கார்ல் மாக்ஸ் வாழ்ந்த வீடு லண்டனில் இருப்பதாகவும், அது காட்சிசாலையாக இயங்குவதாகவும் எங்கெங்கோ வாசித்துக் கடந்த நினைவு. மூன்றாண்டுக்கு முன்னர் லண்டனில் கார்ல் மாக்ஸின் கல்லறையை தோழர் ராஜா அழைத்துச் சென்று காண்பித்திருக்கிறார்.
கார்ல் மாக்ஸ் வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மேலிட்டிருந்தது. ஆனால் எந்த நண்பர்களுக்கும் சிரமம் கொடாமல் இம்முறை அங்கிருந்த ஐந்து நாட்களும் பல இடங்களுக்கும் நானே அலைந்து திரிந்தேன். ஆனால் மாக்ஸின் நினைவிடம் திறந்து இருக்குமா. கூகிளில் அதற்கும் விடை இருந்தது. கூகிளில் மாக்ஸின் வீட்டைப் பார்த்த போது 24 மணித்தியாலங்களும் பார்க்க முடியும் என்று இருந்தது. அட... அந்தளவு சேவை செய்கிறார்களா என்று வியந்து கொண்டேன்.
எனது ஆய்வுப் பணிகளுக்கு இடையூறில்லாமல் பிரட்டிஷ் நூலகம் மூடியதன் பின்னர் அங்கிருந்து செல்லலாம் என்று திட்டம். அங்கிருந்து மணித்தியாலத்துக்குள் மாக்ஸின் வீட்டை அடைந்து விடலாம் என்று இருந்தது.
நாள் - மார்ச் 30, 2023
நிலக்கீழ் இரயில் எடுத்து அங்கிருந்து சுமார் அரை மைல் தூரம் மேட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். நான் லண்டன் புறப்படும் போது ஒஸ்லோவில் நிறைந்த பனியும், கடும் குளிருமாக இருந்தது. ஆனால் லண்டனில் கோடைகாலமே வந்துவிட்டதைப் போல பனி குளிர் இன்றி, வெய்யிலும் வெளிச்சமுமாக இருந்தது. இலைகள் துளிர்த்துக்கொண்டு மலர்களும் மொட்டுவிடத் தொடங்கி, பச்சைப் பசேலென இருந்தது.
முழங்கால் வலியின் கொடுமையால் இந்த மேடு, படிகள் ஏறுவது எனக்கு சிரமமான ஒன்று. ஆனால் வலியைத் தாங்கிக்கொண்டே என்வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கும் அப்படித்தான் கூகிள் வரைபடத்தின் உதவியுடன் தேடிச்சென்றேன். அந்த பகுதி பல தொடர்மாடிக் குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளையரையும் காணவில்லை. குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டவர்கள் அதிகமாக வாழும் இடமென்பதை இனங்கான முடிந்தது.
இந்த விலாசம் எங்கே இருக்கிறது? இந்த கூகிள் வரைபட வழிகாட்டியில் இந்த இடத்தைக் காட்டுகிறதே, கார்ல் மாக்ஸ் வாழ்ந்த வீட்டைப் பற்றி ஏதும் தெரியுமா என்றேன்.
ஹா... நானும் கேள்வி பட்டிருக்கிறேன். இங்கே எங்கேயோ அப்படி ஒரு வீடு இருப்பதாக அறிந்திருக்கிறேன். என்றார்.
அருகில் இருந்த வெள்ளைப் பெண்மணி "யார் அவர் என்றார்?" இந்தப் பெண் பதிலுக்கு;
“You know; the guy was famous poet… He lived here ” என்றதும்,
ஐயகோ, மார்க்சுக்கு வந்த சோதனை; என்று சிரிப்பதா, வருந்துவதா என்றிருந்தது.
வந்த பாதைக்கே செல்லுங்கள் என்றார்.
மீண்டும் கூகிள் காட்டிய இடத்துக்கே வந்து சேர்ந்தேன். எவரும் கண்களில் படுவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு ஓரத்தில் இருந்து கூகிளில் சரியான இடத்துக்கு தானா வந்திருக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்காக மேலதிகமாகத் தேடினேன். அதில் ஒரு பிரவுன் நிற வட்டத் தகரத் தட்டில் மாக்ஸ் வாழ்ந்த வீடு என்பதை குறிக்கும் பதாகை அந்த சுவரில் இருப்பதாகக் காட்டியது.
