத் தயார்படுத்த முடிந்தது. கொழும்பில் அப்போது அன்றைய ஆங்கிலேயருக்குச் சொந்தமான மிகப் பெரிய அச்சக மற்றும் புத்தக வர்த்தக நிறுவனமாக எச்.டபிள்யு கேவ் நிறுவனம் இருந்ததுஆகும்.
இப்படி ஒரு சூழலில் தான் கேவ் நிறுவனத்தில் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது. வழமையாக மாத இறுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் பல சிரமங்களையும் கடன் சுமைகளையும் எதிர்கொண்டனர். சில தொழிலாளர்களின் மாத சம்பளம், 11 ரூபாய் வரை குறைவாக இருந்தது. மேலும், தாமதமாக பணிக்கு திரும்புதல், சேவைத் தவறுகள் மற்றும் விடுப்பு என்பவற்றை காரணம் காட்டி அதற்கான தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்டன. அச்சுத் தொழிலின் இயல்பால் ஏற்படும் உடல் ரீதியான உபாதைகள் மற்றும் அவர்களில் பெரும்பாலானோர் வாழ்ந்த மோசமான சூழல் போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் சோர்வுக்கும் சொல்லனா துன்பத்துக்கும் இலக்கானார்கள். காலதாமதமின்றி முறையாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கேவ் நிறுவனத்திடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் நிர்வாகம் அந்த கோரிக்கைகளை நிராகரித்தது.
இறுதியில் கியூ நிறுவனத்தின் 60 அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. ஆனால் அடுத்த நாளே அப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டார்கள். அடுத்தடுத்த நாட்கள் இன்னும் பலர் இணைந்துகொண்டார்கள்.
இத்தொழிலாளர்கள் தமிழ்,சிங்கள. பறங்கிய இனங்களைச் சார்ந்தவர்கள்; அவர்கள் மூன்று மொழிகளிலும் அச்சடிக்கும் வேலைகளை செய்தவர்கள். வேலைநிறுத்தம் தொடங்கிய ஒரு நாள் கழித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமான அச்சுத் தொழிலாளர் சங்கம் (The Ceylon Printers Society) 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள ராக்கெட் கோர்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கம் அமைப்பதற்கான தீர்மானத்தை எஸ். பி. தம்போ என்பவர் முன்மொழிந்தார், லவன்டஹான் (Lovendahan) என்பவரால் ஆமோதிக்கப்பட்டது. அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 18.9.1893 வெளியான "தி டைம்ஸ் ஆஃப் சிலோன்" இந்த கூட்டத்தை வரவேற்று எழுதியிருந்தது. சுமார் 450 ஊழியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிரபல வழக்கறிஞர் சார்ள்ஸ் பெரேரா தலைமை தாங்கினார். லிஸ்போ பின்தோ தலைவராகவும், ஏ.இ.புல்ட்ஜென்ஸ் செயலாளராகவும், ஜே.ஜி.பெர்னாண்டோ பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறாக, அங்கத்தவர்கள் கல்வியறிவும் அறிவும் கொண்டவர்களாக தொழிற்சங்கத் துறைக்குள் நுழைந்ததைக் காணமுடியும்.
அச்சுத் தொழிலாளர் சங்கத்தினரின் தலைமைப் பீடத்திலும் பல இனத்தவரும் அங்கம் வகித்தனர். சங்கத் தலைவர் டொக்டர் லிஸ்போ பின்ரோ கோவாவைச் சேர்ந்தவர். செயலாளர் ஏ.ஈ.புல்ஜென்ஸ் ஒரு பறங்கியர். அதுபோல செயற்குழு அங்கத்தவர்கள் பல சமூகத்தையும் சேர்ந்தவர்கள். பௌத்த சமயத்திற்காகப் பாடுபட்ட மாட்டினஸ் பெரேரா. சீ.டொன் பஸ்தியன் போன்றவர்களும் செயற்குழுவில் அங்கம் வகித்தனர். இவ்வாறு தொழிலாள வர்க்கத்தின் முதல் நடவடிக்கை இன ஒற்றுமையின் அடிப்படையில் நிகழ்ந்தது. "ஒற்றுமையே பலம்" என்ற வாக்கியம் சங்கத்தினுடைய முதற் சுலோகமாக அமைந்தது. இச்சங்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் இச்சுலோகம் பெரிதாக எழுதப்பட்டுப் பலரும் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட “சுயாதீன கத்தோலிக்கம்” செய்தித்தாள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "இந்த சிறிய தீவின் வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இதுபோன்ற கூட்டத்தை நடத்துவதற்கான யோசனை மிகவும் புதியதும் ஆச்சரியமானதும். சிலருக்கு, இது மிகவும் துணிச்சலான செயலாகத் தோன்றலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்."
சம்பள நாளுக்கு மிக அருகில் இந்த வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டதால் சம்பளம் வழங்குவதை நிறுத்தி வைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக, தொழிலாளர்கள் ஆறு நாட்களில் பணிக்கு திரும்பினர். இதனால், வேலை நிறுத்தம் தொடர முடியாததால், ஆறு நாட்கள் கழித்து முடிவுக்கு வந்தது. வேலையாட்களுக்கு ஓரளவு விசுவாசமாக இருந்த தொழிலாளர்கள் குழுவை அழைத்த தொழிலாளர்கள், நிபந்தனைகளுக்கு மன்னிப்பு கோருவதாகக் கூறி கடிதங்களில் கையெழுத்திட்டனர். மற்ற தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான். வில்லியம் என்கிற ஒரு தொழிலாளி இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவராக கணித்து ஒரு வார சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தோல்வியடைந்த போதிலும், தொழிலாளர் சங்கம் நீண்ட காலம் நீடிக்கைவிட்டாலும், இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கான வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஊக்கம் தரும் முன்னோடி போராட்டமாகவும், உதாரணமாகவும் இது அமைந்தது.