அப்படியே நின்ற இடத்தில் இருந்து அந்தக் கட்டிடத்தின் மேலே தலையை உயர்த்திப் பார்த்தேன்.
ஆஹா... இதோ அந்தப் பதாகை. சந்தேகமே இல்லை அதுவே தான் தான் இது. கீழே, அருகில் உள்ள வாசலைத் தேடினேன். மூடிய வாசல் கதவுகளில் வலது கதவா, இடது கதவா செல்ல வேண்டியது. சரி முதலில் இடது பக்க வாசலில் இருந்து எந்த இலக்கத்தை அழுத்துவது என்று தெரியவில்லை. அடுத்த வாசுக்குள் ஒரு இளம் பையன் பாடசாலை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழையச் சென்று கொண்டிருந்தார். உடனே ஓடிப்போய் தடுத்து மாக்ஸின் வீடு இதில் எது? எது நுழைவுக் கதவு, எத்தனையாவது மாடி? என்று பரக்கப்பரக்க வினவினேன்.
கீழ் மாடியில் ஒரு ஜன்னல் கதவு திறந்தது. இந்தப் பையனின் தாயார் அவர். நான் அவரிடமும் விசாரித்தேன்.
“ஆமாம்.. அதோ மேலே இருக்கிற பதாகை தெரிகிறது அல்லவா? இங்கே தான் அவர் வாழ்ந்தார்.”
அங்கே எப்படி செல்வது என்றேன்.
“அப்படி ஒரு வீடு இப்போது கிடையாது... அவர் வாழ்ந்த வீடு இங்கே தான் இருந்தது. அவ்வளவு தான் என்றார்.”
தூக்கிவாரிப்போட்டது.
மீண்டும் தலையை சரித்து உயர்த்தி மேலே பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அதில் இப்படி இருந்தது.
“KARL MARX,
1818 - 1883,
PHILOSOPHER,
lived and died in a
house on this site,
1875 – 1883”
அதில் சரியாகத் தான் குறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் (Site) தான் அவர் வாழ்ந்த வீடு இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அது இல்லை.
இரண்டாவது உலகப்போரின் போது இந்தப் பிரதேசம் குண்டுகளால் அதிகம் சேதத்துக்கு உள்ளான பிரதேசம். எனவே 1950ஆம் ஆண்டு சிதைவடைந்திருந்த வீடுகளை முற்றிலும் அழித்து புதிய தொடர்மாடி வீடுகளை அரசு அமைத்தது.
அடப்பாவிகளா கூகிளில் 24 மணிநேரமும் பார்க்கலாம் என்று இதைத் தான் குறிப்பிட்டிருந்தார்களா?
அன்று கார்ல் மார்க்சை அரசு தேடத் தொடங்கியவுடன் அவர் நாடுநாடாக தலைமறைவு வாழ்வுக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனில் பிறந்த அவர் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து என வாழ்ந்து இறுதியில் லண்டனில் அவரின் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
மாக்ஸின் ஏழு பிள்ளைகளில் மூவர் மாக்ஸின் வாழ் நாள் காலத்திலேயே இறந்து விட்டார்கள். அழுத தன் பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல், ஜென்னியின் மார்புகளில் ரத்தம் வழிந்திருக்கிறது. பால் இன்றி இறந்துபோன குழந்தையை அடக்கம் செய்யவும் வசதி இருக்கவில்லை.
'குழந்தை பிறந்தபோது தொட்டில் வாங்கக் காசு இல்லை; என் குழந்தை இறந்தபோது, சவப்பெட்டி வாங்க காசு இல்லை’
என்னும் ஜென்னியின் புகழ்பெற்ற கடித வரிகள் இன்றும் நம்மை உலுக்கும் வசனம்.
அவரின் நான்காவது மகளுக்கும் அவர் தனது துணைவி ஜென்னியின் பெயரைத் தான் சூட்டியிருந்தார். அந்த மகள் ஜென்னி மார்க்ஸ் 1883 ஆம் ஆண்டு ஜனவரியில் புற்றுநோயால் தனது 38 வது வயதில் இறந்தார். இந்தளவு துயரத்தில் அடுத்த இரண்டாவது மாதம் மார்ச் 14ஆம் திகதி இதே வீட்டில் மார்க்ஸ் தனக்குப் பிடித்த சாய்நாற்காலியில் இறந்தபடி கிடந்தார். சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை சித்தாந்த ரீதியில் ஒன்றுபடுத்திய அவரின் இறுதி ஊர்வலத்தில் பதினோரு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...