அச்சு தொழிலாளர் சங்கம் இலங்கையின் முதல் தொழிற் சங்கமாக மாறியது. 1894 ஆம் ஆண்டில், சங்கம் உருவாக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, டாக்டர் லிஸ்போ பின்ரோ இலங்கை அச்சுத் தொழிலாளர்கள் அனைவரும் தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரினார்.
அது மட்டுமன்றி இலங்கையில் நிகழ்ந்த இந்த போராட்டத்தின் பின்னர் அதாவது 1894 இல் சிட்னியும் பீட்ரிஸ் வெப் (Sidney, Beatrice Webb) ஆகியோர் எழுதிய தொழிற்சங்கவாதத்தில் வரலாறு (The history of trade unionism) என்கிற நூலும் வெளியாகியது. இந்த நூல் தொழிற்சங்கவாதிகளுக்கான மிக முக்கியமான கைநூலாக இன்றும் கருதப்படுகிறது. சுமார் 800 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த நூல் தொழிலாளர் இயக்க வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பிரித்தானியாவில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப தோற்றம் முதல் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அதன் வளர்ச்சியைப் பற்றி விரிவாக விபரிக்கின்ற நூல் இது.
இந்நூல் பல காரணங்களுக்காக முக்கியமானதாகக் கருதபடுகிறது. முதலாவதாக, இது தொழிற்சங்கங்கள் பற்றிய முதல் முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். வெப்ஸின் புத்தகத்திற்கு முன்பு, தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் முக்கியமற்றவை அல்லது தீங்கு விளைவிப்பவை என்று முதலாளித்துவ அமைப்பு முறையால் நிராகரிக்கப்பட்டன. தொழிற்சங்கங்களை ஒரு தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் அதனை சட்டபூர்வமாக்குவதற்கும், பிரித்தானிய சமூக, பொருளாதார வரலாற்றில் அவற்றின் முக்கியத்துவத்தை நிரூபிப்பதற்கும் வெப்ஸின் பணி உதவியது.
இரண்டாவதாக, இந்த நூல் ஒரு தேர்ந்த முறையியலின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்த நூல் ஏராளமான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அவர்கள் பல தொழிற்சங்கத் தலைவர்களையும், அவற்றின் உறுப்பினர்களையும் நேர்காணல் செய்திருந்தனர். எனவே தொழிற்சங்க இயக்க வரலாற்றைப் படிக்கும் எவருக்கும் வெப்ஸின் பணி ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக ஆனது. பிரித்தானிய உதாரணங்களைக் கொண்டிருந்தாலும் அது உலக அளவில் தொழிற்சங்க அனுபவங்களைப் போதித்த நூலாக அமைந்தது.
மூன்றாவதாக, தொழிற்சங்கங்கள் வெறுமனே பேரம் பேசும் அமைப்புகளாக மட்டும் இருந்திட முடியாது அன்றும் அதன் ஏனைய புரட்சிகர பாத்திரங்கள் எவை என்றும் அந்த நூலில் விபரித்துச் செல்கிறார். ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் பலப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அந்நூலின் ஆசிரியர்கள் வாதிட்டனர். தொழிற்சங்கங்களைப் பற்றிய நவீன புரிதலையும் சமூகத்தில் அவற்றின் பங்கையும் வடிவமைக்க வெப்ஸின் பணி உதவியது எனலாம். தொழிற்சங்கவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களால் பரவலாக இது வாசிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிற்சங்க சட்டங்களையும், கொள்கைவகுப்பை வடிவமைக்கவும் வெப்ஸின் பணி உதவியது.
இலங்கைக்கு இடதுசாரி இயக்கங்களை விதத்தைத் தலைவர்கள் இந்தப் பின்னியில் தான் இங்கிலாந்தில் இருந்து கற்றுக்கொண்டு வந்து இலங்கையின் இடதுசாரி இயக்கங்களை ஸ்தாபித்தார்கள்.
1893 க்கு முன்னர் 1860 ஆம் ஆண்டு தர்ஸ்டன் தொழிநுட்ப கல்லூரியின் நிர்வாகத்திற்கு எதிராக ஆசிரியர்களும் அங்கே பணிபுரிந்த தச்சர்களும் நடத்திய வேலை நிறுத்தம், 1870 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்பாசன பணிமனையொன்றில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், 1879 இல் வரி அதிகரிப்புக்கு எதிராக இறைச்சிக் கடை உரிமையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் போன்றவை தொழிலாளர் போராட்டங்களாக இலங்கையின் வரலாற்றில் பதிவாகி இருக்கிற போதும்; முறையாக திட்டமிடப்பட்டு அமைப்பாகத் திரண்டு மேற்கொள்ளப்பட தொழிற்சங்கப் போராட்டமாக இதைத் தான் கொள்ள முடியும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...